ஆயுத பூஜை

ஆயுத பூஜை
ஆயுத பூஜை நாளில் மேற்கு வங்க துர்கை
பிற பெயர்(கள்)சரஸ்வதி பூஜை
கடைப்பிடிப்போர்இந்துகள்
வகைசமயம்சார்ந்தது
அனுசரிப்புகள்தொழிலுக்குதவும் கருவிகள், புத்தகங்கள், எந்திரங்கள் வாகனங்களை வழிபடுதல்
தொடக்கம்நவராத்திரி ஒன்பதாவது நாள்
நாள்23 அக்டோபர் 2023
நிகழ்வுஆண்டுக்கொருமுறை
தொடர்புடையனநவராத்திரி நோன்பு, கொலு

ஆயுத பூஜை அல்லது சரஸ்வதி பூஜை என்பது நவராத்திரி விழாவின் அங்கமான ஓர் இந்து சமய பண்டிகையாகும். இது இந்து நாட்காட்டியின்படி புரட்டாசி மாதம் வளர்பிறை நவமியிலும் பொது நாட்காட்டியின்படி செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. தமிழ்க் கத்தோலிக்கக் கிறித்தவர்களும் இவ்விழாவையினை தங்களது வழிபாட்டு முறைக்கு ஏற்ப கொண்டாடுகின்றனர். [1] இந்தியத் துணைக் கண்டம் முழுக்கக் கொண்டாடினாலும் வெவ்வேறு வழிபாட்டு முறைகளால் கொண்டாடப்படுகிறது.

இந்த நாளில் தங்களது தொழிலுக்குப் பயன்படும் கலப்பை, கருவிகள், ஆயுதங்கள், வாகனங்கள், புத்தகங்கள் போன்றவற்றை வைத்து இறைவழிபாடு செய்யப்படுகிறது.[2][3][4] இதனை அஸ்திர பூஜை என்றும் அழைப்பர். பூஜைக்காக வைக்கப்பட்ட பொருட்கள் மறுநாள் விஜயதசமி வரை எடுக்கப்படாமல் இருக்கும்.[5] இவ்வாறு வழிபடுவதன் மூலம் தொழில் வளர்ச்சியும், கல்வியில் சிறந்த தேர்ச்சியும் பெறுவதாக இந்து சமயத்தவர்கள் நம்புகின்றனர்.[6]

புராணக்கதை

புராணங்களின்படி இரண்டு கதைகள் சொல்லப்படுகின்றன. கவுரவர்களிடம் சூதாட்டத்தில் தோற்று பாண்டவர்கள் பதின்மூன்று ஆண்டுகள் வனவாசம் சென்றனர். பின்னர் ஓராண்டு அஞ்ஞாத வாசம் எனப்படும் ஆயுதங்களையும் அடையாளங்களையும் துறந்து வாழ்ந்து வந்தனர். இறுதியாக ஓராண்டு கழித்து ஒன்பது நாட்கள் விரதமிருந்து, பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களை வன்னி மரப் பொந்திலிருந்து ஆயுத பூஜை நாளில் வழிபட்டு அருச்சுனன் எடுத்ததாகக் கருதப்படுகிறது.[6][7] மற்றொரு கதையில் மகாபாரத குருச்சேத்திரப் போருக்கு முன் விரதமிருந்து காளிதேவிக்கு ஆயுத பூஜையன்று அரவான் களப்பலி கொடுக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.

இலக்கியத்தில்

பனிரெண்டாம் திருமுறையான பெரியபுராணத்தில் ஒன்பது நாள் வழிபாடு நடத்தி போரிடும் யானைகளுக்கு மரியாதை செய்வதாகக் குறிப்புள்ளது.

சிலப்பதிகாரத்தில், கொற்றவைக்கு நேர்த்திக்கடன்களைச் செய்யாவிட்டால் வெற்றியைத் தரமாட்டாள் என்ற வரிகளின் மூலம் கருவிகளைப் படைத்து வழிபாடும் முறையை அறியமுடிகிறது.

வாளுக்கு விழா எடுத்த செய்தியைப் பதிற்றுப்பத்தும் தொல்காப்பியமும் குறிப்பிடுகின்றன.[8]


இதையும் பார்க்கலாம்


மேற்கோள்கள்

  1. Dalal, Roshen (2014-04-18). The Religions of India: A Concise Guide to Nine Major Faiths (in ஆங்கிலம்). Penguin UK. p. 230. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8475-396-7.
  2. "ஆயுத பூஜை - அதன் முக்கியத்துவம் என்ன?". ஈஷா வலைப்பதிவு. https://isha.sadhguru.org/in/ta/wisdom/article/ayudha-pooja-in-tamil. பார்த்த நாள்: 23 October 2023. 
  3. Pechilis, Karen; Raj, Selva J. (2013). South Asian Religions: Tradition and Today (in ஆங்கிலம்). Routledge. p. 56. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-44851-2.
  4. Kamath, Rina (September 2000). Chennai (in ஆங்கிலம்). Orient Blackswan. p. 104. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-250-1378-5.
  5. "சரஸ்வதி பூஜை". தமிழ்நாடு சுற்றுலா. பார்க்கப்பட்ட நாள் 23 October 2023.
  6. 6.0 6.1 "ஆயுதபூஜை வந்த கதை". தினத்தந்தி. https://www.dailythanthi.com/Others/Devotional/2021/10/12112809/The-story-of-Ayudha-Puja.vpf. பார்த்த நாள்: 23 October 2023. 
  7. "Ayudha Puja or Worship of Tools". Archived from the original on 3 October 2009. பார்க்கப்பட்ட நாள் 2009-09-18.
  8. "தமிழ் இலக்கியங்களில் ஆயுதபூஜை: ஆதாரங்களை அடுக்குகிறார் ஆய்வாளர்". தினமலர். https://www.dinamalar.com/news_detail.asp?id=2867079. பார்த்த நாள்: 23 October 2023.