ஓவர்லூன் சண்டை

ஓவர்லூன் சண்டை
இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையின் பகுதி

ஓவர்லூன் சண்டையில் இறந்தவர்களுக்கான நினைவுச் சின்னம்
நாள் செப்டம்பர் 30 – அக்டொபர் 18, 1944
இடம் ஓவர்லூன், நெதர்லாந்து
நேசநாட்டு வெற்றி
பிரிவினர்
 ஐக்கிய அமெரிக்கா
 ஐக்கிய இராச்சியம்
 ஜெர்மனி
தளபதிகள், தலைவர்கள்
ஐக்கிய அமெரிக்கா லிண்ட்சே மக்டோனால்ட் சில்வெஸ்டர் நாட்சி ஜெர்மனி கர்ட் ஸ்டூடண்ட்
பலம்
2 டிவிசன்கள் 1 டிவிசன்

ஓவர்லூன் சண்டை (Battle of overloon) அல்லது அய்ன்டிரீ நடவடிக்கை (Operation Aintree) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நேச நாடுகளுக்கும், நாசி ஜெர்மனிக்கும் நெதர்லாந்தில் நடந்த ஒரு சண்டை. செப்டம்பர் 30–அக்டோபர் 18, 1944ல்[1] நடந்த இந்த சண்டையில் நேசநாட்டுப் படைகள் வெற்றி பெற்று வென்ரே நகரை ஜெர்மானியரிடமிருந்து கைப்பற்றின.

நெதர்லாந்ந்து வழியாக ஜெர்மனியைத் தாக்கும் நேசநாட்டுத் திட்டம் மார்க்கெட் கார்டன் நடவடிக்கையின் தோல்வியால் கைவிடப்பட்டது. ஆனால் இத்தாக்குதலின் போது நெதர்லாந்தின் ஒரு பகுதி நேசநாட்டுப் படைகளால் மீட்கப்பட்டது. இந்தப் பகுதியை மீண்டும் கைப்பற்றுவதற்காக மியூசே ஆற்றின் மேற்குக் கரையிலிருந்த ஒரு பாலமுகப்புப் பிரதேசத்திலிருந்து (bridgehead) ஜெர்மானியப் படைகள் தாக்குதல் நடத்தத் தொடங்கின. இந்தத் தாக்குதல்களை முறியடிக்க ஜெர்மானிய பால்முகப்பினைக் கைப்பற்ற நேசநாட்டுத் தளபதிகள் முடிவு செய்தனர். அய்ன்டிரீ நடவடிக்கை என்று பெயரிடப்பட்ட இந்தத் தாக்குதலின் நோக்கம் மியூசே ஆற்றின் மேற்குக்கரையிலிருந்த ஜெர்மானியப் படைகளைத் தோற்கடித்து ஓவர்லூன் கிராமத்தையும் வென்ரே நகரையும் கைப்பற்றுவதாகும். அமெரிக்கத் தரைப்படையின் 7வது கவச டிவிசன் ஓவர்லூன் கிராமத்தைத் தாக்கிக் கைப்பற்ற முயன்று தோல்வியடைந்தது. பின்னர் இந்த பொறுப்பு பிரிட்டானிய 3வது தரைப்படை டிவிசனுக்கும் 11வது கவச டிவிசனுக்கும் தரப்பட்டது. ஓவர்லூனைச் சுற்றியிருந்த பிரதேசங்களில் மூன்று வாரங்கள் கடுமையான சண்டைக்குப் பிறகு பிரிட்டானியப்படைகள் தங்கள் இலக்கில் வெற்றியடைந்தன. ஆனால் சண்டையில் ஓவர்லூன் கிராமம் அழிந்துவிட்டது நேச நாட்டுப்படைகளுக்கும் பெருத்த சேதம் ஏற்பட்டது. 2500 படைவீரர்கள் இச்சண்டையில் இறந்தனர்; பல டாங்குகளும் நாசமாகின. ஓவர்லூன் வெற்றிக்குப்பின் வென்ரே நகர் நேசநாட்டுப்படைகளின் வசம் வந்தாலும், மியூசே ஆற்றங்கரையிலிருந்து ஜெர்மானியப் படைகளை முழுவதுமாக வெளியேற்ற முடியவில்லை. டிசம்பர் 1944ல் தான் இப்பகுதி முழுவதும் நேசநாடுகளின் கட்டுப்பாட்டில் வந்தது. இரண்டாம் உலகப்போரின் போது நெதர்லாந்து மண்ணில் நடந்த மிகக்கடுமையான சண்டை இதுவென்றாலும், தற்போது இது பரவலாக அறியப்படுவதில்லை.

மேற்கோள்கள்