கல்யாண்

கல்யாண் மகாராஷ்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். கல்யாண்-டோம்பிலி மாநகராட்சியால் நிர்வகிக்கப்படும் இந்நகரம் மும்பை பெருநகரத்தின் (எம்.எம்.ஆர்) ஒரு பகுதியாகும்.

கல்யாண் தானே மாவட்டத்தின் நிர்வாக பிரிவில் வட்டம் (தாலுகா) மட்டத்தில் உள்ளது. கல்யாண் நகரமும் அதன் அண்டை நகரமான டோம்பிவ்லியும் கூட்டாக கல்யாண் டோம்பிவ்லி மாநகராட்சியை உருவாக்குகின்றன. இது சுருக்கமாக கே.டி.எம்.சி. என்ற பகுதியாக கருதப்படுகிறது. வித்தல்வாடி, பிவான்டி, தானே, உல்காசு நகர், அம்பர்நாத் மற்றும் பத்லாப்பூர் நகராட்சி மன்றங்களுடன் இணைந்து மும்பை மாநகரத்தின் ஒரு பகுதியாக கல்யாண் நகரம் கருதப்படுகிறது. கல்யாண் மகாராஷ்டிராவின் 9 வது பெரிய நகரமாகவும், நாட்டின் 28 வது பெரிய நகரமாகவும் உள்ளது.

வரலாறு

சுதந்திரத்திற்கு முந்தைய பிரித்தானிய இந்தியப் பேரரசு காலத்தில் கல்யாண் நகரத்தினை கல்லியன், குல்லியன், காலியன் என்றும் சில சமயங்களில் காலியானி என்றும் அழைத்தனர். பல நூற்றாண்டுகளாக, முகலாயர்கள், போர்த்துகீசியர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் உட்பட பல்வேறு வெளிநாட்டுப் படைகளின் தாக்குதல்களை இந்த நகரம் கண்டிருக்கிறது. படையெடுப்புகளுக்கு எதிரான ஒரே பாதுகாப்புக் கேடயமாக உள்ளூர் மக்களால் மராட்டியர்கள் மதிக்கப்பட்டனர்.

கல்யாண் நகரத்தைச் சேர்ந்த ஆனந்தி கோபால் ஜோஷி மேற்கத்திய மருத்துவத்தில் பட்டம் பெற்ற முதல் இரண்டு இந்திய பெண்களில் ஒருவர். மற்றொருவர் கடம்பினி கங்கூலி. [1] 1886 ஆம் ஆண்டு அமெரிக்காவில் மருத்துவ பட்டம் பெற்ற ஜோஷி, அமெரிக்க மண்ணில் காலடி வைத்த முதல் இந்து பெண் என்றும் நம்பப்படுகிறது. [2] [3]

கல்யாண் நகரைச் சுற்றி

கல்யாண் நகரம் ஒரு கோட்டைச் சுவரால் சூழப்பட்டிருந்தது. இந்த சுவரின் கட்டுமானம் ஷாஜகானின் ஆட்சிக் காலத்தில் தொடங்கி கி.பி 1694 இல் அவுரங்கசீப்பின் ஆட்சிக் காலத்தில் நிறைவடைந்தது. இந்த நகரச் சுவர் 4 வாயில்கள் மற்றும் 11 கோபுரங்களையும் கொண்டது. கோட்டைச் சுவர் சுமார் 70 ஏக்கர் பரப்பளவையும், தற்போதைய கணேஷ் காட் என்ற இடத்தையும், கல்யாண் சிற்றோடைக்கு அருகே ஒரு உயரமான மேட்டையும் உள்ளடக்கியது. 1570 ஆம் ஆண்டிலிருந்து இது ஒரு சிறந்த கோட்டையாக இருந்தது.

குடிமை வசதிகள்

700,000 க்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட கல்யாண் 1983 இல் நிறுவப்பட்ட கல்யாண் டோம்பிவ்லி மாநகராட்சியின் ஒரு பகுதியாகும். இதில் கல்யாண், டோம்பிவ்லி, அம்பர்நாத் உட்பட 81 கிராமங்களும் நகராட்சிகளும் உள்ளன. இது மும்பை பெருநகர பகுதி (எம்.எம்.ஆர்) மற்றும் மாநிலத்தில், 209 சதுர கிமீ பரப்பளவில் உள்ள மிகப்பெரிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் ஒன்றாகும்.

அரசாங்கம்

கே.டி.எம்.சி என்பது இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சி ஆகும். கல்யாண் மற்றும் டோம்பிவ்லியின் இரட்டை நகரங்களை நிர்வகிக்க 1983 ஆம் ஆண்டில் ஒரு நகராட்சி நிறுவனம் உருவாக்கப்பட்டது. படித்த மக்கள் அதிகமிருந்த காரணத்தால் இது பெரும்பாலும் புனேவுக்குப் பிறகு மகாராஷ்டிராவின் இரண்டாவது கலாச்சார தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது. கல்யாண் பழங்காலத்திலிருந்தே துறைமுகமாக புகழ் பெற்றிருந்தது. இப்பகுதியில் ஒரு பிரதான துறைமுகமாக அதன் இருப்பு பற்றிய பதிவுகள் பண்டைய கிரேக்க கையெழுத்துப் பிரதிகளில் காணப்படுகின்றன. மத்திய இரயில்வேயில் சி.எஸ்.எம்.டி நிலையத்திலிருந்து சுமார் 48 கி.மீ. தொலைவில் உள்ள டோம்பிவ்லி இரயில் நிலையம் மகாராஷ்டிராவின் அனைத்து பகுதிகளையும் இரயில் மற்றும் சாலைப் போக்குவரத்து மூலம் இணைக்கிறது. இதில் கல்யாண் சந்திப்பு இந்தியாவின் மிக முக்கியமான சந்திப்புகளில் ஒன்றாகும். பெரும்பாலான வெளி இரயில்கள் இங்கு நிறுத்தப்படுகின்றன. அருகில் மும்பை விமான நிலையம் 40கி.மீ. தொலைவில் உள்ளது. கல்யாண் - டோம்பிவிலி மாநகர பேருந்து கல்யாண் மற்றும் இதர பகுதிகளை சாலைவழியாக இணைக்கிறன்றன..

ஐரோலி - கடாய் நாகா (கல்யாண்) புதிய சாலைபணி விரைவாக நடைபெற்று வருகிறது. இந்த சாலை செயல்பாட்டுக்கு வந்தால் கல்யாண் - மும்பை புறநகர் பயணதுரம் 10 கிலோமீட்டர் குறையும் எனக் கணித்துள்ளனர். அதேபோல் கல்யாண-பிவண்டி மெட்ரோ ரயில் பணியும் நடைபெற்று வருகிறது...

குறிப்புகள்