காசிமார் பெரிய பள்ளிவாசல்

காசிமார் பெரிய பள்ளிவாசல், மதுரை
பள்ளிவாசலினுள் அமைந்துள்ள மதுரை அசரத்தின் மக்பரா

காசிமார் பெரிய பள்ளிவாசல் அல்லது காசிமார் மசூதி என்பது மதுரை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஒரு பழமையான மசூதி ஆகும். இது பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து 500 மீட்டர் தொலைவிலும், மதுரை தொடருந்து நிலையத்திலிருந்து தென்கிழக்கு திசையில் ஒரு கிலோ மீட்டர் தொலைவிலும்[1] மீனாட்சியம்மன் கோவிலிலிருந்து தென்மேற்கு திசையில் 800 மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. ஓமானிலிருந்து வந்த அசரத்து காசி சையது தாசுத்தீனால் கூன் பாண்டியனிடமிருந்து[2] பெறப்பட்ட நிலத்தில் இம்மசூதி கட்டப்பட்டுள்ளது. இது மதுரை நகரின் முதல் மற்றும் தமிழகத்தின் பழமையான முசுலிம் வழிபாட்டிடங்களில் ஒன்றாக உள்ளது.[3][4] இது ஒரே நேரத்தில் 1200 நபர்கள் வரை தொழும் வசதிபடைத்தது.

மக்பரா

மதுரை மக்பரா, மதுரை அசரத்துகளான (அசரத்து மீர் அகமது இபுறாகீம், அசரத்து மீர் அம்சத்து இபுறாகீம் மற்றும் அசரத்து சையது அப்து சலாம் இபுறாகீம்) ஆகியோரின் தர்காக்களும் இதனுள் அமைந்துள்ளன.[5] காசி சையது தாசுத்தீன் வழித்தோன்றல்களில் பெரும்பாலானோர் இப்பள்ளியைச் சுற்றி அமைந்துள்ள பகுதிகளிலே வசித்து வருகின்றனர் (காசிமார் தெரு). சையது தாசுத்தீன் சுல்தான்களின் காசியாக இருந்தார். அவரில் துவங்கி இன்றைய மதுரை மாநகர அரசாங்க காசி சையது காசா முயீனுத்தீன் வரை சையது தாசுத்தீன் அவர்களின் வழித்தோன்றல்களே தமிழ்நாடு அரசின் காசிகளாக நியமிக்கப்படுகின்றனர். அனைத்து சையதுகளும் சுன்னி இசுலாத்தின், ஹனபி பிரிவைச் சார்ந்தவர்கள்.பெரும்பாலானவர்கள் ஃபாஸிய்யா அஷ் ஷாதுலியா சூஃபி பிரிவை சார்ந்தவர்கள்.

மதரசா

இப்பள்ளியினுள் அடிப்படை அரபு கற்றுத்தரும் அசரத்து காசி சையது தாசுத்தீன் அரபி மதரசா செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 120 மாணவர்கள் வரை பயில்கின்றனர்

360 பாகை பார்வை

தமிழ் நாளிதழான தினமலர் வலைதளத்தில் இப்பள்ளியின் 360 பாகை பார்வை இடம் பெற்றுள்ளது.

வெளியிணைப்புகள்

காசிமார் பள்ளிவாசல் மற்றும் மதுரை மக்பராவின் 360 பாகை பார்வை.

உசாத்துணைகள்