குஷிட்டிக் மொழிகள்

குஷிட்டிக் மொழிகள், ஆப்பிரிக்க-ஆசிய மொழிகளின் ஒரு துணைக் குழு ஆகும். இம்மொழிகள் ஆப்பிரிக்காவின் கொம்பு என அழைக்கப்படும் பகுதியில் பேசப்படுகின்றன. 25 மில்லியன் மக்கட் தொகை கொண்ட ஒரோமோ மொழி இவற்றுள் முதன்மையானது. அடுத்ததாக, சோமாலியா, எதியோப்பியா, ஜிபுட்டி, கெனியா ஆகிய நாடுகளில் சுமார் 15 மில்லியன் மக்களால் பேசப்படும் சோமாலி மொழி உள்ளது. இவற்றுடன், இரண்டு மில்லியன் மக்கள் பேசும், எதியோப்பியாவில் உள்ள சிடாமோ மொழி, எரித்ரியா, எதியோப்பியா, ஜிபுட்டி ஆகிய நாடுகளிலுள்ள சுமார் 1.5 மில்லியன் மக்களால் பேசப்படும் அஃபார் மொழி என்பனவும் குஷிட்டிக் மொழிகளே.

ஜோசெப் கிரீன்பெர்க் என்பவாரால் வகைப்படுத்தப்பட்டு, ஹரோல்ட் ஃபிளெமிங் என்பவரால் திருத்தம் செய்யப்பட்ட முறையின்படி, இம்மொழிகள் நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

  • பேஜா மொழிகள்
  • மத்திய குஷிட்டிக் மொழிகள் அல்லது அகவ் மொழிகள்
  • கிழக்குக் குஷிட்டிக் மொழிகள் (ஒரோமோ, சோமாலி, சிடாமோ, சாஹோ, அஃபார் என்பன அடங்கியது)
  • தென் குஷிட்டிக் மொழிகள் (இராக்வ்-அலக்வா, புருங்கே, டஹாலோ என்பவை அடங்கியது)