சுங்கை பட்டாணி

சுங்கை பட்டாணி
Sungai Petani
கெடா
இப்ராகிம் சாலை; சுங்கை பட்டாணி
இப்ராகிம் சாலை; சுங்கை பட்டாணி
சுங்கை பட்டாணி is located in மலேசியா
சுங்கை பட்டாணி
      சுங்கை பட்டாணி
ஆள்கூறுகள்: 5°39′N 100°30′E / 5.650°N 100.500°E / 5.650; 100.500
நாடு மலேசியா
மாநிலம் கெடா
மாவட்டம்கோலா மூடா
நாடாளுமன்றம்சுங்கை பட்டாணி (மக்களவை தொகுதி)
உருவாக்கம்கெடா: 1611
சுங்கை பட்டாணி: 1912
அரசு
 • நகராட்சிசுங்கை பட்டாணி நகராட்சி (SPMC)
மக்கள்தொகை
 (2020)
 • மொத்தம்5,44,851
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
மலேசிய அஞ்சல் குறியீடு
08xxx
மலேசியத் தொலைபேசி எண்+6-04-4xxxxxxx
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்K
இணையதளம்http://www.mpspk.gov.my/

சுங்கை பட்டாணி (மலாய்: Sungai Petani; ஆங்கிலம்: Sungai Petani; சீனம்: 双溪 农民) [1], என்பது மலேசியா, கெடா, கோலா மூடா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். கெடா மாநிலத்தில் மிகப் பெரிய நகரமாகக் கருதப்படும் சுங்கை பட்டாணி நகரம், மாநிலத்தின் தலைநகரமான அலோர் ஸ்டார் (Alor Setar) மாநகரத்தில் இருந்து 55 கி.மீ. தொலைவில் உள்ளது.

மலேசிய மொழியில் ’சுங்கை’ (Sungai) என்றால் ஆறு; ’பட்டாணி’ (Petani) என்றால் விவசாயி; சுங்கை பட்டாணி என்றால் விவசாயின் ஆறு என்று பொருள் படும். தீபகற்ப மலேசியாவின் வடக்கே தாய்லாந்து நாட்டிற்கு அருகாமையில் கெடா மாநிலம் உள்ளது.

வரலாறு

கெடா மாநிலத்தை மலேசியாவின் நெல் களஞ்சியம் என்று சொல்வார்கள். இங்கே ஆயிரக் கணக்கான ஏக்கர் பரப்பளவில் நெல் வயல்கள் உள்ளன. பல்லாயிரக் கணக்கான விவசாயிகள் நெல் சாகுபடி செய்கின்றனர். சுங்கை பட்டாணி, ஜோர்ஜ் டவுனிலிருந்து 33 கி.மீ. தொலைவில் இருக்கிறது.

1912 ஆம் ஆண்டிற்கு முன்னால் சுங்கை பட்டாணி எனும் ஒரு நகரம் இருந்ததாக வரலாற்றில் எந்தத் தடயமும் இல்லை. ஆனால், ஒரு சின்னக் குடியேற்றப் பகுதி மட்டுமே இருந்தது. மலாய்க்காரர்கள் ‘பெங்கூலி ஹிம்’ எனும் கிராமத்தில் வாழ்ந்து வந்தனர். சீனர்கள் பெக்கான் லாமா எனும் பகுதியில் வாழ்ந்து வந்தனர். இந்தியர்கள் சுங்கை பட்டாணியின் சுற்று வட்டாரத் தோட்டங்களில் வாழ்ந்து வந்தனர்.

அப்போது கோத்தா கோல மூடா எனும் நகரமே கோல மூடா மாவட்டத்தின் தலையாயப் பட்டணமாக இருந்து வந்தது. அந்தக் காலகட்டத்தில் வில்லியம் ஜார்ஜ் மெக்ஸ்வல் [2] என்பவர் கெடா மாநிலத்தின் பிரித்தானிய ஆலோசகராக இருந்தார்.

சுங்கை பட்டாணி உருவாக்கம்

அலோர் ஸ்டார் நகரத்திற்கும் கூலிம் நகரத்திற்கும் இடையே ஒரு புதிய நகரம் உருவாக்கப் பட வேண்டும் என்று மெக்ஸ்வல் ஆசைப் பட்டார். அந்தச் சமயத்தில் கோலாலம்பூருக்கும் அலோர் ஸ்டாருக்கும் இடையே புகைவண்டிச் சேவை தொடங்கப் பட்டது. புகைவண்டிகள் சுங்கை பட்டாணியில் நின்று சரக்குகளை ஏற்றிச் சென்றன.

ரப்பரும் மரவள்ளிக் கிழங்கும் தான் அதிகமாகச் சுங்கை பட்டாணியில் உற்பத்தி செய்யப் பட்டன. உண்மையில், ரப்பரினால் தான் சுங்கை பட்டாணி நகரமே உருவானது என்று சொல்ல வேண்டும். 1910 களில் தீபகற்ப மலேசியாவில் ரப்பரை மிகுதியாக உற்பத்தி செய்த புகழ், சுங்கை பட்டாணிக்கே சேரும். ரப்பர் உற்பத்தியைத் தவிர வேறு தொழில்களும் இப்பகுதியில் நடைபெற்று வந்தன.

ரப்பர் உற்பத்தி அதிகரிப்பு

தஞ்சோங் டாவாய், கோலா மூடா போன்ற கடற்கரைப் பட்டணங்களில் மீன்பிடித் தொழில் நடைபெற்றது. ரந்தாவ் பாஞ்சாங்கில் ’அத்தாப்பு’ (Attap)[3] கூரைகள் பின்னப் பட்டன. செமிலிங் எனும் இடத்தில் ஈயம் தோண்டப் பட்டது.

1950 களில் ஐரோப்பியர்கள் நிறைய ரப்பர் தோட்டங்களைத் திறந்தனர். அதனால், சுங்கை பட்டாணியில் ரப்பர் உற்பத்தி அதிகரிக்கத் தொடங்கியது. அந்தத் தோட்டங்களில் வேலை செய்ய வந்த இந்தியர்களின் மக்கள் தொகையும் அதிகரித்தது.

பொதுவாகவே அந்தப் பகுதியின் மக்கள் தொகை கணிசமான அளவு உயர்ந்தது. நகரத்தின் அளவும் பெருகத் தொடங்கியது. அதன் பொருட்டு, சுங்கை பட்டாணியை கெடா மாநிலத்தின் நிர்வாக மையமாக மாற்றம் செய்ய வேண்டுமென அறைகூவல்கள் எழுந்தன.[4]

காவல் நிலையம் ஒரு குடிசை

சுங்கை பட்டாணி மிகத் துரிதமாகத் தொழில் வளர்ச்சி பெற்று வரும் போது ஹாங்காங் சாங்காய் வங்கி தனது புதிய வங்கியை 1923-இல் கட்டியது. இந்தக் காலகட்டத்தில் சுங்கை பட்டாணியில் பட்டாணி ஆற்றின் கரையோரங்களில் தங்கம் தோண்டி எடுக்கப் பட்டது.

சுங்கை பட்டாணியில் எளிதில் அடையாளம் கண்டு கொள்ளக் கூடிய சின்னங்களில் முக்கியமானது சுங்கை பட்டாணி காவல் நிலையம் ஆகும். இது 1916 ஆம் ஆண்டில் அத்தாப்பு குடிசையாகக் கட்டப் பட்டது.

அப்போது பத்து காவல் துறை அதிகாரிகள் அந்த நிலையத்தில் பணிபுரிந்தனர். இது 1916 ஆம் ஆண்டில் கட்டப் பட்டது. வெறும் அத்தாப்பு கூரைகள், பலகைகளால் ஆனது. அதில் பத்து சீக்கிய, மலாய்க்கார காவல் துறை அதிகாரிகள் பணிபுரிந்தனர்.

பாங்லிமா நயன்

சுங்கை பட்டாணியில் அப்போது ஆங்காங்கே அதிகமான கொலைகள், ஆள்கடத்தல்கள், கொள்ளைச் சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இவற்றுக்கு முக்கியமாக மூவர் காரணக் கர்த்தாக்களாக இருந்தனர். பாங்லிமா நயன், பாங்லிமா அனபியா, பாங்லிமா ஹுசேன் ஆகிய மூவரே அந்த முக்கியப் புள்ளிகள்.

பாங்லிமா நயனின் உண்மையான பெயர் நயன் அப்துல் கனி. இவன் 13 ஆம் நூற்றாண்டில், இங்கிலாந்தில் வாழ்ந்த ரோபின் ஹுட் (Robin Hood) [5][6] போலவே செயல் பட்டான். இவனும் இவனுடைய ஆட்களும் நிலக்கிழார்கள், வர்த்தகர்களின் சொத்துகளைக் கொள்ளை அடித்தனர். அவற்றை ஏழை எளியவர்களுக்கு பகிர்ந்து கொடுத்தனர். அதனால் அப்பகுதி மக்களிடையே ஓரளவுக்குப் பிரபலமாகவும் விளங்கினர்.

பொல்லாத மூர்க்கன்

பாங்லிமா நயன் தன்னுடைய 18-வது வயதிலேயே கோத்தா ஸ்டார், கோலா மூடா போன்ற பகுதிகளில் கொள்ளைத் தொழில்களில் ஈடுபட்டான். அடர்த்தியான மீசையை வைத்துக் கொண்டு பொல்லாத மூர்க்கனாக வாழ்ந்து வந்தான். அவனிடம் எப்போதுமே கிரிஸ் கத்தி, துப்பாக்கி ஆயுதங்கள் கைவசமாக இருக்கும். அவனைக் கண்டு மக்கள் அஞ்சினர்.

அவனுடைய தொல்லைகளைப் பொறுக்க முடியாத கெடா அரசாங்கம் ஓர் அறிவிப்பு செய்தது. அவனை உயிருடன் பிடிப்பவர்களுக்கு அல்லது கொன்று விடுபவர்களுக்கு 1000 வெள்ளி சன்மானமாக வழங்கப் படும் என்று அறிவித்தது.[7] அபோதைய காலகட்டத்தில் அந்தப் பணம் ஒரு பெரிய கணிசமான தொகையாகும்.

சபல புத்தி

இருப்பினும் அவனை நெருங்குவதற்கு எவருக்கும் துணிவு வரவில்லை. பாங்லிமா நயனுக்கு அழகிய பெண்கள்மீது சபல புத்தி மிகுதியாக இருந்து வந்தது. இவன் பலமுறை திருமணம் செய்து பலமுறை விவாகரத்து செய்தவன். ஓர் அழகிய பெண்ணின் மீது ஆசை பட்டு விட்டால், அவளைக் கண்டிப்பாக அடைந்தே தீர வேண்டும் என்று கண்டிப்பாக இருப்பவன்.

அவள் யாருடைய மகள், யாருடைய மனைவி என்று தயவு தாட்சண்யம் பார்ப்பதில்லை. இரவு நேரத்தில் தன் பரிவாரங்களுடன் தீப்பந்தங்களை ஏந்தியவாறு பெண்ணின் வீட்டிற்குச் சென்று அவளைக் கடத்தி வந்து விடுவான். இவனுடைய அட்டகாசம் பொறுக்க முடியாமல், பாங்லிமா ஹுசேன் எனும் தோழனே அபின் கொடுத்து அவனைக் கொன்று விட்டான். அவனுடைய சமாதி பெர்லிஸ் மாநிலத் தலைநகரமான அலோர் ஸ்டாரில் இருக்கிறது.

சுங்கை பட்டாணி மணிக்கூண்டு

1950 ஆம் ஆண்டுகளில் சுங்கை பட்டாணி வாழ் மக்களுக்குப் பொழுது போக்குவதற்கு சரியான பூங்காக்கள் அல்லது போக்கிடங்கள் எதுவும் இல்லாமல் இருந்தது. அதனால் அவர்களில் சிலர், மாலை வேளைகளில் ஹாங்காங் ஷாங்காய் வங்கிக்கு முன்னால் கூடி பொழுதுகளைக் கழிப்பார்கள். ஹாங்காங் ஷாங்காய் வங்கி 1921 ஆம் ஆண்டு கட்டப் பட்டது.

அதற்கு முன்னரே சுங்கை பட்டாணி கூடலகம் (Sungai Petani Club) 1913-இல் கட்டப் பட்டு விட்டது. இந்த மன்றத்தில் பிரித்தானியர்கள், அரசு இலாகாகளின் தலைவர்கள், தோட்ட நிர்வாகிகள் உறுப்பினர்களாக இருந்தனர்.

என்.டி.எஸ்.ஆறுமுகம் பிள்ளை

சுங்கை பட்டாணி மணிக்கூண்டு 1926 ஆம் ஆண்டு கட்டப் பட்டது. இந்த அழகிய மணிக்கூண்டு பிரித்தானிய மாமன்னர் ஐந்தாம் ஜார்ஜ் அவர்களின் வெள்ளி விழா கொண்டாட்டத்தின் நினைவாக லிம் லியான் தெங் எனும் உள்ளூர் சீன வள்ளலால் அன்பளிப்பு செய்யப் பட்டது.

அப்போது திறக்கப் பட்ட ரப்பர் தோட்டங்களின் பெயர்கள் அனைத்தும் பிரித்தானியப் பெயர்களாகவே இருந்தன. இசுகார்புரோ, (Scarborough) ஆர்வார்ட், (Harvard) எலெண்டேல், (Helendale) விக்டோரியா (Victoria) போன்ற பெயர்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். இந்தத் தோட்டங்களில் யுனைடெட் பட்டாணி தோட்டம் ஒரு தமிழருக்குச் சொந்தமானது. அதை யு.பி. தோட்டம் என்று அழைத்தனர். கொடை வள்ளல் என்.டி.எஸ். ஆறுமுகம் பிள்ளை அவர்களுக்குச் சொந்தமானது. இவர் பினாங்கு மாநிலத்தின் ம.இ.கா. தலைவராகவும் இருந்தார்.

தமிழர்கள்

1970 ஆம் ஆண்டுகளுக்கு முன்னால் சுங்கை பட்டாணியைச் சுற்றிலும் நிறைய ரப்பர் தோட்டங்கள் இருந்தன. இப்போது அந்தத் தோட்டங்கள் நில மேம்பாட்டுத் திட்டங்களினால் மூடப் பட்டு விட்டன. இங்குதான் மலேசிய இந்தியர்கள் உருவாக்கிய ஏய்ம்ஸ்ட் மருத்துவக் கல்லூரி (Asian Institute of Medicine, Science and Technology AIMST University) இயங்கி வருகிறது.

மருத்துவம், பல் மருத்துவம், மருந்தகம், உயிரி தொழில்நுட்பம், பொருட்கள் தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு தொழில்முறை படிப்புகளை இந்தப் பல்கலைக்கழகம் வழங்குகிறது.[8][9]

சுங்கை பட்டாணியில் கணிசமான அளவிற்குத் தமிழர்கள் வாழ்கின்றனர். பெரும்பாலும் வணிகத் துறைகளில், அரசாங்க பொதுச் சேவைகளில் ஈட்டுபட்டுள்ளனர்.

காட்சியம்

மேலும் பார்க்க

மேற்கோள்