சுந்தர்லால் பகுகுணா

சுந்தர்லால் பகுகுணா (Sunderlal Bahuguna) (1927-2021) காந்தியவாதியும் இந்தியாவின் ஆரம்பகால சூழியல் போராளிகளில் ஒருவரும் ஆவார். இமயமலைக் காடுகளைக் காக்கும் பொருட்டு சிப்கோ இயக்கத்தைத் துவங்கினார். கனிமச் சுரங்கங்களாலும் பெரிய அணைக்கட்டுக்களாலும் ஏற்படும் சூழியல் அழிவுகளை எதிராகப் பல போராட்டங்களை ஒருங்கிணைத்துள்ளார். 1970களில் தீண்டாமை ஒழிப்பு, மதுவிலக்கு ஆகிய பணிகளில் ஈடுபட்டார். இவரது சேவையைப் பாராட்டி இந்திய அரசின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷன் 2009ம் ஆண்டு வழங்கப்பட்டது.

சுந்தர்லால் பகுகுணா
பிறப்பு(1927-01-09)9 சனவரி 1927
மரோடா, தெரி கார்வால், உத்தரகாண்ட்[1]
இறப்பு21 மே 2021(2021-05-21) (அகவை 94)[2]
அகில இந்திய மருத்துவ நிறுவனம், ரிஷிகேஷ்[2]
பணி
  • களச்செயல்பாட்டாளர்
  • காந்தியவாதி
  • சூழியல் ஆர்வலர்
வாழ்க்கைத்
துணை
விமலா பகுகுணா
பிள்ளைகள்ராஜீவ் பகுகுணா, மாதுரி பதக், பிரதீப் பகுகுணா

வாழ்க்கைக் குறிப்பு

சுந்தர்லால் பகுகுணா 1927ம் ஆண்டு ஜனவரி மாதம் 9ம் தேதி உத்தரகண்ட் மாநிலம் தெரியில் உள்ள மரடோ என்னும் கிராமத்தில் பிறந்தார். பதிமூன்று வயதிலேயே காந்தியரான ஸ்ரீதேவ் சுமன் என்பவரால் ஈர்க்கப்பட்டு இந்திய விடுதலைப்போரில் பங்கேற்றார். விமலதேவி என்னும் சக காந்தியரைத் திருமணம் செய்து கொண்டார். திருமனத்திற்குப்பின் 1956ம் ஆண்டு அரசியலில் இருந்து விலகினார். வினோபா பாவேவும் ஜெயப்பிரகாஷ் நாராயணனும் கேட்டுக்கொண்டதற்கு இணங்க 1960 முதல் மீண்டும் கிராம நிர்மாண பணிகளில் ஈடுபட்டார். மஹிளா மண்டல் என்னும் பெண்கள் அமைப்பை நிறுவி பெண்களை மதுவிலக்கிற்காகப் போராடச் செய்தார். தீண்டாமைக்கும் ஜாதி வேறுபாடுகளுக்கும் எதிராக மக்களிடையே பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பீஜ் பச்சோ அந்தோலன் என்னும் விதை பாதுகாப்பு போராட்டம் மூலம் பாரம்பரிய விதை ரகங்களைக் காக்கவும் பசுமைப்புரட்சியில் அளவுக்கதிகமாகப் பயன்படுத்தப்படும் வேதி உரங்களுக்கு எதிராகவும் போராடினார். தெரியில் சில்யாரா ஆசிரமத்தை அமைத்து மனைவியுடன் தங்கினார். சிப்கோ இயக்கம், தெஹ்ரி அணைக்கட்டு எதிர்ப்பு போராட்டம் ஆகியன இவரின் புகழ் பெற்ற போராட்டங்கள் ஆகும். இமயமலை பகுதிகளில் இருபது ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு மேல் நடந்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.

சிப்கோ இயக்கம்

இமயமலைக் காடுகள் வேகமாக வெட்டி அழிக்கப்பட்டுக்கொண்டிருந்த காலங்களில் காடுகளைப் பாதுகாக்கும்பொருட்டு சிப்கோ இயக்கம் துவங்கப்பட்டது. 1970களில் இமயமலைப் பகுதிகளில் வெள்ளமும் நிலச்சரிவுகளும் வழக்கத்தை விட அதிக அளவில் நிகழ்ந்தன. காடழிப்பும் பெரிய கட்டுமானங்களுமே அவற்றுக்குக் காரணம் என மக்கள் நினைத்தனர். இந்நிலையில் 1974ம் வருடம் மார்ச் 24ம் தேதி ரேனி என்னும் கிராமத்தின் ஆண்கள் எல்லாரும் இழப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்காக ஊரைவிட்டு சென்றிருந்தனர். அப்போது மரம் வெட்டுபவர்கள் வரவும் ரேனி கிராமத்தின் பெண்கள் மரங்களை கட்டியணைத்துக்கொண்டு மரங்களுக்காக உயிரையும் தர முன்வந்தனர். வேறு வழியின்றி மரம் வெட்டுபவர்களும் திரும்பிச் சென்றனர். இந்நிகழ்வு இந்தியா முழுவதும் சூழியல் போராட்டத்திற்கான பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது. சிப்கோ என்னும் இந்திச் சொல்லின் பொருள் 'கட்டியணைத்தல்' என்பதாகும்.

தன்னிச்சையாக ஆரம்பித்த இவ்வியக்கத்தின் தலைவர்களுள் ஒருவராக சுந்தர்லால் பகுகுணா செயல்பட்டார். இப்போராட்டத்திற்காக 'சூழியலே நிரந்தர பொருளியல்' என்னும் முழக்கத்தை உருவாக்கினார். சிப்கோ போராட்டத்திற்காக மக்களிடம் ஆதரவைத் திரட்டவும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சுந்தர்லால் பகுகுணா 1981-82ல் காஷ்மீர் முதல் கோஹிமா வரை 4870 கிலோ மீட்டருக்கு இமயமலையில் உள்ள கிராமங்கள் தோறும் நடைபயணம் மேற்கொண்டார். மக்களிடம் ஆதரவு பெருகியதால் அப்போதைய பிரதமரான இந்திரா காந்தியைச் சந்திக்கும் வாய்ப்பு பெற்றார். அச்சந்திப்பின் மூலம் 15 ஆண்டுகளுக்கு மரங்களை வெட்டுவதற்கு மத்திய அரசு தடை விதித்தது.

தெஹ்ரி அணைக்கட்டு எதிர்ப்பு போராட்டம்

தெஹ்ரி அணைக்கு எதிராக பல ஆண்டுகளாக அகிம்சை வழியில் போராட்டத்தில் ஈடுபட்டார். தெஹ்ரி அணைக்கடுவதற்கு எதிராக 1995ம் ஆண்டு கங்கையின் துணைநதியான பகீரதியின் கரையில் 45 நாட்களுக்கு உண்ணாவிரதம் இருந்தார். இந்த உண்ணாவிரத்தின் வெற்றியாக அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ் தெஹ்ரி அணையால் ஏற்படும் சுற்றுச்சூழல் அழிவுகளை ஆராய ஒரு கமிட்டியை அமைத்தார். அந்தக் கமிட்டியின் ஆய்வறிக்கையை வெளியிடவும் தெஹ்ரி அணை கட்டும் திட்டத்தைக் கைவிடவும் 1997ம் ஆண்டு தில்லி காந்தி சமாதியில் 74 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். உச்ச நீதிமன்றத்திலும் அணைக்கு எதிராக வழக்கை நடத்தினார். வழக்கு நடந்து கொண்டிருக்கும்போதே 2001ல் அணையின் கட்டுமானம் தொடர்ந்தது. அப்பொழுது பாதுகாப்பு காரணங்களுக்காக கைது செய்யப்பட்டார். அணைக்கட்டுமானம் முடிவடைந்தபின் 2004ல் சில்யாரா ஆசிரமம் நீரில் மூழ்கியது. அதன்பின் குடும்பத்துடன் உத்தரகாண்ட் மாநிலத்தின் தலைநகரான டேராடூனில் வசித்து வந்தார்.

மறைவு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த இவர் 2021 ஆம் ஆண்டு மே 8 ஆம் தேதி ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 2021 ஆம் ஆண்டு மே 21 ஆம் நாள் நண்பகல் 12 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.[3]

பெற்ற விருதுகள்

  • பத்மஸ்ரீ விருது (1981) (அரசு மரங்கள் வெட்டுவதை ஆதரித்ததால் விருதை நிராகரித்தார்)
  • ரைட் லைவ்லிகூட் விருது (1987)
  • ஜம்னாலால் பஜாஜ் விருது (1986)
  • ரூர்கீ ஐ.ஐ.டி. வழங்கிய சமூக அறிவியலுக்கான மதிப்புறு முனைவர் பட்டம் (1989)
  • பத்ம விபூஷண் விருது (2009)[4]

புத்தகங்கள்

மேற்கோள்கள்