சுரேஷ் பிரபு
சுரேஷ் பிரபாகர் பிரபு | |
---|---|
வர்த்தக அமைச்சர் | |
பதவியில் 3 செப்டம்பர் 2017 – 30 மே 2019 | |
பிரதமர் | நரேந்திர மோதி |
முன்னையவர் | நிர்மலா சீத்தாராமன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 11 சூலை 1953 மும்பை, மகாராட்டிரம் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | உமா பிரபு |
பிள்ளைகள் | 1 |
வாழிடம் | மும்பை |
இணையத்தளம் | www |
As of செப்டம்பர் 12, 2017 |
சுரேஷ் பிரபாகர் பிரபு (Suresh Prabhakar Prabhu, 11 சூலை 1953) முன்னாள் தொடருந்து அமைச்சராகப் பொறுப்பாற்றும் இந்திய அரசியல்வாதி ஆவார். தொழில்முறையில் பட்டயக் கணக்கறிஞரான பிரபு இந்தியப் பட்டயக் கணக்கறிஞர்கள் கழக உறுப்பினருமாவார். 1996 முதல் சிவ சேனா சார்பில் மகாராட்டிரத்தின் இராசாப்பூர் மக்களவைத் தொகுதியிலிருந்து தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இந்திய அமைச்சரவையில் சேர்வதற்கு முன்னதாக நவம்பர் 9, 2014இல் சிவசேனையிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.[1]
தனி வாழ்க்கை
சுரேஷ் பிரபு இதழியலாளரான உமா பிரபுவை திருமணம் புரிந்துள்ளார். இவர்களுக்கு அமெயா பிரபு என்ற மகன் இருக்கிறார். தற்போது மும்பையிலும் தில்லியிலும் வாழ்கிறார்.
அரசியல் வாழ்க்கை
அடல் பிகாரி வாச்பாய் அமைச்சரவையில் 1998 முதல் 2004 வரையில் பல்வேறு காலங்களில் தொழில்துறை அமைச்சராகவும், சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சராகவும் உரம் மற்றும் வேதிப்பொருள்கள் அமைச்சராகவும் மின்சாரம், கனரகத் தொழில் அமைச்சராகவும் பொதுநிறுவனங்களின் அமைச்சராகவும் இருந்துள்ளார். மின்சாரத் துறையில் இவராற்றிய பணிக்காக பெரிதும் அறியப்பட்டவர்.[1] மின்துறையில் பல சீர்திருத்தங்களை கொண்டு வந்தார்.[2] மின்துறை சட்டம், 2003 நிறைவேற்றப்பட பெரிதும் பாடுபட்டார்; இதன்மூலம் மாநிலங்களிலிருந்து பெறவேண்டிய பாக்கித்தொகை முதலீடாக மாற்றப்பட்டது.
மக்களவைக்கு மகாராட்டிரத்தின் இராசாப்பூர் தொகுதியிலிருந்து 1996 முதல் தொடர்ந்து வென்று வந்துள்ளார்.[1] இருப்பினும், 2009ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தலில் தோல்வியடைந்தார்.
இந்திய ஆய அமைச்சருக்கு இணையானத் தகுதி கொண்ட இந்திய ஆறுகளை இணைப்பதற்கான சிறப்புப் பணிப்பிரிவின் தலைவராக பணியாற்றியுள்ளார்.[1] உலக வங்கியின் நாடாளுமன்ற பிணையத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்; உலக வங்கியின் நீர்வள தெற்காசிய மண்டலக்குழுவிற்கு தலைமை வகித்தார்.[3]
இந்தியாவின் வருங்காலத் தலைவர்களில் மூன்றில் ஒருவராக ஆசியாவீக் இவரை மதிப்பிட்டுள்ளது.[4]
2013இல் வார்ட்டன் இந்தியா பொருளியல் மன்றத்தில் நரேந்திர மோதியின் தலைமை உரையை இரத்து செய்தமைக்கு எதிர்ப்பாக அந்தப் பல்கலைக்கழகத்திற்கு செல்லாமல் விட்டார்.[1]
சூலை 2014இல் மோதி அரசு அவரை மின்சார சீர்திருத்த உயர்மட்டக்குழுவிற்கு தலைவராக நியமித்தது.[5]
நவம்பர் 9, 2014இல் நீண்டநாள் சிவசேனா உறுப்பினரான பிரபு அக்கட்சியிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து இந்திய அமைச்சரவையில் தொடருந்து அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.[6]
குற்றச்சாட்டு
2015 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 20 ஆம் திகதி மாநிலங்களவையில் பேசிய இவர் தனது துறையில் ஊழல் நிறைந்து உள்ளதாகவும், அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.[7]
மேற்சான்றுகள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 Suresh Prabhu returns to the Cabinet இந்தியன் எக்சுபிரசு (நவம்பர் 9 2014)
- ↑ Narendra Modi finds a reform partner in Suresh Prabhu LiveMint (November 9 2014)
- ↑ Annual Conference of the Parliamentary Network of World Bank Cape Town, The World Bank (2007)
- ↑ "Executive briefing - Suresh Prabhu". August 30, 2000. http://www.financialexpress.com/old/fe/daily/20000830/fec30078.html. பார்த்த நாள்: March 2, 2012.
- ↑ "Suresh Prabhu to head panel on power". July 2, 2014. http://www.thehindu.com/news/national/suresh-prabhu-to-head-panel-on-power/article6167646.ece.
- ↑ Suresh Prabhu says PM wants condition of railways to change, Parrikar seeks time to get going The Times of India (November 10 2014)
- ↑ ரயில்வே துறையில் ஊழல் நடப்பது உண்மையே: அமைச்சர்