செக்கரியாவின் பாடல்
செக்கரியாவின் பாடல் என்பது விவிலியத்தின் லூக்கா நற்செய்தி 1:68-79இல் உள்ள பாடலாகும். இப்பாடலை திருமுழுக்கு யோவானின் பிறப்பின்போது அவரின் தந்தை செக்கரியா பாடியதாக விவிலியம் குறிக்கின்றது.[1] கத்தோலிக்க திருச்சபையில் இப்பாடல் திருப்புகழ்மாலையின் காலைப் புகழில் பயன்படுத்தப்படுகின்றது. இது நூர்சியாவின் பெனடிக்ட்டால் முதன் முதலில் இவ்வாறு பயன்படுத்தப்பட்டது.[2] இப்பாடல் ஆங்கிலிக்கம் மற்றும் லூதரனிய சபைகளின் காலை மன்றாட்டிலும் இடம்பெறுகின்றது.
உரை
- இஸ்ரயேலின் கடவுளாகிய
- ஆண்டவரைப் போற்றுவோம்.
- ஏனெனில் அவர் தம் மக்களைத்
- தேடிவந்து விடுவித்தருளினார்.
- தம் தூய இறைவாக்கினர் வாயினால்
- தொடக்க முதல் அவர் மொழிந்தபடியே
- அவர் தம் ஊழியராகிய தாவீதின் குடும்பத்தில்
- வல்லமை உடைய மீட்பர் ஒருவர்
- நமக்காகத் தோன்றச் செய்தார்;
- நம் பகைவரிடமிருந்தும்
- நம்மை வெறுப்போர் அனைவரின் பிடியிலிருந்தும்
- நம்மை மீட்பார்.
- அவர் நம் மூதாதையருக்கு இரக்கம் காட்டி,
- தமது தூய உடன்படிக்கையையும்,
- நம் தந்தையாகிய ஆபிரகாமுக்கு
- அவர் இட்ட ஆணையையும்
- நிறைவேற்ற நினைவு கூர்ந்தார்.
- இவ்வாறு நாம் பகைவரின் பிடியிலிருந்து
- விடுவிக்கப்பட்டுத்
- தூய்மையோடும் நேர்மையோடும்
- வாழ்நாளெல்லாம் அச்சமின்றி
- அவர் திருமுன் பணிசெய்யுமாறு வழிவகுத்தார்.
- குழந்தாய்,
- நீ உன்னத கடவுளின் இறைவாக்கினர் எனப்படுவாய்;
- ஏனெனில் பாவ மன்னிப்பால் வரும் மீட்பை
- அவர்தம் மக்களுக்கு அறிவித்து
- ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்த
- அவர் முன்னே செல்வாய்.
- இருளிலும் இறப்பின் பிடியிலும் இருப்போர்க்கு
- ஒளி தரவும்,
- நம்முடைய கால்களை அமைதி வழியில் நடக்கச் செய்யவும்
- நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும்
- விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடிவருகிறது.
மேற்கோள்கள்
- ↑ Ward, Bernard. "The Benedictus (Canticle of Zachary)." The Catholic Encyclopedia. Vol. 2. New York: Robert Appleton Company, 1907. 11 Jan. 2014
- ↑ Baumer, Histoire du Bréviaire, I, 253.