சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962

← 1957 பெப்ரவரி 21, 1962 1967 →

சென்னை மாநில சட்டமன்றத்திற்கான 206 இடங்கள்
  First party Second party
 
தலைவர் காமராஜர் கா. ந. அண்ணாதுரை
கட்சி காங்கிரசு திமுக
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
சாத்தூர் காஞ்சிபுரம் (தோல்வி)
வென்ற
தொகுதிகள்
139 50
மாற்றம் 12 Increase37
மொத்த வாக்குகள் 5,848,974 3,435,633
விழுக்காடு 46.14% 27.10%


முந்தைய சென்னை மாநில முதல்வர்

காமராஜர்
காங்கிரசு

சென்னை மாநில முதல்வர்

காமராஜர்
காங்கிரசு

சென்னை மாநிலத்தின் மூன்றாவது சட்டமன்றத் தேர்தல் 1962 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடை பெற்றது. ஏற்கனவே ஆட்சியில் இருந்த இந்திய தேசிய காங்கிரசு கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. காமராஜர் மூன்றாவது முறையாக தமிழகத்தின் முதல்வரானார்[1].

தொகுதிகள்

1962 இல் சென்னை மாநிலம் என்றழைக்கப்பட்ட தமிழ் நாட்டில் மொத்தம் 206 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். அவர்கள் 167 பொதுத் தொகுதிகளில் இருந்தும் 38 தனித் தொகுதிகளில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவற்றுள் 37 தாழ்த்தப்பட்டவருக்கும் (SC) 1 பழங்குடியினருக்கும் (ST) ஒதுக்கப்பட்டிருந்தன. இதற்கு முன் அமலில் இருந்த இரட்டை உறுப்பினர் முறை 1961 இல் கைவிடப்பட்டு அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே உறுப்பினர் என்ற முறை பின்பற்றப்பட்டது.[2]

அரசியல் நிலவரம்

1946 ஆம் ஆண்டு முதல் சென்னை மாநிலத்தை ஆண்டு வந்த காங்கிரசு, காமராஜரின் தலைமையில் செயல்பட்டு வந்தது. அவரே முதல்வராகவும் இருந்தார். காமராஜர், பெரியார் ஈ வே. ராமசாமியின் திராவிடர் கழகத்தின் ஆதரவையும் பெற்றிருந்தார். 1957 இல் முதல்வர் பதவியிலிருந்து விலகிய ராஜகோபாலாச்சாரி, தன் ஆதரவாளர்களுடன் காங்கிரசை விட்டு வெளியேறி சீர்திருத்தக் காங்கிரசு என்ற புதிய கட்சியைத் தொடங்கினார் (1959 இல் அதுவே சுதந்திராக் கட்சியாக மாறியது). 1957 இல் நடந்த முந்தைய தேர்தலில் முக்கிய எதிர்க் கட்சியாக மாறிய திராவிட முன்னேற்றக் கழகம் ஐந்தாண்டுகளில் மேலும் வளர்ச்சி பெற்றிருந்தது. கட்சியோடு சேர்ந்து உட்கட்சிப் பூசலும் வளர்ந்திருந்தது. 1961 இல் திமுக வின் தலைவர்களுள் ஒருவரான் ஈ. வெ. கி. சம்பத் கட்சியை விட்டு வெளியேறி தமிழ் தேசியக் கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கினார். அவருடன் நடிகர் சிவாஜி கணேசன், கவிஞர் கண்ணதாசன் ஆகியோரும் சேர்ந்து கொண்டனர். மேற்குறிப்பிட்ட கட்சிகளைத் தவிர முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஃபார்வார்டு ப்ளாக், சி. பா. ஆதித்தனாரின் நாம் தமிழர் கட்சி, அம்பேத்கரின் குடியரசு கட்சி, பொதுவுடைமைக் கட்சி, பிரஜா சோசியலிஸ்ட் கட்சி போன்ற கட்சிகளும் இந்த தேர்தலில் போட்டியிட்டன.

பதினாறு ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்த காங்கிரசு, காமராஜரின் தலைமையில் பலம் பொருந்திய கட்சியாக மாறியிருந்தது. ஆனால் எதிர்க் கட்சியான திமுகவும் நல்ல வளர்ச்சி கண்டிருந்தது. இந்தத் தேர்தலில் அனைத்து எதிர்க் கட்சியினரையும் ஓரணியில் திரட்ட கா. ந. அண்ணாதுரை முயன்றார். ஆனால், இடதுசாரி கம்யூனிஸ்டுகளுக்கும் வலதுசாரி சுதந்திராக் கட்சியினருக்கும் இடையே இருந்த கொள்கை ஒவ்வாமை காரணமாக அவரது முயற்சி கைகூடவில்லை. இறுதியில் திருச்சி மாவட்டத்தில் மட்டும் திமுக விற்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் தொகுதி உடன்பாடு இருந்தது. எதிர்க் கட்சிகளின் ஒற்றுமையின்மையாலும் பெரியாரின் ஆதரவாலும் மேலும் வலுவடைந்திருந்த காங்கிரசு, இந்தத் தேர்தலை பெரும் பலத்துடன் சந்தித்தது,[3][4][5][6]

இத்தேர்தலில் திரைப்படத்துறையினரின் பங்கு பெரிதாக இருந்தது. எம். ஜி. ராமச்சந்திரன் (எம். ஜி. ஆர்) திமுக வின் சார்பாக பிரச்சாரம் செய்தார். நடிகர் எஸ். எஸ். ராஜேந்திரன் தேனி சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டார். சிவாஜி கணேசன் தமிழ் தேசியக் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். காங்கிரசு “வாக்குரிமை” என்ற பிரச்சாரப் படத்தைத் தயாரித்து தமிழகமெங்கும் திரையிட்டது.[3][5]

தேர்தல் முடிவுகள்

பிப்ரவரி 21 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 71 சதவிகித வாக்குகள் பதிவாகின.[7]

கூட்டணி கட்சி வாக்குகள் வாக்கு % போட்டியிட்ட இடங்கள் வென்ற இடங்கள் மாற்றம்
காங்கிரசு
இடங்கள்: 139
மாற்றம்:-12
வாக்குகள்: 5,848,974
வாக்கு %: 46.14%
காங்கிரசு 5,848,974 46.14% 206 139 -12
மற்றவர்கள்
இடங்கள்: 67
மாற்றம்: +25
வாக்குகள்: 6,827,372
வாக்கு %: 53.86%
திமுக 3,435,633 27.10% 143 50 +37
சுதந்திராக் கட்சி 991,773 7.82% 94 6 +6
ஃபார்வார்டு ப்ளாக் 173,261 1.37% 6 3 +3
இந்திய கம்யூனிஸ்ட் 978,806 7.72% 68 2 -2
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 48,753 0.38% 7 1
பிரஜா சோஷ்யலிஸ்ட் 159,212 1.26% 21 0 -2
நாம் தமிழர் 117,640 0.93% 16 0
முஸ்லீம் லீக் 89,968 0.71% 6 0
குடியரசுக் கட்சி 57,457 0.45% 4 0
தமிழ் தேசியக் கட்சி 44,048 0.35% 9 0
பொதுவுடமைத் தொழிலாளர் 43,186 0.34% 7 0
ஜன சங்கம் 10,743 0.08% 4 0
சுயேட்சைகள் 676,892 5.34% 207 5 -17
மொத்தம் 13 12,676,346 100% 206

ஆட்சி அமைப்பு

காங்கிரசு தனிப்பெரும்பான்மை பெற்று, காமராஜர் மூன்றாம் முறை முதல்வரானார். அவரது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தவர்கள் (3 மார்ச் 1962 - 2 அக்டோபர் 1963):[8][9][10]

அமைச்சர் துறை
காமராஜர் முதல்வர், திட்டப்பணி
எம். பக்தவத்சலம் கல்வி, நிதி
ஆர். வெங்கட்ராமன் வருவாய்
கக்கன் விவசாயம்
வி. ராமய்யா பொதுப் பணித்துறை, வருவாய்
ஜோதி வெங்கடாசலம் சுகாதாரம், மகளிர், குழந்தைகள் மேம்பாடு
நல்லசேனாபதி சர்க்கரை மன்றாடியார் கூட்டுறவு, வனத்துறை
பூவராகன் தகவல் தொடர்பு
அப்துல் மஜீத் உள்ளாட்சி

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

  1. காமராஜர் தலைமையில் காங்கிரஸ் திமுகவை வென்ற 1962 தேர்தல்
  2. "The State Legislature - Origin and Evolution". Tamil Nadu Government. Archived from the original on 13 ஏப்ரல் 2010. பார்க்கப்பட்ட நாள் 27 November 2009. {cite web}: Check date values in: |archive-date= (help)
  3. 3.0 3.1 Robert L. Hardgrave, Jr. (1964-1965). "The DMK and the Politics of Tamil Nationalism". Pacific Affairs 37 (4): 396–411. http://www.jstor.org/stable/2755132. 
  4. . The Hindu. 19 february 1962. 
  5. 5.0 5.1 Lloyd I. Rudolph (May 1961). "Urban Life and Populist Radicalism: Dravidian Politics in Madras". The Journal of Asian Studies 20 (3): 283–297. http://www.jstor.org/stable/2050816. 
  6. Kannan. R (2009), Anna:Life and Times of C. N. Annadurai. Penguin
  7. "1962 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2010-06-24.
  8. Kandaswamy. P (2008). The political Career of K. Kamaraj. Concept Publishing Company. pp. 62–64. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7122-801-808. {cite book}: Check |isbn= value: length (help)
  9. "The Madras Legislative Assembly, Third Assembly I Session" (PDF). Archived from the original (PDF) on 2011-05-14. பார்க்கப்பட்ட நாள் 2021-08-30.
  10. "The Madras Legislative Assembly, Third Assembly II Session" (PDF). Archived from the original (PDF) on 2011-05-14. பார்க்கப்பட்ட நாள் 2010-06-24.

வெளி இணைப்புகள்