ஜம்மு மாவட்டம்
ஜம்மு மாவட்டம் | |
---|---|
மாவட்டம் | |
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஜம்மு மாவட்டத்தின் அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | சம்மு காசுமீர் |
நிர்வாகக் கோட்டம் | ஜம்மு கோட்டம் |
தலைமயிடம் | ஜம்மு |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 15,29,958 |
நேர வலயம் | ஒசநே+05:30 (IST) |
இணையதளம் | http://jammu.nic.in/ |
ஜம்மு மாவட்டம், இந்தியாவின் சம்மு காசுமீர் மாநிலத்தின் இருபத்தி இரண்டு மாவட்டங்களில் ஒன்றாகும். ஜம்மு மாவட்டத்தின் தலைமையிடமான ஜம்மு நகரம், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் குளிர்கால தலைநகரமாக விளங்குகிறது.
இம்மாவட்டத்தின் தலைமையிடமான ஜம்மு நகரத்திலிருந்து 58 கிலோ மீட்டர் தொலைவில் புகழ்பெற்ற வைஷ்ணவ தேவி அம்மன் மலைக் கோயிலும், மாநிலத் தலைநகரம் காஷ்மீர் 294 கிலோ மீட்டர் தொலைவிலும், இந்தியத் தலைநகர் புதுதில்லி 602 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டமாக ஜம்மு மாவட்டம் உள்ளது. [1] ஜம்மு மாவட்டத்தில் பாயும் ஆறுகளில் தாவி ஆறும் ஒன்றாகும்.
மாவட்ட எல்லைகள்
2,342 சதுர கிலோ மீட்டர் கொண்ட ஜம்மு மாவட்டத்தின் வடக்கே ரஜௌரி மாவட்டமும், வடகிழக்கில், கிழக்கே உதம்பூர் மாவட்டமும், மேற்கே ஆசாத் காஷ்மீரும் தெற்கே பாகிஸ்தானும் எல்லைகளாக அமைந்துள்ளன. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டமாக ஜம்மு மாவட்டம் உள்ளது. [2]
மாவட்ட நிர்வாகம்
ஜம்மு மாவட்டம் அக்னூர், பிஷ்னா, ஜம்மு மற்றும் இரண்வீர்சிங் புரம் என நான்கு வருவாய் வட்டங்கள் கொண்டுள்ளது.[3]
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ஜம்மு மாவட்ட மக்கள் தொகை 15,29,958 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 8,13,821; ஆகவும் பெண்கள் 716,137 ஆகவும் உள்ளனர்.
மக்கள் தொகை அடர்த்தி, ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 653 ஆக உள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 880 பெண்கள் உள்ளனர். சராசரி எழுத்தறிவு விகிதம் 83.45 விழுக்காடாக உள்ளது. அதில் ஆண்கள் எழுத்தறிவு விகிதம் 89.08% ஆகவும், பெண்கள் எழுத்தறிவு விகிதம் 77.13% ஆகவும் உள்ளது. மொத்த மக்கள் தொகையில் ஆறு வயதிற்குட்பட்டவர்கள் 10.94% ஆக உள்ளது. [4]
போக்குவரத்து
தொடருந்து
இந்திய இரயில்வே துறை, ஜம்மு மாவட்டத்தை இந்தியாவின் அனைத்து நகரங்களுடன் இணைக்கும் வகையில் தொடருந்து வசதிகள் உள்ளது. [5]
பேருந்து
தேசிய நெடுஞ்சாலை 1எ ஜம்மு மாவட்டம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனைத்து நகரங்களுடன் இணைக்கிறது. மேலும் புதுதில்லி, சண்டிகர் ஆகிய நகரங்களுக்கு பேருந்து வசதிகள் உள்ளன.
விமானம்
ஜம்மு வானூர்தி நிலையத்திலிருந்து புதுதில்லி, ஸ்ரீநகர், லே, மும்பை, புணே, அகமதாபாத், கோவா, சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத், கொச்சி, குவாஹாத்தி மற்றும் பெங்களூரு போன்ற முக்கிய நகரங்களுக்குச் செல்ல விமான வசதிகள் உள்ளது.
சுற்றுலா தலங்கள்
ஜம்மு மாவட்டத்தில் சமயம் சார்ந்த மற்றும் பொதுவாக பார்க்க வேண்டிய தலங்களில், ரகுநாத் கோவில், சிவகோரி, வைஷ்ணவ தேவி ஆலயம், புர்மண்டல், நந்தினி விலங்குகள் சரணாலயம், மானஸ்பல் ஏரி, பஹு கோட்டை, பீர் கோ குகை முக்கியமானவைகள்.
சமயம்
ஜம்மு மாவட்டத்தில் பெரும்பான்மையான சமயத்தவர்களாக இந்து சமயத்தினர் 84.27%, சீக்கியர்கள் 7.47%, இசுலாமியர்கள் 7.03%, கிறித்தவர்கள் 0.79%, மற்றவர்கள் 0.45% ஆகவும் உள்ளனர்.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
- ↑ 2011 census J&K
- ↑ 2011 census J&K
- ↑ "Jammu District having Tehsil and Village Boundaries". Jammu District. Archived from the original on 16 April 2015.
- ↑ http://www.census2011.co.in/census/district/639-jammu.html
- ↑ http://indiarailinfo.com/departures/jammu-tawi-jat/81