டினாகோ அருவி

டினாகோ அருவி
பிலிப்பைன்சின் இலிகன் நகரத்தில் உள்ள டினாகோ அருவி
அமைவிடம்இலிகன் நகரம், மிண்டனாவோ, பிலிப்பீன்சு
வகைவிசிறி
மொத்த உயரம்73.152 m (240.0 அடி)
வீழ்ச்சி எண்ணிக்கை5
நீளமான வீழ்ச்சியின் உயரம்73.152 m (240.0 அடி)
சராசரி அகலம்100 அடிகள் (30 m)

டினாகோ அருவி (Tinago Falls) என்பது அகுசு ஆற்றில் அமைந்துள்ள ஒரு அருவியாகும். இது பிலிப்பைன்ஸ் தீவான மிண்டனாவோவின் வடபகுதியில் உள்ள லனாவோ டெல் நோர்டேவில், லினாமன் நகரத்திற்கும் இலிகன் நகரத்திற்கும் இடையில் அமைந்துள்ளது.[1][2] மகத்தான நீர்வீழ்ச்சிகளின் நகரம் என அறியப்படும் இலிகன் நகரத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் இதுவும் ஒன்றாகும்.

டினாகோ என்பது "மறைக்கப்பட்ட" என்று பொருள்படும் ஒரு பிலிப்பைன்ஸ் சொல், இந்த அருவியானது ஆழமான பள்ளத்தாக்கில் மறைக்கப்பட்டவாறு அமைந்துள்ளதால் இப்பெயர் இடப்பட்டிருக்கலாம். அருவி உள்ள பகுதிக்கு மலையேறுவதற்கு முறுக்கு படிக்கட்டு என்று அழைக்கப்படும் சுமார் 500 இறங்கு படிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த அருவி உயரமாக உள்ளது, இதன் மிகவும் குளிர்ச்சியான நீர் ஒரு ஆழமான, அமைதியான படுகை போன்ற குளத்தில் அழகாக வழிந்தோடுகிறது, இது நீல நிற உப்பங்கழி போல் தோன்றுகிறது. இந்த அருவியின் கீழ் ஒரு சிறிய குகை உள்ளது, அங்கு மக்கள் உள்ளே நுழைந்து தண்ணீரின் இரைச்சலைக் கேட்கலாம்.

புராணப் பின்புலம்

ஒரு காலத்தில் செல்வாக்கு மிக்க மற்றும் சக்திவாய்ந்த சுல்தான் அகோக்கும் அவரது மனைவியும் வாழ்ந்ததாக நாட்டுப்புறக் கதைகள் கூறுகின்றன. இவர்கள் தங்கள் மக்களால் அரசனாகவும் இராணியாகவும் நியமிக்கப்பட்டனர். ஆனால், அவர்கள் தங்களைப் பற்றி மிகவும் பெருமைப்பட்டுக்கொண்டு சுயநல ஆட்சியாளர்களாக மாறினர். சுல்தானின் மனைவி கர்ப்பமாக இருந்தபோது, ஒரு சூனியக்காரி, பிச்சைக்கார வேடமிட்டு, அவர்களின் உதவியை நாடினார், ஆனால் அரசனும் அரசியும் அவளை நிராகரித்தனர். இதன் காரணமாக, சூனியக்காரி தம்பதியினரின் வருங்கால குழந்தை அசிங்கமாகப் பிறப்பாள் என்று சபித்தார்.

குழந்தை உண்மையில் அசிங்கமாகப் பிறந்தது. குழந்தை தனது தாயைப் போலவே அழகாக இருக்கும் என்று எதிர்பார்த்திருந்த தம்பதியினர் வருத்தமும் ஏமாற்றமும் அடைந்தனர். இவர்கள் இத்துயரத்தைத் தவிர்ப்பதற்காக குழந்தையை ஒரு குகையில் மறைத்து, குழந்தைக்கு “மறைக்க்பட்ட முகம்” என்ற பொருளுடைய டின்-அக் என்று பெயரிட்டனர். அவர்கள் அவ்வப்போது குகைக்குச் சென்று குழந்தையைக் கவனித்தனர்.

குழந்தை வளர்ந்ததும், அவள் குகையிலிருந்து வெளியே சென்று வெளி உலகத்தைக் கண்டு வியந்தாள். இருப்பினும், மக்கள் அவளிடம் இரக்கம் காட்டவில்லை, அவர்களின் அவதூறுகள் மற்றும் கேலிச்சொற்களால் அவள் அவதியுற்றாள். சூனியக்காரி, குழந்தையின் துன்பத்தைப் பார்த்து, உதவ விரும்பினார். lடின்-அக் பதின்பருவத்தில் தன்னை அழகாக மாற்ற விரும்பினார். சூனியக்காரியும் ஒப்புக்கொண்டார். ஆனால், டின்-ஆக் முற்றிலும் அறியாமல், அவள் ஒரு நீர்வீழ்ச்சியாக மாற்றப்பட வேண்டும் என்று மனதில் நினைத்து விட்டாள். உண்மையில் அவள் மிகவும் அழகாக மாறினாள். இவ்வாறு உருவான அருவியே இப்போது இலிகன் நகரில் உள்ள டினாகோ அருவி என்று அழைக்கப்படுகிறது. [3]

டினாகோ அருவி
சிறு நீரோடைகள்
200 படிகள் கொண்ட சுழலும் படிக்கட்டுகள்
சுழலும் படிக்கட்டு

புவியியல்

டினாகோ அருவி இலிகன் நகரத்தின் பரங்கே டிடுகலனில் ஆழமான பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இந்த அருவி ஒரு குன்றிலிருந்து 240 அடி (73 மீட்டர்) உயரத்தில் விழுகிறது.

மேற்கோள்கள்