அஞ்சல் தலை
அஞ்சற்றலை அல்லது தபால்தலை என்பது அஞ்சல் சேவைக்கு முன் கட்டணம் செலுத்தப்பட்டதற்குச் சான்றாக கொடுக்கப்படுவது. பொதுவாக இது ஒரு நீள்சதுர வடிவிலமைந்த சிறு காகிதத் துண்டாக இருக்கும். தபால் சேவை மூலம் அனுப்பப்படவுள்ள கடிதஉறையில், மேற்சொன்ன தபால்தலைகளை ஒட்டுவதன் மூலம், அக் கடிதத்தை அனுப்புபவர் அதை அனுப்புவதற்கான கட்டணத்தைச் செலுத்தியுள்ளார் என்பதற்குச் சான்று அளிக்கின்றார். முன் கட்டணம் செலுத்தப்பட்ட உறைகளைப் பயன்படுத்துவதிலும் பார்க்க அதிகம் விரும்பப்படும் முறை இதுவாகும்.
அஞ்சல்தலை என்ற சொல்லுக்குப் பதிலாக முத்திரை என்ற பதமும் வழக்கிலுள்ளது. இச் சொல் தபால்தலை என்பதை மட்டுமன்றி வேறு பொருள்களையும் கொடுக்கக் கூடுமெனினும், சாதாரணமாக முத்திரை என்பது, தபால் தலையையே குறிக்கும்.
நீள் சதுரமாக மட்டுமன்றித் தபால்தலைகள் பல்வேறு வடிவங்களிலும் வெளியிடப்படுவதுண்டு. முக்கோணம், வட்டம், பல்கோணம், இணைகரம் போன்ற வடிவங்களிலும் தபால்தலைகள் உண்டு.
வரலாறு
ஒட்டும் தன்மையுள்ள தபால்தலைகளும், ஒருதன்மைத்தான தபால் கட்டணமும், 'ஜேம்ஸ் சாமேர்ஸ்' என்பவரால் 1834 அளவில் முன்வைக்கப்பட்டது. இதே கருத்தை 1837ல் 'ரோலண்ட் ஹில்' என்பவரால் வெளியிடப்பட்ட, தபால் துறைச் சீரமைப்பு: இதன் முக்கியத்துவமும், செயற்படுதன்மையும் என்னும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது. தபால் பெறுனர், கட்டணம் செலுத்தவிரும்பாவிடில், தபாலை வாங்க மறுக்கலாம் எனவே தபால் கட்டணத்தை, பெறுனரிடம் அறவிடுவதிலும், அனுப்புனரிடம் அறவிடுவதே சிறந்தது என அதில் அவர் வாதாடினார். எவ்வளவு தூரத்தில் வழங்கப்படுகிறது என்பதைக் கருதாமல், ஒருசீரான கட்டணமாக ஒரு பென்னியை அறவிடவேண்டுமென்றும் அவர் கருத்து கூறினார். வெவ்வேறு தொலைவிடங்களுக்கு வெவ்வேறு கட்டண அறவீட்டு முறை, கணக்கு வைக்கும் செலவை அதிகரிக்கும் என்றும், ஒரு சீரான கட்டணமுறையில் அரச தபால் சேவைக்குப் பணம் மிச்சப்படும் என்பதையும் எடுத்துக் காட்டினார். சாமேர்ஸின் முன்வைப்பு இறுதியாக 1839 ஆகஸ்டில் நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் பொதுத் தபால் அலுவலகம், 1840ல் பென்னி தபால் சேவையை ஆரம்பித்ததுடன், 1 பென்னியும், 2 பென்னியும் பெறுமானமுள்ள, படம் அச்சிடப்பட்ட உறைகளையும் வெளியிட்டது.
மூன்று மாதங்களின் பின்னர், விக்டோரியா மகாராணியின் படம் அச்சிடப்பட்ட பென்னி பிளாக் என்று அறியப்பட்ட முன்கட்டணத் தபால் தலையையும் வெளியிட்டது. முதலாவது தபால் தலையை வெளியிட்ட காரணத்தினால், அனைத்துலகப் பயன்பாட்டுக்குத் தபால்தலைகளை வெளியிடும் நாட்டின் பெயர் ரோமன் எழுத்துக்களில் அவற்றில் பொறிக்கப் பட வேண்டுமென்ற அதன் விதியிலிருந்து, ஐக்கிய இராச்சியத்துக்கு, அனைத்துலக தபால்சேவைச் சங்கம் (U.P.U.) விலக்கு அளித்துள்ளது. யூ.பி.யூ வில் இணைவதற்கு முன்னர் பல நாடுகள் இப்படிச் செய்வதில்லை, எனினும் பின்னர் மிகக் குறைந்த மீறல்களே இருந்தன. இதன் காரணமாக சீனா, ஜப்பான் போன்ற நாடுகளின் பெரும்பாலான பழைய வெளியீடுகளிலுள்ள கீழை நாட்டு எழுத்துக்களுக்கு மேற்கு நாட்டுப் புதிய சேகரிப்பாளர்கள் அறிமுகமில்லாதவர்களாக உள்ளார்கள். ஒரு தபால் தலை, அதன் பெறுமதியையும், அந் நாட்டு நாணயத்தில் கொண்டிருக்கவேண்டும். சில நாடுகள், ஒரு எழுத்தையோ அல்லது First Class என்பது போன்ற குறிப்புக்களையும் பெறுமதிக்குப் பதிலாகக் கொடுக்கின்றன. யூ.பி.யூ வின் விதி காரணமாக இது உள்ளூர் சேவைகளுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்படுகின்றது, எனினும் மீறல்களும் அதிகம் கவனிக்கப்படுவதில்லை.(ஐரோப்பிய தபால் சேவைக்கான பிரித்தானியாவின் "E" தபால்தலையும், தென்னாபிரிக்காவின் "பன்னாட்டு கடித விகிதம்" என்ற தபால் தலையும் மேற்சொன்ன விதிவிலக்குகளில் அடங்கும்).
வழங்கல்
தொடக்க காலத்திலிருந்தே, எப்படித் தபால் தலைகள் வழங்கப்படுகின்றன அல்லது விற்கப்படுகின்றன என்பது தொடர்பில், பல்வேறு புதிய முறைகள் கையாளப்பட்டு வந்தன. அண்மையில் ஒருவர் தனது கணனியிலேயே தபால்தலைகளை அச்சிட்டுப் பெறக்கூடியதாக இருந்தது. 2002ல் ஐக்கிய அமெரிக்கத் தபால் சேவை வலைத் தபால்தலைகளை வெளியிடுவதற்கு ஸ்டாம்ப்ஸ்.காம் முக்கு (Stamps.com) அனுமதி வழங்கியது.
தபால்தலைகளின் வகைகள்
- வான்வழி அஞ்சல் - வான்வழி அஞ்சல் சேவைகளுக்கான கட்டணத்துக்காக. வான்வழி அஞ்சல் சேவைகளுக்கான தபால்தலைகளில், வாழ்வழி அஞ்சல் என ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டிருப்பது பொதுவான வழக்கம். தபால்தலை விபரப்பட்டியல்களை வெளியிடும் ஸ்கொட் நிறுவனம், அக்காலத்தில் புழக்கத்திலிருந்த வான்வழி அஞ்சல் கட்டணங்களுக்குப் பொருத்தமானதும், வானூர்தியொன்றின் நிழல்வரிப்படம் பொறிக்கப்பட்டவையுமான, ஐக்கிய அமெரிக்காவில் வெளியிடப்பட்ட சில தபால்தலைகளை, வான்வழி அஞ்சல்களாகப் பட்டியல் இட்டுள்ளது. ஏனைய மூன்று முக்கிய விபரப் பட்டியல்களும், வான்வழி அஞ்சல்தலைகளுக்கு சிறப்புத் தகுதி எதையும் கொடுக்கவில்லை.
- ஏடிஎம் (ATM)
- தூதுவரின் தபால்தலை (carrier's stamp)
- சான்றளிக்கப்பட்ட அஞ்சல் தபால்தலைகள் (certified mail stamps)
- ஞாபகார்த்த தபால்தலைகள்
- விரைவுத் தபால்தபால்தலை/ சிறப்பு வழங்கல் தபால்தலை
- காலம்தாழ்ந்த கட்டணத் தபால்தலை
- உள்ளூர் தபால்
- படையினர் தபால்தலை
- அரசு ஏற்புபெற்ற அஞ்சல் தபால்தலைகள்
- ஆக்கிரமிப்புத் தபால்தலை
- பொதித் தபால்
- தபால் கட்டண நிலுவை
- தபால் வரி
- தானொட்டுத் தபால்தலைகள்
- பகுதி-அஞ்சல் / ஈகை தபால்தலை (semi-postal / charity stamp)
- சிறப்புக் கையாள்கை
- சோதனைத் தபால்தலை
- போர் வரி தபால்தலை (War tax stamp)
- நீர்-தூண்டற் தபால்தலை (water-activated stamp)
சேகரித்தல்
முதன்மைக் கட்டுரை: அஞ்சல்தலை சேகரிப்பு
சில நாடுகள் தபால் சார்ந்த தேவைகளுக்காகவன்றி, சேகரிப்பாளர்களுக்காகவே தபால்தலைகளை வெளியிடுகின்றார்கள். இது அவ்வாறான நாடுகளின் வருமானத்தின் குறிப்பிடத்தக்க அளவுக்குக் காரணமாக உள்ளது என்றும் கூறப்படுகின்றது. இவ்வாறு சேகரிப்பாளர்களைக் குறி வைத்துத் தபால் தலைகளை வெளியிடும் கொள்கை எல்லாச் சந்தர்ப்பங்களிலும் சேகரிப்பாளர்களால் ஆதரிக்கப்படுவது இல்லை. இக்கொள்கையை மிதமான அளவுக்குப் பயன்படுத்தும்போது சேகரிப்பாளர்களிடம் வரவேற்புப் பெறும் அதே வேளை, அளவுக்கு மீறித் தபால்தலைகளை வெளியிடும் நாடுகள் கண்டனத்துக்கு உள்ளாகின்றன. சில பத்தாண்டுகளுக்கு முன், சில தனியார் நிறுவனங்கள், சிறிய நாடுகளுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, அந்நாடுகளுக்கான தபால்தலைகளை இலவசமாக அச்சிட்டுக் கொடுத்தன. ஆனால், இதற்கு மாற்று உதவியாக, எஞ்சியிருக்கும் தபால்தலைகளை சேகரிப்பாளர்களுக்கு விற்கும் உரிமையைத் தாங்கள் பெற்றுக்கொண்டன.
பெயர்பெற்ற தபால்தலைகள்
- பென்னி பிளாக்
- மொரீஷியஸ் நீல பென்னி
- தலைகீழ் ஜென்னி
- பிரித்தானிய கயானா 1 சென்ட் சாந்து
- பாசெல் புறா
- கருப்பு ஹொண்டூராஸ் (Black Honduras)
- சென் லூயிஸ் கரடிகள் (St. Louis Bears)
- தபால்தலையை வட்ட வடிவில் வெளியிட்டது மலேசியா நாடு.[1] தி இந்து தமிழ், ஜூன் 29, 2014
மேற்கோள்
வெளி இணைப்புகள்
- Joseph Luft's Philatelic Resources on the Web – largest collection of links to other stamp-related sites
- philately.com பரணிடப்பட்டது 2017-03-02 at the வந்தவழி இயந்திரம்