பரிசேயர்
பரிசேயர் என்போர் பல்வேறு காலகட்டங்களில் அரசியல் கட்சியாகவும், சமூக இயக்கமாகவும், மற்றும் இரண்டாம் கோவில் காலத்தில் திருநாட்டில் இருந்த ஒரு யூத சமய அறிஞர் இயக்கமாகவும் இருந்தனர். இவர்கள் மக்கபேயர் புரட்சியால் விளைந்த மக்கபேயர் அரசு காலத்தில் தொடங்கிய குழுவாவர். கி.மு 70களில் நடந்த இரண்டாம் கோவிலின் அழிவுக்குப்பின்பு இவர்களின் கொள்கைகளும் கோட்பாடுகளுமே தற்கால யூத சமயத்துக்கு அடிப்படையாயிற்று.
இவர்கள் "Hasideans" என்ற குழுவின் வழி வந்தவர்கள் என்று கருதப்படுகிறது. இவர்கள் கர்த்தருக்கென்று தங்களை பிரித்தெடுத்தவர்கள். பரிசுத்தமானவர்கள். கி. பி. 65ல் "Antiochus Epiphanes"க்கு எதிராக நடந்த கிளர்ச்சியில் இவர்களும் மக்காபியர்களுடன் சேர்ந்து போராடினர்.
பரிசேயர் மற்றும் சதுசேயர்களுக்கிடையே சமூக மற்றும் சமய கோட்பாடுகளின் அடிப்படையில் நீண்டகாலமாக மோதல்கள் இருந்தன. இவை பாபிலோனிய அடிமைக்காலம் தொடங்கி உரோமையரின் ஆட்சிக்காலம் வரை இருந்தது. சதுசேயருள் பெரும்பாண்மையினர் வேதபாரகராக மற்றும் உயர்குடி குடும்பத்தினராக இருந்ததால் செல்வந்தர்கள் மற்றும் ஏழைகளுக்கிடையே இருந்த சமூக வேறுபாடு இவர்களுக்கிடையேயான மோதல்களுக்கு காரணியாயின.[1] மேலும் பரிசேயர் கிரேக்கமயமாக்கப்படுதலை எதிர்த்தனர். கோவிலின் முதன்மைத்துவம், மோசேவின் சட்டத்துக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் ஆகியவற்றிலும் சதுசேயரோடு முரண்பட்டனர். குறிப்பாக தோராவின் விளக்கங்களிலும், இறந்தோர் உயிர்ப்பர் என்னும் கோட்பாட்டிலும் வேறுபட்டிருந்தனர்.
பரிசேயர்கள் உயிர்த்தெழுதல் உண்டு என்று நம்பினர். சதுசேயர்கள் உயிர்த்தெழுதல் இல்லை என்று நம்பினர்.
பரிசேயரான ஜொசிஃபஸ் (37 – c. 100 CE), இரண்டாம் கோவிலின் அழிவுக்கு முன்பு சுமார் 6,000 பரிசேயர்கள் வாழ்ந்ததாக குறிக்கின்றார்.[2] இவரின் கூற்றுப்படி சதுசேயர்போல் அல்லாமல் பரிசேயர் மக்களிடம் நன்மதிப்பு பெற்றவராய் இருந்தனர். பரிசேயர்கள் யூத சட்டங்களை விளக்க[3] மோசேவின் அதிகாரம் தங்களிடம் இருப்பதாக நம்பினர் எனவும் சதுசேயரோ சாலொமோன் காலத்தில் நிருவப்பட்ட குருத்துவ அதிகாரம் தங்களிடம் இருப்பதாக நம்பினர் எனவும் இவர் குறிக்கின்றார். பொது யூதர்கள் இவ்விரு குழுக்களிலிருந்து வேறுபடுத்தி ஜொசிஃபஸ் விவரிக்கின்றார் என்பதும் குறிக்கத்தக்கது.
யூத வரலாற்று ஏடுகளுக்கு வெளியே புதிய ஏற்பாட்டில் திருமுழுக்கு யோவான்[4] மற்றும் இயேசு கிறித்துவோடு இவர்கள் புரிந்த வாதங்கள் குறிக்கத்தக்கன. புதிய ஏற்பாட்டில் புனித பவுல் ஒரு பரிசேயராக பல இடங்களில் குறிக்கப்படுகின்றார்.[5] காமாலியேல் போன்ற பரிசேயர்களில் சிலர் கிறித்தவ மறைக்கு ஆதரவாக இருந்தனர் என்பதும் குறிக்கத்தக்கது.[6]
மேற்கோள்கள்
- ↑ Jewishvirtuallibrary.org
- ↑ Antiquities of the Jews, 17.42
- ↑ Ber. 48b; Shab. 14b; Yoma 80a; Yeb. 16a; Nazir 53a; Ḥul. 137b; et al.)
- ↑ Matthew 3:1–7,Luke 7:28–30
- ↑ Apostle Paul as a Pharisee Acts 26:5 See also Acts 23:6,Philippians 3:5
- ↑ Acts 5:34-39