பூலி (பண்டைய கிரேக்கம்)
பூலி (Boule, கிரேக்கம்: βουλή , boulē ; பன்மை βουλαί, boulai ) என்பது பண்டைய கிரேக்க நகர அரசுகளில் இருந்த பிரபுகள் அவையாகும். இந்த அவையில் உறுப்பினராக இருந்த 500 க்கும் மேற்பட்ட குடிமக்கள் (βουλευταί, bouleutai ) நகரத்தின் தினசரி விவகாரங்களை நடத்திவந்தனர். மன்னருக்கு ஆலோசனை வழங்கும் பிரபுக்களின் குழு, நகரின் அரசியலமைப்பின் படி பூலியாக உருவானது. சிலவர் ஆட்சியில் பூலி பதவிகள் பரம்பரையாக இருந்திருக்கலாம். அதே சமயம் சனநாயக நாடுகளில் உறுப்பினர்கள் பொதுவாக குலுக்கல் சீட்டு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு ஆண்டு பணியாற்றினார். ஏதென்சைத் தவிர, பல பூலிகளின் செயல்பாடுகள் பற்றி அதிகம் அறியப்படவில்லை.
ஏதெனியன் பூலி
ஏதென்சின் அசல் அவையானது அரியோப்பாகு ஆகும். இது முன்னாள் ஆர்கோன் தலைவர்களைக் கொண்டது. இது பிரபுத்துவக் குணம் கொண்டது. இந்த அவை உறுப்பினர்கள் அக்ரோ போலிக்கு பக்கத்தில் இருந்த அரயோப்பாகு குன்றின் மீது கூடி விவகாரங்களை நடத்துவர். அரயோப்பாகு அவை என்று பெயர் வழங்கிவந்தது. ஏதென்சின் மன்னராட்சி தொடங்கியதிலிருந்து இந்த அவை இருந்துவந்ததாக தெரிகிறது. அரசர்களின் அதிகாரங்கள் குறையக் குறைய இதனுடைய அதிகாரங்கள் கூடிவந்தன. பணக்காரர்கள், நிலப்பிரபுக்கள் ஆகிய மேல்தட்டு வகுப்பினரே இதன் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டனர். ஆர்கோனை நியமிக்கிற அதிகாரமும் இந்த அவையிடமே இருந்தது. முன்னாள் ஆர்கோன்கள் இந்த அவையின் உறுப்பினர்களாக இருக்க உரிமை பெற்றவர்களாவர்.[1]
குறிப்புகள்
- ↑ வெ. சாமிநாதசர்மா (1955). கிரீஸ் வாழ்ந்த வரலாறு. புதுக்கோட்டை: பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம். pp. 129–130.