மஞ்சப்பாறை ஆறு
மஞ்சப்பாறை ஆறு | |
---|---|
அமைவு | |
சிறப்புக்கூறுகள் | |
முகத்துவாரம் | மிசோரி ஆறு - வடக்கு டகோட்டா புபோர்ட் |
⁃ உயர ஏற்றம் | தோற்றம் - 12,800 அடி, நுழைவாயில் 1,850 அடி |
நீளம் | 692 மைல்கள் |
692 மைல் நீளமுடைய அமெரிக்காவின் மேற்கிலுள்ள மஞ்சப்பாறை ஆறு (ஆங்கிலம் - Yellowstone River) மிசோரி ஆற்றின் துணையாறாகும். மேல் மிசௌரியின் முதன்மை துணையாறான இதுவும் இதன் துணையாறுகளும் பெரும் நிலப்பரப்பை வடிநிலமாக கொண்டுள்ளன.
வடிநிலம்
மஞ்சப்பாறை ஆற்றின் வடிநிலம் கிட்டதட்ட 37,167 சதுர மைல்கள் பரப்பு உடையது. [1] கிளார்க்கு போர்க்கு மஞ்சப்பாறை, காற்று ஆறு, பெரும் கொம்பு ஆறு, நாக்கு ஆறு, பொடி ஆறு ஆகிய மஞ்சப்பாறை ஆற்றின் துணையாறுகளின் வடிநிலமும் இதன் வடிநிலத்தை சார்ந்தவை.[2] 12.800 அடி உயரத்தில் உற்பத்தியாகும் இது 1,850 அடி உயரத்தில் வடக்கு டக்கோட்டாவிலுள்ள வில்லியசுன்டன் நகருக்கு சற்று முன்பு புபோர்டில் மிசௌரியுடன் கலக்கிறது. பல நீர்த்தேக்கங்களையும் ஏரிகளையும் இதன் வடிநிலம் கொண்டிருந்தாலும் நீரை தேக்கி வைக்கக்கூடிய அணைகள் எதுவும் இதில் இல்லை.
புவியியல்
மஞ்சப்பாறை ஆறு ராக்கி மலைத்தொடரிலுள்ள அப்சரோக மலைத்தொடரில் உற்பத்தியாகிறது. வடகிளையும் தென்கிளையும் சேர்ந்ததில் இருந்து மஞ்சப்பாறை என்ற பெயரை பெறுகிறது. அப்சரோக மலைத்தொடரில் உற்பத்தியாகும் வடகிளையானது தென்கிளையை விட நீளமானது. தென்கிளை தொரோபேர்மலைமுகட்டுக்கு தென்புறம் உற்பத்தியாகிறது. மஞ்சப்பாறை ஆறு வடக்கு நோக்கி பயணித்து மஞ்சப்பாறை தேசிய பூங்க்காவை அடைந்து பின் மஞ்சப்பாறை ஏரியை நிரப்புகிறது. பின் மஞ்சப்பாறை பள்ளத்தாக்கிலுள்ள மஞ்சப்பாறை அருவியை அடைகிறது. மலைகளின் வழியாக பயணித்து லிவிங்சுடன் என்ற நகரில் சமவெளியை அடைந்து கிழக்காகவும் பின் வடகிழக்காகவும் பயணிக்கிறது.
பில்லிங் நகருக்கு கிழக்கே பெரும் கொம்பு ஆறு மஞ்சப்பாறை ஆற்றுடன் கலக்கிறது, அதற்கு அப்பால் மைல் நகரத்தில் நாக்கு ஆறு கலக்கிறது. இறுதியாக பொடி ஆறு இதனுடன் கிழக்கு மாண்டேனாவில் கலக்கிறது. 1860இல் இருந்து மாண்டேனாவில் இவ்வாறு விவசாயத்திற்காக முழுவதுமாக பயன்படுத்தப்படுகிறது. இந்த ஆற்றின் மேல் பகுதி மீன் பிடித்தலுக்கு சிறப்பு பெற்றதாகும். 1950இல் மாண்டேனா, வயோமிங், வடக்கு டகோட்டா இடையே இந்த ஆற்று நீரை பயன்படுத்துவது தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டது. 2010இல் வயோமிங் இவ்வாற்று நீரை பயன்படுத்துவது தொடர்பாக 1950 உடன்பாட்டை எதிர்த்து மாண்டேனா அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. நீதிமன்றம் 2011இல் வயோமிங் இவ்வாற்று நீரை பயன்படுத்துவதை குறைக்க மாண்டேனாவிற்கு உரிமையில்லை என தீர்ப்பளித்தது. வயோமிங்கும் மஞ்சப்பாறை ஆற்று நீரை பயன்படுத்தி மாண்டேனா விவசாயம் செய்யும் பரப்புக்கு சம அளவு பரப்பில் மஞ்சப்பாறை ஆற்று நீரை பயன்படுத்தி விவசாயம் செய்கிறது.
வரலாறு
இந்த ஆற்றின் பெயர் மின்னடாரி தொல்குடிகள் வழங்கிய பெயரிலிருந்து பெறப்பட்டது என பரவலாக கருதப்படுகிறது. [3] சிலர் இவ்வாற்றின் பெரும் பள்ளத்தாக்கிலுள்ள மஞ்சள் நிற கற்களால் மஞ்சப்பாறை என அழைக்கப்படுகிறது என கருதுகின்றனர். ஆனால் மின்னடாரி தொல்குடிகள் பள்ளத்தாக்கு உள்ள மஞ்சப்பாறை ஆற்றின் மேல் பகுதியில் வசித்ததில்லை. சில வல்லுநர்கள் மஞ்சள் நிற மணற்பாறைகளால் இப்பெயரை பெற்றதாக கருதுகின்றனர்.[4] இந்த ஆற்றின் மேல் பகுதியில் வசித்த காக்கை தொல்குடிகள் மின்னடாரி தொல்குடிகள் வழங்கிய பெயரை தங்கள் மொழிக்கு மொழிபெயர்த்து இவ்வாற்றை அழைத்தனர். பிரெஞ்சுகாரர்களும் ஆங்கிலேயர்களும் மின்னடாரி தொல்குடிகள் வழங்கிய பெயரையே மொழிபெயர்த்து இவ்வாற்றை அழைத்தனர். ஆங்கிலேயர்கள் அதிகம் இங்கு குடியேறியதால் ஆங்கில பெயரே (யெல்லோஇசுடோன்) அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.[4]
மஞ்சப்பாறை ஆறு பல ஆண்டுகளாக அமெரிக்க தொல்குடிகளின் முதன்மையான போக்குவரத்து தடமாக பயன்பட்டு வந்தது. 19ஆம் நூற்றாண்டில் குடியேறிய ஐரோப்பியர்களும் போக்குவரத்திற்கு இவ்வாற்றையே பெரிதும் சார்ந்திருந்தனர். பெரும் கொம்பு, பொடி, நாக்கு ஆறுகளை ஒட்டிய பகுதிகள் தொல்குடிகளின் கோடைகால வேட்டை திடலாக இருந்தன. மாண்டேனாவிலுள்ள வர்சீனியா நகரத்தில் தங்கம் 1860இல் கண்டுபிடிக்கப்பட்டது. தங்கச்சுரங்கத்தை அடைய மஞ்சப்பாறை ஆற்றின் வழியாக சிறது தொலைவு செல்லும் பிரிட்கர் தடமும் போச்மேன் தடமும் அதிகம் பயன்படுத்தப்பட்டன.
தொல்குடிகளின் வேட்டை திடல்களில் குடியேறிகள் ஊடுறுவியதால் இருவருக்கும் இடையே செம்முகில் போர் நடந்தது. 1868இல் ஏற்பட்ட போர்ட் லாராமை உடன்பாட்டை அடுத்து அப்போர் முடிவுற்றது. இவ்வுடன்பாட்டின்படி கருமலையும் அதையொட்டிய சில பகுதிகளும் தொல்குடிகளுக்கு ஒதுக்கப்பட்டது அங்கு குடியேறிகள் வரமாட்டார்கள் என உறுதியளிக்கப்பட்டது. [5] இப்பகுதி சில பெரும் கொம்பு, நாக்கு, பொடி ஆறுகளின் வடிநிலத்தை கொண்டுள்ளது. எனினும் 1874இல் கருமலையில் தங்கம் இருப்பது கண்டறியப்பட்டதால் ஏராளமான குடியேறிகள் அங்கு புகுந்தனர். இதனால் தொல்குடிகளுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பெரும் இசூ போர் 1876-77இல் மூண்டது.
குடியேறிகள் உடன்பாட்டை மீறியிருந்தாலும் அவர்களை காக்க அமெரிக்கா போரில் இறங்கியது. இப்போரில் அமெரிக்கா வெற்றி பெற்றது. தொல்குடிகள் தொலைவில் அவர்களுக்கு புதிதாக ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு துரத்தப்பட்டார்கள். போரில் அமெரிக்கா சார்பாக இருந்த காக்கை தொல்குடி வீரர்கள் அமெரிக்க படையில் சேர்த்துக்கொள்ளப்பட்டு ஒற்றர்களாக பணி புரிந்தார்கள். வடகிழக்கு பசிபிக் இருப்புப்பாதை பிசுமார்க்கிலிருந்து மஞ்சப்பாறை ஆறு நகரான லிவிங்சுடன் வரை இருப்புப்பாதை போட முயன்றது. இந்தப்பாதை லகோடா தொல்குடிகளின் எருமை வேட்டைத்திடல் வழியாக சென்றது.[6] 1883இல் இருப்புப்பாதை போடும் பணி நிறைவு பெற்றது. 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வடகிழக்கு பசிபிக் இருப்புப்பாதை மஞ்சப்பாறை தேசிய பூங்கா நுழைவு வாயில் வரை தன் சேவையை விரிவுபடுத்தியது.
வெள்ளம் - வறட்சி
வடிநிலப்பகுதியில் பனி உருகுவதாலும் மழைப்பொழிவாலும் மஞ்சப்பாறை ஆற்றில் வெள்ளம் ஏற்படுகிறது. ஆற்றின் மேல் பகுதியில் வேனிற் காலத்திலும் கோடை காலத்தின் தொடக்கத்திலும் பனி உருகுவதால் வெள்ளம் ஏற்படுகிறது. கீழ் பகுதியில் கடும் மழையால் கோடையிலும் கூதிர்காலத்திலும் வெள்ளம் ஏற்படுகிறது.[2] கடும் வறட்சியும் மஞ்சப்பாறையின் வடிநிலத்தில் பல ஆண்டுகள் ஏற்பட்டதுண்டு. 1929-42, 1948–62 and 1976-82 ஆகிய ஆண்டுகளில் இதன் படுகையில் வறட்சி ஏற்பட்டது, 1977இல் பெரும்பாலான அமெரிக்க மேற்கு மாநிலங்கள் வறட்சியை சந்தித்தன. ஓடைகளில் குறைவான நீரே சென்றதால் திட கழிவுகள் கரையாமல் அதிகம் தேங்கின. மலைப்பகுதிகளில் ஆற்று நீரின் வேகம் அதிமென்பதால் சமவெளிப்பகுதியை விட அங்கு குறைவான திட கழிவுகளே தேங்கின. விவசாயம், சுரங்கம் மற்றும் பலவிதமான மனித செயற்பாடுகளால் பலவித கழிவுகள் ஆற்றில் தேங்கின மேலும் மனிதனுக்கு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா, உப்பு, செலீனியம் போன்றவை அதிகம் ஓடைகளில் தேங்கின.[1]
எண்ணெய் கசிவு
யூலை 1, 2011 அன்று சில்வர் டிப்பிலிருந்து பில்லிங் நகருக்கு வரும் எக்சான்மொபைல் நிறுவனத்தின் எண்ணெய் குழாயில் பில்லிங்கிற்கு மேற்கே 10 மைல் தொலைவில் உடைப்பு ஏற்பட்டது.[7] 56 நிமிடத்தில் உடைப்பு சரிசெய்யப்பட்டாலும் 1,500 பீப்பாய் எண்ணெய் கசிந்து மஞ்சப்பாறை ஆற்றில் கலந்தது. உடைப்பால் வெடிவிபத்து ஏற்பட்டால் மக்களை காக்கும் பொருட்டு முன்எச்சிரிக்கையாக லாரல் நகரிலிருந்து 140 பேர் நள்ளிரவில் வெளியேற்றப்பட்டு மறுநாள் காலையில் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டார்கள்.[8]
பிரிட்சர் குழாய் நிறுவனத்தின் படி கிளன்டைவ் அருகில் சனவரி 17, 2015 காலை 10 மணியளவில் எண்ணெய் குழாய் உடைந்தது. சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்கும் பொருட்டு அடுத்த 1 மணி நேரத்தில் குழாயில் எண்ணெய் வருவது நிறுத்தப்பட்டது. நிறுவனம் 300இலிருந்து 1,200 பீப்பாய் எண்ணெய் வெளியேறி மஞ்சப்பாறை ஆற்றில் கலந்ததாக அறிவித்தது. மாநில அரசு 50,000 கேலன்கள் எண்ணெய் ஆற்றில் கலந்ததாக அறிவித்தது.[9] புற்று நோயை உருவாக்கும் பென்சீன் என்ற வேதிப்பொருள் [10] அங்குள்ள நீரில் எச்சரிக்கை அளவை தாண்டி பில்லியனுக்கு பதினைந்து துகள்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டது.[11][12] சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணைய அதிகாரி பில்லியனுக்கு ஐந்து துகள்களுக்கு மேல் இருப்பது நீண்டகால பாதிப்பை உண்டாக்கும் என்றார்.[12] கிளன்டைவ் மக்களில் 6,000 பேர் புற்று நோயை உருவாக்கக்கூடிய பென்சீன் ஆற்றில் அதிகமிருப்பதால் நகராட்சி குழாயில் வரும் நீரை பருகவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டார்கள்.[13][14] அவர்களுக்கு குடுவையில் (பாட்டல்) நீர் கொடுக்கப்பட்டது.[15] சனவரி 23 அன்று நகர நீர் சுத்திகரிப்பு நிலையம் முழுமையாக தூய்மையாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.[16] நகராட்சி குடிநீர் குடிக்க உகந்தது என அறிவிக்கப்பட்டது.[17]
2015 விபத்தில் வயோமிங் மாநில நிறுவனமான டுரு நிறுவனங்களின் பாப்லர் குழாய்வரிசை[15] 2006 முதல் 2014 வரை ஒன்பது விபத்துகளில் ஈடுபட்டுள்ளது. இவ்விபத்துகளால் ஏராளமான எண்ணெய் கசிந்தது. மேலும் இதன் துணை நிறுவனமான பெல்லே போர்ச்சே குழாய் 21 விபத்துகளில் ஈடுபட்டுள்ளது. இவ்விபத்துகளால் ஏராளமான எண்ணெய் கசிந்தது இரு நிறுவனங்களும் நடுவண் அரசால் தண்டம் விதிக்கப்பட்டு இருந்தன.[18][19] பனி உருகும் வரை காத்திருந்து மஞ்சப்பாறை ஆற்றை தூய்மையாக்க தூய்மை பணி 1 மாதம் த்ள்ளி வைக்கப்பட்டது. எண்ணெய் கசிவு ஏற்பட்ட இடத்திலிருந்து வடக்கு டகோட்டா வரை 90 மைல் நீளத்துக்கு மாண்டேனா சுற்றுச்சூழல் துறை ஆற்றின் நீர் தரத்தை கண்காணித்து வந்தது.[20]
தடை
மாண்டேனா மீன் விலங்குகள் பூங்கா துறை கார்டினர் முதல் லாரல் வரையுள்ள 183 மைல் நீளத்துக்கு மஞ்சப்பாறையையும் அதன் துணையாறுகளையும் பொழுதுபோக்கிற்கு பயன்படுத்த ஆகத்து 19, 2016 முதல் காலவரையின்றி தடை விதித்தது. விரைவாக பல்கிப்பெருகும் அரிய சல்மான் சிறுநீரக நோயால் பெருமளவு மீன்கள் இறந்ததால் இத்தடை விதிக்கப்பட்டது. மனிதர்களையும் பாலூட்டிகளையும் பாதிக்காத டெட்ராகேப்சுலாயிட்சு என்ற ஒட்டுண்ணியால் [21] இந்நோய் மீன்களுக்கு ஏற்படுகிற்து. காட்டுயிர் அதிகாரிகள் இந்நோயால் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்துள்ளதாக கணக்கிட்டுள்ளார்கள். குறிப்பிட்ட சில வகை மீன் இனங்களே இந்நோயால் அதிகம் பாதிக்கப்பட்டன.[22] இத்தடையால் வியாபாரத்துக்கு ஆற்றுக்கு பொழுதுபோக்க வரும் பயணிகளை நம்மியுள்ள வணிக நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்தன.[23] 2016, செப்டம்பர் 1 முதல் தடை விலக்கிக்கொள்ளப்பட்டது.
சல்மான் மீன்களை பிடிப்பதற்கு இந்த ஆறு உலகளவில் சிறப்பு பெற்றதாகும்.[24] நீண்ட தொலைவிற்கு அணைகள் ஆற்றின் குறுக்கே இல்லாதது சல்மான் வகை மீன்கள் நன்கு வளர ஏதுவான சூழலை ஏற்படுத்தின. லிவிங்சுடன் அருகிலேயே அதிக மீன்கள் கிடைக்கக்கூடியதாக உள்ளது.
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 [1] Yellowstone River Basin (Wyoming State Wildlife Action Plan Aquatic Basins - Yellowstone Basin, 2010).
- ↑ 2.0 2.1 [2] Zelt, Ronald B., Greg Boughton, Kirk A. Miller, Jon P. Mason, and Laura M. Gianakos, Environmental Setting of the Yellowstone River Basin, Montana, North Dakota, and Wyoming (Water-Resources Investigations Report 98.4269, 1999).
- ↑ "Hidatsa Lessons Vocab2". Hidatsa Language Program. Archived from the original on 2013-06-06. பார்க்கப்பட்ட நாள் 2012-07-17.
- ↑ 4.0 4.1 James S. Macdonald Jr. "History of Yellowstone as a Place Name".
- ↑ *Brown, Dee (1970). Bury My Heart at Wounded Knee, ch. 6. Bantam Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-553-11979-6.
- ↑ M. John Lubetkin, Jay Cooke's Gamble: The Northern Pacific Railroad, the Sioux, and the Panic of 1873 (Norman: University of Oklahoma Press, 2006).
- ↑ [3] பரணிடப்பட்டது 2013-06-17 at the வந்தவழி இயந்திரம் October 30, 2012
- ↑ Ruptured Pipeline Spills Oil Into Yellowstone River New York Times, July 2, 2011
- ↑ "Cleanup after 'unfortunate incident' in Yellowstone." CBS News (Associated Press). January 19, 2015. Retrieved January 20, 2015.
- ↑ "Carcinogen Benzene Found in Water Supply in Montana Town Following Weekend Oil Spill - National News - ABC News Radio". ABC News Radio. Archived from the original on 21 ஜனவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 14 May 2015.
{cite web}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Koch, Wendy (January 20, 2015). "Oil Spills Into Yellowstone River, Possibly Polluting Drinking Water." National Geographic. Retrieved January 21, 2015.
- ↑ 12.0 12.1 "Cancer-causing agent found in Yellowstone River-sourced water supply after pipeline spill." Japan Times (Associated Press). January 20, 2015. Retrieved January 21, 2015.
- ↑ Muskal, Michael (January 20, 2015) "Water supply off-limits in Montana town after Yellowstone River oil spill" Los Angeles Times
- ↑ "Crews work to clear Yellowstone river of 40,000 gallon crude oil spill". theguardian.com. பார்க்கப்பட்ட நாள் 1 February 2015.
- ↑ 15.0 15.1 Summers, Jessica (20 January 2015). "Yellowstone River Oil Spill Threatens Drinking Water in Montana". https://www.bloomberg.com/news/articles/2015-01-20/yellowstone-river-oil-spill-threatens-drinking-water-in-montana. பார்த்த நாள்: 1 February 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-02-02. பார்க்கப்பட்ட நாள் 2018-11-29.
- ↑ "Glendive’s water declared safe after oil spill" (January 23, 2015) Mojave Daily News
- ↑ "Montana oil spill latest in pipeline company's string of incidents". The Guardian. 31 January 2015. https://www.theguardian.com/environment/2015/jan/31/montana-oil-spill-company-long-history-leaks. பார்த்த நாள்: 1 February 2015.
- ↑ "Big Montana Oil Spill Is Latest Involving Pipeline Company". ABC News. பார்க்கப்பட்ட நாள் 1 February 2015.
- ↑ MATTHEW BROWN (3 February 2015). "Oil cleanup on Yellowstone River on hold until ice melts". The Billings Gazette (Associated Press). http://billingsgazette.com/news/state-and-regional/montana/oil-cleanup-on-yellowstone-river-on-hold-until-ice-melts/article_f94ffd5b-6437-5b3c-ab9c-234abcf0e8eb.html. பார்த்த நாள்: 3 February 2015.
- ↑ "Proliferative Kidney Disease". Merck Animal Health. Archived from the original on ஆகஸ்ட் 28, 2016. பார்க்கப்பட்ட நாள் August 22, 2016.
{cite web}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Yellowstone River Fish Kill Fact Sheet". Montana Fish, Wildlife and Parks. August 19, 2016. Archived from the original on ஆகஸ்ட் 23, 2016. பார்க்கப்பட்ட நாள் August 22, 2016.
{cite web}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Yellowstone River fish kill closes 183-mile stretch of river, but doesn't reach park, officials say". Newsday-Associated Press. August 20, 2016. Archived from the original on ஆகஸ்ட் 22, 2016. பார்க்கப்பட்ட நாள் August 22, 2016.
{cite web}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Ross, John (1999). Trout Unlimited's Guide to America's Best 100 Trout Streams in. Guidford, CT: Globe Pequot Press. pp. 218–20, 232–35.
-
கிரே ஒவுல் அருகில் மீன் பிடித்தல்
-
பாரடைசு பள்ளத்தாக்கில்
-
கேர்டர் பாலம் அருகில்