மூச்சுவிடல்

மனித உடலின் மூச்சுவிடலுக்கான பாதை

மூச்சுவிடல் (Breathing) என்பது நிலத்தில் வாழுகின்ற முதுகெலும்பிகள் தமது நுரையீரலுக்குள் வளியை இழுத்து வெளியே விடுகின்ற செயல்முறையைக் குறிக்கும்.[1] மூச்சு விடுகின்ற இவ்வகையான உயிரினங்களான, ஊர்வன, பறவைகள், பாலூட்டிகள் போன்றவை மூச்சியக்கத்தினூடாக "குளுக்கோசு" போன்ற ஆற்றல் செறிந்த மூலக்கூறுகளை உருவாக்கி ஆற்றலை வெளிவிடுவதற்கு ஒட்சிசன் தேவை. இவ்வாறு உடற் கலங்களுக்குத் தேவையான ஒட்சிசனை வழங்கி, அங்கு உருவாகும் காபனீரொட்சைடை வெளியேற்றும் தொழிற்பாட்டில் மூச்சுவிடல் முக்கியமான ஒரு பகுதி.

வெளியில் இருந்து ஆக்சிசன் செறிவு கூடிய வளியை மூக்குத் துவாரங்கள், மூச்சுக்குழாய் வழியாக நுரையீரலில் உள்ள காற்றுச் சிற்றறைகளுக்கு அல்லது நுண்ணறைகளுக்கு (alveoli) எடுத்துச் செல்லுதல் உள்மூச்சு அல்லது மூச்சிழுத்தல் (inhalation) என்றும், பின்னர் காற்றுச் சிற்றறைகளிலிருந்து காபனீரொட்சைட்டு செறிவு கூடிய வளியை வெளிக்கொண்டு வருதல் வெளிமூச்சு அல்லது மூச்செறிதல் (exhalation) என்றும் அழைக்கப்படும்.

மூச்சுவிடல் மூலம் காபனீரொட்சைடு வெளியேறுவது மட்டுமன்றி, உடலிலிருந்து நீர் இழப்பும் ஏற்படுகின்றது. ஈரப்பற்றுக்கொண்ட மூச்சுப் பாதைகளிலும், காற்றுச் சிற்றறைகளிலும் இருக்கும் நீராவி வெளியேறும் வளியில் கலப்பதால் மூச்சுவிடலில் வெளியேறும் வளியின் சாரீரப்பதன் 100%ஆக இருக்கும்.

இவ்வாறு ஒட்சிசனைக் கலங்களுக்கு வழங்கிக் காபனீரொக்சைட்டை வெளியேற்றும் தொழிற்பாட்டில் முக்கியமான இன்னொரு பகுதி குருதிச் சுற்றோட்டம் ஆகும். நுரையீரலின் காற்றுச் சிற்றறைகளில் உள்ள வளிமப் பொருள்களுக்கும், குருதிச் சுற்றோட்டத்தொகுதியின் குருதி மயிர்த்துளைக் குழாய்களில் (capillary) உள்ள குருதிக்கும் இடையிலான வளிமத்தின் தானூடு பரவல் மூலம் நுரையீரல் காற்றுச் சிற்றறைகளில்/நுண்ணறைகளில் வளிமப் பரிமாற்றம் இடம்பெறுகிறது. இவ்விடத்தில், குருதியில் கரையும் ஒட்சிசன் உள்ளிட்ட வளிமப் பொருட்கள், குருதியுடன் சேர்ந்து உடலின் பல பாகங்களுக்கும் இதயத்தின் இயக்கத்தினால் செலுத்தப்படுகின்றன. அதேவேளை, குருதியிலிருந்து காற்றுச் சிற்றறைகளினுள் பரவும் காபனீரொக்சைட்டு செறிவு கூடிய வளி, மூச்சுத் தொகுதியூடாக உடலின் வெளியே கொண்டு வரப்படுகின்றது.

பொறிமுறை

பாலூட்டிகளில், வயிற்றறையையும் (abdominal cavity), நெஞ்சறையையும் (thoracic cavity) பிரிக்கும் பிரிமென்றகடு சுருங்கி மட்டமான நிலைக்கு வரும்போது உள்மூச்சு அல்லது மூச்சிழுத்தல் நடைபெறுகின்றது. தளர்நிலையில் மேல்வளைந்த நிலையிலிருக்கும் பிரிமென்றகடு சுருங்கி கீழ்நோக்கி வரும்போது, நெஞ்சறையின் கனவளவு கூடும். அதனால் நுரையீரல் விரிவடைய, அதிலுள்ள காற்றுச் சிற்றறைகளின் கனவளவு கூடும். கனவளவு அதிகரிப்பதனால், வெளிச் சூழலைவிட காற்றுச் சிற்றறைகளில் அழுத்தம் குறையும். எனவே வெளியிருந்து வளி உள்நோக்கி இழுக்கப்படும். வெளிச் சூழலிலும், காற்றுச் சிற்றறைகளிலும் அழுத்தம் சமநிலைக்கு வரும்போது உள்மூச்சு நிறுத்தப்படும். மீண்டும் பிரிமென்றகடு தன் இயல்பு நிலைக்குத் திரும்புகையில் மேல்நோக்கி வளையும். அப்போது நெஞ்சறையின் கனவளவு குறைய, பெருமளவு நுரையீரலின் மீள்தகவு ஆற்றலினால், நுரையீரல் சுருங்கும். இதனால் காற்றுச் சிற்றறைகளின் கனவளவு குறைய, அங்கே அழுத்தம் வெளிச் சூழலைவிட அதிகரிக்கும். எனவே உள்ளிருந்து வளி வெளியேற்றப்படும். அதுவே வெளிமூச்சு அல்லது மூச்செறிதல் எனப்படுகின்றது.[1].

இச்செயற்பாட்டின்போது ஒலி எழும்புவதில்லை என்பதுடன் அதிக ஆற்றலும் தேவைப்படுவது இல்லை. கூடுதல் வளி தேவைப்படும்போது வயிற்றுத் தசைகள் விரிவடைவதில்லை. இதனால் ஏற்படும் கூடுதல் அழுத்தம் விலா எலும்புக் கூட்டை மேற்புறம் தள்ளிக் கனவளவைக் கூட்டுவதால் கூடுதலான வளி உள்ளிழுக்கப்படும். பிரிமென்றகடும், வயிற்றுத் தசைகளும் தளர்வடையும்போது மூச்செறிதல் நிகழும். விலாவெலும்புக் கூட்டில் உள்ள வயிற்றுத் தசைகளின் கீழ்நோக்கிய செயற்பாட்டின் மூலம் மூச்செறிதலைக் கூட்ட முடியும். இவ்வாறான வலிந்த மூச்செறிதல், வளிப்பாதைச் சுவர் வழியே அழுத்தத்தைக் கூட்டுவதால் வளிப்பாதை ஒடுங்குவதும், சில வேளைகளில் மூச்சிரைப்பும் ஏற்படக்கூடும். விலாவெலும்புத் தசைகள் இறுகி விலாவெலும்புக் கூட்டின் வடிவத்தை மாற்றுகின்றன. இங்கே ஏற்படும் விலா எலும்புகள், நெஞ்சறை, வயிற்றறை அசைவுகளுக்கு தசைகள் உதவுகின்றன.

பேச்சு, மேற்சொன்ன இருவகை மூச்சுவிடுதலின் சமநிலையில் தங்கியுள்ளது. மனிதரில் தன்னியல்பாக ஏற்படக்கூடிய தேவை கருதிய எதிர் வினைகளை உணர்வு நிலையில் மாற்ற முடியும். மூச்சுவிடற் செயற்பாடு பயம், ஏக்கம் போன்றவை ஏற்படும் சூழ்நிலைகளில் வேறுபடக்கூடும். முதுமையினால் அல்லது நுரையீரல் நோய்களினால் நுரையீரலின் மீள்தகவு குறைதல், உடற் பருமனால் வயிறு பெருத்தல், செயற்பாட்டில் உதவும் தசைநார்களின் ஆற்றல் குறைதல் என்பவற்றாலும் மூச்சுவிடல் செயற்பாடு பாதிக்கப்படலாம்.

ஈரூடகவாழிகளில்களில் இச்செயல்முறை "நேர் அழுத்த மூச்சுவிடல்" எனப்படுகின்றது. தசைநார்கள், வாய்க்குழியின் அடிப்பகுதியைக் கீழ்நோக்கி இழுப்பதால் வாய்க்குழி பெரிதாகி வெளிக்காற்றை மூக்குத்துளைகள் ஊடாக உள்ளிழுக்கிறது. வாயையும் மூக்குத்துளைகளையும் மூடியபடி, வாய்க்குழியின் அடிப்பகுதியை மேல்நோக்கித் தள்ளும்போது உள்ளிழுக்கப்பட்ட வளி நுரையீரலுக்குள் செல்கிறது.

மூச்சுவிடுவதைக் கட்டுப்படுத்தல்

ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள், விரும்பியும், தன்னியல்பாகவும் கட்டுப்படுத்தக் கூடிய உடற் செயற்பாடுகளுள் மூச்சுவிடலும் ஒன்று.

விரும்பிக் கட்டுப்படுத்தல்

மூச்சை விரும்பிக் கட்டுப்படுத்தல் பல்வேறு வடிவங்களிலான தியான முறைகளில் காணப்படுகின்றது. யோகப் பயிற்சி முறைகளுள் ஒன்றான மூச்சுப் பயிற்சியில் (பிராணாயாமம்) கட்டுப்படுத்தி மூச்சுவிடுதல் இடம்பெறுகிறது.[2] நீச்சல், பேச்சுப் பயிற்சி, குரற் பயிற்சி போன்றவற்றில் மூச்சை ஒழுங்குபடுத்துவது பற்றிப் பயிற்சி பெறுகின்றனர். மனிதப் பேச்சும் விரும்பி மூச்சைக் கட்டுப்படுத்துவதில் தங்கியுள்ளது.

உடல்நலத்தோடு கூடிய ஒருவர் மூச்சுவிடுவதை வேண்டுமென்று நீண்ட நேரம் நிறுத்திவைக்க முடியாது. ஒருவர் வளியை உள்ளெடுக்காவிட்டால், குருதியில் காபனீரொட்சைடு அதிகமாகி வளி வேட்கை ஏற்படும். மூச்சுவிடாவிட்டால், சில நிமிடங்களிலேயே உடலின் உள்ளக ஒட்சிசன் அளவு ஆபத்தான நிலைக்குக் குறைந்து மூளைச் சிதைவையும் தொடர்ந்து இறப்பையும் ஏற்படுத்தும் என்பதால், இவ்வாறான அடக்கமுடியாத மறிவினை ஆச்சரியத்துக்கு உரியது அல்ல. எனினும், இரண்டு மணி நேரம் வரை மனிதர் காற்றில்லாமல் உயிருடன் இருந்ததும் உண்டு. ஆனால் இது குளிர் நீரில் அமிழ்த்தி வைப்பதன் மூலம் பாலூட்டிகளுக்குரிய மூழ்குதல் தெறிவினை (mammalian diving reflex) தூண்டப்படுவதாலும்,[3] தற்காலிகமாக உடலியக்கங்களை நிறுத்தி வைப்பதன் மூலமுமே இயலக்கூடியது.

ஒருவர் குறிப்பிட்ட அளவு நேரத்துக்கு மேல் தானாகவே மூச்சுவிடுவதை நிறுத்தி வைத்திருப்பார் எனின் அவர் மயக்கம் அடைந்து விடுவார், பின்னர் மூச்சுவிடல் தானாகவே நிகழத் தொடங்கிவிடும். இதனால், தன்னியல்பாக மூச்சுவிடல் நிகழ முடியாதபடி, நீரில் அமிழ்தல் போன்ற வேறு நிலைமைகள் இருந்தாலன்றி, மூச்சைத் தானே நிறுத்தி வைப்பதன் மூலம் ஒருவர் தற்கொலை செய்துகொள்ள முடியாது.

அதிவிரைவாக மூச்சுவிடல் குருதியில் காபனீரொட்சைடின் அளவை வழமையான நிலையிலும் குறைந்த நிலைக்குக் கொண்டுவரும். இது, காபனீரொட்சைடினால் தூண்டப்படும் நாளச்சுருக்கத்தினாலும், போர் விளைவு (Bohr effect) அடக்கப்படுவதாலும், முக்கியமான உறுப்புக்களுக்கான குருதி வழங்கலும் ஒட்சிசன் வழங்கலும் குறைத்துவிடும். ஒருவர் தானாகவே விரைந்து மூச்சு விடுவாரானால், திசுக்களில் ஒட்சிசன் ஆபத்தான அளவுக்குக் குறைவதன் மூலம் மூளையில் ஒட்சிசன் பற்றாக்குறை ஏற்பட்டு மயக்கம் அடைவார்.

தன்னியல்புக் கட்டுப்பாடு

மூளைத்தண்டுப் பகுதியில் உள்ள சிறப்புப் பகுதிகள், மூச்சுவிடுவதைத் தன்னியல்பாகக் கட்டுப்படுத்துகின்றன. குறிப்பிட்ட நேரமொன்றில் உடலின் தேவையைப் பொறுத்து மூச்சுவிடும் வீதம், அதன் ஆழம் என்பவை இவ்வாறு கட்டுப்படுத்தப்படுகின்றன. குருதியில் காபனீரொட்சைடு கூடும்போது, அது குருதியில் உள்ள நீருடன் சேர்ந்து காபோனிக் அமிலத்தை உருவாக்குகிறது. உடற்பயிற்சிகளின்போது ஏற்படும் காற்றில்லா மூச்சியக்கம் இலக்டிக் அமிலத்தை உருவாக்குகிறது. இவை குருதியின் பி.எச் அளவைக் குறைக்கின்றன. இது கழுத்துத்தமனி முடிச்சு, பெருந்தமனி முடிச்சு ஆகியவற்றிலும், நீள்வளைய மையவிழையத்திலும் உள்ள வேதியுணரிகளைத் தூண்டுகிறது. வேதியுணரிகள், நீள்வளைய மையவிழையத்திலும் மூளைப்பாலத்திலும் உள்ள மூச்சியக்க மையத்துக்கு கூடுதலான நரம்புத் தூண்டல்களை அனுப்புகின்றன. அங்கிருந்து மென்றகட்டு நரம்பு, மார்பு நரம்பு ஆகியவற்றூடாக நரம்புத் தூண்டல்கள் செல்கின்றன.

எடுத்துக்காட்டாக, உடற்பயிற்சியின் போது தசைநார்களிலுள்ள கலங்களில் ஏற்படும் கூடுதலான மூச்சியக்கத்தினால், குருதியில் உள்ள காபனீரொட்சைடின் அளவும் கூடுகிறது. இது, கழுத்துத்தமனி முடிச்சு, பெருந்தமனி முடிச்சு, மூச்சியக்க மையம் ஆகியவற்றிலுள்ள வேதியுணரிகளைத் தூண்டுவதால் மூச்சுவிடல் வீதம் கூடுகிறது. ஓய்வாக இருக்கும்போது, குருதியில் காபனீரொட்சைடின் அளவு குறைவாக இருக்கும். அதனால் மூச்சுவிடும் வீதம் குறைவாக இருக்கும். இது சரியான அளவில் தசைநார்களுக்கும், பிற உறுப்புக்களுக்கும் ஒட்சிசன் செல்வதை உறுதி செய்கிறது.

மூச்சுவிடல் வளிமங்கள்

கூறுகள்

ஒட்சிசனே எல்லா மூச்சுவிடல் வளிமங்களினதும் இன்றியமையாத கூறு. மனிதர் மூச்சுவிடும்போது உள்ளிழுக்கும் வளியில் கனவளவுப்படி 78% நைதரசனும், 21% ஒட்சிசனும், 0.96% ஆர்கனும், 0.04% காபனீரொட்சைடு, ஈலியம், நீர், பிற வளிமங்கள் என்பனவும் அடங்கியுள்ளன. நீரடி மூழ்காளர்கள் ஒட்சிசன் அல்லது ஈலியச் செறிவு கொண்ட வளிமக் கலவைகளைப் பயன்படுத்துவது உண்டு. மருத்துவக் கவனிப்பில் உள்ள நோயாளருக்கு ஒட்சிசனும், வலிநீக்கி வளிமங்களும் கலந்த கலவைகளைக் கொடுப்பது உண்டு. விண்வெளி உடைகளில் உள்ள சூழல் தூய ஒட்சிசன் ஆகும். பொதுவாகக் குறைந்த அளவு ஒட்சிசன் சூழலில் தங்கியிருக்கும் மனிதர், தூய ஒட்சிசனைக் கொண்ட அல்லது ஒட்சிசன் செறிவு மிக்க சூழல்களில் பதற்ற நிலைக்கு அல்லது மகிழுணர்வு நோய்க்கு ஆளாகக்கூடும்.

மூச்சுவிடலின்போது வெளியேறும் வளியில் உள்ளிழுக்கும் வளியில் இருப்பதிலும் 4-5% கூடுதலான காபனீரொட்சைடும், 4-5% குறைவான ஒட்சிசனும் இருக்கும். அத்துடன் ஆவிகளும், குறைந்த அளவிலான பிற வளிமங்களும் இருப்பதுண்டு. இவற்றுள் 5% நீராவி, மில்லியன்களில் பல பகுதிகள் ஐதரசனும் காபனோரொட்சைடும், மில்லியனில் ஒரு பகுதி அமோனியா, மில்லியனில் ஒரு பகுதிக்கும் குறைவான அசிட்டோன், மெந்தோல், எதனோல் என்பனவும், வேறுபல உறுதியற்ற கரிமச் சேர்வைகளும் அடங்கியிருக்கும். வெளிவிடும் வளியில் இருக்கக்கூடிய ஒட்சிசன், காபனீரொட்சைடு, பிற வளிமங்கள் என்பவற்றின் சரியான அளவு உணவு, உடற்பயிற்சி, உடற்தகைமை என்பவற்றில் தங்கியுள்ளது.

வளியமுக்கம்

அவற்றுக்கு மேல் உள்ள வளியின் அளவு குறைவாக இருப்பதால், உயரமான இடங்களில் உள்ள வளியமுக்கம், கடல் மட்டத்தில் உள்ள வளியமுக்கத்திலும் குறைவாக இருக்கும். இந்த அமுக்கக்குறைவு உயர நோய் அல்லது ஒட்சிசன் பற்றாக்குறை நோயை ஏற்படுத்தக்கூடும். நீருக்கு அடியில் வளிமங்களின் அமுக்கம் கடல் கட்டத்தில் இருப்பதிலும் கூடுதலாக இருக்கும். இதனால் இதைக் கொண்டு மூச்சுவிடும்போது, நைதரசன் மயக்கம், ஒட்சிசன் நஞ்சாதல் போன்ற நிலைமைகளுக்கு இட்டுச் செல்லக்கூடும்.

பண்பாட்டுச் சிறப்பு

பல்வேறு சமயத்தொடர்பான செயற்பாடுகளில் மூச்சுக் கட்டுப்பாடு சிறப்பிடம் வகிப்பதைக் காண முடியும். தியானம், யோகப் பயிற்சி போன்றவற்றில் மூச்சுக் கட்டுப்பாட்டுக்கு முக்கியத்துவம் உண்டு. இசையில், புல்லாங்குழல், நாதசுரம் போன்ற பல்வேறு மூச்சுக் கருவிகளை இசைப்பதில் மூச்சு பயன்படுகின்றது. பல பண்பாடுகளில் மூச்சுத் தொடர்பு கொண்ட இருமல், தும்மல், கொட்டாவி, விக்கல் போன்ற தோற்றப்பாடுகள் தொடர்பில் பல்வேறு விதமான நம்பிக்கைகளும் காணப்படுகின்றன. யாரோ நினைப்பதால் இருமல் வருவதாக நம்புவதும், தும்மும்போது ஒவ்வொரு தும்மலுக்கும் நூறு, இருநூறு என்று எண்ணுவதும் தமிழரிடையே வழக்கத்தில் உள்ளது. தும்முவதைச் சகுனப் பிழையாக எண்ணும் வழக்கமும் இந்துக்களிடையே உள்ளது.

குறிப்புகள்

  1. Peter Raven, George Johnson, Kenneth Mason, Jonathan Losos, Susan Singer (2007). "The capture of oxygen: Respiration". Biology (8 ed. ed.). McGraw-Hill Science/Engineering/Math;. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0073227390. {cite book}: |edition= has extra text (help)CS1 maint: extra punctuation (link) CS1 maint: multiple names: authors list (link)
  2. Swami Saradananda, The Power of Breath, Castle House: Duncan Baird Publishers, 2009
  3. Ramey CA, Ramey DN, Hayward JS. Dive response of children in relation to cold-water near drowning. J Appl Physiol 2001;62(2):665-8.Source: Diana Hacker (Boston: Bedford/St. Martin’s, 2002).Adapted from Victoria E. McMillan (Boston: Bedford/St. Martin’s, 2001). See it cited here

மேலும் பார்க்க

மேலதிக இணைப்புக்கள்