இயேசுவின் அன்புச் சீடர்
இயேசுவின் அன்புச் சீடர் (கிரேக்க மொழி: ὁ μαθητὴς ὃν ἠγάπα ὁ Ἰησοῦς) அல்லது யோவான் 20:2இன் படி இயேசு தனி அன்பு கொண்டிருந்த சீடர் (கிரேக்க மொழி: ὃν ἐφίλει ὁ Ἰησοῦς) என்னும் அடைமொழியானது யோவான் நற்செய்தியில்[1] ஐந்து முறை பயன்படுத்தப்படுள்ளது. ஆயினும் மற்ற நற்செய்தி நூல்களிலோ அல்லது இயேசு கிறித்துவின் வாழ்வையும் பணிகளையும் விவரிக்கும் பிற புதிய ஏற்பாட்டு நூல்களிலோ குறிக்கப்படவில்லை. யோவான் நற்செய்தியின் 21:24இன் படி அந்நூல் இயேசுவின் அன்புச் சீடரால் எழுதப்பட்டதாகும்.
1ம் நூற்றாண்டின் முடிவிலிருந்து இந்த அன்புச்சீடர் நற்செய்தியாளரான யோவான் என மரபு கூறுகின்றது.[2] அறிவொளிக் காலம் முதல் யோவான் நற்செய்தி, மற்றும் யோவானின் முதல், இரண்டாம், மற்றும் மூன்றாம் திருமுகங்கள் மற்றும் திருவெளிப்பாடு ஆகிய நூலின் ஆசிரியர் யார் என்பது குறித்து ஆறிஞர்களிடையே ஒத்த கருத்தில்லை.[3]
மூல விவிலிய சொற்றொடர்கள்
இயேசுவின் அன்புச் சீடர் குறித்த விவிலிய சொற்றொடர்கள்:
- இயேசுவின் சீடருள் ஒருவர் அவர் அருகில் அவர் மார்புப் பக்கமாய்ச் சாய்ந்திருந்தார். அவர் மேல் இயேசு அன்பு கொண்டிருந்தார். சீமோன் பேதுரு அவருக்குச் சைகை காட்டி, 'யாரைப்பற்றிக் கூறுகிறார் எனக்கேள்' என்றார். இயேசுவின் அருகில் அவர் மார்புப் பக்கமாய்ச் சாய்ந்திருந்த அவர், 'ஆண்டவரே அவன் யார்?' என்று கேட்டார். - யோவான் நற்செய்தி 13:23-25
- இயேசுவைச் சிலுவையில் அறைந்தப்பின் இயேசு சிலுவையின் அடியில் நின்றுகொண்டிருந்த தம் தாயையும் அவர் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், ″அம்மா, இவரே உம் மகன்″ என்றார். பின்னர் தம் சீடரிடம், ″இவரே உம் தாய்″ என்றார். அந்நேரமுதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார். - யோவான் நற்செய்தி 19:26-27
- மகதலா மரியா இயேசுவின் கல்லறை காலியாக இருப்பதைக்கண்டு சீமோன் பேதுருவிடமும் இயேசு தனி அன்பு கொண்டிருந்த மற்றச் சீடரிடமும் வந்து அதைத்தெரிவித்தார். இதைக் கேட்ட பேதுருவும் மற்றச் சீடரும் கல்லறைக்குப் புறப்பட்டனர். இருவரும் ஒருமித்து ஓடினர். மற்றச் சீடர் பேதுருவை விட விரைவாக ஓடி முதலில் கல்லறையை அடைந்தார். அவர் குனிந்து பார்த்தபோது துணிகள் கிடப்பதைக் கண்டார்; ஆனால் உள்ளே நுழையவில்லை. அவருக்குப் பின்னாலேயே சீமோன் பேதுரு கல்லறைக்குள் நுழைந்தார். - யோவான் நற்செய்தி 20:1-10
- யோவான் நற்செய்தியின் இறுதியில் (21ம் பிரிவு) உயிர்த்த இயேசு தோன்றிய ஏழு சீடர்களுல் இவரும் ஒருவர்.[4] மேலும் 'ஆண்டவரே இவருக்கு என்ன ஆகும்?' என்று சீமோன் பேதுரு இயேசுவிடம் கேட்டார். இயேசு அவரிடம், ' நான் வரும்வரை இவன் இருக்க வேண்டும் என நான் விரும்பினால் உனக்கு என்ன? நீ என்னைப் பின்தொடர்ந்து வா' என்றார். மேலும் இந்தச் சீடரே இவற்றிற்குச் சாட்சி. இவரே இவற்றை எழுதி வைத்தவர் எனவும் குறிக்கின்றது.
பிற நற்செய்திகள் எதிலும் இவரைப்பற்றியக்குறிப்பில்லை.
அடையாளம்
திருத்தூதர் யோவான்
நான்காம் நூற்றாண்டில் எழுதும் யூசேபியஸ் தாம் எழுதிய திருச்சபை வரலாறு எனும் நூலில் இரண்டாம் நூற்றாண்டில் எபேசஸின் பாலிகிரேட்டஸ் (c. 130s–196) என்பவரால் எழுதப்பட்டதாக அவர் நம்பும் கடிதத்தைப் பதிவு செய்தார். அதில் யோவான் "இறைவனின் மார்பில் சாய்ந்தவர்" என்று பாலிகிரேட்ஸ் நம்பியதாகக் கூறப்பட்டுள்ளது. யோவானே அன்புச்சீடர் என்று ஹிப்போவின் அகஸ்டீன் (354 - 430 கி.பி) நம்பினார்.
அன்புச்சீடர் திருத்தூதர்களில் ஒருவர் என்ற அனுமானம், அவர் கடைசி இராவுணவின்போது வெளிப்படையாக இருந்ததைக் கவனிப்பதன் அடிப்படையிலானதாகும், மத்தேயு மற்றும் மாற்கு ஆகியோர் இயேசு பன்னிரு சீடர்களுடன் உணவருந்தியதாகக் குறிப்பிடுகின்றனர். எனவே, அன்புச்சீடர் பன்னிரு சீடர்களில் ஒருவரான யோவான் என்ற கருத்து ஏற்பட்டது. இருப்பினும், சில நவீன கல்வியாளர்கள் அகஸ்டின் மற்றும் பாலிகிரேட்ஸின் பார்வையை தொடர்ந்து பகிர்ந்து கொண்டாலும், பல்வேறு கல்வியாளர்களும் திருத்தூதர் யோவான் இந்நற்செய்தியை எழுதியதாக நம்பவில்லை.[5]
இலாசர்
யோவான் 11:5ஐ அடிப்படையாகக் கொண்டு அன்புச்சீடர் பெத்தானியாவின் இலாசருடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்: "மார்த்தாவிடமும் அவருடைய சகோதரியான மரியாவிடமும் இலாசரிடமும் இயேசு அன்பு கொண்டிருந்தார்.", யோவான் 11:3 ""இலாசரின் சகோதரிகள் இயேசுவிடம் ஆளனுப்பி, "ஆண்டவரே, உம் அன்புக்குரியவர் நோய்வாய்ப்பட்டுள்ளார்." என்றனர்."[6]
இலாசர் உயிர்த்தெழுப்பப்படுவதற்கு முன்புவரை அன்புச்சீடர் என்ற பெயர் யோவான் நற்செய்தியில் குறிப்பிடப்படவில்லை. அதன்பிறகே அன்புச்சீடர் என்ற பெயர் அதிகாரம் 13இல் முதன்முறையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது, மேலும் 13ஆம் அதிகாரத்தில் இருந்து இலாசரின் பெயர் இடம்பெறவில்லை என்று புதிய ஏற்பாடு அறிஞர் பென் வித்தெரிங்டன் III சுட்டிக்காட்டுகிறார்.[7]
மேற்கோள்கள்
- ↑ யோவான் 13:23, யோவான் 19:26, யோவான் 20:2, யோவான் 21:7, யோவான் 21:20
- ↑ Eusebius of Caesarea, Ecclesiastical History Book vi. Chapter xxv.
- ↑ Harris, Stephen L., Understanding the Bible (Palo Alto: மேfield, 1985) p. 355
- ↑ James D. G. Dunn and John William Rogerson, Eerdmans Commentary on the Bible, Wm. B. Eerdmans Publishing, 2003, p. 1210, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8028-3711-5.
- ↑ "The biblical evidence – The Disciple Whom Jesus Loved" (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2022-03-05. பார்க்கப்பட்ட நாள் 2022-03-05.
- ↑ W.R.F. Browning, A Dictionary of the Bible, Oxford University Press, 1996, p. 207.
- ↑ Witherington III, Ben. OneBook Daily-Weekly, The Gospel of John Seedbed Publishing, 2015. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-62824-203-4