சமர்கந்து முற்றுகை (1220)

சமர்கந்து முற்றுகை (1220)
குவாரசமியப் பேரரசு மீதான மங்கோலியப் படையெடுப்பின் ஒரு பகுதி
மங்கோலிய வில்லாளர்கள் மற்றும் முற்றுகை இயந்திரம் தற்காப்பில் ஈடுபடும் ஒரு கோட்டையைத் தாக்கும் ஓர் ஓவியம்.
ரசீத்தல்தீனின் ஜமி அல்-தவரிக் நூலில் இருந்து மங்கோலியர்கள் முற்றுகையில் ஈடுபடுவதைப் பற்றிய ஒரு சித்தரிப்பு
நாள் 1220
இடம் சமர்கந்து, தற்கால உசுபெக்கிசுத்தான்
39°37′N 66°58′E / 39.62°N 66.97°E / 39.62; 66.97
மங்கோலிய வெற்றி
போரில் ஈடுபட்டவர்கள்
மங்கோலியப் பேரரசு குவாரசமியப் பேரரசு
தளபதிகள், தலைவர்கள்
தெரியவில்லை
படைப் பிரிவுகள்
உள்ளிட்ட முற்றுகை இயந்திரங்கள் நகர்க் காவற்படை
பலம்
தெரியவில்லை தெரியவில்லை
இழப்புகள்
தெரியவில்லை அனைவரும்

சமர்கந்து முற்றுகை (1220) என்பது தற்கால உசுப்பெக்கிசுத்தான் நாட்டில் உள்ள சமர்கந்து நகரத்தின் மீது கி. பி. 1220இல் நடைபெற்ற ஒரு முற்றுகைப் போர் ஆகும். இரண்டாம் அலாவுதீன் முகம்மதுவால் ஆளப்பட்ட குவாரசமியப் பேரரசின் மீது மங்கோலியப் பேரரசைத் தோற்றுவித்த செங்கிஸ் கான் பலமுனைத் தாக்குதல் நடத்தினார். அதன் ஒரு பகுதியாக இம்முற்றுகை நடத்தப்பட்டது. எல்லைப் பட்டணமான ஒற்றார் மீது மங்கோலியர்கள் முதலில் முற்றுகை நடத்தினர். ஆனால் அந்நகரின் தற்காப்பு வீழாததால், செங்கிஸ் கான் மற்றும் அவரது கடைசி மகன் டொலுய் ஆகியோரால் தலைமை தாங்கப்பட்ட ஒரு பெரும் படை தங்களது முன் வரிசைப் படையிலிருந்து பிரிந்து தெற்கு நோக்கித் திரான்சாக்சியானாவிற்குச் சென்றது.

ஷாவின் தலைநகரம் சமர்கந்து ஆகும். சமர்கந்தைக் காப்பாற்றுவதே ஷாவின் முதல் நோக்கமாக இருந்தது. இந்நகரின் காவற்படையானது எண்ணிக்கையில் அதிகமாக இருந்தது. இந்நகரின் மதில் சுவர்கள் குவாரசமியப் பேரரசிலேயே வலிமையானவற்றில் ஒன்றாக இருந்தன. எனினும் ஒரு எதிர்பாராத நடவடிக்கையாகச் செங்கிஸ் கான் புகாரா நகரத்தைக் கைப்பற்றி அழித்தார். அருகில் இருந்த திரான்சாக்சியானா பகுதியின் பட்டணங்களை அழித்தார். இவ்வாறாகச் சமர்கந்தைச் செங்கிஸ் கான் தனிமைப்படுத்தினார். ஒற்றார் நகரத்தைக் கைப்பற்றியதன் மூலம் வலுவூட்டப்பட்டிருந்த மங்கோலிய இராணுவம், மதில் சுவர்களுக்கு வெளியே வந்த சமர்கந்துத் தற்காப்பாளர்களின் ஒரு படையை ஒளிந்திருந்து திடீர்த் தாக்குதல் நடத்திக் கொன்று குவித்தது. இசுலாமிய மதகுருமார்களின் தூண்டுதலின் பேரில் நகரக் குடிமக்கள் சீக்கிரமே சரணடைந்தனர். எனினும் சரணடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் அடிமைப்படுத்தப்பட்டனர் அல்லது மங்கோலியப் பாரம்பரியப் பாணியில் இராணுவத்தில் கட்டாயப்படுத்திச் சேர்க்கப்பட்டனர்.

சமர்கந்தில் ஒரு சிறு படையானது நகர்க் காப்பரணில் ஒரு மாதத்திற்குத் தாக்குப்பிடித்தது. இதற்குப் பிறகு சுமார் பாதிப் பேர் மங்கோலியர்களை மீறி ஆமூ தாரியா பகுதிக்குத் தப்பி ஓடினர். இதன்பின் சமர்கந்தானது முழுமையாகச் சூறையாடப்பட்டுக் கொள்ளையடிக்கப்பட்ட போதும், மங்கோலிய அமைதியின் போது மீண்டும் மெதுவாகப் புத்தாக்கம் பெற்றது. பிறகு 14ஆம் நூற்றாண்டின் பிற்பாதியில் தைமூரியப் பேரரசின் தலைநகரமாக உலகளவில் முக்கியத்துவம் பெற்றது.[1]

உசாத்துணை

  1. Sverdrup, Carl (2010). "Numbers in Mongol Warfare". Journal of Medieval Military History (Boydell and Brewer) VIII: 109–117. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781843835967. https://www.jstor.org/stable/10.7722/j.ctt7zstnd.6. பார்த்த நாள்: 3 February 2022.