சுபுதை
சுபுதை | |
---|---|
நடுக்காலச் சீன வரைபடம் | |
பிறப்பு | 1175 புர்கான் கல்துன், மங்கோலியா |
இறப்பு | 1248 தூல் ஆறு, மங்கோலியா |
தேசியம் | மங்கோலியர் |
பணி | தளபதி |
பட்டம் | ஒர்லாக் பகதூர், மிங்கனின் நோயன் |
வாழ்க்கைத் துணை |
|
பிள்ளைகள் |
|
உறவினர்கள் | அசு (பேரன்), செல்மே (அண்ணன்), சுர்கான், கபன், நெர்பி |
சுபுதை என்பவர் செங்கிஸ் கானின் ஒரு மங்கோலியத் தளபதி ஆவார். இவர் உரியாங்கை எனும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். 20க்கும் மேற்பட்ட இராணுவப் படையெடுப்புகளுக்குத் தலைமைத் தாங்கியுள்ளார். இதன் மூலம் 32 நாடுகளை மற்றும் களத்தில் நடைபெற்ற 65 போர்களை வென்றுள்ளார். வரலாற்றில் வேறு எந்த தளபதியையும் விட அதிக நிலப்பரப்பை வென்றோ அல்லது தாக்கியோ உள்ளார். இவர் ஒக்தாயி கானிடமும் பணியாற்றியுள்ளார். மனித வரலாற்றில் மிகப்பெரிய தொடர்ச்சியான நிலப்பேரரசான மங்கோலியப் பேரரசை அதன் தொடக்கம் முதல் விரிவாக்கம் செய்வதற்காக இவர் இப்போர்களை நடத்தினார்.[1] தகவல் தொடர்பற்ற 13ஆம் நூற்றாண்டில் ஒன்றுக்கொன்று சுமார் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் தொலைவில் இருந்த படைகளை ஒருங்கிணைத்து இயக்கி வெற்றிகளைப் பெற்றுள்ளார். ஒன்றுக்கொன்று 500 கிலோமீட்டர் தொலைவிலிருந்த அங்கேரி மற்றும் போலந்துப் படைகளை இரண்டு நாட்களுக்குள் அழித்ததற்காக நினைவு கூரப்படுகிறார். வேறுபட்ட புவியியல் அமைப்புகளில் நடத்திய போர்கள் மற்றும் பெற்ற வெற்றிகளுக்காக இவர் நினைவு கூரப்படுகிறார். நடு ஆசியா, உருசியப் புல்வெளி மற்றும் ஐரோப்பா ஆகிய பல்வேறுபட்ட நிலப்பரப்புகளில் வெற்றிகளைப் பெற்றுள்ளார். வரலாற்றில் சிறந்த இராணுவத் தளபதி எனப் பெரும்பாலானவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளார். உருசியா மீது குளிர்காலத்தில் படையெடுத்து அதை வென்றுள்ளார். வரலாற்றில் உருசியா மீது குளிர்காலத்தில் படையெடுத்து வென்ற ஒரே தளபதி இவர் தான். இவர் வென்று சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு நெப்போலியன் மற்றும் இட்லர் ஆகியோர் உருசியா மீது குளிர்காலத்தில் படையெடுத்துத் தோல்வியைச் சந்தித்தனர்.
ஆரம்ப வாழ்க்கை
வரலாற்றாளர்கள் கி.பி. 1175ஆம் ஆண்டில் சுபுதை பிறந்திருக்கலாம் என நம்புகின்றனர்.[2] தற்போதைய மங்கோலியாவின் ஆனன் ஆற்றின் வடபகுதியில் சற்றே மேற்கில் இவர் பிறந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இவர் பிறந்தவுடனேயே இவரது தாய் இறந்துவிட்டார். தாயின் அன்பின்றிச் சுபுதை வளர்ந்தார். இவர் உரியாங்கை எனும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர்கள் துருவ மான் மக்கள் என அறியப்பட்டனர். இவர்கள் ஒரு குழுவாக வாழ்ந்த சைபீரிய காட்டு மக்களாவர். இவர்கள் தெற்கே வாழ்ந்த மங்கோலியர்கள் போல சமவெளியில் வாழவில்லை. சுபுதை வளர்ந்த இத்தகைய சூழ்நிலையின் காரணமாக அவரால் மற்ற மங்கோலியர்கள் போல குதிரை சவாரி செய்யும் திறமையை இயற்கையாகவே கொண்டிருக்க முடியவில்லை. இதனால் மங்கோலியர்கள் மத்தியில் சுபுதை ஒரு வெளியாளாக இருந்தார்.[3] சுபுதையின் குடும்பமும் தெமுசினின் குடும்பமும் பல தலைமுறைகளாகத் தொடர்பில் இருந்தன. சுபுதையின் நான்காம் தலைமுறை முன்னோரான நெர்பி என்பவர் மங்கோலியக் கான் தும்பினா செச்செனின் கூட்டாளி எனக் கூறப்படுகிறது. தெமுசின் மற்றும் அவரைப் பின்பற்றுபவர்கள் பல்ஜுனா ஏரியின் அருகே மோசமான நிலையில் இருந்தபோது சுபுதையின் தந்தை சர்ச்சிகுடை அவர்களுக்கு உணவு வழங்கியதாகக் கூறப்படுகிறது. சுபுதையின் அண்ணனான செல்மே மங்கோலிய இராணுவத்தில் ஒரு தளபதியாகப் பணியாற்றினார். அவர் தெமுசினின் நெருங்கிய கூட்டாளியும் ஆவார். ஒரு போரில் எதிரியின் (செபே) அம்பு தாக்கிப் பலத்த காயம் அடைந்த தெமுசினைச் செல்மே காப்பாற்றினார். மங்கோலியர்களின் இரகசிய வரலாற்றில் சுபுதைக்கு சவுர்கான் என்ற மற்றொரு சகோதரர் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.[4]
யுவான் அரசமரபின் வரலாற்றில் சுபுதையின் சரிதையானது விசித்திரமான குறிப்புடன் இந்தத் தளபதியின் ஆரம்ப வரலாற்றைப் பற்றித் தொடங்குகிறது. ஒரு சமயம் சுபுதையின் தந்தை ஒரு செம்மறி ஆட்டுக் கூட்டத்தை ஓட்டிக்கொண்டு தனது பிரபு தைசுவிடம் (செங்கிஸ் கான்) அளிப்பதற்காகச் சென்ற அந்த நேரத்தில் எதிரே வந்த திருடர்கள் அவரைப் பிடித்துக் கொண்டனர். குலுகுன் (சுபுதையின் சகோதரர்) மற்றும் சுபுதை சரியான நேரத்திற்கு வந்து தங்களது வாள்களின் மூலம் அந்தத் திருடர்களை வெட்டினர். குதிரைகளும் திருடர்களும் வீழ்ந்தனர். எஞ்சிய திருடர்கள் பின்வாங்கித் தப்பினார். அதே நேரத்தில் சுபுதையும் அவரது சகோதரர்களும் தங்களது தந்தைக்கு நேரவிருந்த துயரத்தைப் போக்கினர். செம்மறி ஆடுகளும் பேரரசர் செங்கிஸ் கான் இருந்த இடத்தை அடைந்தன.[5]
சுபுதையின் குடும்பம் செங்கிஸ் கானுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த போதும் சிலர் சுபுதையின் வாழ்வு மங்கோலிய பேரரசானது தகுதியை அடிப்படையாகக் கொண்டது என்பதற்கு உதாரணம் என்று கருதுகின்றனர். பிறப்பால் சாதாரண நபர் சுபுதை. ஒரு இரும்புக் கொல்லர் என்று கருதப்படும் சர்ச்சிகுடையின் மகன் தான் இந்தச் சுபுதை. 14 வயதை அடைந்த பொழுது சுபுதை தனது இனத்தை விட்டுப் பிரிந்து தெமுசினின் இராணுவத்தில் இணைவதற்காகச் சென்றார். சுபுதையின் அண்ணனான செல்மே அவரது 17வது வயதில் தெமுசினின் இராணுவத்தில் இணைந்தார். அவரைப் பின்பற்றிச் சுபுதையும் இராணுவத்தில் இணையச் சென்றார். செல்மே செங்கிஸ் கானின் இரத்த சம்பந்த உறவுகள் தவிர ஏனையவர்கள் அடையக்கூடிய மிக உயர்ந்த பதவியை அடைந்தார்.[6] ஒரு தசாப்தத்திற்குள்ளாகவே சுபுதை ஒரு தளபதியானார். முன் வரிசையில் செல்லும் நான்கு தியுமன்களில் ஒரு தியுமனுக்குத் தலைமை தாங்கினார். 1211இல் வடக்கு சீன படையெடுப்பின் போது சுபுதை வயதில் மூத்த மங்கோலியத் தளபதியான செபேயுடன் இணைந்து செயல்பட்டார். அவர்களின் இந்தக் கூட்டணியானது 1223இல் செபே இறக்கும் வரை தொடர்ந்தது. 1212இல் சுபுதை குவான் என்ற நகரத்தை புயல் வேகத்தில் சென்று கைப்பற்றினார். வரலாற்றுப் பதிவுகளின் படி சுபுதை தனியாளாகப் பெற்ற முதல் பெரிய வெற்றி இது தான். சுபுதையைச் செங்கிஸ் கான் தனது நான்கு போர் நாய்களில் ஒருவர் என்று அழைத்துள்ளார். செங்கிஸ் கானின் 8 முக்கியமான தளபதிகளில் இந்த நால்வரும் அடங்குவர் என மங்கோலியர்களின் இரகசிய வரலாறு குறிப்பிடுகிறது: [7]
அவர்கள் தான் தெமுசினின் 4 நாய்கள். அவர்களது நெற்றி பித்தளையாலானது, அவர்களது தாடைகள் கத்தரிக்கோல் போன்றவை, அவர்களது நாக்குகள் குத்தூசி போன்றவை, அவர்களது தலைகள் இரும்பாலானவை, அவர்களது சாட்டை வால்கள் வாள்களைப் போன்றவை...யுத்தம் நடக்கும் நாளில், அவர்கள் எதிரிகளின் சதையை விழுங்கக் கூடியவர்கள். இதோ பார், அவர்கள் கட்டவிழ்த்து விடப்படுகின்றனர், மகிழ்ச்சியுடன் தங்களது வாயில் உமிழ் நீர் வழிய அவர்கள் வருகின்றனர். அந்த நான்கு நாய்கள் செபே மற்றும் குப்லாய் (குப்லாய் கானிலிருந்து வேறுபட்டவர்) செல்மே மற்றும் சுபோதை.
—மங்கோலியர்களின் இரகசிய வரலாறு
ஆரம்ப காலத்திலிருந்து தெமுசின் சுபுதையை ஒரு தனித்துவம் வாய்ந்த நபராக அடையாளம் கண்டார். சுபுதையின் வளர்ச்சிக்காக அரிதான வாய்ப்புகளை வழங்கினார். செங்கிஸ் கானின் கூடாரத்தின் வாயில் காப்பானாகச் சுபுதையின் இளம் வயதிலேயே மதிப்பு வாய்ந்த பதவி அவருக்கு வழங்கப்பட்டது. மங்கோலிய வரலாறுகள் செங்கிஸ் கானிடம் "ஒருவரைக் காற்றில் இருந்து காக்கும் தோல் போர்வைகளைப் போல நான் உங்களை உங்களது எதிரிகளிடமிருந்து காப்பேன்" என்று சுபுதை கூறியதாகப் பதிவிடுகின்றன.[8] இத்தகைய முக்கியமான இடத்தில் இருந்த காரணத்தினால் சுபுதையால் மங்கோலிய போர்த் தந்திரச் சந்திப்புகளைக் கேட்பதற்கும், பிற்காலத்தில் சந்திப்புகளில் இணைந்து கொள்வதற்கும், ஒரு வாய்ப்பாக அமைந்தது. தனது 15 வயது முதல் 25 வயதிற்குள் இந்தச் சந்திப்புகளில் சுபுதை இணைந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.[9] செங்கிஸ் கானின் பெரும்பாலான வாழ்நாட்களில் அவரது முக்கியமான தளபதிகளான செபே (1211-12, 1213–14, 1219–23) மற்றும் முகாலி (1213–14) ஆகியோருக்குத் துணையாக மற்றும் அவர்களிடம் பணி பயில்பவராகச் சுபுதை செயல்பட்டார். மேலும் அவர் செங்கிஸ் கானிடமும் (1219) பணியாற்றினார். இத்தகைய புத்திசாலித்தனமான மங்கோலியத் தலைவர்களிடம் தனித்துவமான அணுகும் வாய்ப்பை பெற்றிருந்தது சுபுதையின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகித்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
சுபுதை தனியாக ஒரு தளபதியாக செயல்பட ஆரம்பித்த வாய்ப்பானது 1197ஆம் ஆண்டு அவரது 22ஆம் வயதில் கிடைத்தது. இந்த வரமானது அவருக்குச் செங்கிஸ் கானின் மிகவும் வெறுக்கப்பட்ட எதிரிகளான மெர்கிடுகளுக்கு எதிரான போரில் கிடைத்தது. அப்போரில் சுபுதையின் பாத்திரமானது முன்வரிசைப் படையாகச் செயல்பட்டு மெர்கிடு முகாம்களில் திசென் ஆற்றின் கரையில் இருந்த ஒரு முகாமைத் தோற்கடிப்பது ஆகும். செங்கிஸ் கான் தனக்கு வழங்கிய கூடுதல் உயரடுக்குத் துருப்புகளை மறுத்த சுபுதை மங்கோலியர்களிடமிருந்து விலகிய ஒரு வீரனாக மெர்கிடு முகாமிற்குத் தானே பயணித்தார். மெர்கிடு முகாமிற்குச் சென்ற சுபுதை மெர்கிடுகளிடம் முக்கிய மங்கோலிய இராணுவமானது தொலைதூரத்தில் இருப்பதாகவும் அவர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் நம்பச் செய்தார். இதன் விளைவாக மெர்கிடுகள் தங்களது பாதுகாப்பு மற்றும் ரோந்தை குறைத்தனர். இதன் மூலம் மங்கோலியர்கள் எளிதாக மெர்கிடுகளைச் சுற்றிவளைத்துத் திடீர்த் தாக்குதல் நடத்தினர். இரண்டு மெர்கிடு தளபதிகளைப் பிடித்தனர்.[10] தான் போர் நுணுக்கங்களைக் கற்கும் காலங்களில் கூடச் சுபுதை ஒரு வித்தியாசமான தளபதி என்பதை இதன் மூலம் நாம் அறியலாம். புதுமையான அணுகு முறைகள் மூலம் குறைந்த உயிரிழப்பு ஏற்படும் வண்ணம் பிரச்சனைகளை தீர்க்கக் கூடியவர் என்பதனையும் நாம் அறியலாம். மேலும் சுபுதை நைமர்களுக்கு எதிரான 1204ஆம் ஆம் ஆண்டு யுத்தத்தின் போது முன்வரிசைப் படையின் தளபதியாகப் பணியாற்றினார். இந்த யுத்தத்தில் அடைந்த வெற்றி காரணமாக மங்கோலியர்கள் மங்கோலியா முழுவதையும் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
தளபதியாக
போர்க் கலையில் புதுமைகளைப் புகுத்தியதில் சுபுதை ஒரு முக்கியமான நபர் ஆவார். இவர் பிற்காலத்தில் தலைமை தாங்கிய படையெடுப்புகள் பல்வேறு வகையான சிக்கலான தந்திரங்களைக் கொண்டிருந்தன. அத்தகைய முயற்சிகள் இரண்டாம் உலகப்போர் வரை மீண்டும் எவராலும் செய்யப்படவில்லை. சீனா, உருசியா மற்றும் ஐரோப்பா ஆகியவற்றின் மீதான படையெடுப்புகளுக்கு சுபுதை தலைமை தாங்கிய பொழுது சுமார் 1,00,000 வீரர்களை 500 முதல் 1,000 கிலோமீட்டர் தொலைவில் 3 மற்றும் 5 வெவ்வேறு இராணுவக் குழுக்களாகப் பயன்படுத்தினார். இந்தக் குழுக்கள் நெடுந்தொலைவில் பிரிக்கப்பட்டு இருந்த பொழுதும் அதிகப்படியான ஒத்திசைவுடன் போர்த் தந்திரங்கள் செயல்படுத்தப்பட்டன. போலந்து மற்றும் அங்கேரியின் முதன்மை இராணுவங்களை வெவ்வேறு இடங்களில் 2 நாட்கள் இடைவெளியில் மங்கோலியர்கள் தோற்கடித்தனர். தன் எதிரிகளை தவறாக வழிநடத்தி அவர்கள் எதிர்பாராத திசையிலிருந்து திடீர்த் தாக்குதல் நடத்துவதே சுபுதையின் போர்த் தந்திரங்களின் வடிவமைப்பு ஆகும். 1232ஆம் ஆண்டில் சின் பேரரசின் மீதான மங்கோலியப் படையெடுப்பின் போது அதுவரை வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருந்த சின் படைகள் அவர்களுக்கென மிகச் சாதகமான நிலப்பரப்பில் இயங்கிக் கொண்டிருந்த போதிலும் அவர்களால் தொடர்ந்து திறம்பட செயல்பட முடியவில்லை. ஏனெனில் சின் படைகளால் எந்த மங்கோலிய இராணுவம் தப்பித்து ஓடுவது போல் நடிக்கிறது என்றும் எந்த மங்கோலிய இராணுவம் உண்மையிலேயே தாக்க வருகிறது என்றும் அவர்கள் கண்டறிவதற்கு முன்னரே சின்களின் முதன்மை இராணுவமானது தனிமைப்படுத்தப்பட்டு பசியால் சோர்வடைந்தது. கடுமையான காவலுக்கு உட்படுத்தப்பட்ட கோட்டைகள் பொதுவாகக் கடந்து செல்லப்படும் மற்றும் புறக்கணிக்கப்படும். கோட்டைக்கு வெளியில் ஒருங்கிணைக்கப்பட்டு போரிடும் படைகள் அழிக்கப்படும் வரை இந்தப் புறக்கணிப்பு தொடரும். முற்றுகைகளும் முக்கியமான அல்லது எளிதான கோட்டைகளின் மீது நடத்தப்படும். மற்ற சூழ்நிலைகளில் மங்கோலியர்கள் ஒரு முற்றுகைப் படையை விட்டு விட்டு அப்படியே சென்று விடுவர் அல்லது மதில் சுவர் கொண்ட கோட்டைகளைப் புறக்கணிப்பர். அதே நேரத்தில் கோட்டையைச் சுற்றியுள்ள விவசாயப் பகுதிகள் தீ வைத்து எரிக்கப்படும். எனவே கோட்டைக்குள் இருக்கும் எஞ்சிய மக்கள் பசியால் வாடுவர்.[11]
நீண்ட காலம் போர்களில் கலந்து கொண்ட அனுபவம் காரணமாக மேற்கிலிருந்து கிழக்கு வரை இருந்த அனைத்து வகையான உயர்தர இராணுவங்களுடன் போர் புரியும் வாய்ப்பு சுபுதைக்கு கிடைத்தது. மேலும் அவர் அந்த அனைத்துப் போர்களிலும் வெற்றி வாகை சூடினார். மற்ற மாபெரும் புல்வெளி அரசுகளின் குதிரை வில்லாளர்கள், 1230களில் இருந்த சீனாவின் சின் அரசமரபின் உயர்தரக் குதிரைப்படை, தங்களது பேரரசைச் சில காலத்திற்கு முன்னரே கைப்பற்றியிருந்த குவாரசமியக் கங்லி துருக்கியக் குதிரைப்படை, கனரகக் கவசங்களை உடைய சார்சியா, போலந்து மற்றும் அங்கேரி ஆகிய நாடுகளின் நைட் மாவீரர்கள் ஆகிய அனைவருமே சுபுதையின் இராணுவத்திற்கு எதிராக வலுவற்றுப் போயினர். புல்வெளிக் குதிரை வில்லாளர் இராணுவங்கள் தங்களது எதிரிகளை மெதுவாக வலுவிழக்கச் செய்யப் பல மணி நேரங்கள் அல்லது பல நாட்களுக்குக் கூட கரே யுத்தம் அல்லது மன்சிகெர்ட் யுத்தத்தில் நடந்ததைப் போல் அம்புகளை எய்வர் என்ற பொதுவான பார்வைக்கு மாறாக சுபுதை மிகத் தீர்க்கமான மற்றும் திரவம் போன்ற முறையில் போரிடுவார். சுபுதையின் இராணுவம் பல வரிசைகளாக நிற்க எதிரி இராணுவத்தைத் துளைத்து உள்ளே செல்வதற்கு ஒரு வழியை ஏற்படுத்துவதற்காகக் கடுமையான அம்புத் தாக்குதல் அல்லது பெரிய கவண் வில்களைக் கொண்டு தாக்குதல் நடத்தப்படும். 1223ஆம் ஆண்டின் கல்கா ஆற்று யுத்தத்தின்போது 20,000 வீரர்களைக் கொண்ட மங்கோலிய இராணுவமானது 80,000 வீரர்களைக் கொண்ட உருசிய இராணுவத்தை 9 நாட்களுக்குத் தோற்று ஓடுவது போல் தவறாக வழிநடத்தித் திடீரென்று திரும்பித் தாக்குதல் நடத்தியது. உருசிய இராணுவத்தின் இரண்டாவது பிரிவு யுத்த களத்தை அடைந்து போருக்கு ஆயத்தமாவதற்கு முன்பே அவர்களின் முன்வரிசைப் படையானது தோற்று ஓடியது.[12]
மங்கோலியத் தளபதிகளிலேயே செங்கிஸ் கான் மற்றும் சுபுதை தான் முதன் முதலில் முற்றுகைப் போரில் பொறியாளர்களின் பங்களிப்பை உணர்ந்தனர். போர்க்களங்களில் கூட முற்றுகை எந்திரங்களைச் சுபுதை பயன்படுத்தினார். அங்கேரியில் நடந்த யுத்தத்தின் போது அங்கேரிய குறுக்கு வில்லாளர்கள் ஒரு இரவில் பாலத்தை கடக்க முயன்ற மங்கோலியர்களைத் தாக்கினர். அடுத்த நாள் ஆற்றை கடக்க முயன்ற மங்கோலியர்களுக்குக் குறிப்பிடத்தக்க அளவுக்கு சேதத்தை விளைவித்தனர். அங்கேரிய குறுக்கு வில்லாளர்கள் இருந்த ஆற்றங்கரை மீது கற்களை எறியும் எந்திரங்களைக் கொண்டு சுபுதை தாக்கினார். இதன் மூலமாக மேலும் சேதம் ஏற்படாமல் மங்கோலிய இலகுரக குதிரை படையானது ஆற்றை கடந்தது. எதிரிகளின் தற்காப்பை தடுக்கவும் அதேநேரத்தில் அவர்களை தாக்கவும் முற்றுகை ஆயுதங்கள் போன்ற கனரக ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தும் முறையானது முதன்முதலில் நூல்களில் பதியப்பட்டது அப்பொழுதுதான். இத்தகைய போர் முறையானது முதலாம் உலகப்போரின் ஊர்ந்து செல்லும் (creeping barrage) போர் முறையை ஒத்துள்ளது. ஊர்ந்து செல்லும் போர் முறையானது எதிரிகளின் இராணுவ வரிசைகளை அவர்களை தாக்கும் முன்னர் கலைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டது.[13] முக்கியமான பாலத்தைக் கடப்பதற்காகக் கல்லெறியும் எந்திரங்கள் பாதையை உருவாக்கிக் கொடுத்த போது ஆற்றின் மற்றொரு புறம் அங்கேரியர்களைச் சுற்றி வளைப்பதற்காக ஒரு தற்காலிகப் பாலத்தை உருவாக்குவதை சுபுதை மேற்பார்வையிட்டார். பாலத்தின் மீதான தாக்குதலில் கவனம் செலுத்திய அங்கேரியர்கள் சஜோ ஆறானது அதிக ஆழம் உடையதையும் அதைக் கடப்பது அவ்வளவு எளிதல்ல என்பதனையும் கணித்திருந்தனர். அதே நேரத்தில் மங்கோலியர்கள் ஒரு தற்காலிக பாலத்தை அதுவும் இரவில் உருவாக்குவதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. சுபுதையின் பொறியியல் புத்திக் கூர்மையானது யுத்தகளத்தின் முக்கியப் பகுதிகளைப் புகைத் திரைகளைக் கொண்டு முழுவதுமாக மூடும் முற்றிலும் தனித்துவமான செயல் வரையிலும் நீண்டிருந்தது. கல்கா யுத்தம் மற்றும் லியேக்னிட்சு யுத்தம் ஆகியவற்றின்போது மங்கோலிய இராணுவங்கள், தங்களது எதிரிகளின் ஒரு பகுதியினரை முதன்மை இராணுவத்தில் இருந்து பிரித்து, புகைத் திரைகளைக் கொண்டு, முதன்மை இராணுவமானது பிரிந்து சென்ற இராணுவப் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டு, சுற்றிவளைக்கப்பட்டு, அழிக்கப்படுவதைக் காண முடியாத வண்ணம் செயல்பட்டன.
தோற்கடிக்கப்பட்ட மக்களில் சிறந்த திறமைசாலிகளை தனது படைகளில், முக்கியமாகப் பொறியாளர்களைச் சேர்த்துக் கொள்ளும் சுபுதையின் குணம் பொதுவாக அறியப்பட்டதாகும். ஒற்றர்கள் மூலம் தகவல்களைத் திரட்டுவது மற்றும் நீண்ட காலத்திற்கு முன்பு படையெடுப்புகளைத் திட்டமிடுவது ஆகிய திறமைகளில் சுபுதை மேம்பட்டு இருந்தார். உதாரணமாக உருசிய சமஸ்தானங்கள், போலந்துகாரர்கள் மற்றும் அங்கேரி நாட்டவர் ஆகியவர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு குறைந்தது ஒரு வருடத்திற்கு முன்னரே ஒற்றர்களைக் கொண்டு அந்த நாடுகளைப் பற்றிய விரிவான தகவல்களைச் சுபுதை திரட்டினார். இவரது ஐரோப்பிய எதிரிகள் மங்கோலிய உளவு வலையமைப்பின் சிக்கலான தகவல் திரட்டும் திறமையைக் கண்டு திகைத்துப் போனார்கள்.[14] எதிரிகளுக்கு ஏற்றவாறு மூலோபாயங்களை உருவாக்குதல், எதிரிகளின் நிலப்பரப்பு மற்றும் காலநிலை ஆகியவற்றின் தேவையைப் பொறுத்து தனது தந்திரோபாயங்களைச் சரி செய்து கொள்ளுதல் ஆகியவற்றில் சுபுதை சிறந்தவராக இருந்தார். சுபுதை தனது இராணுவத்தில் இலகு ரகக் குதிரைப் படையின் பயன்பாட்டை வலியுறுத்தினார். எதிரிகளிடம் தப்பித்து ஓடுமாறு ஓடி அவர்களை முதன்மை இராணுவத்திலிருந்து தனியாகப் பிரித்து பின்னர் திடீர்த் தாக்குதல் நடத்தி அழிக்கும் முறையைப் பின்பற்றினார். மேலும் முதன்மை இராணுவத்தைத் தோற்கடிக்கும் போது அதிலிருந்து பிரிந்து ஓடும் பிரிவுகளையும் அழிப்பதன் மூலம் எதிர்காலத்தில் எந்தவித எதிர்ப்பும் வராமல் இருப்பதை உறுதி செய்தார். மங்கோலிய பாரம்பரியப்படி இராணுவம் செல்லும் போது அதனுடன் இராணுவப் பொருட்களையும் கொண்டு செல்லும் முறையைச் சுபுதை தனது படை வீரர்களுக்காகப் பயன்படுத்தினார். இதன் மூலம் அவர்கள் செல்லும் வழியில் உள்ள நிலங்களில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டனர். அதே நேரத்தில் நீண்ட தூர பயணம் தேவைப்படும் படையெடுப்புகளின் போது அதிகத் தொலைவுகளை எளிதாகக் கடந்தனர். யுத்தத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் எதிரிகளைப் பலவீனமான நிலைக்கு கொண்டு செல்வது சுபுதை விரும்பிய ஒன்றாகும். மங்கோலிய உயிர்களை இழக்காமல் பார்த்துக் கொள்வதில் சுபுதை மிக அதிக கவனம் செலுத்துவார். அதற்காக விரிவான மூலோபாயத் தந்திரங்களை செயல்படுத்துவார் அல்லது பொதுமக்களைப் பயமுறுத்தி அடிபணிய வைப்பதற்காக அடிக்கடி மொத்தமாக மக்களைக் கொல்ல உத்தரவிடுவார். இவை அனைத்தும் எதிர்காலத்தில் மங்கோலியர்கள் குறைவாக கொல்லப்படுவதற்கு உதவிகரமாக இருக்கும்.
செங்கிஸ் கான் போலவே சுபுதையும் எதிரிகளுக்குள் பிரிவை ஏற்படுத்தி அவர்களை ஆச்சரியப்பட வைப்பதில் வல்லவர் ஆவார். அதிக திறமை வாய்ந்த மங்கோலிய ஒற்றர் அமைப்புகள் கருத்து வேறுபாடுகளை உருவாக்குதல், முக்கியமான உள்ளூர் தலைவர்களுக்கு லஞ்சம் கொடுத்தல் மற்றும் மற்ற எதிரிகள் ஒன்றிணைந்து தங்களது முழு பலத்துடன் போரிடுதலைத் தடுத்தல் ஆகியவற்றைச் செயல்படுத்தும். இதனுடன் மங்கோலியர்கள் பற்றிய பயம் பொதுவாகவே இருக்கும். பல நேரங்களில் மங்கோலியர்கள் போர்க்களத்தை நெருங்கும் போது எதிரிகள் பயத்தில் ஓடினர் அல்லது செய்வதறியாது திகைக்கும் அவர்கள் எந்தவிதத் தாக்குதலிலும் இறங்க மாட்டார்கள். மெர்கிடுகளைத் தாக்கும் போது சுபுதை முதன்மை மங்கோலிய இராணுவம் தொலை தூரத்தில் இருப்பதாக அவர்களை நம்ப வைத்தார். அதே நேரத்தில் திடீரென அவர்களைச் சுற்றி வளைத்து மங்கோலியர்கள் தாக்குதல் நடத்தினர். குவாரசமிய ஆட்சியாளர் ஷாவுக்கும் அவரது தாயின் இராணுவத்திற்கும் இடையில் மங்கோலியர்கள் பிரச்சனையை உருவாக்கினர். அதே நேரத்தில் சூழ்நிலையைச் சரி செய்யமுடியாத வண்ணம் பார்த்துக் கொண்டனர். சார்சியாவில் மக்களைக் கொன்றதன் மூலம் அரசர் நான்காம் ஜார்ஜின் இராணுவம் வெட்ட வெளிக்குக் கொண்டு வரப்பட்டது. அதே நேரத்தில் காக்கேசிய மலைகளுக்கு வடக்கிலிருந்த நாடோடிக் குமன்கள், உள்ளூர் ஆலன்கள் மற்றும் சிர்காசியர்கள் ஆகியோர் அரசுடன் சேர்ந்து விடாதபடி இராஜதந்திர நடவடிக்கைகளை மங்கோலியர்கள் மேற்கொண்டனர்.
நடு ஆசியப் படையெடுப்புகள் (1217–1220)
1217இல் செங்கிஸ் கான் சுபுதையை வெறுக்கப்பட்ட மெர்கிடுகள் மற்றும் தற்கால நடு கசக்கஸ்தானில் இருந்த குமன் கிப்சாக் கூட்டமைப்பினர் போன்ற அவர்களது கூட்டாளிகளை வேட்டையாடுவதற்காக அனுப்பினார். சுபுதை அவர்களை 1217இல் சூ ஆற்றின் கரையில் தோற்கடித்த பின்னர் மீண்டும் 1219இல் காட்டு கிப்சாக் பகுதியில் தோற்கடித்தார். 1219ஆம் ஆண்டின் செம் ஆற்று யுத்தத்திற்கு முன்னர் தனது முன்வரிசைப் படையினரை குழந்தைகள் வைத்திருக்கும் விளையாட்டுப் பொம்மைகளை கொண்டு செல்லுமாறும் பின்னர் அவற்றை வழிநெடுக விட்டுவிட்டு செல்லுமாறும் சுபுதை அறிவுறுத்தினார். இச்செயலுக்கான காரணமானது எதிரிகளிடமிருந்து தப்பித்து ஓடும் குடும்பங்களின் ஒரு குழு செல்வது போன்ற தோற்றத்தை அவர் ஏற்படுத்த விரும்பினார். இவ்வாறு எதிரிகளைத் தவறாகக் கணிக்க வைத்த சுபுதை தனது இராணுவம் மூலம் அனைத்து மெர்கிடு அல்லது கிப்சாக் தலைவர்களை அவர்கள் யூகிக்க முடியாத வண்ணம் சுற்றிவளைத்துக் கைது செய்தார்.[15]
இந்த நிகழ்வு நடந்து சிறிது நாட்களில் இருகிசு ஆற்றங்கரையில் குவாரசமியாவின் இரண்டாம் முகமது சுபுதையைத் தாக்கினார். இந்தத் தாக்குதலில் முகமது சுபுதையின் படை வீரர்களின் எண்ணிக்கையைப் போல் மூன்று மடங்கு படைவீரர்களைக் கொண்டிருந்தார். சுல்தானின் உயரடுக்குப் படைகள் அப்போதைய நடு ஆசியாவின் பெரும் பகுதியைக் கைப்பற்றி இருந்தனர். எனினும் ஆக்ரோசமாகச் சண்டையிட்ட சுபுதை பின்னர் இரவுநேரத்தில் பின்வாங்கினார். பாரசீக வரலாற்று நூல்களின் படி, இந்த யுத்தத்திற்கு பிறகு, மங்கோலியர்களை அறிவிக்கப்படாத தாக்குதல்களில் தோற்கடிக்கும் முகமதுவின் திறமை மீது அவருக்கு இருந்த தன்னம்பிக்கை குறைய ஆரம்பித்தது. ஏனெனில் அந்நேரத்தில் சுபுதை வெறும் 20,000 வீரர்களைக் கொண்ட ஒரு படைக்கு மட்டுமே தலைமை தாங்கினார். மேலும் அவர் சுல்தானுடன் போரிட விரும்பவில்லை. உண்மையில் மங்கோலிய இராணுவமானது சுல்தானின் இராணுவத்தின் இடது பக்கத்தை அழித்து, நடுவரிசைப் படைகளின் வரிசையைக் குலைத்து அவரைக் கைது செய்யும் நிலைக்கு வந்தது. ஆனால் சுல்தானின் மகனிடம் இருந்து வந்த வலுவூட்டல் படைகளால் யுத்தமானது சுல்தானுக்கு ஆதரவாகத் திரும்பியது.[16] இந்த யுத்தத்தின் காரணமாகக் காரா கிதைப் பேரரசில் ஏற்பட்ட கிளர்ச்சியைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் முகமதுவின் முயற்சி பலனளிக்கவில்லை. இதற்கு முந்தைய போர்களில் அவர் இத்தகைய முயற்சிகளைப் பின்பற்றி இருந்தார். காரா கிதையானது அதேநேரத்தில் மற்றொரு மங்கோலியத் தளபதியான செபேயால் கைப்பற்றப்பட்டது.
மங்கோலியத் தூதுவர்களைக் கொன்றதற்குத் தண்டனை கொடுக்க 1219ஆம் ஆண்டின் பிற்பகுதியில் செங்கிஸ் கான் மங்கோலிய இராணுவத்திற்குத் தலைமை தாங்கி மேற்கு நோக்கி குவாரசாமியா மீது படையெடுத்துச் சென்றார். 1,00,000 வீரர்களைக் கொண்ட மங்கோலிய இராணுவமானது எண்ணிக்கை அளவில் குவாரசமிய இராணுவத்தை விட மிகக் குறைவாகவே இருந்தது. ஆனால் எதிரிகளைத் தவறாக வழிநடத்துதல் மற்றும் திடீர்த் தாக்குதல்கள் ஆகிய செயல்களின் மூலம் தனித்தனியாக வெவ்வேறு நகரங்களில் நிறுத்தப்பட்டிருந்த குவாரசமிய இராணுவங்களை அவை பதில் கொடுக்கும் முன்னரே தோற்கடிக்கப்பட்டன. சுபுதை அப்போரில் மங்கோலிய இராணுவத்தில் தற்போதைய முப்படைத் தளபதி என்ற பட்டத்துக்கு இணையான சேவையை ஆற்றினார். புகாரா நகரத்திற்குப் பின் பகுதியில் இருந்த உயிர்ப்பலி வாங்கக்கூடிய கிசில்கம் பாலைவனத்தின் வழியாகக் கானின் இராணுவத்துடன் பயணித்தது எதிரித் தடுப்பு வலையமைப்புக்குப் பின்பகுதியில் தோன்றினார்.[17] குவாரசமியாவின் இராணுவத் தலைநகரமாக இருந்த சமர்கந்தைச் சீக்கிரமாகக் கைப்பற்றிய செங்கிஸ் கான், சுபுதை மற்றும் செபே தலைமையில் 30,000 வீரர்களைக் கொண்ட படையை ஷாவை வேட்டையாடுவதற்காக அனுப்பினார். பிற குவாரசமிய இராணுவங்களை ஒன்றிணைக்க அவருக்கு வாய்ப்பு வழங்காமல் இருக்க முயற்சித்தார். ஷா முகமது தன்னைக் காப்பாற்றிக்கொள்ள நடுப் பாரசீகத்திற்குத் தப்பி ஓடினார். மங்கோலியர்களின் கைதில் இருந்து அவர் தப்பித்த போதும் அவரால் தனக்கு ஆதரவாகப் படைகளைத் திரட்ட முடியவில்லை. இதன் காரணமாகக் குவாரசமியப் படையில் இருந்த பல்லாயிரக்கணக்கான வீரர்கள் பிரிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் ஒன்றன் பின் ஒன்றாக எளிதாக செங்கிஸ் கானின் முதன்மை இராணுவத்தால் அழிக்கப்பட்டனர்.[18] நீண்ட தூரம் தப்பித்து ஓடியதன் காரணமாகச் சோர்வடைந்த முகமது உடல்நலம் பாதிக்கப்பட்டார். 1221ஆம் ஆண்டின் ஆரம்ப காலத்தில் காசுபியன் கடலில் உள்ள ஒரு மீனவக் கிராமத்தில் இறந்தார். தன்னைத் தானே 'இரண்டாவது அலெக்சாந்தர்' என்று அழைத்துக் கொண்ட ஒரு மனிதனுக்கு இழிவான இறுதிக் கட்டம் நடைபெற்றது.
மகா குதிரைப்படைத் தாக்குதல் (1220–1223)
சுபுதை மற்றும் செபே ஆகியோர் 1219ஆம் ஆண்டில் குளிர் காலத்தின் ஒரு பகுதியை அசர்பைஜான் மற்றும் ஈரானில் கழித்தனர். அங்கு அவர்கள் சிறு தாக்குதல்கள் நடத்துதல் மற்றும் சூறையாடுதல் ஆகியவற்றுடன் சேர்த்து மேற்குப் பகுதியில் இருந்த குவாரசமியப் படைகள் கிழக்குப் பகுதியில் இருந்த எஞ்சிய பேரரசுக்கு உதவி புரியாமல் பார்த்துக் கொண்டனர். இங்கு தான் சுபுதைக்கு வரலாற்றிலேயே மிகத் துணிச்சலான வேவு பார்க்கும் யோசனை தோன்றியது. புகழ்பெற்ற வரலாற்றாளர் எட்வார்ட் கிப்பனின் கூற்றுப்படி இத்தகைய வேவு பார்க்கும் நடவடிக்கையானது "அதுவரை யாராலும் முயற்சிக்கப்படாததும், அதற்குப் பிறகு யாராலும் மீண்டும் நடத்தப்படாததும்" ஆகும். 20,000 மங்கோலியப் படைவீரர்கள் காக்கேசிய மலைகள் வழியாக காசுபியன் கடலைச் சுற்றிக் காட்டு கிப்சாக்குகள் மற்றும் குமன்களின் பகுதியின் பிற்பகுதியில் போய்ச் சேர்ந்தனர். வெளிப்படையாகச் சுபுதை ஒரு வாரத்தில் 1,900 கிலோ மீட்டர் தூரத்தை இந்த வேவு பார்க்கும் நடவடிக்கையின்போது தனது படைகளுடன் கடந்தார்.[19] தனது குதிரைகள் ஓட குதிரை சேனத்திலேயே படுத்து உறங்கிக் கொண்டு அவரும் மற்றும் மங்கோலிய வீரர்களும் இதனைச் செய்து முடித்தனர்.[20]
பாரசீகத்தில் இருந்த எதிர்ப்பை முறியடித்து, அசர்பைஜானை அடிபணிய வைத்த மங்கோலியர்கள் கிறித்தவ இராச்சியமான சார்சியா மீது படையெடுத்தனர். சார்சியாவின் அரசர் யுத்தம் புரிய மனமின்றி இருந்தபோதும், கிராமப்புறங்களைச் சூறையாடுதல் மற்றும் மக்களைக் கொல்லுதல் ஆகிய செயல்களின் மூலம் சுபுதை மற்றும் செபே அரசரைப் போர் புரியும் நிலைக்குத் தள்ளினர். சுபுதை மற்றும் செபே பிறகு பல்லாயிரக்கணக்கான நைட் வீரர்களைக் கொண்ட சக்திவாய்ந்த சார்சிய இராணுவத்தைக் காக்கேசிய மலைகளின் யுத்தத்தின் போது தோற்கடித்தனர். இந்த யுத்தத்தில் நைட் வீரர்களை அவர்களது காலாட்படையினரிடமிருந்து தோற்று ஓடுவதுபோல் ஓடி மங்கோலியர்கள் பிரித்தனர். பிறகு நைட் வீரர்களைச் சுற்றிவளைத்தனர். நைட் வீரர்களை அழித்த பிறகு சார்சியா இராணுவத்தை மங்கோலியர்கள் சுற்றிவளைத்து அழித்தனர். சார்சியர்களின் கூற்றுப்படி சுபுதை தான் மங்கோலிய இராணுவத்திற்குத் தலைமை தாங்கினார். மங்கோலியர்கள் சார்சியக் கொடிகளை ஏந்தி சார்சியா இராணுவத்திற்கு உதவ வந்தவர்கள் போல் நடித்தனர். மேலும் ஒற்றர்கள் மூலம் உண்மையில் மங்கோலியர்கள் கிறித்தவ மதத்தை சேர்ந்தவர்கள் என்றும் சார்சியர்களுக்கு உதவ வந்திருப்பதாகவும் தவறான தகவல்களை பரப்பினர். இதன்மூலம் சார்சியர்கள் ஏமாற்றப்பட்டனர்.[21] உண்மையில் இந்த மங்கோலிய வேவு பார்க்கும் படையானது எதிர்பாராதவிதமாகச் சிலுவைப் போர்களின் வரலாற்றையும் மாற்றியது. ஏனெனில் ஐந்தாவது சிலுவைப் போருக்கு இராணுவத்தை அனுப்ப சார்சியா முடிவு செய்திருந்தது. ஆனால் மங்கோலியர்கள் அந்த இராணுவத்தை அழித்துவிட்டனர். பதிலாக ஜார்ஜ் மன்னரின் சகோதரி ருசுதான், திருத்தந்தைக்கு ஒரு கடிதம் எழுதினார். அக்கடிதத்தில் தங்களது முழு இராணுவமும் ஒருங்கிணைப்பின்றி இருப்பதனால் தங்களால் சிலுவைப் போருக்கு இராணுவத்தை அனுப்ப முடியாது என்று விளக்கம் அளித்திருந்தார்.[22] சார்சியா இத்தகைய அழிவுகரமான தோல்விகளுக்குப் பிறகு பாதுகாப்பற்று இருந்தபோதும் மங்கோலிய நோக்கமானது வேவு பார்ப்பது தானே தவிர சார்சியாவைக் கைப்பற்றுவது அல்ல.
சார்சியாவைச் சூறையாடிய பிறகு மங்கோலியர்கள் குளிர் காலத்தில் தெர்பென் கணவாயைச் சுற்றிச் செல்ல காக்கேசிய மலைகள் வழியாகச் சென்றனர். இந்த முறை மங்கோலியர்களின் வழிகாட்டிகளாக இருந்தவர்கள் அவர்களைக் கடினமான பாதையில் செலுத்தி ஏமாற்றினர். மலைகளைக் கடந்து சோர்வடைந்த மங்கோலியர்கள் ஒரு பெரிய புல்வெளிக் கூட்டணி இராணுவத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. புத்திசாலித்தனமான நடவடிக்கைகள் மூலம் சுபுதை ஆலன்கள், சிர்காசியர்கள் மற்றும் டான் கிப்சாக்குகள்/குமன்கள் ஆகியோரைத் தனிமைப்படுத்தித் தோற்கடித்தார். மங்கோலியர்கள் தெற்கு உருசியப் புல்வெளிகளைச் சூறையாடிய பிறகு, உருசிய இளவரசர்கள் பின்வாங்கி ஓடிய குமன் கூட்டமைப்பினருடன் இணைந்து ஒரு 80,000 படை வீரர்களைக் கொண்ட இராணுவத்தை மங்கோலியர்களைத் தோற்கடிப்பதற்காக அமைத்தனர். மிகச்சிறிய படையையே கொண்டிருந்த சுபுதை இந்த முறை மீண்டும் தோற்று ஓடுவதுபோல் நடித்தார். இதன் காரணமாக சுபுதையின் கடைசி வரிசையில் இருந்த 1,000 பேர் உயிரிழக்க வேண்டியிருந்தது. 80,000 வீரர்களில் ஒரு பிரிவினர் இவர்களைத் துரத்திக் கொண்டு வந்ததன் காரணமாகத் தனிமைப்படுத்தப்பட்டனர். 9 நாட்களுக்குப் பிறகு செபே மற்றும் சுபுதை திடீரெனத் திரும்பி ருஸ் மற்றும் குமன் ஆகியவர்களின் இணைந்த இராணுவத்தைக் கால்கா ஆற்று யுத்தத்தின்போது 31 மே 1223ஆம் ஆண்டு தோற்கடித்தனர். தங்களது பாதையில் இருந்த அனைத்து இராணுவங்களையும் தோற்கடித்துத் தங்களது சொந்த ஒற்றர் கூட்டமைப்பை ஏற்படுத்திய மங்கோலியர்கள் மூலோபாயக் கூட்டமைப்பாக அங்கிருந்த வெனிஸ் நகர வணிகர்களுடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டனர். இதற்கான பலனை மங்கோலியர்கள் ஒரு தசாப்தத்திற்கு பிறகு பெற்றுக்கொண்டனர். அந்த வணிகர்களுக்கு தனித்துவமான வணிக உரிமையைக் கொடுத்ததன் மூலம் வெனிஸ் நகர வணிகர்கள் ஐரோப்பாவில் மங்கோலியர்களுக்கு வேவு பார்ப்பவர்களாகச் செயல்படுவர். வோல்கா பல்கேரியர்கள் சுபுதையின் இராணுவத்தைத் தோற்கடித்ததாகக் கூறிக்கொண்டனர். ஆனால் வரலாற்றாளர்கள் இக்கூற்றை மறுக்கின்றனர். சிறிது காலத்திற்குப் பிறகு தெற்கு ஆசியாவில் இருந்த கங்லி துருக்கியர்களை மங்கோலியர்கள் தோற்கடித்தனர்.[23]
சுபுதை 1229ஆம் ஆண்டு நடு ஆசியாவிற்கு அனுப்பப்பட்டார். தான் சீனாவிற்கு மீண்டும் அழைக்கப்படும் முன்னர் குமன்கள்/கிப்சாக்குகள் கூட்டமைப்பினரை மீண்டும் தோற்கடித்தார்.
மேற்கு சியா மற்றும் சின் சீனா மீதான படையெடுப்புகள் (1207, 1209, 1211–1215, 1226–27)
1211ஆம் ஆண்டு சின் அரசமரபின் மீதான ஆரம்பப் படையெடுப்பின் போது பெருஞ்சுவரின் (மிங் சீனப் பெருஞ் சுவர் அல்ல) கிழக்கு ஓரத்தைச் சுற்றி இருந்த சீனக் கோட்டைகளைத் தாக்கிய செபேயின் இராணுவத்தில் சுபுதை பணியாற்றினார். 1211ஆம் ஆண்டின் பிற்பகுதியில் முக்கியமான கோட்டையான குவான்-சோவு கோட்டையின் சுவர்களில் இவர் தான் முதன் முதலாக ஏறினார். ஊ ஷா பாவோ என்ற பகுதியில் பெரும்பான்மை சின் இராணுவத்தைப் பதுங்கியிருந்து தாக்கியது மற்றும் மிக முக்கியமான எகுலிங்கு யுத்தம் ஆகியவற்றில் பங்கெடுத்தார் . 1212ஆம் ஆண்டு செபே லியாவோயங் நகரத்தைத் தைரியமாகக் கைப்பற்றிய நிகழ்வில் இவர் செபேயுடன் பணியாற்றி இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. 1213ஆம் ஆண்டில் ஷாண்டோங்கில் நடைபெற்ற ஒரு முக்கியமான தாக்குதலில் செபே மற்றும் முகாலியுடன் இவர் பங்கெடுத்திருந்தார்.[24]
1226ஆம் ஆண்டு மேற்கு சியாவின் தாங்குடுகளுக்கு எதிரான படையெடுப்பில் சுபுதை ஒரு முக்கியப் பங்காற்றினார். தாங்குடுகளின் பின் பகுதியைத் தாக்கிய பக்கவாட்டு இராணுவத்தின் தளபதியாகப் பணியாற்றினார். மேற்கு சியாவின் மீது செங்கிஸ் கான் வழக்கமான மரபான வடக்கு வழியாகப் படையெடுத்த நேரத்தில், சுபுதை எதிர்பாராதவிதமாக தற்காலத் துருக்கிசுத்தானின் மலைகள் மற்றும் வாழத் தகுதியற்ற பாலைவனங்கள் வழியாக மேற்கிலிருந்து தாக்கினார். இதன் காரணமாகத் தாங்குடுகளின் எதிர்ப்பானது நிலைகுலைந்து போனது. தாங்குடு பேரரசானது இரண்டாக வெட்டப்பட்டது: மேற்குப் பகுதிக்கு வலுவூட்டல் படைகள் வருவதைச் செங்கிஸ் கான் தடுத்தார். அதேநேரத்தில் சுபுதை மேற்குப் பகுதியில் இருந்த எதிர்ப்புகளை அடக்கினார். கிழக்குப் பகுதியை வெல்லச் செங்கிஸ் கானின் இராணுவத்துடன் இணைந்தார். 1227ஆம் ஆண்டு வெயி ஆற்றின் மேல் பகுதியில் இருந்த சின் மாவட்டங்களை இவர் வென்றார். திபெத் இராச்சியத்தின் மீது கூடத் தாக்குதல் நடத்தினார்.[25] மேற்கு சியாவை மங்கோலியர்கள் கைப்பற்றிய போதும், 1227ஆம் ஆண்டு செங்கிஸ் கான் இறந்த நிகழ்வானது சின் அரசமரபின் மீதான மங்கோலியத் தாக்குதல்களுக்கு இடையூறாக அமைந்தது . செங்கிஸ் கானுக்குப் பிறகு 1229ஆம் ஆண்டு ஒக்தாயி கான் பதவிக்கு வந்தார்.
சின் சீனாவை வெல்லுதல் (1231–1235)
1230–1231ஆம் ஆண்டின் போது எழுச்சியுற்ற சின்களிடம் (நடு சீனாவில்) பெற்ற அவமானகரமான தோல்வி காரணமாக சின் அரசமரபுக்கு எதிராக முதன்மை மங்கோலிய இராணுவத்திற்குத் தானே தலைமை தாங்க ஒக்தாயி புறப்பட்டார். நிலைமையை மீட்டெடுக்கச் சுபுதையை நியமித்தார். உண்மையில் சுபுதை 1229ஆம் ஆண்டு நடு உருசியாவில் இருந்த கிப்சாக் துருக்கியர்களை வெல்வதற்கான பணிக்காக நியமிக்கப்பட்டிருந்தார்.[26] ஆனால் 1229–1230ஆம் ஆண்டு மங்கோலியத் தளபதி தோல்கோல்கு பெற்ற பெரும் தோல்வி காரணமாக அவசர அவசரமாகச் சீனாவுக்கு அழைக்கப்பட்டார்.[27] சின் தளபதிகள் ஷான்க்ஷியிலிருந்து பின்வாங்கினார். அரண்களைக் கொண்டிருந்த தோங்குவான் கணவாயைத் தற்காப்பில் வைத்திருக்கத் தங்களது நிலப்பகுதிகளைத் தாங்களே எரித்தனர். சின் அதிகார மையமான ஹெனானுக்கு மங்கோலியர்கள் வரும் வழியைத் தடுத்தனர். இத்தகைய வழிமுறைகளை அவர்கள் சுபுதைக்கு எதிராக பயன்படுத்தினர். மங்கோலியர்கள் நீண்ட முற்றுகையை நடத்தும் திறமையை இந்த நிலப்பரப்புகளை எரிக்கும் கொள்கையானது தடுக்கும் என கணித்தனர். தங்களது தொடர்ச்சியான அரண்கள் மற்றும் கடினமான நிலப்பரப்பு ஆகியவை மங்கோலியர்கள் தங்களை விட வேகமாகச் செயல்படுவதைத் தடுக்கும் என எண்ணினர்.
தாவோகுயிகு யுத்தத்தில் சின் அரசபினரிடம் இருந்து தப்பிக்க அரண்களால் பாதுகாக்கப்பட்ட வெயிசோவு என்ற இடத்தின் மீது தாக்குதல் நடத்தி சின்களிடம் இருந்து தப்பித்து ஓடுவது போல் சுபுதை நடித்தார். பாதுகாப்பின்றி இருந்த ஒரு பக்கவாட்டுப் பகுதியின் வழியே வெளியேறினார். இச்செயலால் சின் அரசமரபினர் ஏமாற்றப்பட்டனர். சுபுதையின் முதன்மை இராணுவத்தைக் கண்டுபிடித்த அவர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் முன்னேறினர். சுபுதையின் முன்வரிசைப் படையினர் ஷான்-சே-குயி என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பொழுது ஹெனான் சமவெளிக்குச் செல்லும் அவர்களின் முயற்சி தோல்வியில் முடிந்தது. உதவுவதற்காக வந்த ஒரு படையை மங்கோலியர்கள் தோற்கடித்தனர். பெங்சியாங் என்ற இடத்தைக் கைப்பற்றினர். இந்த நகரம் ஒரு இரண்டாம் தர இலக்காகும். இந்த நகரத்தின் அரண் சுவர்களின் மூலையில் 400 பெரிய கற்களை எரியும் முற்றுகை இயந்திரங்களைக் கொண்டு தாக்கி மங்கோலியர்கள் இந்நகரைக் கைப்பற்றினர். எனினும் இப்படையெடுப்பு எவருக்கும் வெற்றி தோல்வியின்றி நடந்து கொண்டிருந்தது.[28]
1231–1232ஆம் ஆண்டு சின் அரசமரபினரின் கோட்டைப் பாதுகாப்புக் கோடுகளை மீறுவதற்காக சுபுதை ஒரு மிகுந்த அதிர்ச்சி தரும் வழிமுறையைப் பின்பற்றினார். இந்த வழிமுறைகளை அவர்கள் முன்னர் குவாரசமியா (1219) மற்றும் மேற்கு சியா (1226) ஆகிய பகுதிகளில் பயன்படுத்தி இருந்தனர். மங்கோலியர்கள் மூன்று இராணுவங்களாகப் பிரிந்து கொண்டனர். முதல் இராணுவம் மஞ்சள் ஆற்றின் நடுப்பகுதி வழியாக வடக்கிலிருந்து ஹெனானைத் தாக்கியது. இரண்டாவது இராணுவம் கிழக்கில் ஷாண்டோங்கில் இருந்து மஞ்சள் ஆற்றைக் கடக்க முயன்றது. கடைசி இராணுவமானது சுபுதை மற்றும் டொலுய் தலைமையில் சாங் அரசமரபு வழியாக வெட்ட வெளியாக இருந்த தெற்குப்பகுதி மூலம் ஹெனானைத் தாக்கியது.[29] சாங் அரசமரபினர் கரடுமுரடான கின்லிங் மலைத்தொடர் வழியாக மங்கோலியர்களுக்கு வழி கொடுக்க மறுத்தனர். எனவே சாங் அரசமரபினரின் படைகளை விட்டு சுபுதை விலகிச் சென்றார். சாங் அரசமரபினரின் மலைக் காப்பரண்களை ஒன்றன்பின் ஒன்றாகத் தனிமைப்படுத்தினார். தங்களது மிகுந்த பாதுகாப்பான காப்பரண்களுக்கு எதிராக மங்கோலியர்கள் மிக எளிதாகச் செயல்பட்டதை அறிந்து வருத்தமுற்ற சாங் அரசமரபினர் வழிகாட்டிகளை உதவிக்காக அனுப்ப முன்வந்தனர்.[30] இம்முறை சுபுதை சின் இராணுவங்களிடமிருந்து விலகிச் சென்றார். ஆன் ஆற்றைக் கடந்து தெற்கிலிருந்து ஹெனானைத் தாக்கினார்.
முதன்மை சின் இராணுவமானது சுபுதையின் இராணுவத்தை யூ மலையில் தடுக்கத் திட்டமிட்டபடி அணிவகுத்துச் சென்றது. சின் படையின் தளபதி வான் யென் ஹெடா மங்கோலியர்கள் மீது பதுங்கியிருந்து திடீர்த் தாக்குதல் நடத்த முயற்சித்தார். ஆனால் அவர்களது இத்திட்டம் மங்கோலியர்களால் கண்டறியப்பட்டது. பதிலுக்குத் தோற்று ஓடுவது போல் நடித்து மங்கோலியர்கள் அவரது படை மீது பதுங்கியிருந்து திடீர்த் தாக்குதல் நடத்த முயற்சித்தனர். ஆனால் வான் யென் ஹெடா தனது வலுவான நிலையில் இருந்து மாறாமல் இருந்தார். ஒரு முழு நாளுக்கும் நடைபெற்ற கடும் சண்டையானது யாருக்கும் வெற்றி தோல்வியின்றி முடிந்தது. இருட்டில் மங்கோலியர்கள் பின்வாங்கினர். மங்கோலியர்கள் தாங்கள் சென்ற வழித்தடத்தை மறைக்க முயற்சித்தனர். சின் வீரர்களை ஏமாற்ற முயன்றனர். தெங்சோவு என்ற நகரத்தை நோக்கி வான் யென் ஹெடா பின்வாங்கினார். தனது இராணுவத்திற்குத் தேவையான பொருட்களைப் பெறச் சென்றார். தனது வழியை மாற்றிய சுபுதை சின் வீரர்கள் சிறிது சிறிதாக வலுவிழக்கச் செய்யும் முறைக்குப் பலவீனமானவர்கள் எனக் கண்டறிந்தார். ஒரு தாக்குதல் நடத்தித் தோற்று ஓடுவது போல் ஓடி சின் வீரர்களை அவர்களது இராணுவப் பொருட்களைக் கொண்டு செல்லும் வண்டிகளில் இருந்து இழுத்துச் சென்றார். பிறகு தன் திட்டப்படி அந்த இராணுவப் பொருட்களைச் சுபுதை தான் மறைத்து வைத்திருந்த ஒரு படையைக் கொண்டு கைப்பற்றினார்.[31] பின் வாங்கிச் சென்ற விழிப்புணர்வுடைய சின் வீரர்களைத் தொடர்ந்து தாக்க முயற்சிக்காமல் சுபுதை தனது இராணுவத்தைப் பல பிரிவுகளாகப் பிரித்து அப்பகுதியில் இருந்த இராணுவத்திற்குப் பயன்படும் பொருட்களை அழிக்கச் செய்தார். இவ்வாறு மங்கோலியர்கள் பரவுவதைச் சின் வீரர்கள் கவனிக்காமல் இருக்கச் சின்களது கவனத்தைத் திசை திருப்புவதற்காக 3,000 மங்கோலியர்கள் பயன்படுத்தப்பட்டனர். மற்ற மங்கோலியப் படைகள் சிறு சிறு பிரிவுகளாகப் போர்க்களத்திலிருந்து யாருக்கும் தெரியாமல் விலகிச் செல்ல ஆரம்பித்தனர். சின் அரசமரபினரின் தலைநகரமான கைபேங்கை நோக்கி முன்னேற ஆரம்பித்தனர். இந்த வழியில் தான் வான் யென் ஹெடாவும் பின்வாங்கிக் கொண்டிருந்தார்.[32]
சுபுதையின் ஒரு பகுதிப் படையினர் சின் இராணுவத்திற்கு இராணுவப் பொருட்களைச் சேகரிக்கச் சென்றவர்களுக்குத் தொல்லை கொடுத்தனர். மற்ற படையினர் ஒரு வில் போன்ற வழியில் பயணித்து சின் இராணுவத்திற்கு முன்னதாகத் தோன்றினர். சின்கள் பின்வாங்கிக் கொண்டிருந்த வழிக்கு அருகில் இருந்த கிராமங்களில் இராணுவத்திற்குப் பயன்படுத்தக் கூடிய பொருட்களை அழிக்கவோ அல்லது எடுக்கவோ முயற்சி செய்தனர். ஒக்தாயி கானைத் தடுத்துக் கொண்டிருந்த இராணுவம் வான் யென் ஹெடாவிற்கு உதவுவதற்காகத் தெற்கு நோக்கி அணிவகுத்த போது ஒக்தாயி மஞ்சள் ஆற்றைக் கடந்தார். சின்களின் பின்பகுதியில் சுபுதை ஏமாற்றிக் கடந்த நேரத்தில் ஒக்தாயி சுபுதைக்கு வலுவூட்டல் படைகளை அனுப்பினார். இதன் காரணமாக மொத்த மங்கோலிய வீரர்கள் எண்ணிக்கை 50,000மாக உயர்ந்தது. இந்த வலுவூட்டல் படைகள் வந்தது மற்றும் கடைசி 3 வாரங்களாக சின் இராணுவத்தின் உணவுப்பொருட்கள் வெகுவாகக் குறைந்தது ஆகிய காரணங்களால் சுபுதை கடைசியாகத் தனது வழியில் யுத்தம் செய்ய சின் வீரர்களைக் கட்டாயப்படுத்தினார். சன்பெங்ஷன் யுத்தத்தில் தீர்க்கமான வெற்றியைப் பெற்றார். வான் யென் ஹெடாவைக் கைது செய்தார். பின்வாங்கிப் பாதுகாப்பாக இருப்பதற்கு எந்த இடமும் இல்லாத நிலையில் சின்களின் முதன்மை இராணுவமானது சுபுதையால் நிர்மூலமாக்கப்பட்டது. பிறகு கட்டாயப்படுத்தப்பட்ட அணிவகுப்பைச் சுபுதை மேற்கொண்டார். மற்ற பகுதிகளைத் தற்காத்துக் கொண்டு இருந்த சின் இராணுவங்களை யங்யி (24 பெப்ரவரி 1232) மற்றும் தியேலிங் (1 மார்ச் 1232) ஆகிய யுத்தங்களில் தோற்கடித்தார்.[33]
கடுமையான பாதுகாப்பு அரண்களைக் கொண்ட கைபேங் நகரைக் கைப்பற்றுவதற்கு 8 மாத கால நீண்ட முற்றுகையை நடத்த வேண்டியிருந்தது. இந்த நகரத்தின் மதில் சுவர்களைச் சுற்றி 87 கிலோ மீட்டர் நீளத்திற்குத் தாக்குதல் அமைப்புகளை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் சுபுதைக்கு ஏற்பட்டது. மேலும் சின் அரசமரபினர் நவீன தொழில்நுட்பமான "இடி மோதல் வெடிகுண்டுகளை" இந்தப் போரில் பயன்படுத்தினர். இதன் காரணமாக மங்கோலியர்களால் துல்லியமான தாக்குதலை அருகில் சென்று நடத்த இயலவில்லை. கைபேங்குக்கு எந்தவிதமான வெளி உதவியும் கிடைக்காத வண்ணம் செய்த பிறகு அதை, முஸ்லிம்கள் பயன்படுத்திய பெரிய கவண் வில்கள், உந்து வில்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட வெடி மருந்துகளைக் கொண்டு தீவிரமான தாக்குதலை நகரத்தின் மீது சுபுதை நடத்தினார். ஓய்வு எடுத்துக் கொண்டும் சில நேரங்களில் கிராமப்புறப் பகுதிகளைச் சூறையாடியும் இந்தத் தாக்குதலை மங்கோலியர்கள் நடத்திக் கொண்டிருந்தனர். அதே நேரத்தில் கைபேங் நகரில் தொற்றுநோய் பரவிக்கொண்டிருந்தது. மங்கோலியர்கள் சிறு சிறு பிரிவுகளாக பிரிந்து சண்டையிட்டதால் அத்தொற்று நோயிலிருந்து தங்களைக் காத்துக் கொண்டனர். இதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாது என்று அறிந்த பேரரசர் தப்பி ஓடினார். நகரமானது சரணடைந்தது. அடிபணியாமை மற்றும் நீண்ட காலத்திற்கு எதிர்ப்பு காட்டியது ஆகிய செயல்களுக்காகக் கைப்பற்ற பின்னர் அங்கு உள்ள ஒவ்வொருவரையும் தண்டனைக்காகக் கொல்லச் சுபுதை முடிவெடுத்தார். எனினும் ஒக்தாயி தலையிட்டு அவர்களை மதிப்புடன் நடத்துமாறு சுபுதைக்கு ஆணையிட்டார்.[34] சாங் அரசமரபினரிடமிருந்து பெற்ற உதவியைக் கொண்டு கடைசி சின் அதிகார மையமான கைசோவு 1234ஆம் ஆண்டு வீழ்ந்தது.
எனினும் மங்கோலியர்களுடன் பிரச்சினை ஏற்பட சாங் அரசமரபினருக்கு நீண்டகாலம் பிடிக்கவில்லை. சுபுதை இல்லாத நேரத்தில் 1234ஆம் ஆண்டின் கோடை காலத்தில் 2 சாங் இராணுவங்கள் கைஃபெங் மற்றும் இலுவோயங் ஆகிய நகரங்களைக் கைப்பற்றின. சுபுதை திரும்பி வந்தார். 3 சாங் இராணுவங்களையும் தனித்தனியாகப் பிரித்து அவற்றை ஒவ்வொன்றாகத் தோற்கடித்து அழித்தார். நகரங்களை மீண்டும் மீட்டெடுத்தார். பிறகு சாங் அரசமரபின் பகுதிகளுக்குள் ஒரு முன் தாக்குதலை நடத்தினார். இதன் மூலமாகத் தற்காத்துக் கொள்ளும் நிலைக்குச் சாங் அரசமரபினர் தள்ளப்பட்டனர். மங்கோலியர்கள் மற்றும் சாங் அரசமரபினர் இடையே போர் ஆரம்பமாகிவிட்ட போதும் சுபுதை மேற்கு நோக்கித் திரும்பி அழைக்கப்பட்டார். இருந்தபோதிலும் சுபுதையின் வெற்றிகள் சாங் அரசமரபினர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென்ற ஒரு பாடத்தைப் புகட்டின. மீண்டும் எந்த ஒரு சாங் இராணுவத்திற்கும் வடக்கு நோக்கிச் சென்று மங்கோலியப் பகுதி மீது தாக்குதல் நடத்துவதற்குத் தைரியம் வரவில்லை.
உருசியாவைக் குளிர் காலத்தில் கைப்பற்றுதல் (1236–1240)
ஒக்தாயி தனது இராணுவத்தின் பெரும் பகுதிகளை மேற்குப் பகுதிகளுக்கு அனுப்பிக் கடைசியாகக் காட்டு கிப்சாக்குகள் மற்றும் பல்கர்களை ஒடுக்க முடிவெடுத்தார். இந்த நடவடிக்கைகளை நெறிமுறைப்படுத்த இளவரசர் படுவின் ஒட்டுமொத்த தலைமையில் சுபுதை நியமிக்கப்பட்டார். இந்தப் படையெடுப்பானது எப்பொழுது நடைபெறும் சாதாரண படையெடுப்புகளில் இருந்து வேறுபட்டு இருந்தது. ஒக்தாயி நான்கு குடும்பங்களின் வாரிசுகள் உட்பட பெரும்பாலான அடுத்த தலைமுறை மங்கோலிய இளவரசர்களை இந்த படையெடுப்பிற்கு அனுப்பினார். சுபுதை இறக்கும் முன்னர் அவரால் பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்பதும் இதற்கு முக்கியமான காரணமாக இருந்திருக்கலாம்.[35] 1232ஆம் ஆண்டு வோல்கா பல்கர்கள் படுவை தோற்கடித்து இருந்தனர். அவர்களை ஒடுக்குவதற்காக சுபுதை மற்றொரு இராட்சத சுற்றிவளைக்கும் படையெடுப்பைத் தொடங்கினார். வோல்கா ஆற்றை அதன் மேற்குப் பகுதியிலிருந்து வில் போன்ற வடிவில் மங்கோலியர்கள் சுற்றிவளைத்தனர். எனினும் இந்தப் படையானது பல்கர்களைத் திசைதிருப்ப அனுப்பப்பட்டதாகும். உரல் மலைகளைத் தாண்டி பல்கர்களை கிழக்கு திசையில் இருந்து அதிரடியாகத் தாக்க இரண்டாவது இராணுவத்தைச் சுபுதை அனுப்பினார்.[36] பல்கர் இராணுவங்களை நொறுக்கிய சுபுதை, காசுபியன் கடலின் வடக்குப்பகுதியில் கொரில்லாத் தலைவனான பாக்மனைத் தோற்கடித்தார். ஒரு தீவில் வாழ்ந்து வந்த பாக்மன் மங்கோலியர்களை அடிக்கடி இகழ்ந்து வந்தான். எனினும் மங்கோலியர்கள் இருநூறு படகுகளைக் கொண்ட ஒரு சிறிய கப்பல் படையை உருவாக்கினார். ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் பாக்மனை கொண்டுவந்தனர். கடைசியாக 'வலையை' மூடினர்.[37]
1222-23ஆம் ஆண்டுகளில் பெரும்பான்மையான ருஸ் மாநிலங்கள் சுபுதை மற்றும் செபேவுக்கு எதிராக அணி திரண்டன. ஆனால் இந்த முறை மங்கோலியர்கள் மிக வேகமான தாக்குதலைத் தொடுத்தனர். உருசியர்களால் எந்த ஒரு தாக்குதலைத் தொடுக்கவோ, அல்லது அவர்களுக்குள் இருந்த வேற்றுமை அல்லது கவனம் சிதறி இருந்த காரணத்தால், ஒன்றிணையவோ முடியவில்லை. மேலும் உருசியர்களுக்குள் எந்த ஒரு கூட்டணியும் ஏற்படாத வண்ணம் தடுக்க மங்கோலியர்கள் வெவ்வேறு சமஸ்தானங்களுடன் போலி உடன்படிக்கைகளைச் செய்து கொண்டனர். எனவே குளிர் காலத்தில் மேற்கு உருசியாவின் பரந்த நிலப்பரப்பை ஊக்கமுடன் ஆக்கிரமித்த மங்கோலியர்கள், தங்களது படைகளுடன் தனித்தனியாக இருந்த சமஸ்தானங்களின் மீது கவனம் செலுத்திச் சுதந்திரத்துடன் செயல்பட்டனர். 1237ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சுபுதை ரியாசான் மற்றும் விளாதிமிர்-சுஸ்டால் ஆகிய சமஸ்தானங்களைத் தாக்கினர். குளிர் காலத்தில் ஆறுகள் உறைந்து இருக்கும்போது நடைபெறும் பொதுவான மங்கோலியத் தாக்குதல் போலவே இந்த முறையும் மூன்று குழுக்களாகப் பிரிந்து செயல்பட்டனர். ருஸ் படைகள் மூன்று வெவ்வேறு இடங்களில் தோற்கடிக்கப்பட்டன. அவர்களது நகரங்கள் குறைந்த காலத்திலேயே கைப்பற்றப்பட்டன. மங்கோலியர்கள் 1238ஆம் ஆண்டின் கோடை காலத்தை தொன் ஆற்றின் பகுதிகளில் ஓய்வெடுத்துக் கழித்தனர். கருங்கடலைச் சுற்றியிருந்த சமவெளிகளில் வாழ்ந்து வந்த பல்வேறு பழங்குடியினங்களை அடிபணிய வைக்கப் படைகள் அனுப்பப்பட்டன. 1239ஆம் ஆண்டு ருஸ் மாநிலமான செர்னிகோவ் தோற்கடிக்கப்பட்டு அவர்களது நகரங்கள் கைப்பற்றப்பட்டன. ஆனால் மங்கோலியர்களுக்கு நோவ்கோரோட் சமஸ்தானத்தைக் கைப்பற்ற வேண்டிய தேவை இல்லாமல் போனது. ஏனெனில் அவர்கள் புத்திசாலித்தனமாக மங்கோலியர்களிடம் சரணடைந்து எதிர்காலத்தில் கப்பம் கட்ட ஒப்புக்கொண்டனர். தற்சமயத்துக்கு ஒரு பெரும் லஞ்சத்தை கொடுத்துக் காத்துக் கொண்டனர்.[38]
இந்தப் படையெடுப்பில் முக்கியமான யுத்தமானது 1238ஆம் ஆண்டில் நடைபெற்ற சித் ஆற்று யுத்தமாகும். ருஸ் தலைவர்களில் மிக முக்கியமானவரான விளாதிமிரின் பெரிய டியூக் யூரி விளாதிமிரை விட்டு வெளியேறி ஒரு இராணுவத்தைத் திரட்டி மங்கோலியர்கள் நகரத்தை அடையும் முன்னர் அவர்களைத் தோற்கடிக்க கிளம்பினார். எனினும் அவரது இராணுவத்தைத் தவிர்த்த மங்கோலியர்கள் என்ன நடந்தது என்று கூட யூரி அறிவதற்கு முன்னரே விளாதிமிரைக் கைப்பற்றினர். மங்கோலிய ஒற்றர்களைத் தாண்டி என்ன நடப்பது என்று அறிவதற்காக யூரி ஒரு படையை அனுப்பிய போது அவரது தளபதி தன் இராணுவம் சுற்றிவளைக்கப்பட்டதைப் பற்றிய செய்தியை பேரச்சத்துடன் தெரிவித்தார். எதிர்பார்த்தபடியே யூரி மற்றும் அவரது இராணுவமும் எளிதாகத் தோற்கடிக்கப்பட்டது.[39] மங்கோலியர்கள் கலிச்-விளாதிமிர் சமஸ்தானத்துடன் ஒரு உடன்படிக்கை செய்துகொண்டனர். ஆனால் 1240 ஆம் ஆண்டின் திசம்பர் மாதத்தில் மங்கோலியர்கள் திடீரென அச்சமஸ்தானத்தைத் தாக்கிய போது அதன் இளவரசர் அதிர்ச்சி அடைந்தார். கீவ், விளாதிமிர் மற்ற பிற நகரங்களும் சீக்கிரமே கைப்பற்றப்பட்டன.
நடு ஐரோப்பியப் படையெடுப்பு (1241–1242)
ஐரோப்பா மீது நடைபெற்ற தாக்குதலானது சுபுதையால் திட்டமிடப்பட்டுச் செயல்படுத்தப்பட்டது. இங்கு பெற்ற வெற்றிகள் காரணமாகச் சுபுதை காலத்தால் அழியாப் புகழ் பெற்றார். பல்வேறு உருசியச் சமஸ்தானங்களை அழித்த சுபுதை ஐரோப்பாவின் இதயப் பகுதியைத் தாக்குவதற்காகத் திட்டமிட்டார். தனது ஒற்றர்களைப் போலந்து, அங்கேரி மற்றும் ஆஸ்திரிய வரை கூட அனுப்பினார். ஐரோப்பிய இராச்சியங்களைப் பற்றி தெளிவான ஒரு புரிதலுக்கு வந்த சுபுதை அவற்றின் மீது தாக்குதல் நடத்த சிறந்த முறையில் தயாரானார். இந்தப் படையெடுப்பானது படு கான், மற்றும் செங்கிஸ் கானின் வழித்தோன்றல்களான இரண்டு பிற இளவரசர்களால் பெயரளவில் தலைமை தாங்கப்பட்டது. சூச்சியின் மகனான படு கான் ஒட்டு மொத்த படையெடுப்புக்குத் தலைமை தாங்கினார். யுத்த களத்தில் தலைமை தாங்கிச் சுபுதை செயல்பட்டார். கீவ உருசியா மீது எடுக்கப்பட்ட வடக்கு மற்றும் தெற்குப் படையெடுப்புகளில் இதே முறை பின்பற்றப்பட்டது. அங்கேரி இராச்சியத்திற்கு எதிராக அணிவகுத்த படையில் நடுப் பிரிவைச் சுபுதையே தலைமை ஏற்று அணி வகுத்தார். தனது உதவித் தளபதிகளுக்கும் இவர் விரிவான வழிமுறைகளைக் கொடுத்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.
மங்கோலியப் போர் முறைகள் மேற்கு உலகத்தில் ஒரு மர்மமாகவே இருந்தபோதிலும் அங்கேரியின் அரசரான நான்காம் பெலா உருசியா மீதான மங்கோலியத் தாக்குதல்களைப் பற்றி நன்கு அறிந்திருந்தார். அதற்கு ஏற்றவாறு தயாராக இருந்தார். அந்த நேரத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையில் உறவுகள் நல்ல முறையில் இல்லாத போதிலும் அவர் இவ்வாறு தயாராக இருந்தார்.[40] புனித உரோமைப் பேரரசர் அல்லது திருத்தந்தையிடமிருந்து எந்தவித உதவியும் பெற முடியாத போதும் போலந்தில் இருந்த தனது உறவினர்களிடமிருந்து ஆதரவைப் பெற்றிருந்தார். அங்கேரி நாட்டவர் குறைந்த கவனத்துடன் இருக்கும் குளிர் காலத்தில் அவர்கள் எதிர்பாராத வண்ணம் மற்ற முறைகளைப் போலவே இந்த முறையும் சுபுதை படையெடுத்தார். மங்கோலியர்கள் ஐந்துமுனைத் தாக்குதலை ஐரோப்பா மீது தொடுத்தனர். கய்டு மற்றும் ஓர்டா கான் வடக்குப் போலந்தைத் தாக்கினர். பைதர் மற்றும் கதன் தெற்குப் போலந்தைத் தாக்கினார். அதே நேரத்தில் சிபன் வடகிழக்கு அங்கேரியில் கடினமான நிலப்பரப்பின் வழியே தாக்குதல் தொடுத்தார். சுபுதை மற்றும் படு நடு அங்கேரியைத் தாக்கினர். குயுக் திரான்சில்வேனியா வழியாகத் தெற்கு நோக்கி அணி வகுத்தார். இதன் மூலமாக மங்கோலியர்கள் தாக்கப்பட்ட ஒவ்வொரு பகுதியினரும் தாங்கள் தான் மங்கோலியர்களின் குறி என்று நம்பவைக்கப்பட்டனர். உண்மையில் ஐரோப்பியர்கள் ஒன்றிணைந்து போரிடுவதைத் தவிர்ப்பதற்காக இவ்வாறான தாக்குதல் தொடுக்கப்பட்டது. இதன் மூலம் தனித்தனியாக ஐரோப்பியப் படைகளை மங்கோலியர்கள் தோற்கடித்தனர். சில வெற்றிகளுக்குப் பிறகு பைதர் மற்றும் கதன் தங்களது வடக்குப் படையை ஒன்றிணைத்துப் போலந்தின் முதன்மை இராணுவத்தை லெக்னிகா யுத்தத்தில் தோற்கடித்தனர். போலந்து இராணுவமானது பொகேமிய இராணுவத்துடன் இணைவதற்காக அணிவகுத்துச் சென்று கொண்டிருந்தது. போலந்து இராணுவம் பொகேமிய இராணுவத்துடன் இணைவதற்குச் சில நாட்கள் தொலைவே இருந்தது. அதே நேரத்தில் குயுக்கின் இராணுவம் திரான்சில்வேனியாவில் வெற்றி பெற்றது. லெக்னிகா யுத்தத்திற்கு ஒரு நாள் கழித்துச் சுபுதை அங்கேரியச் சமவெளியில் அங்கேரிய இராணுவத்திற்காகக் காத்திருந்தார். அங்கேரி அரசர் நான்காம் பெலா கர்பாத்தியன் மலைகளின் வழியான கணவாய்களை மரங்களை வெட்டிப் பாதையின் குறுக்கே போட்டிருந்தார். குழிகள், பொறிகள் மற்றும் பிற இயற்கைத் தடைகள் ஆகியவை வழிநெடுக இருந்தன. மேலும் கிழக்கு அங்கேரியின் பல இடங்களில் சாலைகள் சரி செய்யப்படாமல் அல்லது சாலைகளே இல்லாமலும் இருந்தன. நிலப்பரப்பு முழுவதும் பல அடிக்கு பனி பொழிந்து இருந்தது. இவ்வளவு தடைகள் இருந்தபோதிலும் சுபுதையின் படைகள் அதிசயிக்கத்தக்க வகையில் ஒரு நாளைக்கு 96 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்தன. மங்கோலியர்கள் பாதைகளைச் சரி செய்வதற்காகத் தங்களிடம் ஒரு குழுவை வைத்திருந்தனர். அவர்கள் காடுகளை அழித்துப் படைகள் செல்ல வழி அமைத்தனர். பெலா ஏற்படுத்திய தடைகளை அவர்கள் கண்டுகொள்ளவில்லை.[41]
சுபுதையின் படையெடுப்பின் ஒரு குறிப்பிடத்தக்க சிறப்பானது அவர் தங்களது கூட்டாளிகளால் ஆதரிக்கப்படாத அத்தனை ஐரோப்பியப் படைகளையும் விளக்கமாகத் தோற்கடித்தார் என்பது ஆகும். தனது இராணுவத்தைப் பல்வேறு குழுக்களாகப் பிரித்து எதிரி மீது பலமுனைத் தாக்குதல் நடத்தினார். இது போலந்துகாரர்கள் மற்றும் அங்கேரியர்கள் ஒன்றிணைந்து தங்களது நகரங்கள் மற்றும் கோட்டைகளைப் பாதுகாத்துக் கொள்ளவோ மற்றும் ஒரு பெரிய இராணுவம் மூலம் மங்கோலியர்களை எதிர்க்கவோ முடியாதவாறு தடுத்தது. இந்தப் படையெடுப்பில் போலந்தின் லியக்னிட்ஸ் மற்றும் அங்கேரியின் மொகி ஆகிய இடங்களில் நடைபெற்ற பெரிய யுத்தங்களை மங்கோலியர்கள் வென்று இருந்தபோதிலும் அவர்கள் ஏராளமான வெற்றிகளைச் சிறிய தனித்துவிடப்பட்ட இராணுவப் பிரிவுகளுக்கு எதிராகவும் பெற்றனர். ஐரோப்பியப் போர் முறை அந்த நேரத்தில் இருந்ததைப் போல் இல்லாமல், மங்கோலியர்கள், தங்கள் யுத்தத்தை வெல்லும் பொழுது இரக்கமின்றி எதிரியைத் துரத்தி ஒரு பொறிக்குள் வரவழைத்து ஒரு வீரன் கூட தப்பாத வண்ணம் எதிரி இராணுவங்களை அழித்தனர்.
மங்கோலியர்கள் சன்டோமியர்சு, துர்சுகோ, சிமியல்னிக் (18 மார்ச் 1241), தர்செக், குரோன்சுடாட் (31 மார்ச் 1241), மற்றும் ஒபோல் ஆகிய இடங்களில் போலந்து இராணுவங்களைத் தோற்கடித்தனர். மிக முக்கியமாகப் போலந்தில் இருந்த மங்கோலிய இராணுவங்கள் ஒன்றிணைந்து 9 ஏப்ரல் 1241ஆம் ஆண்டு டியூக் இரண்டாம் ஹென்றியின் இராணுவத்தை லியக்னிட்ஸ் என்ற இடத்தில் தோற்கடித்தன. போலந்து இராணுவத்திற்கு ஆதரவாக வந்து கொண்டிருந்த அவரது உறவினர் பொகேமியாவின் அரசர் முதலாம் வென்செலஸ் 50,000 படைவீரர்களுடன் ஒரு நாள் பயணத் தொலைவிலேயே இருந்தார். வென்செலஸ் மற்றும் ஹென்றி ஆகியோர்களின் இராணுவங்கள் இணைந்து ஒரு பெரிய இராணுவமானது உருவாக்கப்படும் முன்னரே ஹென்றியின் இராணுவம் அழிக்கப்பட்டது. அதிர்ச்சி அடைந்த வென்செலஸ் பயத்தில் பின்வாங்கி ஒரு கோட்டைக்குச் சென்று பதுங்கினார். அதற்குப் பிறகு மங்கோலியர்களுக்கு எதிரான இந்த முயற்சியில் அவர் எந்தவிதப் பங்களிப்பையும் அளிக்கவில்லை.[42] அங்கேரியில் மங்கோலியர்கள் 12 மார்ச் 1241ஆம் ஆண்டு திசா பள்ளத்தாக்கில் கவுன்ட் பலடினைத் தோற்கடித்தனர். அவர்கள் ரோட்னா என்ற இடத்தில் திரான்சில்வேனியர்களையும், மேலும் இரண்டு இராணுவங்களையும் ஒராடியா என்ற இடத்திலிருந்த ஒரு கோட்டையையும் வீழ்த்தினர். மோல்டாவியா மற்றும் வாலச்சியா வரை இருந்த பகுதிகளை சேதப்படுத்தினர். கலோக்சா என்ற இடத்தில் உக்ரின் சாக் என்ற ஆர்ச் பிஷப்பின் இராணுவத்தை அவரது சொந்த நிலப் பரப்பிலேயே ஒரு சதுப்பு நிலத்திற்கு வரவழைத்து அழித்தனர்.[43]
கிழக்கு அங்கேரியானது மங்கோலியர்களால் அழிக்கப்பட்டுக் கொண்டிருந்த அதே நேரத்தில் அவர்களது ஒருகாலக் கூட்டாளிகளான குமன்கள் மேற்கு அங்கேரியைச் சூறையாடினர். எஸ்டெர்கோம் என்ற இடத்தில் அங்கேரியின் அரசர் நான்காம் பெலா ஒரு போர்க் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். இந்த இடம் புடா மற்றும் பெஸ்ட் ஆகிய இடங்களுக்கு அருகில் அமைந்திருந்த ஒரு பெரிய மற்றும் முக்கியமான குடியிருப்பு ஆகும். படு அங்கேரியை நோக்கி வடகிழக்கு திசையில் இருந்து முன்னேறி வந்த நிலையில் அங்கேரியத் தலைமையானது தங்களது வலிமையை நகரத்தில் ஒருங்கிணைக்க முடிவு செய்திருந்தது. பின்னர் வடக்கு நோக்கி அணிவகுத்து மங்கோலிய இராணுவத்தை எதிர்கொள்ள முடிவு செய்திருந்தது. அங்கேரிய போர்த் திட்டம் மங்கோலியத் தலைவர்களை அடைந்த போது அவர்கள் சஜு ஆற்றை நோக்கி மெதுவாகப் பின்வாங்கினர். இதன் மூலம் தங்களது எதிரிகளை அவர்களது இருப்பிடத்திலிருந்து தூரத்திற்கு அழைத்துச் சென்றனர். இது பாரம்பரியமாகப் பயன்படுத்தப்படும் மங்கோலிய உத்தியாகும். இதைச் சுபுதை பரிபூரணமாகச் செயல்படுத்தினார். தனது எதிரிகளுக்கு ஒத்த வகையில் யுத்த களத்தைத் தயார் செய்தார். தனது எதிரிகள் வரும் வரை காத்திருந்தார். இவ்வாறாக மங்கோலியர்கள் நல்ல வலிமையான ஒரு நிலையில் இருந்தனர். ஏனெனில் மங்கோலியர்களை மற்றவர்கள் கவனிக்க முடியாத வண்ணம் மரங்கள் இருந்தன. அதே நேரத்தில் சமவெளியை நோக்கி ஆற்றின் அருகே இருந்த அங்கேரிய இராணுவம் வெட்டவெளியாக மங்கோலியர்களுக்குத் தெரிந்தது. எனினும் அரசர் பெலா இந்தப் பொறிக்குள் சிக்கவில்லை.
லெக்னிகா யுத்தத்தில் சிறிய மங்கோலிய இராணுவம் போலந்தில் பெற்ற வெற்றிக்கு ஒரு நாள் கழித்துச் சுபுதை தனது தாக்குதலைத் தொடங்கினார். இவ்வாறாக யுத்தமானது இரவில் 10 ஏப்ரல் 1241ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. யுத்தத்தில் மங்கோலியர்கள் அங்கேரியக் கவனத்தைத் திசை திருப்ப ஒரு பாலத்தின் மீது தாக்குதல் நடத்தினர். அதே நேரத்தில் வடக்கு திசையில் பாலத்தைச் சுற்றி ஆற்றைக் கடக்க முயன்றனர். மங்கோலிய இராணுவத்தின் முக்கியப் பகுதி மொகியில் இருந்த சஜோ ஆற்றைக் கடக்க ஆரம்பித்தது. அடுத்த நாளும் தொடர்ந்து தாக்குதலை நடத்தியது. எனினும் இந்தத் தாக்குதலுக்குப் பதில் தாக்குதலும் கடுமையான முறையில் கொடுக்கப்பட்டது. அங்கேரியக் குறுக்கு வில்லாளர்களை அப்புறப்படுத்தப் பெரிய கவண் பொறிகள் முன்னரே குறிப்பிட்டவாறு பயன்படுத்தப்பட்டன. அதே நேரத்தில் சுபுதை இரகசியமாகத் தெற்குப் பகுதியில் ஒரு தற்காலிகப் பாலத்தை அமைக்கச் செய்தார். ஆழம் அதிகமாக இருந்த அந்த ஆற்றின் வழியே இரகசியமாக ஒரு பெரும் படை முன்னேறியது. பின்னர் இரண்டாவது இராணுவப் பிரிவு தெற்கிலிருந்து பகுதியைத் தாக்கியது. மூன்றாவது பிரிவு வடக்கிலிருந்து தாக்கியது. இவ்வாறாக ஒருங்கிணைந்த மங்கோலியப் படை அங்கேரியர்களைச் சுற்றி வளைத்த நிகழ்வானது அங்கேரியர்களைப் பின்வாங்க வைத்தது. அவர்கள் ஒரு முகாமுக்குப் பின்வாங்கினர். பாரம்பரியமாக நாடோடி இராணுவங்களை எதிர் கொள்ள இந்த முறை அங்கேரியர்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது. எனினும் மங்கோலியர்கள் கடுமையான காவலுக்கு உட்பட்ட அங்கேரிய முகாமைச் சுற்றிவளைத்தனர். அதனை முற்றுகை எந்திரங்கள், வெடிமருந்து ஆயுதங்கள் மற்றும் தீ வைக்கப்பட்ட அம்புகளைக் கொண்டு தாக்கினர்.[44] அங்கேரிய குதிரைப் படையினர் அவர்களது முகாமிலிருந்து தூரத்திற்கு மங்கோலியர்களை துரத்த வைக்கப்பட்டனர். பின்னர் சுற்றி வளைக்கப்பட்டனர்.
இத்தகைய தாக்குதல் காரணமாக எதிரிகளுக்குக் கிலி ஏற்படுத்தப்பட்டது. அங்கேரியர்கள் கடைசி வீரன் வரை போரிட்டு மடியாமலிருக்க மங்கோலியர்கள் தங்களது சுற்றிவளைப்பில் ஒரு பகுதியைத் திறந்து வைத்திருந்தனர். நைட் வீரர்களின் உதவியுடன் குறுக்கு வில்லாளர்கள் ஏராளமானவர்கள் தாங்கள் இறக்கும் வரை மங்கோலியர்களுக்கு எதிராகப் போரிடுவதைச் சுபுதை விரும்பவில்லை. மாறாக அவர்களைத் தப்பிக்க வைத்து பிறகு ஒவ்வொருவராகக் கொல்ல சுபுதை விரும்பினார். மங்கோலியச் சுற்றிவளைப்பில் இத்தகைய திறப்பானது அங்கேரியர்களைப் பின்வாங்க வைத்தது. இவ்வாறாக நைட் வீரர்களும், குறுக்கு வில்லாளர்களும் நிலப்பரப்பு முழுவதும் பரவ ஆரம்பித்தனர். பின்னர் அவர்களை ஒவ்வொருவராக மங்கோலியர்கள் கொல்ல ஆரம்பித்தனர். சுபுதை திட்டமிட்டவாறு அங்கேரிய வீரர்கள் அந்தத் திறப்பு வழியாகத் தப்பித்துச் செல்ல ஆரம்பித்தனர். அந்தத் திறப்பு ஒரு சதுப்பு நிலத்திற்கு இட்டுச் சென்றது. சதுப்பு நிலங்களில் குதிரைகளால் வேகமாகச் செல்ல இயலவில்லை. காலாட்படையினர் அந்நிலத்தைக் கடக்க முடியாமல் தவித்தனர். அங்கேரிய வீரர்கள் பிரிந்து சென்றபோது மங்கோலியர்கள் அவர்களை ஒவ்வொருவராகக் கொல்ல ஆரம்பித்தனர். யுத்தம் நடத்த இடத்திலிருந்து இரண்டு நாள் பயண தூரம் வரை உள்ள பகுதிகளில் பிணங்கள் கிடந்ததாக பின்னர் இந்தப் போரைப் பற்றி குறிப்பிடப்பட்டது. இரண்டு ஆர்ச்பிஷப்புகள் மற்றும் மூன்று பிஷப்புகள் யுத்தத்தின் போது கொல்லப்பட்டனர். மேலும் 10,000 படை வீரர்களும் கொல்லப்பட்டனர்.[45] ஒரே நேரத்தில் பெரும்பாலான அங்கேரிய படைவீரர்கள் மொத்தமாகக் கொல்லப்பட்டனர். ஆனால் நடுப்பகுதியில் மங்கோலிய வீரர்களின் உயிரிழப்பானது சாதாரணமான அளவை விட அதிகமாக இருந்தது. சாதாரணமாகவே உயிரிழந்த பல நூறு முதல் பல்லாயிரக்கணக்கான படை வீரர்கள் தவிர படுவின் 4,000 பகதூர்களில் 30 பேர் கொல்லப்பட்டனர். படுவின் லெப்டினன்ட் ஒருவரும் கொல்லப்பட்டார். இதன் காரணமாக மங்கோலிய முகாமில் இறுக்கமான சூழ்நிலை நிலவியது.[46]
மங்கோலியர்கள் அங்கேரியைக் கீழ் படிய வைத்தல்
எதிரியைத் தோற்கடிப்பதோடு மட்டுமல்லாமல் இந்தப் படையெடுப்புகளுக்காகத் தான் அழைத்து வந்திருந்த இளவரசர்களின் தற்பெருமையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் வேலைக்கும் சுபுதை அதிக சக்தியைச் செலவிட்டார். யுத்தத்தின் இடையில் பாலத்தின் மீதான முதல் தோல்வியுற்ற தாக்குதலுக்குப் பிறகு சண்டையைத் தொடர்வதற்காகச் சுபுதை படுவை அவமானப்படுத்தினார். ஆற்றைக் கடப்பதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொண்டதாகச் சுபுதை மீது படு குற்றம் சாட்டினார். ஆற்றைக் கடப்பதற்கு நேரம் எடுத்துக் கொள்ளும் என்பது அனைவருக்கும் தெரியும் எனச் சுபுதை பதிலளித்தார். படு தனது தாக்குதலை திட்டமிடப்பட்ட நேரத்திற்கு முன்னரே தொடங்கி விட்டதாகச் சுபுதை கூறினார். இறுதியில் படு சுபுதையிடம் மன்னிப்புக் கோரினார்.[47] சுபுதை ஒரு தவறிலிருந்து படுவை மீட்பது இது முதல் முறை அல்ல: உருசியா மீதான படையெடுப்பின்போது தோர்சோக் கோட்டையைக் கைப்பற்றுவதற்காகப் படு பல வாரங்களுக்குப் போராடினார். அக்கோட்டையின் மீது பல தோல்வியில் முடிந்த தாக்குதல்களை நடத்தினார். தனக்குக் கொடுக்கப்பட்ட பணியிலிருந்து விலகிய சுபுதை, படுவின் இராணுவத்திற்குத் தலைமை தாங்கி மூன்றே நாட்களில் எளிதாகக் அக்கோட்டையைக் கைப்பற்றினர்.[47] இவ்வெற்றியின் போது நடந்த விருந்து அல்லது சிறிது காலத்தில் நடந்த ஒரு விருந்தில் படுவிற்கும் மங்கோலிய இளவரசர்கள் குயுக் மற்றும் புரி ஆகியோருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.[48] படுவின் மீது பொறாமை கொண்ட குயுக் மற்றும் புரி ஆகியோர் படுவிற்குத் திறமை இல்லை என்றும் சுபுதையின் அரவணைப்பிலேயே படு இருப்பதாகவும் கூறினர். இதன் காரணமாகக் குயுக் மற்றும் புரி மற்றும் ஒருவேளை அவர்களது சில வீரர்களும் ஒக்தாயி கானிடம் விசாரணைக்காக அனுப்பப்பட்டனர். இதன் காரணமாக மங்கோலிய இராணுவத்தில் மேலும் பிரச்சினை ஏற்பட்டது.[49]
இவ்வாறான தடைகள் இருந்த போதிலும் அங்கேரி மீதான தங்களது கட்டுப்பாட்டை மங்கோலியர்கள் உறுதிப்படுத்த முயற்சித்தனர். ரோகேரியஸ் என்ற வரலாற்றாளரின் எழுத்துக்களின் படி விவசாயிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக மங்கோலியர்களுக்கு எதிராகப் போராட முயற்சித்தனர். ஆனால் இம்முயற்சி நடைமுறைப்படுத்தப்படவில்லை. அங்கேரியின் வெட்டவெளி சமவெளிகள் பதுங்கியிருந்து தாக்குவது அல்லது பின் வாங்குவதற்கு ஏற்ற நிலப்பரப்பைக் கொண்டிருக்கவில்லை என்பதும் இதற்கு ஒரு பகுதி காரணமாக இருந்திருக்கலாம். மொகியில் அங்கேரியர்கள் அடைந்த தோல்விக்குப் பிறகு திருடப்பட்ட ஒரு அரச முத்திரையைப் பயன்படுத்திய சுபுதை நாடு முழுவதும் போலி ஆணைகளை வெளியிட்டார். இதனால் பல குடிமக்கள் அவரது கருணையை எதிர்பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.[50]
பெலாவிற்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுக்க சுபுதை தனது இராணுவத்தைப் பல பிரிவுகளாகப் பிரித்தார். கதான் தலைமையிலான ஒரு இலகுரக குதிரைப்படையானது அற்றியாடிக் கடற்கரைப் பகுதியில் பெலாவைத் துரத்துவதற்காக அனுப்பப்பட்டது. அதேநேரத்தில் முற்றுகை இயந்திரங்களைக் கொண்ட முதன்மை இராணுவமானது சுபுதை மற்றும் படுவின் தலைமையில் அங்கேரியின் மையப்பகுதியை அமைதிப்படுத்த முயற்சித்தது. மற்ற மங்கோலியப் படைகள் அங்கேரியின் எல்லைகளுக்கு அப்பால் தாக்குதல்களை நடத்தின. ஆஸ்திரியாவைக் கூட அடைந்தன. வியேனர் நியூஸ்டாட் என்ற இடத்திற்கு அருகில் நடந்த சிறு சண்டையில் மங்கோலியப் படைகளின் தாக்குதலானது முறியடிக்கப்பட்டது. மங்கோலியர்கள் வெற்றிகரமாகப் பல நகரங்கள் மீது முற்றுகைப் போர் நடத்தினர். அரண்களைக் கொண்ட நகரமான ஒராதேயா, பன்னோனியாவிலிருந்த புனித மார்ட்டின் கோட்டை, மற்றும் தலைநகரமான எஸ்டர்கோம் ஆகிய நகரங்களும் தாக்குதலுக்கு உள்ளாயின. எனினும் தலைநகரின் கற்களாலான காப்பரணானது முற்றுகையிலிருந்து மீண்டது. அனைத்து முற்றுகைப் போர்களும் வெற்றிகரமாக மங்கோலியர்களுக்கு அமையவில்லை.
1242ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் புனித உரோமைப் பேரரசின் மீது படையெடுப்பதற்கான திட்டங்கள் குறித்துச் சுபுதை விவாதித்துக் கொண்டிருந்தார். அப்போது தான் ஒக்தாயி கானின் இறப்பு மற்றும் உருசியாவில் குமன்களின் கிளர்ச்சி ஆகிய செய்திகள் அவருக்குக் கிடைத்தன.[51] கர்பினி என்கிற வரலாற்றாளரின் கூற்றுப்படி சுபுதையின் விருப்பத்திற்கு எதிராக மங்கோலிய இளவரசர்கள் புதிய கானைத் தேர்ந்தெடுப்பதற்காகத் தங்களது படைகளை மங்கோலியவிற்குக் கூட்டிச் சென்றனர். இக்கூற்று விவாதத்திற்குரியதாக உள்ளது. ரசித் அல் தினின் கூற்றுப்படி சுபுதை மற்றும் படு தங்களது படைகளை திரும்ப அழைத்துக் கொண்டு சென்ற போது தான் ஒக்தாயி கானின் இறப்பு பற்றிய செய்தி அவர்களுக்குக் கிடைத்தது.[52] எனினும் ஒக்தாயியின் இறப்பு மற்றும் அதற்குப் பிறகு நடந்த பிரச்சினைகள் ஆகியவை மங்கோலியர்கள் ஐரோப்பாவிற்கு மீண்டும் திரும்புவதைப் பல தசாப்தங்களுக்குத் தடுத்தன. இருந்தபோதிலும் அழிவானது அதிகப்படியாக இருந்தது. எதிர்ப்பு காட்டிய எந்த ஒரு பகுதியின் விவசாய நிலப்பரப்புகளும் சுபுதையால் அழிக்கப்பட்டன. சில குடிமக்கள் கோட்டைகள், காடுகள் அல்லது சதுப்பு நிலங்களில் தங்கித் தங்களது உயிரைக் காத்துக் கொண்ட போதிலும் தங்களது விவசாய நிலங்களுக்குத் திரும்பியபோது பட்டினியால் வாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். கால் பங்கு முதல் பாதி வரையிலான அங்கேரியின் மக்கள் தொகையானது இந்தப் படையெடுப்பில் இறந்ததாகச் சில வரலாற்றாளர்கள் கூறுகின்றனர்.[53][54] 1250ஆம் ஆண்டில் கூட, மங்கோலியர்கள் திரும்பிச் சென்று 8 ஆண்டுகளுக்குப் பிறகு, அங்கேரியின் அரசரான பெலா, திருத்தந்தை நான்காம் இன்னொசெண்டுக்கு எழுதிய கடிதத்தில் அங்கேரி இன்னொரு படையெடுப்பைத் தாங்காது என்றும் மங்கோலியர்கள் திரும்பி வந்தால் அவர்களிடம் சரண் அடைவதை தவிர வேறு வழி இல்லை என்றும் எழுதினார்.[55][56][57]
கடைசிக் காலங்கள்
தற்போது உருசியா என்று அழைக்கப்படும் பகுதியில் அக்காலத்தில் ஒரு குமன் கிளர்ச்சியைக் கட்டுப்படுத்திய பிறகு சுபுதை மங்கோலியாவிற்குத் திரும்பினார். மங்கோலிய இதயப் பகுதியில் ஒக்தாயிக்கு அடுத்த புதிய கானைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெறும் குறுல்த்தாய்க்குப் படு செல்ல வேண்டும் எனச் சுபுதை அறிவுறுத்தினார். குறுல்த்தாய்க்கு வரப் படு மறுத்துவிட்டார். மூன்று வருடங்களுக்குப் பிறகு சுபுதையின் ஆதரவுடன் புதிய கானாகக் குயுக் தேர்ந்தெடுக்கப்பட்டார். படு மீது குயுக்கிற்கு அன்பு கிடையாது. தனக்கும் படுவிற்குமான பிரச்சினையானது வெளிப்படையான போராக மாறினால் சிறந்த மங்கோலியத் தளபதிகள் படுவிற்குக் கிடைக்கக்கூடாது எனக் குயுக் விரும்பினார். 1246–1247இல், சுபுதைக்கு 71 வயதில், புதிய ககான் சாங் அரசமரபுக்கு எதிரான படையெடுப்புக்குச் சுபுதையை தளபதியாக்கினார். மங்கோலியத் தலைநகரான கரகோரத்தில் இருந்த பொழுது சுபுதையைத் திருத்தந்தையின் தூதரான பிலானோ கார்பினி நேரில் கண்டார். மங்கோலியர்கள் மத்தியில் சுபுதை பெரும் மதிப்பை கொண்டிருப்பதாக அவர் கூறியுள்ளார். மங்கோலியர்கள் சுபுதையைப் பகதூர் (பொருள்: நைட் வீரன்/கதாநாயகன்/வல்லமையான) என்று அழைத்தனர். சாங் படையெடுப்பிலிருந்து 1248ஆம் ஆண்டு சுபுதை மங்கோலியாவிற்குத் திரும்பினார். சுபுதை எஞ்சிய நாட்களைத் தற்கால உலான் பத்தூருக்கு அருகில் உள்ள தூல் ஆற்றங்கரையில் கழித்தார். தனது 72ஆம் வயதில் இறந்தார். ஒரு புராணத்தின்படி தன்யூபு ஆற்றங்கரையில் தனது மகன் உரியங்கடை மூலம் சுபுதை இறக்க விரும்பியதாகக் கூறப்பட்டுள்ளது.[58]
உரியங்கடை மற்றும் அசு போன்ற சுபுதையின் வழித்தோன்றல்கள் அடுத்த மூன்று தசாப்தங்களுக்குப் பெரிய கான்களின் தளபதிகளாகப் பணியாற்றினார். உரியங்கடை வெற்றிகரமாகத் தலி இராச்சியத்தின் மீது படையெடுத்து வென்றார். தாய் வியட்டின் மீது படையெடுத்தார். அதை அடிபணிய வைத்தார். 1258ஆம் ஆண்டு மோங்கே கானின் சாங் அரசமரபு மீதான படையெடுப்பின்போது தென்மேற்கு திசையிலிருந்து படையெடுத்துப் பெரும் வெற்றிகளைப் பெற்றார். அசு தனது தந்தையுடன் இணைந்து போரிட்டார். ஜியாங்யாங் யுத்தத்தில் முக்கியமான இரட்டைக் கோட்டையான ஜியாங்யாங்-பான்செங் ஆகியவற்றின் மீதான வெற்றிகரமான 5 ஆண்டு மங்கோலிய முற்றுகைப் போருக்குத் தலைமை தாங்கினார். இந்த வெற்றி சாங் அரசமரபின் இதயப் பகுதிக்கு வாயிலைத் திறந்துவிட்டது. இவ்வெற்றியால் ஆறு வருடங்களுக்குப் பிறகு 1279ஆம் ஆண்டு சாங் அரசமரபானது முழுவதுமாக வெல்லப்பட்டது.
மரபு
"ஆரம்பகால மங்கோலியப் பேரரசை நிறுவியது மற்றும் நிலைநிறுத்தியது ஆகியவற்றில் சுபோதேயி பாதூரை விட அதிகப்பங்கை வேறு எந்த மங்கோலியத் தளபதியும் ஆற்றவில்லை. சிங்கிசின் நம்பிக்கைக்குரிய தளபதி மற்றும் பாதுகாவலராக, பிறகு ஒகோடி மற்றும் குயுக்கின் மிகுந்த மதிப்பிற்குரிய பணியாளராக, பேரரசின் முதல் நான்கு தசாப்தங்களின் போது மங்கோலிய நாட்டு வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் சுபோதேயி மிகத் தனித்துவமாகப் பணியாற்றினார். பிற்காலத்தில் சிங்கிஸ் கான் என்று அழைக்கப்பட்ட தெமுசினுக்கு இவர் சேவையாற்றத் தொடங்கியபோது அச்சிறிய மங்கோலிய இனக்குழுத் தலைவரது சமூகமானது வெகு சில குடும்பங்களையே உள்ளடக்கியிருந்தது. தனது முதிய வயதில், ஹங்கேரியின் எல்லைகளிலிருந்து யப்பானியக் கடல்வரை, நோவ்கோரோட்டின் எல்லைகளில் இருந்து பாரசீக வளைகுடா மற்றும் யாங்சே ஆறு வரை விரிவடைந்து இருந்த மகா பேரரசைச் சுபோதேயி கண்டார். அதை உருவாக்கியதில் இவரது பங்கு சிறியது எனக் கூற முடியாது."
—அமெரிக்க எழுத்தாளர் பால் டி. புயேல்[59]
தனித்துவமாக, இயல்புக்கு மாறான ஒன்றாக, வரலாற்றில் செங்கிஸ் கான் மற்றும் சுபுதையின் திட்டங்கள் மற்றும் புதுமைகள் வரலாற்றில் தொலைந்து போயின. 600 மற்றும் 700 வருடங்களுக்குப் பிறகு மற்றவர்கள் மீண்டும் அவற்றைக் கண்டுபிடிக்கப்படும் நிலைக்கு கட்டாயப்படுத்தப்பட்டனர். உருசியா, சார்சியா, அங்கேரி, போலந்து, பல்கேரியா மற்றும் இலத்தின் கான்ஸ்டாண்டிநோபிள் ஆகியவற்றின் இராணுவங்களைத் தொடர்ச்சியான ஒரு சார்புப் படையெடுப்புகளில் சுபுதை அழித்திருந்த போதிலும் மேற்கத்திய இராணுவத் தலைவர்கள், வரலாற்றாளர்கள் மற்றும் கோட்பாட்டியலாளர்கள் 20ஆம் நூற்றாண்டு வரை இவரை முழுவதுமாக ஒதுக்கியிருந்தனர்.[60] மங்கோலியர்கள் ஒரு தனிப் பெரும் கூட்டமாகச் செயல்படவில்லை. மாறாக மூன்று முதல் ஐந்து பிரிவுகளாகப் பயணித்தனர். பெரும்பாலும் 500 முதல் 1,000 கிலோ மீட்டர் இடைவெளி விட்டுப் பயணிப்பர். ஒரே நேரத்தில் பல இலக்குகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கினர். நெப்போலியன் போலவே சுபுதை (மற்றும் செங்கிஸ் கான்) தங்களது படைகளை நீண்ட அகலத்திற்குப் பயணிக்கச் செய்வர். எதிரியை விளக்கமாகத் தோற்கடிப்பதற்காக முக்கியமான புள்ளிகளில் வேகமாக ஒன்றிணைவர். எதிரி நாட்டின் போரிடுவதற்கான மன உறுதியை முழுவதுமாக அழிப்பதற்காக இவர்களது உத்திகள் ஒழுங்கமைந்தன.[61] இராணுவத்தில் தகவல் தொடர்புகளைப் பயன்படுத்தும் நவீன அமைப்பு முறைகளான ஆணையிடுதல் மற்றும் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றைத் தனது படையெடுப்புகளில் முதன் முதலில் பயன்படுத்திய தளபதி சுபுதை தான் என நவீன வரலாற்றாளர்கள் கூறுகின்றனர் .[62]
பல நூற்றாண்டுகளாக மேற்கத்திய நாடுகளில் சுபுதை அறியப்படாதவராக இருந்த போதிலும், முதல் உலகப் போருக்குப் பிறகு கிரேட் கேப்டன்ஸ் அன்வெயில்டு என்ற தனது புத்தகத்தில் பிரித்தானிய இராணுவக் கோட்பாட்டியலாளர் பி. எச். லிட்டல் ஆர்ட் சுபுதையின் சாகசங்களைப் பற்றி எழுதியிருந்தார். எந்திரங்களைக் கொண்ட ஒரு இராணுவமானது எவ்வாறு நகர்வு, பிரிவு மற்றும் ஆச்சரியம் ஆகிய கோட்பாடுகளைக் கொண்டு போர் புரிய முடியும் என்பதற்குச் செங்கிஸ் கான் மற்றும் சுபுதை தலைமையிலான மங்கோலியர்களை லிட்டல் ஆர்ட் உதாரணமாக கூறியிருந்தார் . இவரது புதுமையான யுத்த உத்திகள் மற்றும் எளிதான செயல் முறைகள் காரணமாகப் பிற்காலத் தளபதிகளுக்கு அகத் தூண்டுதலுக்கான ஒரு ஆதாரமாகச் சுபுதை இருந்துள்ளார். குறிப்பாக இர்வின் ரோமெல் மற்றும் ஜார்ஜ் எஸ். பேட்டன் ஆகிய தளபதிகள் மங்கோலியப் படையெடுப்புகளின் மீது மிகுந்த ஈடுபாடுடைய மாணவர்களாக இருந்தனர் .[63]
ஆழமான யுத்தக் கொள்கை
மங்கோலியப் படையெடுப்புகளைக் கவனமாகப் படித்ததன் மூலம் உருசியா பெரும்பான்மையான பயன்பாட்டைப் பெற்றது. புல்வெளிப் பகுதிக்கு அருகாமையில் இருந்ததால் மங்கோலியப் படையெடுப்புகள் பற்றிய அதிகப்படியான ஆர்வம் மற்றும் வாய்ப்பு உருசியர்களுக்கு இருந்தது. மங்கோலியப் படையெடுப்புகள் பற்றி முதன்முதலில் 19ஆம் நூற்றாண்டில் உருசியத் தளபதி மிக்கைல் இவானின் ஆய்வு செய்தார். இந்த ஆய்வு 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை உருசிய இராணுவக் கல்வி நிறுவனங்களில் பரிந்துரைக்கப்பட்ட நூலாக இருந்தது.[64] சோவியத் மார்சல் மிக்கைல் துகச்செவ்ஸ்கி, மிக்கைல் புருன்சே, மற்றும் ஜி. எஸ். இஸ்ஸர்சன் ஆகியோர் உருவாக்கிய ஆழமான யுத்தக் கொள்கையில் இவானின் ஆய்வுகளானவை பயன்படுத்தப்பட்டன. மங்கோலியக் குதிரை வில்லாளர்கள், வாள் வீரர்கள், மற்றும் கனரகக் களத் துப்பாக்கிகள் ஆகியவற்றிற்குப் பதிலாகப் பீரங்கி வண்டிகள், வீரர்களை ஏற்றிச் செல்லும் இராணுவ வாகனங்கள், கனரகத் துப்பாக்கிகள் மற்றும் விமானங்களைப் பயன்படுத்திய ஆழமான யுத்தக் கொள்கையானது மங்கோலியப் போர் உத்திகளை வெகுவாக ஒத்திருந்தது. களத்தில் துருப்புக்கள் நகர்வதை மறைப்பதற்காகப் புகைத் திரைகளைச் சுபுதை பயன்படுத்தியதைக்கூட சிவப்பு இராணுவமானது பின்பற்றியது.[65] 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், அமெரிக்க இராணுவக் கோட்பாட்டியலாளர் ஜான் பாய்ட் மற்றும் அவரைப் பின்பற்றிய சிலர் செங்கிஸ் கான் மற்றும் சுபுதையின் படையெடுப்புகளை நகரும் போர் முறைகளுக்கான ஓர் உதாரணமாகப் பின்பற்றினர்.[66]
சர்ச்சிகுடையின் வழித்தோன்றல்கள்
மேற்கோள்கள்
- ↑ ஹார்ட், லிட்டெல் (1977). பெரிய கேப்டன்களின் வெளியீடு (பகுதி 1, பதிப்பு 1). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-306-80686-5.
- ↑ Gabriel, Richard. "Genghis Khan's Greatest General Subotai the Valiant". University of Oklahoma Press, 2004, p. 6.
- ↑ Gabriel, 6-8.
- ↑ Tsendiin Damdinsüren (1970). "120 (III)". Монголын нууц товчоо [மங்கோலியர்களின் இரகசிய வரலாறு] (in Mongolian) (1st ed.).
{cite book}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Yuanshi, 121, 1a-5a
- ↑ Gabriel 2004, pp. 1, 3.
- ↑ Cummins, Joseph. History's Great Untold Stories: Larger Than Life Characters & Dramatic Events That Changed the World. 2006. Washington D.C.: National Geographic Society, 2006. Print.
- ↑ Saunders, J. J. (1971). The History of the Mongol Conquests, Routledge & Kegan Paul Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8122-1766-7
- ↑ Gabriel, 10
- ↑ Gabriel, 12-13.
- ↑ Gabriel, Chapter 8; Carl Svedrup, Sube`etei Ba`atur, Anonymous Strategist.
- ↑ Chris Peers, the Mongol War Machine (2015), 157-159.
- ↑ Timothy May, the Mongol Art of War.
- ↑ Matthew Paris, Chronica Majora, 341-45.
- ↑ Yuan Shih, Biography of Subedei, 121.2975-76.
- ↑ Juvaini, History of the World Conqueror, 370–371.
- ↑ Juvaini, History of the World Conqueror, 373–385.
- ↑ Juvaini, History of the World Conqueror, 375–410.
- ↑ In the Service of the Khans, 19.
- ↑ Frank McLynn, Genghis Khan, 319.
- ↑ Kirakos Gandzaketsi, History of the Armenians, 166–167.
- ↑ Oliver of Paderborn, "The Capture of Damietta", trans. Joseph J. Gavigan, Christian Society and the Crusades, 1198–1229, ed. Edward Peters (Philadelphia: University of Pennsylvania Press, 1971), 90, 123–124.
- ↑ Frank McLynn, Genghis Khan (2015), 607–613.
- ↑ In the Service of the Khan, Paul Buell, 17–18.
- ↑ Buell, 20.
- ↑ Rashid al-Din, Annals of Ogedei Khan, 33.
- ↑ Christopher P. Atwood, Pu'a's Boast and Doqolqu's Death: Historiography of a Hidden Scandal in the Mongol Conquest of the Jin, 31.
- ↑ Christopher P. Atwood, Pu'a's Boast and Doqolqu's Death: Historiography of a Hidden Scandal in the Mongol Conquest of the Jin, 31–41.
- ↑ Atwood, 34.
- ↑ Yuanshi 115.2885-6.
- ↑ Yuanshi 121, 122 in: Pow and Liao, 60-62, 71-72.
- ↑ Carl Svedrup, "Sube'etei Ba'atur", Anonymous Strategist, 41–43.
- ↑ Carl Svedrup, "Sube`etei Ba`atur", Anonymous Strategist, 41–43.
- ↑ McLynn, 407–410.
- ↑ McLynn, 435.
- ↑ Svedrup, 43–44.
- ↑ McLynn, 436–437.
- ↑ Frank McLynn, 434–441.
- ↑ The Chronicle of Novgorod (1914), 83.
- ↑ Paul Lendvai, The Hungarians: A Thousand Years of Victory in Defeat.
- ↑ McLynn, 465–466.
- ↑ Jan Dlugoscz, Annals, 180–181.
- ↑ Mclynn, 464–468.
- ↑ Yuan Shih, Biography of Subedei, 121.2978.
- ↑ Denis Sinor, The Mongols in the West (1999).
- ↑ Yuan Shi, 121, 1a–5a
- ↑ 47.0 47.1 Yuanshi 121, 122 in: Pow and Liao, 63–68, 72.
- ↑ Hodong Kim, A Reappraisal of Güyüg Khan, 319–320.
- ↑ Urgunge Onon, The Secret History of the Mongols, 270.
- ↑ McLynn, 472–479; Thomas of Spalato, Historia; Rogerius of Apulia, Carmen Miserabile super Destructione Regni Hungariae per Tartaro.
- ↑ John of Plano Carpini, The Story of the Mongols whom we call the Tartars.
- ↑ Timothy May, The Mongol Art of War and the Tsunami Strategy.
- ↑ McLynn, 479; Carmen Miserabile.
- ↑ Paul Lendvai, The Hungarians: A Thousand Years of Victory in Defeat, 49.
- ↑ King Belas IV's letter to the Pope, 310.
- ↑ Laszlovszky, József & Pow, Stephen & Romhányi, Beatrix & Ferenczi, Laszlo & Pinke, Zsolt. (2018). Contextualizing the Mongol Invasion of Hungary in 1241–42: Short-and Long-Term Perspectives *. 7. 419-450.
- ↑ Sălăgean, Tudor. "1 The Mongol Invasion and Its Aftermath". In 1 The Mongol Invasion and Its Aftermath, (Leiden, The Netherlands: Brill, 2016)
- ↑ Weatherford, Jack (2017). Genghis Khan and the Quest for God: How the World's Greatest Conqueror Gave Us Religious Freedom. Penguin. p. 286. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7352-2117-8.
- ↑ Ed. Igor de Rachewiltz (1993). In the Service of the Khan.
- ↑ Gabriel, 110.
- ↑ Gabriel, 113.
- ↑ LTC Sean Slappy, Command and Control Began with Subotai Bahadur (2010).
- ↑ James C. Bradford, ed., International Encyclopedia of Military History.
- ↑ Gabriel, 111.
- ↑ Gabriel, 112–118.
- ↑ LTC Joe E. Ramirez, Jr, Genghis Khan and Maneuver Warfare (2000).
நூல்கள்
- Allsen, T.T., Prelude to the Western Campaigns: Mongol Military Operations in Volga-Ural Region 1217–1237, Archivum Eurasiae Medii Aevi 3 (pp. 5–24), 1983
- Amitai-Preiss, Reuven (1998). The Mamluk-Ilkhanid War. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-52290-0
- Boyle, John Andrew, History of the World Conqueror, Manchester, 1958
- de Rachewiltz, Igor, In the Service of the Khan: Eminent personalities of the early Mongol–Yuan period (1200–1300), Wiesbaden, 1992
- de Rachewiltz, Igor, The Secret History of the Mongols: A Mongolian Epic Chronicle of the Thirteenth Century, Brill, 2004
- Devi, Savitri, The Lightning and the Sun, 1958 (written 1948–56) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-937944-14-1
- Gabriel, Richard A. (2004). Subotai the Valiant: Genghis Khan's Greatest General. Westport, Connecticut: Praeger Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-275-97582-7.
- Laszlovszky, József & Pow, Stephen & Romhányi, Beatrix & Ferenczi, Laszlo & Pinke, Zsolt. (2018). Contextualizing the Mongol Invasion of Hungary in 1241–42: Short-and Long-Term Perspectives *. 7. 419–450. https://www.researchgate.net/publication/329573862_Contextualizing_the_Mongol_Invasion_of_Hungary_in_1241-42_Short-and_Long-Term_Perspectives
- Morgan, David (1990). The Mongols. Oxford: Blackwell. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-631-17563-6
- Nicolle, David (1998). The Mongol Warlords, Brockhampton Press.
- Pow, Stephen and Liao, Jingjing: Subutai – Sorting Fact from Fiction Surrounding the Mongol Empire’s Greatest General (With Translations of Subutai's Two Biographies in the Yuan Shi). Journal of Chinese Military History, Volume 7, Issue 1. Brill, Leiden, 2018, p. 38-76.
- Stephen Pow: The Last Campaign and Death of Jebe Noyan. Journal of the Royal Asiatic Society 27, no. 01 (2016): 31–51.
- Reagan, Geoffry (1992). The Guinness Book of Decisive Battles, Canopy Books, NY.
- Saunders, J. J. (1971). The History of the Mongol Conquests, Routledge & Kegan Paul Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8122-1766-7
- Sicker, Martin (2000). The Islamic World in Ascendancy: From the Arab Conquests to the Siege of Vienna, Praeger Publishers.
- Soucek, Svatopluk (2000). A History of Inner Asia, Cambridge University Press.
- Strakosch-Grassmann, Einfall der Mongolen in Mittel-Europa 1241–1242, Innsbruck, 1893
- Sălăgean, Tudor. "1 The Mongol Invasion and Its Aftermath". In 1 The Mongol Invasion and Its Aftermath, (Leiden, The Netherlands: Brill, 2016)doi: https://doi.org/10.1163/9789004311343_003
- Thackston, W.M., ரசீத்தல்தீன் அமாதனி’s Jamiʻuʾt-tawarikh (Compendium of Chronicles), Harvard University, Department of Near Eastern Languages and Civilizations, 1998–99
- Turnbull, Stephen (2003). Genghis Khan & the Mongol Conquests 1190–1400, Osprey Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-84176-523-6