சர்வக்ஞர்

சர்வக்ஞர்
பிறப்புAbalur
இறப்புகருநாடகம்

சர்வக்ஞர் ( கன்னடம்:ಸರ್ವಜ್ಞ), கன்னட மொழிப் புலவர் ஆவார். கர்நாடகத்தின் ஹவேரி மாவட்டம், ஹிரேகெரூர் தாலுகாவைச் சேர்ந்த அபலூர் என்ற இடத்தைச் சேர்ந்தவர். திரிபதி என்று கூறப்படுகின்ற மூன்றடிகளைக் கொண்ட அவரது செய்யுள்கள் வசனா என வழங்கப்படுகிறது.

அவரைப் பற்றியும் அவரது வாழ்க்கையை பற்றியும் கூடுதல் தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. அவரது மொழிநடையையும் அவரைப்பற்றிய பிற அறிஞர்களின் குறிப்புகளையும் கொண்டு அவர் பதினாறாம் நூற்றாண்டின் பின்பகுதி அல்லது பதினேழாம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்தவராக கருதப்படுகிறார்.[1]

அவரது இயற்பெயர் புசுபதத்தா என்று அவரது செய்யுள்கள் சிலவற்றில் உள்ள குறிப்புகள் மூலம் கணிக்கின்றனர். அவர் தந்தை ஓர் விதவை குயவர் பெண்ணை மணம் புரிந்து பிறந்த குழந்தையுடன் காசிப்பயணம் மேற்கொண்டார். இதனால் சர்வக்ஞர் நாடோடி துறவியாகவே வளர்ந்தார்.கவிஞர், முற்போக்குச் சிந்தனையாளர், தத்துவவாதி, புரட்சிகர சிந்தனை உடையவர் என்று பன்முகம் கொண்டவர்.

இவரது படிப்பற்றவர்களும் புரிந்துகொள்ளக்கூடிய எளிமையான பாடல்கள் ஏழை மக்களைச் சென்றடைந்து மிகவும் வாய்மொழியாகவே பரவியது. தற்போது ஏறத்தாழ இரண்டாயிரம் செய்யுள்கள் 47 அல்லது 49 தலைப்புகளில் கிடைத்துள்ளன. இரண்டு அச்சு செய்யுள்கள் ஒன்றுபோல இருப்பதில்லை. தவிர இடைச்செருகல்களும் உள்ளன.அவை சமயம்,பண்பாடு,ஒழுக்கம்,குமுகம் என்ற பொருட்களில் உள்ளன.

அவரது சில பாடல்களின் மொழியாக்கங்கள்

மேற்கோளிட்ட புத்தகத்தில் கண்ட ஆங்கில மொழியாக்கத்தை தழுவியது.[2]

சாதி

தீண்டத்தகாதவர் வீட்டில் விழும் ஒளியும் தீண்டத்தகாததா?
மேலோர், கீழோர் எனப்பேசாதீர்;
கடவுள் அருள் பெற்றவனே மேன்மையானவன்.

நாம் அனைவரும் ஒரே மண்ணை மிதிக்கிறோம்
ஒரே நீரைக் குடிக்கிறோம், அடுப்புத்தீயும் பிரிப்பதில்லை;
எங்கிருந்து சாதி வந்தது கடவுளே.

விதி

அரியோ பன்றியாகத் திரிந்தார்,அரனோ பிச்சையெடுத்துத் திரிந்தார்,
பிரமன் தலையோ கிள்ளப்பட்டது;
இவர்கள் விதியை விதித்தவர் யார்.

சென்னையில் சர்வக்ஞர் சிலை

தமிழ்,கன்னட மக்களிடையே நல்லிணக்கம் ஏற்படும்வகையிலும், பெங்களூரு திருவள்ளுவர் சிலைப் பிரச்சினைக்கு தீர்வு காணவும், இரு மாநில அரசுகளும் கொண்ட புரிந்துணர்வின் அடிப்படையில் தமிழ் கவிஞர் திருவள்ளுவரின் சிலை பெங்களூருவில் ஆகஸ்ட்,9 2009 அன்று திறந்து வைக்கப்பட்டது.

இதற்கிணையாக, ஆகஸ்ட் 13ம் நாள் சர்வக்ஞரின் சிலை சென்னையில் அயனாவரத்தில் உள்ள யுனைட்டெட் இந்தியா காலனியில் உள்ள பூங்காவில் நிறுவப்படவுள்ளது. இந்த சிலையை கன்னட சங்கம் நிறுவுகிறது.[3]

மேற்கோள்கள்

  1. சர்வக்ஞர்
  2. கன்னட இலக்கிய வரலாறு, எட்வர்ட் பீட்டர் ரைஸ்,பக்கங்கள் 72-73,ஆசிய கல்விச் சேவை
  3. தட்ஸ்தமிழ் செய்தி[தொடர்பிழந்த இணைப்பு]