தாண்டல் உலோகம்
தாண்டல் உலோகங்கள் (Transition metals) என்பன d உபசக்திமட்டத்தில் இறுதி இலத்திரனைக் கொண்ட மூலகங்களாகும். இவை மூன்று ஆவர்த்தனங்களில் காணப்படும் முப்பது மூலகங்களைக் கொண்டுள்ளன. இவை சிக்கலயன்களை உருவாக்கக்கூடியவை.
IUPAC வரைவிலக்கணம்:-
தாண்டல் உலோகம் என்பது "நிரம்பாத d உப ஒழுக்கை உடைய ஒரு மூலகம் அல்லது நிரம்பாத d உப ஒழுக்கை உடைய நேரயனை உருவாக்கக் கூடிய ஒரு மூலகம்" ஆகும்[1].
IUPAC வரைவிலக்கணம் இவ்வாறு காணப்பட்டாலும் இவ்வரைவிலக்கணத்துக்குள் உள்ளடக்கப்படாத சிகாண்டியம், துத்தநாகம் ஆகிய மூலகங்களும் தாண்டல் உலோகங்களுக்குள் பல்வேறு புத்தகங்களில் உள்ளடக்கப்படுகின்றன. அதாவது பொதுவாக ஆவர்த்தன அட்டவணையின் அனைத்து d-தொகுப்பு மூலகங்களும் தாண்டல் உலோகங்களுக்குள் உள்ளடக்கப்படுகின்றன.
உள்ளடக்கப்படும் மூலகங்கள்
தாண்டல் உலோகங்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
கூட்டம் | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
நான்காம் ஆவர்த்தன மூலகங்கள் | Sc 21 | Ti 22 | V 23 | Cr 24 | Mn 25 | Fe 26 | Co 27 | Ni 28 | Cu 29 | Zn 30 |
ஐந்தாம் ஆவர்த்தன மூலகங்கள் | Y 39 | Zr 40 | Nb 41 | Mo 42 | Tc 43 | Ru 44 | Rh 45 | Pd 46 | Ag 47 | Cd 48 |
ஆறாம் ஆவர்த்தன மூலகங்கள் | 57–71 | Hf 72 | Ta 73 | W 74 | Re 75 | Os 76 | Ir 77 | Pt 78 | Au 79 | Hg 80 |
ஏழாம் ஆவர்த்தன மூலகங்கள் | 89–103 | Rf 104 | Db 105 | Sg 106 | Bh 107 | Hs 108 | Mt 109 | Ds 110 | Rg 111 | Cn 112 |
இங்கு d10 s2 இலத்திரன் நிலையமைப்புள்ள நாகம், இரசம் ஆகிய உலோகங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. குறிப்பாக நாகம் எப்போதும் நிரம்பிய d ஒழுக்கு உடைய Zn2+ அயனை உருவாக்குவதால் நாகத்தை தாண்டல் உலோகமாக IUPAC வகைப்பாட்டின் படி உள்ளடக்கப்பட முடியாது. எனினும் எளிமைத் தன்மைக்காக நாகம், இரசம் ஆகியவயும் தாண்டல் உலோகங்களாக வகைப்படுத்தப்படுகின்றன. செப்பு மூலக நிலையிலும், +1 ஒக்சியேற்ற நிலையிலும் முழுமையான d-ஒழுக்கைக் கொண்டிருந்தாலும், +2 ஒக்சியேற்ற நிலையைக் கொண்டிருப்பதால் அது தாண்டல் உலோகமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
பொதுவான பண்புகள்
பல ஒக்சியேற்றல் நிலைகள்
தாண்டல் உலோகங்களின் விசேட பண்புகளில் ஒன்றாக பல ஒக்சியேற்ற நிலைகளைக் கொண்டிருத்தல் உள்ளது. உதாரணமாக மங்கனீசு 0, +2, +7 ஆகியவற்றைக் காட்டும்; இரும்பு பொதுவாக 0, +2, +3 ஆகிய நிலைகளைக் காட்டும்; எனினும் மங்கனீசு வரையான அனைத்து தாண்டல் மூலகங்களும் அவற்றின் இறுதி சக்திப்படியிலுள்ள இலத்திரன்களின் எண்ணிக்கைக்கு சமனானளவு உயர் ஒக்சியேற்ற நிலைகளைக் காட்டுகின்றன. உதாரணமாக வனேடியம் 0 தொடக்கம் +5 வரையும், மங்கனீசு 0 தொடக்கம் +7 வரையும் காட்டுகின்றன. இதனால் தாண்டல் மூலகங்கள் பல்வேறு வலுவளவுகளுடன் சேர்வைகளை ஆக்குகின்றன. உதாரணமாக இரும்பு ஆக்சிசனுடன் தாக்கமடைந்து +2 ஒக்சியேற்ற நிலையுடன் FeO அல்லது +3 ஒக்சியேற்ற நிலையுடன் Fe2O3 ஆகிய இரு சேர்வைகளை உருவாக்கலாம்.
நிறமுள்ள சேர்வைகள்
தாண்டல் உலோகங்களின் இலத்திரன்கள் இலகுவாக சக்தியை உறிஞ்சி அருகருகே உள்ள ஒழுக்குகளிடையே பரிமாற்றப்படுவதால் அவை உறிஞ்சும் சக்திக்கேற்றபடி நிறத்தைக் காலுகின்றன. குறிப்பாக தாண்டல் உலோகம் அதியுயர் ஒக்சியேற்ற நிலையில் இருக்கும் போது நிறத்தை இலகுவாக வெளிப்படுத்துகின்றன.
மேற்கோள்கள்
- ↑ தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் அனைத்துலக ஒன்றியம். "transition element". Compendium of Chemical Terminology Internet edition.