பகதூர்

பகதூர் (மொங்கோலியம்: ᠪᠠᠭᠠᠲᠦᠷ பயதூர், கல்கா மொங்கோலியம்: Баатар பாதர்; துருக்கியம்: பகதூர், பாதூர், பகதிர்; உருசியம்: போகதைர்; பல்கேரிய: Багатур பகதூர்; பாரசீக மொழி: بهادر‎) என்பது ஒரு வரலாற்று ரீதியான துருக்கிய-மங்கோலியக் கலாச்சாரத்துடன் தொடர்புடைய மரியாதைக்குரிய பட்டமாகும்.[1] இச்சொல்லுக்குக் "கதாநாயகன்" அல்லது "வல்லமையான வீரன்" என்று பொருள். போப்பாண்டவரின் தூதரான பிலானோ கர்பினி, இப்பட்டத்தை ஐரோப்பிய நைட் பட்டத்துடன் ஒப்பிடுகிறார்.[2]

இச்சொல்லானது முதன்முதலில் சீனாவிற்கு வடக்கு மற்றும் மேற்குப் (மங்கோலியா) பகுதிகளில் வாழ்ந்த புல்வெளி மக்களால் பயன்படுத்தப்பட்டது. சுயி அரசமரபின் பதிவுகளில் ஏழாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே இச்சொல் உள்ளது.[3][4] எட்டாம் நூற்றாண்டின் கோக்துர்க் கானரசு மற்றும் ஒன்பதாம் நூற்றாண்டின் முதலாம் பல்கேரிய பேரரசின் பல்கர்கள் மத்தியிலும் இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. சில எழுத்தாளர்கள் இச்சொல் ஈரானில் தோன்றியிருக்கலாம் எனக் கோருகின்றனர். முதல் எழுத்தானது பெரும்பாலும் ஈரானிய மொழிகளில் பயன்படுத்தப்படும் "கடவுள், பிரபு" போன்ற பொருட்களை உடைய *பக்-இலிருந்து தோன்றியிருக்க பெரும்பாலும் வாய்ப்புள்ளது.[5]

இச்சொல்லானது மங்கோலியர்களிடையே பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு சொல்லாகும். 13ஆம் நூற்றாண்டில் செங்கிஸ் கானின் மங்கோலியப் பேரரசில் ஒரு மரியாதைக்குரிய பட்டமாக இச்சொல் பரவியது. மங்கோலியப் பேரரசில் இருந்து தோன்றிய நாடுகளில் இப்பட்டம் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டது. மேலும் ஈல்கானரசு மற்றும் தைமூரிய அரசமரபு ஆகியவற்றிலும் அரசருக்குரிய ஒரு சிறப்புப் பெயராக இச்சொல் பயன்படுத்தப்பட்டது.

துருக்கிய-மங்கோலியப் படையெடுப்புகள் காரணமாக இச்சொல்லானது பல்வேறு துருக்கியம் அல்லாத மொழிகளுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டது. இச்சொல் தற்போது பல்வேறு வடிவங்களில் பல்கேரிய: Багатур (பகதூர்), உருசியம்: Богатырь (போகதைர்), போலிய மொழி: Bohater (பொருள் "கதாநாயகன்"), அங்கேரியம்: Bátor (பொருள் "துணிவு மிக்க"), பாரசீகம் Bahador, சியார்சியம் பகதூர், மற்றும் இந்துசுத்தானி பகதூர் ஆகிய மொழிகளில் பயன்படுத்தப்படுகிறது

துருக்கிய மொழி: பாதூர்/பகதிர், தடர மற்றும் காசாக்கு : Батыр (பதைர்), உசுபேகியம் பதைர் மற்றும் மொங்கோலியம் பாதர் (உலான் பாதர்-இல் உள்ளது போல) உள்ளிட்ட நவீன துருக்கிய மற்றும் மொங்கோலிய மொழிகளில் இச்சொல் பயன்படுத்தப்படுகிறது.

பகதூர் என்ற கருத்தானது துருக்கிய-மங்கோலிய நாட்டுப்புறக் கதைகளில் இருந்து உருவானதாகும். உருசிய நாட்டுப்புறக் கதைகளில் காணப்படும் போகதைர்கள் போலவே பகதூர்களும் அசாதாரணமான தைரியம், அச்சமின்மை மற்றும் தீர்க்கமான தன்மை ஆகியவற்றை உடைய கதாநாயகர்கள் ஆவர். இவர்கள் அடிக்கடி, சொர்க்கத்தில் இருந்து வந்தவர்களாகவும் அசாதாரணமான செயல்களைச் செய்யும் தன்மை உடையவர்களாகவும் காட்டப்படுகிறார்கள். பகதூர்கள் இலட்சியம் உடைய, போராடும் குணம் உடைய துருக்கிய-மங்கோலிய வீரர்களாகக் காட்டப்படுகின்றனர். எனவே இச்சொல் ஒரு மரியாதைக்குரிய மற்றும் புகழுடைய ராணுவப் பட்டமாகப் பயன்படுத்தப்படுகிறது

இப்பட்டத்தைப் பயன்படுத்திய நபர்கள்

உசாத்துணை

  1. Ed. Herbert Franke and others - The Cambridge History of China: Volume 6, Alien Regimes and Border States, 710-1368, p.567
  2. James Chambers The Devil's horsemen: the Mongol invasion of Europe, p.107
  3. C. Fleischer, "Bahādor", in Encyclopædia Iranica
  4. Grousset 194.
  5. Beckwith 2009, ப. 387