பலி கொடுத்தல் (இந்து சமயம்)

பலியிடுவதற்காக நிறுத்தப்பட்டுள்ள ஆடு
ஆடி மாதத்தில் தலை அறுக்கப்பட்டு பலியிடப்பட்ட சேவல்
பலியிடுவதற்காக மாலை அணிவித்து நிறுத்தப்பட்டுள்ள ஆடு
பலியிடப்பட்ட ஆடு

பலி கொடுத்தல் அல்லது காவு கொடுத்தல் என்பது இந்து சமய வழிபாட்டுச் சடங்காகும். இச் சடங்கு பழங்குடி வழிபாடுகளிருந்து இந்து சமய சடங்காக மாறியது. இச்சடங்கின் வேர்கள் பழங்குடி வழிபாடினை நினைவுகூர்கின்றன.

சக்தி வழிபாடான, சாக்தம் மற்றும் நாட்டார் தெய்வங்கள் வழிபாட்டில் இன்றளவும் பலி கொடுத்தல் சடங்கு பின்பற்றப் படுகிறது. இந்து சமய புராணங்களில் இந்த சடங்குகள் பற்றி குறிப்புகள் காணப்படுகின்றன.[1][2][3][4] மேலும் பகவத் கீதை உள்ளிட்ட நூல்கள் விலங்கு பலியினை எதிர்க்கின்றன.[5][6][7]

சொல்லிலக்கணம்

சமசுகிருத சொல்லான பலி என்பதற்கு கொடுத்தல் என்று பொருளாகும்.

வரலாற்றில் பலி கொடுத்தல்

பலி கொடுத்தல் வேத காலத்தில் ஒரு முக்கிய சடங்காக இருந்தது. பெளத்த சமண சமயங்களின் எழுச்சியும், அவை முன்னிறுத்திய அறக் கோட்பாடுகளும் பலி கொடுத்தலை இந்து சமயத்தின் ஓரத்தில் தள்ளி விட்டது.

நாட்டாறியலில் பலி கொடுத்தல்

நாட்டார் தெய்வங்களில் கருப்பு, முனி போன்ற ஆண் தெய்வங்களும் மிருக பலியை பெறுகின்றன. இது பெரு தெய்வ வழிபாட்டு முறையிலிருந்து வேறுபட்டது. ஆடு, கோழி, பன்றி போன்ற மிருங்களை பலியிடுதல் முப்பலி எனப்படுகிறது.

  1. குருதிப் பலி
  2. சூரை கொடுத்தல்
  3. சட்டி படைப்பு
  4. தூக்குப் படைப்பு
  5. கோழி குத்துதல்

சூல் பலி

பொதுவாக மிருக பலியிடுதலில் பெண் மிருகங்களை பலியிதல் பிற சமயங்களில் வழமையில்லை. ஆனால் இந்து சமய நாட்டாறியல் மற்றும் சாக்த வழிபாட்டில் பெண் மிருகங்களை பலியிடும் வழமை இருந்துள்ளது.

கருவுற்ற பெண் மிருகங்களை பலியிடும் வழமை சூல் பலி எனப்படுகிறது.

பலி கொடுத்தல் தத்துவம்

பலி கொடுத்தல் என்பது உண்மையில் விலங்குகளை பலியிடுவதைக் குறிப்பதன்று. மாறாக அது நம்மில் உறைந்து கிடக்கும் மிருக குணங்களை அழித்து (அஃதாவது அக்குணங்களை பலியிட்டு) இறைநெருக்கத்தை எட்டுதலைக் குறிப்பதாகும். ஆயினும் இதை மக்கள் எதிர்மறையாகப் புரிந்து கொண்டு பின்பற்றி வருகின்றனர். தாம் செய்த பாவத்தை மன்னிக்க வேண்டி வேறொரு உயிரைப் பலியிடுதல் யாமளம், மாத்ருதந்திரம் ஆகிய சாக்த ஆகமங்களும், சில வைதீக பாக யக்ஞங்களிலும் பரிந்துரைக்கப்படுகிறது. பெரும்பான்மைச் சமூகங்களான வீரசைவம், வைணவம் உள்ளிட்ட மற்ற இந்து சமய மரபுகள் விலங்கு பலியினை எதிர்த்து தூய சைவத்தை போதிக்கின்றன.[8]

பலியிடும் முறை

பலியிடப்படும் ஆடு, சேவல், பன்றி போன்ற விலங்குகளில் ஆண் பாலினத்தைச் சேர்ந்தவையே பலியிடுவதற்காகத் தேர்வு செய்யப்படுகின்றன. கோழியாக இருந்தாலும் அதன் ஆண் பாலினமான சேவலையே பலியிடத் தேர்வு செய்கின்றனர். இவற்றில் விலங்கிலோ அல்லது சேவலிலோ வெள்ளை நிறமிருந்தால் அவை நிராகரிக்கப்படுகின்றன. பலியிடத் தயாராயுள்ள விலங்கு அல்லது சேவல் மீது மஞ்சள் கலந்த நீர் தெளிக்கப்படுகிறது. அதன் கழுத்தில் மலர்களாலான சிறு மாலைத் துண்டு அணிவிக்கப்படுகிறது. பின்னர் மஞ்சள் நீர் தெளிக்கப்படுகிறது. அது மூன்று முறை தலையைக் குலுக்கும் போது அது சம்மதம் தெரிவித்து விட்டதாகக் கருதி அதைப் பலியிடுகின்றனர்.

அசைவ உணவு

பலி கொடுக்கப்பட்ட ஆடு அல்லது கோழியின் இறைச்சியை உணவாக்கி சிறு தெய்வங்கள் முன்பு படைத்துவிட்டு அதன் பிறகு அந்த அசைவ உணவை உண்ணும் வழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. இது போன்ற பலியிட்டு வழிபடும் வழக்கம் காவல் தெய்வங்களான கருப்பசாமி, மாடன், இசக்கியம்மன் போன்ற சிறுதெய்வ வழிபாடுகளிலேயே அதிகம் நடைபெறுகிறது. மாரியம்மன் கோயில்களில் இந்தப் பலியிடும் வழக்கம் கடைப்பிடிக்கப்பட்டாலும் அது மாரியம்மனுக்குப் படைக்கப்படுவதில்லை. கோயிலிலுள்ள காவல் தெய்வமான கருப்பசாமிக்குப் படைப்பதாகவே கருதப்படுகிறது.

ஆதாரங்கள்

  1. Rod Preece (2001). Animals and Nature: Cultural Myths, Cultural Realities. UBC Press. p. 202. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7748-0724-1.
  2. Lisa Kemmerer, Anthony J. Nocella (2011). Call to Compassion: Reflections on Animal Advocacy from the World's Religions. Lantern Books. p. 60. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-59056-281-9.
  3. Alan Andrew Stephens, Raphael Walden (2006). For the Sake of Humanity. BRILL. p. 69. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9004141251.
  4. David Whitten Smith, Elizabeth Geraldine Bur (January 2007). Understanding World Religions: A Road Map for Justice and Peace. Rowman & Littlefield. p. 13. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7425-5055-1.
  5. Mukhopadhyay, K. (2020). Food and Power: Expressions of Food-Politics in South Asia. SAGE Publications. p. 240. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-5388-377-5. பார்க்கப்பட்ட நாள் 2022-06-10. mostly practised in Shakti cult, while Puranas and the Gita forbid animal sacrifice.
  6. Laxmi Narayan Chaturvedi (1991). The Teachings of Bhagavad Gita. Sterling Publishers. p. 140. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-207-1272-0. But in this Kaliyuga, all fire sacrifices involving the animal slaughter are prohibited as stated in the Brahma-Vaivarta-Purana, ashvamedham gavalambham, sannyasam palpaitrakam, devarena sutotpattim, kalau pafich vivarjayet.
  7. Bhagavad Gita and modern problems, p.143
  8. Kemmerer, L.; Nocella, A.J. (2011). Call to Compassion: Reflections on Animal Advocacy from the World's Religions. Lantern Books. p. 260. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-59056-281-9. பார்க்கப்பட்ட நாள் 2022-06-10.