முள்ளந்தண்டு நிரல்
முள்ளந்தண்டு நிரல் அல்லது முதுகெலும்புகள் அல்லது முள்ளெலும்புகள் என்பது முதுகெலும்பிகளின் முதுகுப் புறத்தில் முள்ளந்தண்டு வடத்தைச் சுற்றி ஒன்றோடு ஒன்று இணைந்து அமைந்திருக்கும் அசையக்கூடிய எலும்புகளின் தொகுதியைக் குறிக்கும். இவ்வெலும்புத் தொகுதியானது முள்ளந்தண்டு வடத்திற்குப் பாதுகாப்பைக் கொடுப்பதுடன், உடலுக்கும் உறுதியை வழங்கும். இந்த எலும்புகளின் வரிசையானது பொதுவாக மண்டையோட்டுப் பகுதியில் ஆரம்பித்து, இடுப்பெலும்புப் பகுதியில் முடிவடையும். இவை ஒன்றன்மேல் ஒன்றாக வரிசையாக அசையக் கூடியவகையில் அடுக்கப்பட்டிருக்கும். தனித்தனியான முள்ளந்தண்டு எலும்புகளுக்கு இடையில், மெத்தைபோன்று மென்மையான இழையமான கசியிழையத்தினால் ஆன தகடுகள் காணப்படும். இத் தகடுகள் விலங்குகள் அசையும்போது 'அதிர்வு உறிஞ்சிகள்' போலத் தொழிற்பட்டுச் சேதங்கள் ஏற்படாமலும் பாதுகாக்கும்.
மனித முள்ளந்தண்டு நிரல்
அமைப்பு
மனிதர்கள் பிறக்கும்போது 33 முள்ளந்தண்டு எலும்புகளைக் கொண்டிருந்தாலும், உடல் விருத்தியின்போது, நிரலின் சில பகுதிகளில் உள்ள எலும்புகள் இணைந்து கொள்வதனால், வளர்ந்தவர்களில் தனித்தனியாக இருக்கும் எலும்புகளின் எண்ணிக்கை 24 ஆக இருக்கும்[1]. இவை அமைந்திருக்கும் இடத்திற்கேற்ப வேறுபட்ட பெயர்களைக் கொண்டிருக்கும். அவையாவன:
- 7 கழுத்து முள்ளந்தண்டெலும்புகள் - இவை C1 - C7 எனப் பெயரிடப்படுகின்றன. இவற்றில் முதலாவது எலும்பு அத்திலசு முள்ளந்தண்டெலும்பு என்றும், இரண்டாவது அச்சு முள்ளந்தண்டெலும்பு என்றும் அழைக்கப்படுகின்றன. அத்திலசு முள்ளெலும்பானது, அச்சு முள்ளெலும்பில் இலகுவாக அசையக் கூடிய விதத்தில் அமைந்திருப்பதனால், கழுத்தானது இலகுவாக அசையக் கூடிய விதத்தில் அமைந்திருக்கும்.
- 12 நெஞ்சு முள்ளந்தண்டெலும்புகள் - இவை T1 - T12 எனப் பெயரிடப்படுகின்றன. இவை விலா எலும்புகள் பொருந்தி இருக்கும் எலும்புகளாகும். இவை நெஞ்சுக்கூட்டை அமைப்பதில் பங்கு வகிக்கின்றது.
- 5 நாரி முள்ளந்தெண்டெலும்புகள் - நாரிப் பகுதியில் அமைந்துள்ள L1 - L5 எனப் பெயரிடப்பட்டிருக்கும் எலும்புகளாகும். இவை உடல்நிறையை தாங்கி நிற்கும் எலும்புகளாகும்.
- திருவெலும்பு - நாரி எலும்புகளைத் தொடர்ந்து அமைந்திருக்கும் 5 எலும்புகள் விருத்தியின்போது முள்ளெலும்பிடை கசியிழையத் தகடுகளை இழந்து இணைவதனால், ஒரு எலும்பாக தோற்றமளிக்கும்.
- குயிலலகெலும்பு - முள்ளந்தண்டு நிரலின் இறுதியிலுள்ள 3 எலும்புகளும் இணைந்து காணப்படும். இது வாலெலும்பு எனவும் அழைக்கப்படும்.
தொழில்கள்
- முள்ளந்தண்டு வடம், ஏனைய சில உள் உடல் உறுப்புக்களுக்கு பாதுகாப்பளிக்கும்.
- பிணையம் (ligament), தசைநாண்கள் (tendons), தசை போன்ற இழையங்கள் இணைந்துகொள்ள ஆதாரமான இடமாக இருக்கும்.
- உடலின் பல பாகங்களுக்கும் அமைப்பிற்குரிய ஆதாரமாக இருக்கும். தலை, தோள்கள், நெஞ்சுப்பகுதிக்கு ஆதாரத்தை வழங்குவதுடன், உடலின் மேல், கீழ்ப் பகுதிகளை இணைத்திருக்கும். இதன்மூலம், உடல் நிறையத் தாங்க்வதுடன், உடல் சமநிலையைப் பேணுவதிலும் உதவும்.
- உடல் அசைவுக்கும், உடலின் நெகிழ்வுத்தன்மைக்கும் உதவும். உடலை முன்பக்கமாகவோ பின்பக்கமாகவோ வளைக்கவும், இடது வலதாக பக்கப்பாட்டில் அசைக்கவும், உடலை சுழற்றுவதற்கும் உதவும்.
- இவை தவிர, குருதி உயிரணுக்கள், முக்கியமாக செங்குருதியணுக்கள் உருவாகும் இடமாக இவ்வெலும்புகளின் எலும்பு மச்சை இருக்கும்.
- கனிமப் பதார்த்தங்கள் சேமிக்கப்படும் இடமாகவும் இருக்கும்.
வளைவுகள்
முள்ளந்தண்டு நிரலில் எலும்புகள் அமைந்திருக்கும் இடங்களின் அடிப்படையில் வளைவுகள் இருப்பதைக் காணலாம். அவை தலைப் பகுதியிலிருந்து கீழ்நோக்கிச் செல்லும்போது முறையே கழுத்து வளைவு, நெஞ்சு வளைவு, நாரி வளைவு, திருவெலும்புக்குரிய வளைவு எனப்படும்.
கழுத்து வளைவு முன்புறமாக குழிவடைந்து, முதலாவது முள்ளந்தண்டெலும்பிலிருந்து ஆரம்பித்து, இரண்டாவது நெஞ்சு முள்ளந்தண்டெலும்பின் நடுப்பகுதியில் முடிவடையும். நெஞ்சு வளைவு கழுத்து வளைவின் முடிவில் ஆரம்பித்து முன்புறம் குவிவாக 12 ஆவது நெஞ்சு முள்ளந்தண்டெலும்பின் நடுப் பகுதியில் முடிவடையும். நாரி வளைவானது ஆண்களை விட, பெண்களில் தெளிவாகத் தெரியும். இவ்வளைவு முன்புறமாகக் குழிவடைந்து, நெஞ்சு வளைவின் முடிவில் ஆரம்பித்து, திருவெலும்புப் பகுதியில் முடிவடையும். நாரி எலும்பின் கடைசி இரு எலும்புகளும் அதிகம் குழிவடைந்திருக்கும். இடுப்பு வளைவு அல்லது திருவெலும்புக்குரிய வளைவு முன்புறமாக, கீழ்நோக்கிய குவிவைக் காட்டும். இந்த வளைவில் திருவெலும்பும், குயிலலகெலும்பும் அமைந்திருக்கும்.
மேலதிக படங்கள்
-
முள்ளந்தண்டு நிரல்
-
முள்ளந்தண்டு எலும்புகளால் சூழப்பட்டிருக்கும் முள்ளந்தண்டு வடம்
-
முள்ளந்தண்டெலும்புகளும், சுற்றியிருக்கும் தசைகளும்
-
கழுத்து முள்ளந்தண்டெலும்பின் பக்கத் தோற்றம்
-
கழுத்து எலும்பின் குறுக்கு வெட்டுமுகத் தோற்றம்
-
மேலிருந்து பார்க்கும்போது தெரியும் நெஞ்சு முள்ளந்தண்டெலும்பின் தோற்றம்
-
திருவெலும்பு
-
திருவெலும்பும், குயிலலகெலும்பும்
மேற்கோள்கள்
- ↑ டோர்லாண்ட் மருத்தவ அகராதியில் vertebral column