வெளிச் சோதனை முறை கருக்கட்டல்
வெளிச் சோதனை முறை கருக்கட்டல் | |
---|---|
வெளிச் சோதனை முறை கருக்கட்டலின் ஒற்றை-விந்து ஊசிக்குரிய விளக்கப்படம் (Illustrated schematic of IVF with single-sperm injection - ICSI) | |
வேறு பெயர்கள் | IVF |
ICD-10-PCS | 8E0ZXY1 |
MeSH | D005307 |
வெளிச் சோதனை முறை கருக்கட்டல் (IVF - in vitro fertilization) அல்லது ஆய்வுகூடச் சோதனை முறை கருக்கட்டல் என்பது உடலுக்கு வெளியே பெண் உயிரின் கரு முட்டையானது, விந்துடன் இணைந்து கருக்கட்டல் நிகழும் செயல்முறையாகும். இது செயற்கைக் கல முறைமூலம் செய்யப்படும் கருக்கட்டல் ஆகும். இவ்வாறு கருமுட்டையுடன், விந்தை இணைத்து, செயற்கையாக உருவாக்கப்படும் கருக்களை ஒரு பெண்ணின் கருப்பையில் தக்கமுறையில் வைப்பதன் மூலம் அக்கரு வளர்ந்து முளையமாகி அப்பெண், ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்ள வாய்ப்பை ஏற்படுத்தலாம். பொதுவாகக் குழந்தை பெற்றுக் கொள்வதில் ஆர்வமிருந்தும், இயற்கையாகச் சில சிக்கல்களைக் கொண்டிருக்கும் பெற்றோருக்கு, இம்முறையினால் குழந்தை பெற்றுக் கொள்ள உதவலாம். இம்முறையால் பிறக்கும் குழந்தையைப் பொதுவான பேச்சு வழக்கில் "சோதனைக் குழாய்க் குழந்தை" என அழைப்பார்கள். (சோதனைக் குழாய் என்பது உயிரியல், வேதியியல் ஆய்வுக்கூடங்களில் பயன்படுத்தப்படும் கண்ணாடி அல்லது நெகிழியினாலான குழாய் போன்ற அமைப்புடைய கலனாகும். ஆனால் பொதுவாக வெளிச் சோதனை முறை கருக்கட்டலில் பயன்படுத்தப்படுவது தட்டையான பெத்திரிக்கிண்ணமென அழைக்கப்படும் கலனாகும்).
சோதனைக் குழாய்க் குழந்தை முறையைக் கண்டுபிடித்த பிரித்தானிய அறிவியலாளர் ராபர்ட் எட்வர்ட்சுக்கு 2010 ஆம் ஆண்டுக்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு கிடைத்தது.
பயன்பாடு
பலோப்பியன் குழாயிலிருக்கும் குறைபாடு காரணமாகப் பெண்களில் மலட்டுத்தன்மை இருக்கும் வேளையில், கருக்கட்டல் கடினமாகிவிடும். அதேபோல் ஆணின் மலட்டுத்தன்மைக்கு விந்துக்களின் தரம் போன்றன குறைவாக இருந்தாலும் கருக்கட்டல் கடினமாகும். இப்படியான நிலைகளில் இம்முறையில் செயற்கையாக, உடலுக்கு வெளியாகக் கருக்கட்டல் நிகழ்த்தப்படும். ஆணின் விந்தின் தரம் குறைபாடுள்ளதாக இருப்பின், விந்தை நேரடியாக முட்டையினுள் செலுத்துவர். இதனைக் குழியமுதலுருவுக்குள்ளான விந்து ஊசிமூலம் ஏற்றும் முறை (intracytoplasmic sperm injection - ICSI) எனலாம்.
நலமுடன் விளங்கும் கருமுட்டை, கருக்கட்டும் திறன் கொண்ட விந்து, மேலும் கருத்தரிப்பை ஆரோக்கியமாக ஏற்கக்கூடிய கருப்பை என்பன இம்முறை வெற்றியளிப்பதற்கான தேவைகள். இந்த முறைக்கான செலவு கூடுதலாக இருப்பதால் வேறு செலவு குறைந்த முறைகள் வெற்றி அளிக்காத நிலையிலேயே இம்முறை பயன்படுத்தப்படும்.
இம்முறையில் சிலசமயம் முட்டை வழங்கும் பெண்ணும், கருக்கட்டலின் பின்னர் கருவைத் தாங்கிக் கருத்தரிப்புக்கு உட்படும் பெண்ணும் வெவ்வேறு நபராக இருப்பர். குழந்தை வேண்டும் பெண்ணிடமிருந்து நல்ல தரமான முட்டைகளைப்பெற முடியாதெனின், வேறொரு பெண்ணிடம் முட்டைகள் பெற்று கருக்கட்டலுக்குப் பின்னர் முளையத்தைக் குழந்தை வேண்டும் பெண்ணின் கருப்பையின் உள்வைத்துப் பதிக்கிறார்கள். இதனால் மாதவிடாய் நிறுத்தம் ஏற்பட்ட பெண்களும்கூடக் குழந்தையைப் பெற்றுக் கொள்ள முடிகின்றது. 50 வயதைக் கடந்த பெண்களும் இம்முறையால் குழந்தை பெற்றுக் கொண்டுள்ளனர். குழந்தை வேண்டும் பெண்ணின் கருப்பை கருவைத் தாங்கும் வல்லமை அற்றதாகக் கருதப்படின் அப்பெண்ணின் முட்டை கருக்கடிய பின்னர் வேறொரு பெண்ணின் கருப்பையில் பதிப்பார்கள். குழந்தை பிறந்த பின்னர் முதலாவது பெண்ணிடம் குழந்தையைத் தருவார்கள். குழந்தையைப் பெற்றுக் கொடுப்பவர் பதிலித்தாய் என அழைக்கப்படுவார்.
குழந்தை வேண்டும் ஆணின் விந்துக்கள் ஆரோக்கியம் அற்றதாக இருக்கும் வேளையில் வேறொரு ஆண் விந்துவழங்கியாக இருக்க முடியும்.
செயல்முறை
பெண்ணின் முட்டையைப் பாலோப்பியன் குழாயிலேயே வைத்து உறிஞ்சி கருக்கட்டலில் பயன்படுத்தலாம் எனினும், அப்படிச் செய்யும்போது குறைந்த அளவிலேயே வெற்றியளிப்பதாக உள்ளது. அதனால் பெண்ணுக்கு இயக்குநீர்களை அளித்துச் சூலகத்தின் தொழிற்பாட்டைக் கூட்டி அதிக எண்ணிக்கையான முட்டைகள் உருவாகச் செய்கிறார்கள். பின்னர், அம்முட்டைகளைச் சூலகத்திலிருந்து பிரித்தெடுத்து, உடலுக்கு வெளியாக ஒரு நீர்ம வளர்ப்பூடகம் ஒன்றில் வைக்கிறார்கள். அவற்றுடன் ஆணிலிருந்து பெறப்படும் விந்துப் பாய்மத்தைச் சேர்ப்பதனால் முட்டையுடன் விந்து இணைந்து கருக்கட்டுகிறது. பின்னர் கருக்கட்டலுக்கு உட்பட்டு கலப்பிரிவுக்குள்ளாகும் (உயிரணுப்பிரிவுக்குள்ளாகும்) கரு முட்டையைப் பெண்ணின் கருப்பைக்குள் செலுத்தி, பெண்ணின் வெற்றிகரமான கருத்தரிப்புக்கு உதவி, குழந்தை பெற வழி செய்கின்றனர்.
சூலகத்தின் மேலதிகத் தூண்டல்
ஒவ்வொரு மாதமும் ஏற்படும் மாதவிடாய்ச் சுழற்சியின்போது, பொதுவாக ஒரு பெண்ணின் சூலகத்திலிருந்து ஒரு கருமுட்டையே முதிர்ந்து வெளியேறும். இந்த வெளிச்சோதனை முறையைச் செயல்படுத்துவதற்காக, ஒன்றுக்கு மேற்பட்ட முட்டைகளை முதிரச்செய்யும் நோக்கில் பெண்ணுக்கு இயக்குநீர்களை வழங்கி அவளது சூலகத்தைக் கூடுதலாகத் தூண்டுகின்றனர். இதற்குக் கருமுட்டை தூண்டும் இயக்குநீர் எனப்படும் இயக்குநீர் பயன்படுத்தப்படும். கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு இவ்வாறு இயக்குநீர் வழங்கப்படும். அவ்வேளையில் தொடர்ந்த மருத்துவக் கண்காணிப்பும் இருக்கும். அனேகமாகப் பத்தாவது நாளில் முட்டைகள் போதிய வளர்ந்த நிலையை அடைந்துவிடுகின்றன.
இந்தத் தூண்டல் செயல்முறையானது வேறுபட்ட வழிகளில் வழங்கப்படுவதுண்டு. சிலசமயம் அளவுக்கதிகமான தூண்டல் ஏற்பட்டு பெண்ணுக்குச் சூழிடரைத் தோற்றுவிக்கக்கூடும். அரிதான வேளைகளில் இதனால் இறப்பும் ஏற்பட வாய்ப்புண்டு. ஆதலினால், மிகவும் கவனமாக, தொடர்ந்த மருத்துவக் கண்காணிப்புடன் செயல்படல் அவசியமாகும்.
முட்டை மீட்பு
சூலகத்தில் முட்டைகள் குறிப்பிட்ட வளர்ச்சியை அடைந்ததும், பொதுவாக லூட்டினைசிங் இயக்குநீரின் செயலொத்த மனிதக்கரு வெளியுறை கருவகவூக்கி [HCG] எனப்படும் இயக்குநீரை ஊசிமூலம் செலுத்தி இறுதி முதிர்நிலையைத் தூண்டுவர்.[1] இந்த ஊசி ஏற்றப்பட்டு 38-40 மணித்தியாலங்களில் பொதுவாக முட்டைகள் சூலகத்திலிருந்து வெளியேறும்.[2] ஆனால் அவ்வாறு முட்டைகள் தாமாகச் சூலகத்திலிருந்து பாலோப்பியன் குழாயினூடாக வெளியேறுவதற்கு முன்னமே, மனிதக்கரு வெளியுறை கருவகவூக்கி ஊசியேற்றப்பட்டு 34-36 மணித்தியாலங்களில் முட்டைகளைச் செயற்கையாகச் சூலகத்திலிருந்து அகற்றி வெளியே எடுக்கிறார்கள்.
இவை அகற்றப்படும் முறையானது யோனியூடான முட்டை மீட்பு (transvaginal oozyte retrieval) எனப்படும். இம்முறையில் மீயொலி வழிகாட்டியுடன், யோனியினுள் ஊசியொன்றைச் செலுத்தி, அங்கிருந்து யோனிச் சுவரினூடாகச் சூலகத்தை நோக்கி ஊசியைச் செலுத்தி, அங்கிருக்கும் முதிர்ந்த முட்டைகளைப் பெறும் வழிமுறையாகும். பொதுவாக 10-30 முட்டைகள் இந்த ஊசியினூடாக உறிஞ்சிப் பெறப்படும். இதனைச் செய்வதற்கு கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் எடுக்கும். இதன்போது வலியேற்படாமல் இருக்க மயக்க மருந்தைப் பயன்படுத்தி, விழிப்புநிலை தடுமாறுதல் ஏற்படுத்தப்படுகின்றது. இதன்போது உடலில் சில பகுதிகளில் மட்டும் உணர்வற்ற நிலையோ அல்லது முழு மயக்கநிலையோ பேணப்படலாம்.
முட்டை விந்து ஏற்பாடு
பெறப்பட்ட முட்டைகளிலிருந்து வெற்றிகரமான கருத்தரிப்புக்கு ஏற்ற தரமான முட்டைகள் கருக்கட்டலுக்காகத் தெரிவு செய்யப்படும். அதேபோல் விந்துப்பாய்மத்தில் இருக்கும் வீரியம் குன்றிய உயிரணுக்களை அகற்றி விந்துக்களை கருக்கட்டலுக்காகத் ஏற்பாடு செய்கின்றனர். விந்தானது வழங்கியிடமிருந்து பெறப்பட்டிருப்பின், அவை உறைநிலையில் வைக்கப்பட்டு, முன்னரே தயார்ப்படுத்தப்படுகின்றன. பின்னர் கருக்கட்டல் செயல்முறைக்கு முன்னர் உறைநிலையிலிருந்து மீட்டுப் பயன்படுத்தப்படும். தரமான மேலதிக முட்டைகள் இருப்பின் அவை உறைநிலையில் வைத்துப் பாதுகாக்கப்படும். குறிப்பிட்ட பெண்ணின் கருத்தரிப்பு வெற்றியடையாவிடின், இந்த முட்டைகளைப் பயன்படுத்தி மீண்டும் முயற்சிக்கலாம். கருத்தரிப்பு வெற்றியடைந்திருப்பின், பெண்ணின் விருப்பத்தின் பேரில் வேறு குழந்தை பெற விரும்புபவர்களுக்கு வழங்கலாம். ஆனால் முட்டை, விந்துக்களை உறைநிலையில் வைப்பதற்கான அனுமதி உண்டா, இல்லையா என்பது நாட்டுக்கு நாடு வேறுபடும்.
கருக்கட்டல்
தகுந்த வளர்ப்பூடகம் ஒன்றில் விந்துக்களையும் முட்டைகளையும் 75,000:1 என்ற விகிதத்தில் கலந்து 18 மணித்தியாலங்களுக்கு விடுவர். இந்தக் குறிப்பிட்ட நேரத்திற்குள் பொதுவாகக் கருக்கட்டல் நிகழ்ந்திருக்கும். வீரியமான விந்துகள் குறைவாக இருந்தாலோ விந்துக்களின் நகர்வுத்திறன் குறைவாக இருந்தாலோ நல்ல வீரியமான ஒரு தனி விந்து தெரிவு செய்யப்பட்டு, முட்டையினுள் நேரடியாக உட்செலுத்தப்படும். இதனைக் குழியமுதலுருவுள்ளான விந்து உட்செலுத்தல் (intracytoplasmic sperm injection - ICSI) என்று அழைப்பர்.
கருக்கட்டியதும் தோன்றும் கருவணு கலப்பிரிவுக்குள்ளாகி இரு உயிரணுக்களைத் தோற்றுவிக்கும். இந்தக் கருவணுவானது, பின்னர் அதற்குரிய வளர்ப்பூடகத்துக்கு மாற்றப்பட்டு மேலும் வளர வழி செய்யப்படும். கிட்டத்தட்ட 48 மணித்தியாலங்களுக்கு, அதாவது கருவணு 6 அல்லது 8 உயிரணுக்களாகப் பிரியும்வரை அதே வளர்ப்பூடகத்தில் வளர வைக்கப்படும்.
சில வேளைகளில் முட்டைகளை வெளியே எடுத்து ஆணின் விந்துடன் சேர்த்து பெண்ணின் பலோப்பியன் குழாயினுள்ளே கருக்கட்டலுக்காக வைப்பார்கள். இதனைப் பலோப்பியன் குழாயினுள்ளான புணரி மாற்றீடு (gamete intrafallopian transfer) என அழைப்பர். அப்படியான நேரங்களில் கருக்கட்டல் பெண்ணின் உடலினுள்ளே நிகழ்வதால், அது வெளிச் சோதனை முறையாக அல்லது செயற்கைக் கல முறையாக அமைவதில்லை.
முளைய வளர்ப்பு
முட்டை எடுக்கப்பட்ட நாளிலிருந்து 3 நாட்களுக்குப் பொதுவாக முளையத்தை வளர்ப்பூடகத்தில் வளர்ப்பர். சில நாடுகளில், நல்ல தரமான கருவணுக்கள் தோன்றியிருப்பின், நீடிக்கப்பட்ட வளர்ப்பூடகத்தில், 5 நாட்கள் வரை கூட வளர விடுவர். அப்படி விடும் கருவணுக்கள் கருத்தரிக்கும் விகிதம் கூடுவதாக அறியப்படுகின்றது.[3]. ஆனால் பல நாடுகளில் 2-3 நாட்களில் ஊடகத்திலிருந்து இடமாற்றம் செய்யப்படுகின்றது.
பின்னர் முளையம் வேறு செயற்கை வளர்ப்பூடகத்திலோ, அல்லது பெண்ணின் கருப்பை யின் அகவுறை மேற்பரப்பிலிருந்து பெறப்படும் உயிரணுக்களின் மேலாகவோ வளர்க்கப்படும். செயற்கை வளர்ப்பூடகமாயின், அவை ஒரு தனி வளர்ப்பூடகமாகவோ, அல்லது வெவ்வேறு வளர்ப்பூடகத்துக்கு மாற்றப்படுவதன் மூலம் தொடர் வளர்ப்பூடகமாகவோ அமைக்கப்படலாம்.
இறுதியில் நன்கு வளர்ச்சியடைந்த முளையம் பெண்ணின் கருப்பையினுள் வைப்பதற்காகத் தெரிவு செய்யப்படும். பொதுவாக உருவவியல் அமைப்புக்களைப் பார்த்தே தரமான முளையம் தீர்மானிக்கப்படும். தேவைக்கு அதிகமான எண்ணிக்கையில் முளையம் இருப்பின் அவை உறைநிலையில் பாதுகாக்கப்படும். மீண்டும் அதே பெண்ணுக்குத் தேவைப்பட்டால் பயன்படுத்திக் கொள்ளலாம். இல்லையெனில் வேறு பெண்ணுக்கு அவருடைய அனுமதியுடன் வழங்கலாம்.
முளைய மாற்றம்
கருக்கட்டியவற்றுள் தரமான முளையங்களின் எண்ணிக்கை, பெண்ணின் வயது, உடல்நலம், மலட்டுத்தன்மை ஏற்பட்டதன் காரணங்கள் ஆகியவற்றைப் பொறுத்து கருப்பைக்குள் எத்தனை முளையங்களை வைப்பதென முடிவு செய்வர். இது நாட்டுக்கு நாடு வேறுபடும். ஒன்றுக்கு மேற்பட்ட முளையத்தை வைக்கும்போது கருத்தரிப்பதற்கான வாய்ப்பு கூடும் என்றாலும், ஒன்றுக்கு மேற்பட்ட கருக்கள் தங்குவதனால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளையும் கருத்தில் கொண்டு சில நாடுகளில் ஒரு முளையம் மட்டுமே பயன்படுத்தப்படும். வேறுசில நாடுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட முளையத்தை கருப்பையில் வைப்பர். அவ்வாறு வைத்தபின் ஒன்றுக்கு மேற்பட்ட முதிர்கருக்கள் கருப்பையில் வளருமிடத்தில், கருவைப் பெறுபவரின் விருப்பத்தின்பேரில் ஒரு முதிர்கருவை வைத்துக்கொண்டு ஏனையவற்றைக் கருக்கலைப்பு மூலம் அகற்றுவதும் உண்டு. முளையத்தை ஒடுங்கிய, நெகிழியினாலான கதீட்டர் எனப்படும் நுண்ணிய குழாய் துணையுடன் யோனி, கருப்பை வாய் (cervix) ஊடாகக் கருப்பையினுள் செலுத்துவர். பின்னர் முளையம் கருப்பைக்குள் வளரத் தொடங்கும்.
சோதனை முறையின் வெற்றி வாய்ப்பு
இந்தச் சோதனை முறையில், வெற்றி வீதம் என்பது கணக்கிட முனையும் விருப்ப விளைவைக் குறிக்கும். கணக்கிடும் முறையின் அடிப்படையில் இது கருத்தரிப்பு வீதத்தையோ உயிருடன் குழந்தைகள் பிறக்கும் வீதத்தையோ குறிக்கிறது.
கருத்தரிப்பு வீதம்
கருத்தரிப்பு வீதம் என்பது சோதனைக்குழாய் முறையில் முட்டைகளைப் பெற்று வெளியே கருக்கட்டியதும் முட்டைகளைப் பெண்ணின் கருப்பையினுள் வைத்தபின்னர் வெற்றியுடன் கருத்தரிப்பு ஏற்படும் வீதத்தைக் குறிக்கும். அதாவது, கருத்தரிப்பு சோதனையில் கருவானது கருப்பையில் பதிந்திருப்பதை உறுதிப்படுத்துவதையே இது குறிக்கும். குழந்தையின் இதயத் துடிப்பு கருத்துக்கெடுக்கப்பட வேண்டியதில்லை. அவ்வாறு இதயத் துடிப்பு கருத்தில் கொள்ளப்படுமாயின் அது 'வாழும் பிறப்பு வீதம்' எனக் கருதப்படும். பெண்களின் வயது கூடும்போது கருத்தரிப்பு வீதம் குறையும்.[4] அதேபோல் உறைய வைக்கப்பட்ட முட்டைகளைக் கருக்கட்டச் செய்யும்போது, புதிதாக எடுக்கப்படும் முட்டைகளைக் கருக்கட்டச் செய்வதைக் காட்டிலும் குறைந்த கருத்தரிப்பு வீதத்தையே அவதானிக்க முடிகின்றது.[4]
உயிரித் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியின் விளைவால் இந்தக் கருத்தரிப்பு வீதம் அண்மைய ஆண்டுகளில் கூடி வந்துள்ளது. இம்முறையால் ஏற்படும் கருத்தரிப்பு வீதம் #5% என கனடாவில் உள்ள அமைப்பொன்று அண்மையில் கணக்கிட்டுள்ளது.[5] பிரான்சில் செய்தவொரு கருத்துக் கணிப்பின்படி இந்த வெளிச் சோதனை முறைக் கருக்கட்டலை முயன்று பார்த்தபின்னர் 40 விழுக்காட்டுப் பெற்றோர்கள் இந்தப் பரிசோதனை முறையின்போதும், மேலும் 26 விழுக்காட்டுப் பெற்றோர்கள் இம்முறையை இடை நிறுத்திய பின்னரும் குழந்தையைப் பெறுகின்றனர். இச்சோதனை முறையை இடை நிறுத்தியபின்னர் பெறப்படும் குழந்தைப்பேறு 46% தத்தெடுப்பதன் மூலமும், 42% தன்னிச்சையாக நிகழும் கருத்தரிப்பு மூலமும் ஏற்படுகிறது.[6] இச்சோதனையை இடை நிறுத்தியபின்னர் தன்னிச்சையாக நிகழும் கருத்தரிப்புக்குக் காரணம் இயக்குநீர்கள் மூலகம் சூலகத்தின் தொழிற்பாடு கூட்டப்பட்டிருப்பதின் பின்விளைவாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது.
வாழும் பிறப்பு வீதம்
வாழும் பிறப்பு வீதம் என்பது சோதனைக்குழாய் முறையில் நடத்தப்படும் மொத்த சோதனைகளில் உயிருடன் குழந்தை பிறக்கும் விகிதத்தைக் குறிக்கும். இந்தக் கணக்கெடுப்பில் கருச்சிதைவு, செத்துப் பிறப்பு என்பன கருத்தில் கொள்ளப்படுவதில்லை. அத்துடன் இரட்டைக் குழந்தைகளோ, அல்லது மூன்று குழந்தைகளோ பிறந்தால்கூட, அந்த நிகழ்வை ஒரு குழந்தைப்பிறப்பு நிகழ்வாகவே கணக்கில் கொள்வர்.
வெற்றி தோல்விக்கான காரணிகள்
பெண்ணிண் வயது இந்தச் சோதனை முறை கருக்கட்டலின் வெற்றி தோல்வி வாய்ப்புகளுக்கான முக்கியமான காரணியாகும். அகவை 23 முதல் 29 வரை இருப்பது உகந்ததாக அறியப்பட்டுள்ளது.[7]. அத்துடன் கருத்தரிப்பு நிகழாமல் இருந்த காலத்தில் கருமுட்டை தூண்டும் இயக்குநீரின் அளவு, முட்டைக்குழியங்களின் எண்ணிக்கை என்பனவும் வெற்றி தோல்வியைப் பாதிக்கின்றன.[8]
மன அழுத்தம்
2005 ஆம் ஆண்டில் சுவீடனில் 166 பெண்களிடம் வெளிச் சோதனை முறை கருக்கட்டல் செயல்முறைகள் தொடங்குவதற்கு ஒரு மாதம் முன்னர் இருந்து தொடங்கிச் செய்யப்பட்ட ஓர் ஆய்வில், மன அழுத்தத்துக்கும் கருக்கட்டலில் கிடைக்கும் விளைவுக்கும் நேரடித் தொடர்பு எதுவும் இல்லையென அறியப்பட்டது.[9] எனவே இந்தச் செய்தியை சோதனைமூலம் குழந்தை பெற்றுக் கொள்ள வருபவர்களிடம் கூறும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தப்பட்டார்கள். இருப்பினும், இந்த வெளிச் சோதனை முறை கருக்கட்டலின் விளைவு மன அழுத்தத்தையும் மனத்தளர்ச்சியையும் உருவாக்கவல்லது. இந்த முயற்சியில் ஏற்படும் செலவுகளைப் பற்றிய கவலை கூட வசதி குறைந்த பெற்றோர்களுக்கு இவ்வகையான நிலைமையைத் தோற்றுவிக்கக்கூடும். அதேவேளை இந்த முறையைத் தவிர்த்து இருக்கும் பெற்றோருக்குத் தொடர்ந்து குழந்தையற்று இருக்கும் நிலைமையே கூட மன அழுத்தம், மனத்தளர்ச்சி போன்ற சிக்கல்களைத் தோற்றுவிக்கக்கூடும்.
குத்தூசி மருத்துவம்
வெளிச் சோதனை முறை கருக்கட்டலுடன் குத்தூசி மருத்துவத்தையும் சேர்த்து செய்வது நல்ல பலனைத் தரக் கூடியது எனச் சோதனைமுறை கருக்கட்டலில் தேர்ச்சி பெற்ற மருத்துவர்கள் கருதுகிறார்கள்.[10] பிரித்தானிய மருத்துவ ஆய்விதழில் வந்த ஒரு கட்டுரையின்படி வெளியே கருக்கட்டல் மூலம் பெறப்பட்ட முளையத்தைப் பெண்ணின் கருப்பைக்குள் வைக்கும்போது, இந்தக் குத்தூசி மருத்துவத்தையும் சேர்த்து செய்தால் கருக்கட்டலில் வெற்றி கிடைக்கும் அளவும், கருத்தரிப்பு காலத்தில் கருவின் வளர்ச்சியும், குழந்தை உயிருடன் பிறப்பதற்கான வாய்ப்பும் மிகுவதாக அறிந்துள்ளனர்.[11]
குத்தூசி மருத்துவத்தின் நான்கு முக்கிய பொறிமுறைகள் இவ்வாறான வெற்றிகளுக்குக் காரணமாகின்றன.
- நரம்பியல் சார்ந்த அகச்சுரப்பியியலில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள்
- கருப்பை, சூலகங்களுக்கான குருதி ஓட்டம் அதிகரித்தல்
- உயிரணு சைகைகளைக் கொண்ட சைட்டோகின் (cytokine) எனப்படும் புரத மூலக்கூற்றின் அளவில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள்
- மன அழுத்தம், மனக் கலக்கம், மனத்தளர்ச்சி ஆகியவை குறைவது
கருமுட்டைகளை செயற்கை முறையில் பிரித்தெடுக்கும்போது, வலியைப் போக்குவதற்காக வழங்கப்படும் வலி நிவாரணிகளுக்குப் பதிலாக, மின் குத்தூசி மருத்துவ முறையைப் பயன்படுத்துவதால், குறைந்த செலவினத்தைக் கொண்டிருப்பதுடன், குறைந்த காலத்திலேயே நல்ல மருத்துவ விளைவுகளைப் பெறலாம்.
வேறு காரணிகள்
- புகைத்தல், புகையிலை பிடித்தல் ஆகியவற்றில் ஈடுபடும் பெண்களுக்குச் சோதனை முறையில் உயிருடன் குழந்தை பிறக்கும் வீதத்தில் 34% வீய்வதுடன் கருத்தரிப்பில் கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்பும் 30% குடிவிடுகிறது.[12]
- உடல் நிறை குறியீட்டெண் 27-ஐ விடகு கூடும்போது, ஒப்பீட்டளவில் 20-27 குறியீட்டெண் உள்ளவர்களைவிட உயிருடன் குழந்தை பிறக்கும் விகிதம் 33% குறைகிறது.[12] அத்துடன் கருத்தரித்த பெண்களின் உடற் பருமன் அதிகரிப்பின், குழந்தையின் உடலில் வழக்கத்துக்கு மாறான நிலைகள், பிறவி ஊனம், கருச்சிதைவு, கருத்தரிப்பின் போதான நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், குழலியக்குருதியுறைமை போன்றனவும், குழந்தை பிறப்பின்போது வேறு சிக்கல்களும் ஏற்படலாம்.[12] சிறந்த உடல் நிறை குறியீட்டெண் 19-30 என வேறொரு அறிக்கை சொல்கிறது.[7]
- வெளிச்சோதனை முறை கருக்கட்டலுக்கு முன்னரே பாலோப்பியன் குழாய் அறுவைச் சிகிச்சைமூலம் அகற்றப்பட்டிருப்பின், பலோப்பியன் குழாயினுள் குருதி சேர்ந்து வேண்டாத விளைவுகளைத் தரும்.[7]
- முதல் கருத்தரிப்பு முயற்சியில் வெற்றி கிட்டியிருப்பின், மீண்டும் வெற்றி கிட்டுவதற்கான வாய்ப்பு மிகுதி.[7]
- கருப்பையினுள் வைக்கப்படும் முளையங்களின் எண்ணிக்கை[14]
- பயன்படுத்தப்படும் விந்தின் தரம்
- கருப்பையினுள் செலுத்தப்பட்ட கருவானது அங்கே நிலைநிறுத்தப்படுவதில் தன்னுடல் தாக்குநோய் பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கருதப்படுகிறது.[15]
சிக்கல்கள்
இந்த வெளிச் சோதனை முறை கருக்கட்டலில் பல நிலைகளில் சிக்கல்கள் ஏற்படலாம்.
அளவுக்கதிகமான தூண்டல்
அளவுக்கதிகமான கருமுட்டை தூண்டலால் சிக்கல்கள் வரலாம். இதனால் சூலகங்கள் வீங்கி வலியைக் கொடுக்கலாம். 30% பெண்களில் இது சிறிய அளவிலோ மிதமான அளவிலோ காணப்படும்.
பல குழந்தைகள்
இந்த வெளிச் சோதனை முறை கருக்கட்டலில் உள்ள முக்கியமான சிக்கல் பல குழந்தைகள் ஒன்றாக உருவாதலாகும். இம்முறையின் வெற்றியினைக் கருத்திற்கொண்டு ஒன்றுக்கு மேற்பட்ட முளையங்கள் பெண்ணின் கருப்பையில் பதிய வைக்கப்படுவதுண்டு. அவ்வேளையில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் உருவாதலுக்கான வாய்ப்பு அளிக்கப்படுகிறது. ஆனால் சில நாடுகளில் பல குழந்தைகள் உருவாவதினால் ஏற்படும் சிக்கலைத் தவிர்க்க ஒன்று அல்லது இரண்டு கருமுட்டைகள் மட்டுமே கருப்பையினுள் வைக்கலாம் என்ற கட்டுப்பாடு உள்ளது.
பிறப்புக் குறைபாடு
வெளிச் சோதனை முறை கருக்கட்டலால் பிறக்கும் குழந்தைகள் பிறப்புக் குறைபாட்டுடன் பிறக்கலாம் என்று சிலர் கூறினாலும், அவ்வாறு பிறப்புக் குறைபாட்டு வீதம் இயற்கை முறையுடன் ஒப்பிடும்போது இங்கே அதிகமாக இருப்பதற்கான சான்றுகள் இல்லையென்றும் கூறப்படுகின்றது.
வேறு சிக்கல்கள்
இந்த வெளிச்சோதனை முறை கருக்கட்டல் வெற்றியடையாத வேளையில் குழந்தைப்பேறு கிடைக்காத நிலையில் பெண்களில் மனத்தளர்ச்சி ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரித்திருப்பதாகவும், ஆனால் பதற்றக் குழப்பம் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகவில்லை என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அதேவேளை இந்த முறையில் ஏற்படும் வெற்றி-தோல்வி ஆண்களில் மனத்தளர்ச்சி, பதற்றக் குழப்பம் போன்ற சூழிடரை ஏற்படுத்தவில்லை என்றும் அவதானிக்கப்பட்டுள்ளது.[17] கருமுட்டைத் தூண்டலுக்காக இயக்குநீர்கள் செலுத்தப்படுவது பெண்களில் அதிகளவில் மனத்தளர்ச்சி ஏற்படக் காரணமாகலாம்.
சட்ட விதிமுறைகள்
வெளிச்சோதனை முறை கருக்கட்டல் தொடர்பான சட்டங்களும், விதிமுறைகளும் நாட்டுக்கு நாடு வேறுபட்டுக் காணப்படுகின்றன. அமெரிக்கா, ஆசுத்திரேலியா போன்ற நாடுகளில் வெவ்வேறு மாநிலங்களில்கூட இந்தச் சட்ட விதிமுறைகள் வெவ்வேறாகக் காணப்படுகின்றன.[18]
ஒவ்வொரு நாட்டிலும் முட்டை அல்லது விந்து அல்லது இரண்டுமே வழங்கிகளிடமிருந்து பெறப்பட முடியுமா, எத்தனை கருமுட்டைகளைக் கருப்பையில் வைக்கலாம், பதிலித்தாயை பயன்படுத்த அனுமதியுண்டா போன்ற பல்வேறு விடயங்களில் பல சட்ட விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன. தகப்பனாகப் போகும் ஆணின் விந்து தரம் குறைவாக இருப்பின், வேறொரு ஆணிடமிருந்து விந்தைப் பெற சில நாடுகளில் அனுமதியுண்டு. ஆனால் சில நாடுகளில் இம்முறைக்கு கணவனின் விந்தே பெற முடியும் என்ற கட்டுப்பாடு உள்ளது. அதேவேளை செயற்கை விந்தூட்டல் முறைக்கு விந்து வழங்கி ஒருவரிடமிருந்து விந்து பெறப்பட அனுமதிக்கப்படுகிறது. சில நாடுகளில் விந்து வழங்கும் ஆணின் அடையாளம் மறைக்கப்பட்டே இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது.[19]
வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
- ↑ About.com
- ↑ HCG Injection After Ovulation Induction With Clomiphene Citrate at Medscape. By Peter Kovacs. Posted: 04/23/2004
- ↑ Papanikolaou EG, Camus M, Kolibianakis EM, Van Landuyt L, Van Steirteghem A, Devroey P (2006). "In Vitro Fertilization with Single Blastocyst-Stage versus Single Cleavage-Stage Embryos". N Engl J Med 354 (11): 1139–46. doi:10.1056/NEJMoa053524. பப்மெட்:16540614.
- ↑ 4.0 4.1 "2009 Clinic Summary Report". Society for Reproductive Medicine. பார்க்கப்பட்ட நாள் 14 July 2011.
- ↑ Success rate climbs for in vitro fertilization The Canadian Press. December 15, 2008 at 8:27 PM EST
- ↑ de La Rochebrochard E, Quelen C, Peikrishvili R, Guibert J, Bouyer J (August 2008). "Long-term outcome of parenthood project during in vitro fertilization and after discontinuation of unsuccessful in vitro fertilization". Fertil. Steril. 92 (1): 149–56. doi:10.1016/j.fertnstert.2008.05.067. பப்மெட்:18706550.
- ↑ 7.0 7.1 7.2 7.3 7.4 Nice.org பரணிடப்பட்டது 2010-11-15 at the வந்தவழி இயந்திரம் Fertility: Assessment and Treatment for People with Fertility Problems. London: RCOG Press. 2004. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-900364-97-2.
- ↑ எஆசு:10.1093/humupd/dmq015
This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand - ↑ L. Schmidt, B.E. Holstein, U. Christensen, J. Boivin. Communication and coping as predictors of fertility problem stress: cohort study of 816 participants who did not achieve a delivery after 12 months of fertility treatment. Hum Reprod 2005; 20: 3248–56.
- ↑ Anderson BJ, Haimovici F, Ginsburg ES, Schust DJ, Wayne PM (2007). "In vitro fertilisation and acupuncture: clinical efficacy and mechanistic basis". Altern Ther Health Med 13 (3): 38–48. பப்மெட்:17515023.
- ↑ Manheimer E, Zhang G, Udoff L, et al. (March 2008). "Effects of acupuncture on rates of pregnancy and live birth among women undergoing in vitro fertilisation: systematic review and meta-analysis". BMJ 336 (7643): 545–9. doi:10.1136/bmj.39471.430451.BE. பப்மெட்:18258932.
- ↑ 12.0 12.1 12.2 Regulated fertility services: a commissioning aid - June 2009 பரணிடப்பட்டது 2011-01-03 at the வந்தவழி இயந்திரம், from the Department of Health UK
- ↑ Simon L, Brunborg G, Stevenson M, Lutton D, McManus J, Lewis SE (May 2010). "Clinical significance of sperm DNA damage in assisted reproduction outcome". Hum Reprod 25 (7): 1594–608. doi:10.1093/humrep/deq103. பப்மெட்:20447937.
- ↑ Factors affecting IVF success - February 2011, from IVF-infertility.com
- ↑ Gleicher, Norbert; Weghofer, Andrea, et al. (2010). "FMR1 Genotype with Autoimmunity-Associated Polycystic Ovary-Like Phenotype and Decreased Pregnancy Chance". PLoW ONE 5 (12). doi:10.1371/journal.pone.0015303. http://www.plosone.org/article/info:doi%2F10.1371%2Fjournal.pone.0015303. பார்த்த நாள்: 14 July 2011.
- ↑ எஆசு:10.1093/humupd/dmr007
This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand - ↑ Volgsten H, Skoog Svanberg A, Ekselius L, Lundkvist O, Sundström Poromaa I (March 2010). "Risk factors for psychiatric disorders in infertile women and men undergoing in vitro fertilization treatment". Fertil Steril 93 (4): 1088–1096. doi:10.1016/j.fertnstert.2008.11.008. பப்மெட்:19118826.
- ↑ Benenden Fertility Centre
- ↑ Are Sperm Donors Really Anonymous Anymore?