உதயனா வருமதேவன்
உதயனா வருமதேவன் Udayana Warmadewa Udayana the Great | |
---|---|
Sang Raja Maruhani Sri Dharmodayana Warmadewa | |
பாலி இராச்சியம் | |
ஆட்சிக்காலம் | 10-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி |
முன்னையவர் | செரி விஜய மகாதேவி |
பின்னையவர் | செரி அஜுனாதேவி |
இணை ஆட்சியாளர் | குணப்பிரியா தருமபத்தினி |
துணைவர் | குணப்பிரியா தருமபத்தினி aka மகேந்திரதத்தா |
குழந்தைகளின் பெயர்கள் | ஏர்லங்கா மரகத பங்கஜன் அனாக் உங்குஸ் |
மரபு | வர்மதேவ வம்சம் |
மதம் | இந்து சமயம் |
உதயனா வருமதேவன் அல்லது வருமதேவ தருமா (ஆங்கிலம்: Udayana Warmadewa அல்லது Dharmmodayana Warmadewa அல்லது Udayana the Great; இந்தோனேசியம்: Udayana Warmadewa அல்லது Raja Maruhani Sri Dharmodayana Warmadewa) என்பவர் பாலி இராச்சியத்தின் வர்மதேவ மரபு வழியில் அரசர் ஆவார். பாலி இராச்சியத்தின் அரசர்கள் வரிசையில் இவர் எட்டாவது இடத்தில் உள்ளார். இவரின் ஆட்சிக்காலம் கிபி 989-1011.[1][2]
இவர் குணப்பிரியா தருமபத்தினி என்று அழைக்கப்படும் ஜாவானிய அரசி மகேந்திரதத்தாவை மணந்தார். இவர்களின் பெயர்கள் பாலியில் காணப்படும் பல கல்வெட்டுகளிலும்,[1] ஜாவாவில் காணப்படும் கல்கத்தா கல்வெட்டிலும் (Calcutta Stone) எழுதப்பட்டுள்ளன.[3]
உதயனா வருமதேவன்; குணப்பிரியா தருமபத்தினி தம்பதியினர் பாலியை இணைந்து ஆட்சி செய்தனர்; இருவரின் பெயர்களிலும் கல்வெட்டுகளை வெளியிட்டனர்.[4]
கல்கத்தா கல்வெட்டு
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/ef/Pucangan_Ngusikan.jpg/260px-Pucangan_Ngusikan.jpg)
கல்கத்தா கல்வெட்டின் அசல் பெயர் புஞ்சாங்கான் கல்வெட்டு (Pucangan Inscription; Prasasti Pucangan). தற்போது இந்தக் கல்வெட்டு கொல்கத்தா இந்திய அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக உள்ளது.[5]
உதயனா வருமதேவன்; குணப்பிரியா தருமபத்தினி தம்பதியினரின் மகன் ஏர்லங்கா என்பவர் இந்தோனேசிய வரலாற்றில் மிகவும் பிரபலமானவர். முன்பு, 1016-ஆம் ஆண்டில் ஜாவாவில் கவிழ்க்கப்பட்ட ஈசான வம்சத்தின் அரசர் தருமவங்சா (Dharmawangsa) என்பவரின் பேரரசை ஏர்லங்கா மீட்டு எடுத்தார்; மேலும் ஜாவா பாலி ஆகிய இடங்களில் இருந்த இராச்சியங்களை ஆட்சி செய்தவரும் இவரே ஆவார்.[6]
திருமூர்த்தி வழிபாடு
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/25/Lambang_Kodam_Udayana.svg/200px-Lambang_Kodam_Udayana.svg.png)
உதயனா வருமதேவன் ஆட்சிக்காலத்தில், பாலி இராச்சியத்தில் சிவ சித்தாந்தம்; பாசுபதம்; பைரவர்; வைஷ்ணவம் போதம் (சோகதம்); பிராமணம்; ரிஷி; சோரா (கதிரவன்); கணபதியம் என ஒன்பது மதப் பிரிவுகள் இருந்தன. இருப்பினும் அவை பாரபட்சமின்றி ஒன்றாக வளர்க்கப்பட்டன. அவற்றை ஒன்றிணைக்க உதயனா வருமதேவன் முயற்சிகள் மேற்கொண்டு வெற்றியும் கண்டார்.
இந்த ஒன்பது பிரிவுகளும், உதயனா வருமதேவன் ஆட்சிக்காலத்தில், திருமூர்த்தி வழிபாட்டின் வடிவத்தில் ஒன்றிணைக்கப்பட்டன.[7]
மரபு
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/78/Udayana_rectorate_building.jpg/300px-Udayana_rectorate_building.jpg)
உதயனா வருமதேவன் பண்டைய பாலியின் தொடக்ககால வரலாற்று மாந்தர்களில் பெருமைக்குரியவராக அறியப்படுகிறார். மேலும் ஜாவாவின் வீர மன்னரான ஆயர்லங்காவின் தந்தையாகவும் உதயனா வருமதேவன் அடையாளம் காணப்படுகிறார். பாலினிய வரலாற்றில், பண்டைய ஜாவா அரசர்களைப் போல, ஒரு முக்கிய மாந்தராகவும் உதயனா வருமதேவன் பெருமைப் படுத்தப்படுகிறார்.
அவரைப் போற்றும் வகையில், அவரின் பெயர் பாலியின் கடந்த காலப் பெருமையுடன் தொடர்பு படுத்தப்படுகிறது. 1962-ஆம் ஆண்டில், இந்தோனேசியா, பாலியில் உள்ள தென்பசாரில் உள்ள பொதுப் பல்கலைக்கழகமான உதயனா பல்கலைக்கழகம் (id:Universitas Udayana) அவரின் பெயரில் நிறுவப்பட்டது.[8][9] தற்போது அந்தப் பல்கலைக்கழகத்தில் 28,000 மாணவர்கள் உயர்க்கல்வி பெறுகின்றனர்.[10]
மேலும், பாலியை தளமாகக் கொண்ட இந்தோனேசிய இராணுவ கட்டளைக்கு (Military Command Region) (Kodam), அவரின் நினைவாக, கோடாம் IX/ உதயனா (Kodam IX/Udayana) என்று பெயரிடப்பட்டது.[11]
மேலும் காண்க
மேற்கோள்கள்
- ↑ Marwati Djoened Poesponegoro, Nugroho Notosusanto: Sejarah nasional Indonesia: untuk SMP. Departemen Pendidikan dan Kebudayaan, 1984
- ↑ Coedès, George (1975-06-01). The Indianized States of Southeast Asia (in ஆங்கிலம்). University of Hawaii Press. p. 129. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8248-0368-1.
- ↑ Hanna, p.24
- ↑ John Norman Miksic; Goh Geok Yian (2016-10-14). Ancient Southeast Asia (in ஆங்கிலம்). Taylor & Francis. p. 417. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-317-27904-4.
- ↑ Poesponegoro, M.D.; Notosusanto, N. (1992). Sejarah nasional Indonesia: Jaman kuno. PT Balai Pustaka. ISBN 979-407-408-X.
- ↑ Cœdès, George (1968). The Indianized states of Southeast Asia. University of Hawaii Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780824803681.
- ↑ "Babad Bali-Sejarah Pura Samuan Tiga". www.babadbali.com. பார்க்கப்பட்ட நாள் 2022-12-03.
- ↑ Udayana, Unit Sumber Daya Informasi Universitas. "UNUD | Universitas Udayana". www.unud.ac.id (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-12-22.
- ↑ "Mau Tahu tentang Universitas Udayana? Yuk, Simak Informasinya! | Quipper Blog". Quipper Video Blog (in அமெரிக்க ஆங்கிலம்). 2017-02-01. பார்க்கப்பட்ட நாள் 2018-12-22.
- ↑ "The current number of active students is 28,000 coming from various regions of Indonesia and around 3,250 degree and non-degree international students coming from Europe, America, Asia, and Australia in the last three years". greenmetric.ui.ac.id. பார்க்கப்பட்ட நாள் 16 January 2025.
- ↑ Lowry (1996), pp. 56–57
சான்றுகள்
- Willard A. Hanna (2004). Bali Chronicles. Periplus, Singapore. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7946-0272-X.
- Lowry, Robert (1996). The Armed Forces of Indonesia. Sydney: Allen & Unwin. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-86448-144-7.