சாக்கோட்டை அமிர்தகலேசுவரர் கோயில்

தேவாரம் பாடல் பெற்ற
திருக்கலயநல்லூர் அமிர்தகலசநாதர் கோயில்[1]
பெயர்
புராண பெயர்(கள்):திருக்கலயநல்லூர்
பெயர்:திருக்கலயநல்லூர் அமிர்தகலசநாதர் கோயில்[1]
அமைவிடம்
ஊர்:திருக்கலயநல்லூர் (தற்போதைய பெயர் சாக்கோட்டை), கும்பகோணம்
மாவட்டம்:தஞ்சாவூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:அமிர்தகலசநாதர்
தாயார்:அமிர்தவல்லி, அமிர்தவல்லிநாயகி
தீர்த்தம்:நால்வேத தீர்த்தம்
சிறப்பு திருவிழாக்கள்:மகா சிவராத்திரி
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:சுந்தரர்
வரலாறு
நிறுவிய நாள்:புராதனக் கோவில்
அமைத்தவர்:சோழர்கள்

திருக்கலயநல்லூர் அமிர்தகலசநாதர் கோயில் அல்லது சாக்கோட்டை அமிர்தகலேசுவரர் கோயில் என்பது சுந்தரர் பாடல் பெற்ற ஒரு திருத்தலம் ஆகும். தேவாரப்பாடல் தலங்களில் இது 131வது திருக்கோயில் ஆகும்.[2] தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 68ஆவது சிவத்தலமாகும். கோட்டை சிவன் கோயில் என்பது நடைமுறைப் பெயர்.

திருத்தலப்பாடல்

இத்தலத்தின் திருத்தலப்பாடல் சுந்தரரால் அருளப்பெற்றது.

குரும்பைமுலை மலர்க்குழலி கொண்டதவங் கண்டு
    குறிப்பினொடுஞ் சென்றவள்தன் குணத்தினைநன் கறிந்து
விரும்பும்வரங் கொடுத்தவளை வேட்டருளிச் செய்த
    விண்ணவர்கோன் கண்ணுதலோன் மேவியஊர் வினவில்
அரும்பருகே சுரும்பருவ அறுபதம்பண் பாட
    அணிமயில்கள் நடமாடும் அணிபொழில்சூழ் அயலின்
கரும்பருகே கருங்குவளை கண்வளருங் கழனிக்
    கமலங்கள் முகமலருங் கலயநல்லூர் காணே ...

அமைவிடம்

இக்கோயில் கும்பகோணம்-வலங்கைமான் சாலையில் கும்பகோணத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது.

கும்பகோணம் சப்தஸ்தானம்

சித்திரை மாதத்தில் நடைபெறும் சப்தஸ்தான விழாவில் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் மங்களநாயகியுடன் அதிவிநோதமாக அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் திருக்கலயநல்லூர், தாராசுரம், திருவலஞ்சுழி, சுவாமிமலை, கொட்டையூர், மேலக்காவேரி ஆகிய தலங்களுக்கு எழுந்தருளி காட்சி கொடுத்துத் திரும்புவார்.[3] கும்பகோணம் சப்தஸ்தானத்தில் இத்தலமும் ஒன்று. சப்தஸ்தானங்கள் என அழைக்கப்படும் கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில், திருக்கலயநல்லூர் அமிர்தகலசநாதர் கோயில், தாராசுரம் ஆத்மநாதசுவாமி கோயில், திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோயில், கும்பகோணம் கோடீஸ்வரர் கோயில், மேலக்காவேரி கைலாசநாதர் கோயில் மற்றும் சுவாமிமலை சுந்தரேஸ்வரசுவாமி கோயில், சுவாமிமலை ஆகிய ஏழு ஊர்களில் நடக்கும் ஏழூர்த் திருவிழாவில் கும்பகோணம் முதலிடத்தைப் பெறுகிறது. சப்தஸ்தானப் பல்லக்கின் வெள்ளோட்டம் 7 பிப்ரவரி 2016இல் நடைபெற்றது.[4] 21 ஏப்ரல் 2016 மகாமகக்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியைத் தொடர்ந்து 23 ஏப்ரல் 2016 அன்று ஏழூர்ப் பல்லக்குத் திருவிழா என்னும் விழா நடைபெற்றது.[5] விழா நாளில் பல்லக்கு இக்கோயிலுக்கு வந்து சென்றது.

தல வரலாறு

மூலவர் விமானம்

ஊழிக்காலத்தில் உயிர்களை அடக்கிய கலசம் இங்கு தங்கியதால் கலசநல்லூர் என அழைக்கப்படுகிறது. சாக்கியர் (பௌத்தர்கள்) இங்கு அதிகம் வாழ்ந்ததாலும், சாக்கிய நாயனாரால் வழிபடப்பட்ட தலம் என்பதாலும் சாக்கியர் கோட்டை என அழைக்கப்பட்டு அதுவே பின் மருவி சாக்கோட்டை என ஆனது என்பர்.

இறைவன், இறைவி

இக்கோயிலிலுள்ள இறைவன் அமிர்தகலசநாதர் எனப்படுகிறார். இறைவி அமிர்தவல்லி (அமிர்தவல்லிநாயகி).

குடமுழுக்கு

மகாமகத்தை முன்னிட்டு கும்பகோணத்தில் பெரும்பாலான கோயில்களில் குடமுழுக்கு நடைபெறும் நிலையில் இக்கோயிலில் அக்டோபர் 22, 2015இல் குடமுழுக்கு நடைபெற்றது.[6][7]

சைவக் கோயில்கள்

அக்டோபர் 22, 2015 கும்பாபிஷேகம் படத்தொகுப்பு

மேற்கோள்கள்

இவற்றையும் பார்க்க