திபெத்து
திபெத்துக்கு வெளியே வாழும் திபெத்தியர்கள் உரிமை கொண்டாடும் பகுதி | |||||||||
மக்கள் சீனக் குடியரசு வரையறுக்கும் திபெத் பகுதி | |||||||||
திபெத் தன்னாட்சிப் பகுதி (சீனாவின் கட்டுப்பாட்டில்) | |||||||||
அக்சாய் சின் என்ற பகுதியின் ஒரு பாகம் (இந்தியா உரிமை கொண்டாடுகிறது) | |||||||||
திபெத் தன்னாட்சிப் பகுதியின் ஒரு பகுதியாக சீனா உரிமை கொண்டாடுகிறது. | |||||||||
வரலாற்றுரீதியாக திபெத் கலாசார மையத்தில் அடங்கும் மற்றைய பகுதிகள் |
திபெத் நடுவண் ஆசியாவில் உள்ள மேட்டுச் சமவெளியில் அமைந்த ஒரு நிலம். அந்நிலம் சார்ந்த மக்களான திபெத்தியர்களின் தாயகம். ஏறத்தாழ 4,900 மீட்டர் (16,000 அடி) ஏற்றம் கொண்ட இந்தப் பகுதி, உலகின் மிக உயரத்தில் அமைந்தது என்பதால் அதை "உலகத்தின் கூரை" என்று பொதுவாக குறிப்பிடுவார்கள். புவியியல்படி, திபெத், நடுவண் ஆசியாவின் ஒரு பகுதி என்று யுனெஸ்கோ, மற்றும் பிரிட்டானிகா[1] கலைக்களஞ்சியம் கருத, சில கல்விசார் நிறுவனங்கள், கேள்விக்கு உரியதாக, அது தெற்காசியாவின் பகுதியாகக் கருதுகிறார்கள். தற்போது இதன் பெரும்பாலான பகுதிகள் திபெத் தன்னாட்சிப் பகுதி என்ற பெயரில் சீன மக்கள் குடியரசின் ஒரு பகுதியாக விளங்குகிறது.
சீனாவின் 5 தன்னாட்சி பிரதேசங்களில் திபெத் தன்னாட்சி பிரதேசமும் ஒன்றாகும். இங்கு திபெத் இனம் முக்கியமாக வாழ்கின்றது. சீனாவின் தென்மேற்கு பிரதேசத்திலும், சின்காய் திபெத் பீடபூமியின் தென்மேற்கு பிரதேசத்திலும் இது அமைந்துள்ளது. இதன் தென் பகுதியும் மேற்கு பகுதியும் மியன்மர், இந்தியா, பூட்டான், நேபாளம் ஆகிய நாடுகளை ஒட்டியமைந்துள்ளது. எல்லை கோட்டின் மொத்த நீளம் சுமார் 4000 கிலோமீட்டராகும். முழு நிலபரப்பு 12 இலட்சத்து 20 ஆயிரம் சதுர கிலோமீட்டராகும். சீனாவின் மொத்த நிலபரப்பில் இது 12.8 விழுக்காடாகும்.
திபெத் தன்னாட்சி பிரதேசம் சராசரியாக கடல் மட்டத்திலிருந்து 4000 மீட்டர் உயரத்தில் இருக்கின்றது. சின்காய் திபெத் பீடபூமியின் முக்கிய பகுதி இதுவாகும். உலகத்தின் கூரை என்று இது போற்றப்படுகின்றது. இதன் மக்கள் தொகை 26 இலட்சமாகும். இதில் திபெத்திய மக்களின் எண்ணிக்கை 25 இலட்சம். மொத்த மக்கள் தொகையில் 96 விழுக்காடாக திபெத்தியர் உள்ளனர். சீனாவில் மிக குறைந்த மக்கள் தொகையுடைய மிக குறைந்த மக்கள் அடர்த்தியுடைய பிரேதேசமாக திபெத் திகழ்கின்றது. ஒரு சதுர கிலோமீட்டருக்கு சராசரியாக 2 பேர் மட்டுமே வசிக்கின்றனர்.[2]
புவியியல்
சின்காய் திபெத் பீடபூமியின் இயற்கை தனிச்சிறப்புடையது. உலகின் பீடபூமிகளில் இது முக்கிய இடம் வகிக்கின்றது. புவியின் 3வது துருவம் என்று இது புகழப்படுகின்றது. மிக உயரத்தில் அமைந்திருப்பதும், அதனால் நிலவும் குளிரான காலநிலையுமே இதற்குக் காரணம். கடல் மட்டத்திலிருந்து 4000 மீட்டர் உயரத்தில் இது அமைந்து, உயரமான மலைகளால் சூழப்பட்டுள்ளது. பீடபூமியிலும் பல உயர் மலைகள் இருக்கின்றன. கடல் மட்டத்திலிருந்து 4500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இதன் நடுப்பகுதியில் சராசரி வெப்பநிலை சுழியத்திற்கும் கீழ் இருக்கின்றது. மிகவும் வெப்பமான காலத்திலோ, சராசரி வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸுக்கு கீழே உள்ளது.
சின்காய் பீடபூமியில், கடல் மட்டத்திற்கு மேல் 6000 மீட்டர் முதல் 8000 மீட்டர் வரை உயரத்தில் பல சிகரங்கள் உள்ளன. உலகில் மிக இளமையான பீடபூமியாகவும், பல ஆசிய ஆறுகளின் பிறப்பிடமாகவும் இது திகழ்கின்றது. 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் திகதி நேபாளத்தில் பதிவான நில நடுக்கம் இங்கும் அதிர்வை ஏற்படுத்தியது. இதில் 25 பேர் மரணம் அடைந்தார்கள்.[3]
வரலாறு
திபெத்தின் பல பகுதிகளை ஏழாம் நூற்றாண்டில், சாங்ட்சன் கேம்போ (Songtsän Gampo) எனும் அரசர் ஒருங்கு இணைத்தார். 1600 இன் தொடக்க காலத்தில் இருந்து தலாய் லாமாக்கள் என்று பொதுவாக அழைக்கப்படும் ஆன்மீக தலைவர்கள், திபெத்திய மைய நிருவாகத்தின் தலைமையை (பெயரளவிலாவது)[4] ஏற்றிருந்தார்கள். இவர்கள், அவலோகிதர் என்ற போதிசத்துவ தருமத்தின் வெளிப்பாடுகளாக நம்பப்படுகிறார்கள்.
1644 முதல் 1912 வரை சீனாவை ஆண்ட மஞ்சூரிய அரசு, 1571 இல், தலாய் லாமாவை திபெத்தின் அரசியல் மற்றும் ஆன்மீக தலைவராக ஏற்படுத்தியது. 17 ஆம் நூற்றாண்டிலிருந்து 1959 வரை, தலாய் லாமாவும் அவரது பிரதிநிதிகளும் வழிவழி தலைநகரான லாசாவை இருப்பிடமாகக் கொண்டு திபெத்தின் பெரும்பகுதியின் அரசியல் அதிகாரம் பெற்றவர்களாக, மதம் மற்றும் நிர்வாக பணி செய்து வந்தார்கள்.
19ஆம் நூற்றாண்டில், விக்டோரியா மகாராணியின் பிரித்தானியாவுக்கும் ருசியாவின் சார் மன்னர்களுக்கும் இடையே, நடுவண் ஆசியாவில், நடந்த ஆதிக்கப் போட்டியில், ஃபிரான்சிஸ் யன்ங்ஹஸ்பண்ட் (Francis Younghusband) என்ற கவர்ச்சியான போர்மறவரின் தலைமையில் ஒரு பிரித்தானிய படை இறுதியாக திபெத்தில் உள்புகுந்து, திபெத்தின் படைவீரர்களை மாக்சிம் துப்பாக்கி கொண்டு வீழ்த்தி, 1904 இல் லாசாவை கைப்பற்றியது. இந்த படையெடுப்பு, பிரித்தானியாவுக்கும் திபெத்துக்கும் ஓர் அமைதி உடன்பாடு ஏற்பாட்டுக்கு வழி செய்தது. சில திபெத் வரலாற்றாளர்கள், இந்த தொலைதூர மலைநாடு ஒரு தனிநாடு என்பதற்கு, இந்த உடன்பாட்டை ஆதாரமாக காண்பார்கள். இந்த படையெடுப்பால் சீனப் பேரரசு கொதித்தெழுந்தாலும், அதை நிறுத்த ஒன்றும் செய்ய இயலாமல், திபெத்தின் மேல் தனது கோரிக்கையை காக்கும் வண்ணம், பிரிட்டனுடன் ஓர் அரசுறவுப் (diplomatic) போராட்டம் நடத்தியது[5].
திபெத் 1911 இல் சீனாவிடம் இருந்து விடுதலை அறிவிப்பு செய்தது. ஆனால், எந்த ஒரு மேற்கத்திய நாடும் அதன் விடுதலைக்கு ஆதரவாக வரவோ அல்லது தூதரக உறவு வைத்துக்கொள்ளவோ ஒருபோதும் முன்வரவில்லை[6]. சீன மக்கள் குடியரசு, வரலாற்று பதிவுகளை சுட்டிக்காட்டியும், திபெத்திய அரசுடன் 1951 இல், பதினேழு அம்ச உடன்பாட்டை கையொப்பம் பெற்றும், திபெத்தை சீனாவின் ஒரு பகுதியாக கோரிக் கொண்டது.
திபெத்தில் சீனாவின் தளைக்குக் கட்டுப்படாத பல ஆட்சியாளர்கள் இருந்தனர் என்பதற்கு வரலாலற்றுப் பதிவுகள் உள்ளன. ஆனால் சீனர்களோ, அவரது பேரரசின் தூதர்கள் 1727 இல் இருந்தே இருப்பதால், லாசா சீனப்பேரரசுக்கு கட்டுப்படவேண்டும் என்கிறார்கள்[3]. 1914 இல் கூட்டிய சிம்லா மாநாடு, யாங்ட்சி (Yangtze) ஆறும் இமயமும் திபெத்தின் எல்லைகளாக அமைத்தன. ஆனால் சீனா திபெத்தின்மேல் உள்ள தன் ஆதிக்கத்தை கோர ஓயவில்லை. அடுத்த 35 ஆண்டுகளில் அவர்கள் கையாண்ட வித்தைகள், திபெத்தின் தனிநாட்டுக்கு, பன்னாட்டு ஆதரவு கிட்டாமல் போனது[5].
1949-1950களில், சீன மக்கள் குடியரசு ஏற்படுத்திய உடனேயே, தலைவர் மா சே துங், மக்கள் விடுதலை படை கொண்டு, திபெத்தை விடுவிக்க ஆணை இட்டார். திபெத்தின் பல பிரபுக்களும், பாட்டாளிகளும் சீன அரசுக்கு ஒத்துழைத்தனர். என்றாலும் நில சீர்திருத்தங்களாலும், மற்றும் புத்த மதம் தொடர்பாகவும் சண்டைகள் தோன்றின. 1959 இல் தலாய் லாமா இந்தியாவில் அடைக்கலம் பெற்றார்[5].
1972 இல் அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன் மாவோவுடன் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ள முடிவெடுக்கும் வரை சி. ஐ. ஏ. உளவு நிறுவனம் மறைமுக கொரில்லா போருக்கு நிதி உதவி செய்து வந்தது. பஞ்சம், மற்றும் கலாச்சார புரட்சிக் காலத்தில் சீனாவின் வன்முறைக்கு, திபெத்தின் எதிர்ப்பு வலுப்பட்டாலும் பயனின்றி போயின[5].
தற்காலத்தில், உலகின் எல்லா நாடுகளும் திபெத்தின்மேல் சீனாவின் இறையாண்மையை ஏற்றுக் கொண்டுள்ளன. புலம்பெயர்ந்து அமைந்த திபெத்திய அரசின் தலைவரான தலாய் லாமா, திபெத்தில், சீனாவின் இறையாண்மையை மறுக்கவில்லை. "திபெத் தனிநாடு கேட்கவில்லை. தன்னாட்சிதான் கேட்கிறது" என்கிறார். ஆனால், சீனர்களோ, அவரோடு பேச்சுவார்த்தை நடத்துவது இல்லை என்று முன்னிலும் திடமாக இருக்கிறார்கள்.
தேசிய இனங்கள்
திபெத்தின மக்கள் திபெத் தன்னாட்சி பிரதேசத்தில் குழுமி வசிக்கின்றனர். இங்கே வசிக்கும் திபெத்தின மக்கள் தொகை மொத்த திபெத்தின மக்கள் தொகையில் 45 விழுக்காடாகும். திபெத் இனம் தவிர, ஹான், ஹுய், மன்பா, லோபா, நாசி, நூ, துலுங் முதலிய 10க்கு மேற்பட்ட தேசிய இன மக்கள் தலைமுறை தலைமுறையாக இங்கே வசிக்கின்றனர். மன்பா, லோபா, நாசி முதலிய வட்டாரங்கள் இங்கே இருக்கின்றன.
ஆட்சிப் பிரிவுகள்
திபெத் 74 மாவட்டங்களை கொண்டது.[7]
கல்வி
கடந்த பதினைந்து ஆண்டுகளாக திபெத்தில் அனைவருக்கும் இலவசமாக கல்வி கற்பிக்கப்படுகிறது.[7]
இதனையும் காண்க
- திபெத்தியப் பேரரசு
- யுவான் ஆட்சியில் திபெத்
- குயிங் ஆட்சியில் திபெத்
- நேபாள திபெத்தியப் போர் – (ஏப்ரல் 1855 - மார்ச் 1856)
- திபெத் மீதான பிரித்தானியப் படையெடுப்பு – 1904
- லாசா உடன்படிக்கை - 7 செப்டம்பர் 1904
- திபெத் மீதான சீனாவின் படையெடுப்பு (1910)
- திபெத் (1912–1951)
- திபெத்தை சீன மக்கள் குடியரசுடன் இணைத்தல் - 1951
- 1959 திபெத்தியக் கிளர்ச்சி
- திபெத் தன்னாட்சிப் பகுதி - 1965 முதல் சீனாவின் கீழ்
- திபெத்தியர்களின் மைய நிர்வாகம்
- தலாய் லாமா டென்சின் கியாட்சோ
உசாத்துணைகள்
- ↑ பிரிட்டானிகா கலைக்களஞ்சியம்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-12-01. பார்க்கப்பட்ட நாள் 2012-05-03.
- ↑ நிலநடுக்கத்துக்கு 25 பேர் பலி, 117 பேர் காயம் இந்து தமிழ் 28.ஏப்ரல் 2015
- ↑ Wang Jiawei, "The Historical Status of China's Tibet", 2000, pp. 170–3
- ↑ 5.0 5.1 5.2 5.3 http://www.timesonline.co.uk/tol/news/world/asia/article3559353.ece
- ↑ Virtual Tibet: Searching for Shangri-La from the Himalayas to Hollywood, page 24
- ↑ 7.0 7.1 "சீன வானொலி செய்திகளில் திபெத் பற்றி". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2014-02-06.
வெளி இணைப்புகள்
- லண்டனில் திபெத்தின் அலுவலக இணையத்தளம் பரணிடப்பட்டது 2009-09-27 at the வந்தவழி இயந்திரம்
- நாடு கடந்த நிலையில் திபெத்திய அரச இணையத்தளம்
- திபெத்திய விடுதலை இயக்கம் பரணிடப்பட்டது 2013-07-24 at the வந்தவழி இயந்திரம்