நோபல் பரிசு

நோபல் பரிசு
The Nobel Prize
A golden medallion with an embossed image of Alfred Nobel facing left in profile. To the left of the man is the text "ALFR•" then "NOBEL", and on the right, the text (smaller) "NAT•" then "MDCCCXXXIII" above, followed by (smaller) "OB•" then "MDCCCXCVI" below.
விளக்கம்இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவமும் உடலியங்கியலும், அமைதி, பொருளியல் ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவோருக்கு ஆண்டு தோறும் வழங்கப்படும் பரிசு.
நாடுசுவீடன்
நோர்வே (அமைதிப் பரிசு மட்டும்)
வழங்குபவர்சுவீடன் அக்காதமி,
ரோயல் சுவீடிய அறிவியல் கழகம்,
கரொலீன்ஸ்கா கல்விநிலையம்,
நோர்வே நோபல் குழு
முதலில் வழங்கப்பட்டது1901
இணையதளம்nobelprize.org

நோபெல் பரிசு (Nobel Prize) அல்லது நோபல் பரிசு (பழைய வழக்கு) என்பது ஒப்பற்ற ஆய்வு மேற்கொண்டவர்களுக்கும் பெரும் பயன் விளைவிக்கும் தொழில்நுட்பங்கள் அல்லது கருவிகளைக் கண்டுபிடித்தவர்களுக்கும் சமூகத்திற்கு அரிய தொண்டாற்றியவர்களுக்கும் வழங்கப்படும் உலகளவில் பெரிதும் மதிக்கப்படும் பரிசு ஆகும். அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் சில நிறுவனங்களுக்கும் வழங்கப்படுவது உண்டு. மார்ச் 2005 வரை 770 நோபெல் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. எனினும், சிலர் இந்தப் பரிசைப் பெற்றுக்கொள்ள மறுத்ததும் உண்டு. இது வேதியியலாளர் ஆல்ஃபிரட் நோபெல் என்பவரால் 1895ல் தொடங்கப்பட்டது. முதல் பரிசு 1901 ல் வழங்கப்பட்டது. சில ஆண்டுகள் ஒரு பரிசு கூட அறிவிக்கப்படாமல் போனதும் உண்டு. எனினும், குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது இந்தப் பரிசு அறிவிக்கப்படும். நோபெல் பரிசு, திரும்பப் பெறத்தக்கதல்ல.

இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம் அல்லது உடலியங்கியல் மற்றும் அமைதி ஆகியவையே ஆல்ஃபிரட் நோபெல் அவர்களின் உயில் படி ஏற்படுத்தப்பட்ட பரிசுகளாகும். பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு 1968 ல் சுவீடன் நடுவண் வங்கியினால் அதன் 300 வது ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமாக ஏற்படுத்தப்பட்டது.

பரிசு பெறும் ஒவ்வொருவரும், ஒரு தங்கப்பதக்கமும் ஒரு பட்டயமும், நோபெல் அறக்கட்டளையின் அவ்வருட வருமானத்தைப் பொறுத்து பரிசுப் பணமும் பெறுவர்.

வரலாறு

தான் இறந்ததாக "மரணத்தின் வியாபாரி இறப்பு" என்ற தலைப்பில் வெளிவந்த செய்தி ஆல்ஃபிரட் நோபலைத் துணுக்குறச் செய்தது.

ஆல்ஃபிரட் நோபல் (ஒலிப்பு 1833, அக்டோபர் 21 அன்று சுவீடனிலுள்ள ஸ்டாக்ஹோம் நகரில் பிறந்தார். அவரது குடும்பம் ஒரு பொறியியலாளர் குடும்பமாகும்[1]. இவரது வாழ்நாளில் வேதியாளராயும் பொறியாளராயும் கண்டுபிடிப்பாளராயும் விளங்கினார். 1894-ஆம் ஆண்டு போஃபர்சு இரும்பு மற்றும் எஃகு ஆலையை நோபல் வாங்கினார். அதனை பெரும் ஆயுத உற்பத்தி தொழிற்சாலையாக மாற்றினார். பலவித புகையற்ற ராணுவ வெடிபொருட்களுக்கு முன்னோடியான பாலிஸ்டிக்-கை இவர்தான் கண்டுபிடித்தார். இதுவே பிரித்தானியத் தயாரிப்பான புகையற்ற வெடிபொருளான கார்டைட்-டுக்கும் முன்னோடியாகும். அதைச் சார்ந்து ஒரு பதிப்புரிமை வழக்கும் நோபலால் தொடரப்பட்டிருந்தது. நோபல் தன் வாழ்நாளில் மிகப்பெருமளவில் செல்வம் சேர்த்தார். அவரது வருமானத்தில் பெரும்பகுதி அவரது 355 கண்டுபிடிப்புகளால் கிடைத்தது, அவற்றுள் முக்கியமானது டைனமைட் ஆகும்.[2].

1888-ல் ஒரு பிரெஞ்சு செய்தித்தாளில் "மரணத்தின் வியாபாரி இறப்பு" என்ற தனது இறப்புச் செய்தி கண்டு அதிர்ந்தார். ஆனால் அப்போது இறந்தவர் ஆல்ஃபிரடின் சகோதரரான லுட்விக் ஆவார். ஆனால் அச்செய்தி நோபலை துணுக்குறச் செய்தது, தான் இறந்தபிறகு எவ்வாறு நினைவில் வைக்கப்படுவோம் என்று தீவிரமான சிந்தனைக்கு ஆளானார். இதுவே அவரை தன்னுடைய உயிலை மாற்றி எழுதச் செய்தது.[3]. 63 வயதான போது திசம்பர் 10,1895 அன்று இத்தாலியின் சான் ரெமோ மாளிகையில் ஆல்ஃபிரட் நோபல் காலமானார்[4].

அனைவரும் பெருத்த வியப்புக்கு உள்ளாகும் வகையில் நோபலின் கடைசி உயிலில், தனது சொத்தின் பெரும்பகுதி 'மனித இனத்தின் முன்னேற்றத்துக்கு' பங்களித்தவர்களுக்கு இயற்பியல், வேதியியல், அமைதி, மருத்துவம் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் பரிசு வழங்க பயன்படுத்தப்படவேண்டுமெனக் குறிப்பிட்டிருந்தார்[5]. நோபல் தன் வாழ்நாளில் பல உயில்களை எழுதியிருந்தார். அவரது கடைசி உயில் நவம்பர் 27, 1895 அன்று பாரிசிலிருந்த சுவீடன்-நார்வே மன்றத்தில் எழுதப்பட்டு அவரால் கையொப்பமிடப்பட்டிருந்தது[6][7]. தனது சொத்தில் 94%-தினை, 31 மில்லியன் சுவீடன் குரோனார்(2008 மதிப்பின்படி 150 மில்லியன் யூரோ, 186 அமெரிக்க டாலர்கள்), ஐந்து நோபல் பரிசுகளை வழங்குவதற்காக எழுதி வைத்தார்.[8]. அவரது உயிலின் மீதிருந்த ஐயங்களால் ஏப்ரல் 26, 1897 அன்றுதான் நார்வேயின் பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது[9]. நோபலின் உயிலை நடைமுறைப்படுத்த வேண்டியவர்களால், ராக்னார் சோல்மான் மற்றும் ருடோல்ஃப் லியெக்விஸ்ட், அவரது சொத்தை பரமாரிக்கவும் பரிசுகள் வழங்குதலை ஒழுங்குபடுத்த/முறைப்படுத்தவும் "நோபல் அறக்கட்டளை" அமைக்கப்பெற்றது.[10]

நோபலின் குறிப்புகளின்படி, அமைதிக்கான நோபல் பரிசை வழங்க நார்வே நோபல் குழு அமைக்கப்பெற்றது, அதன் உறுப்பினர்கள் உயில் அங்கீகரிக்கப்பட்ட சில நாட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன் பின்னர், ஏனைய பரிசுகளை வழங்கவும் குழுக்கள் அமைக்கப்பட்டன. அவை கரோலின்சுகா நிறுவனம் (சூன் 7), சுவீடன் சங்கம் (சூன் 9), ராஜாங்க சுவீடன் அறிவியற் கழகம் (சூன் 11).[11] எவ்வாறு பரிசுகள் வழங்கப்படவேண்டுமென்ற விதிமுறைகள் நோபல் அறக்கட்டளையால் அங்கீகரிக்கப்பட்டபின், மன்னர் ஆஸ்கர் II -வினால் 1900-ல் பிரகடனப்படுத்தப்பட்டன.[5] 1905-ஆம் ஆண்டு நார்வேயும் சுவீடனும் பிரிந்தன. அதன் பின்னர், அமைதிக்கான நோபல் பரிசை அளிப்பதன் பொறுப்பு நார்வேயின் வசமும் மற்ற பரிசுகளை வழங்கும் பொறுப்பு சுவீடனிலிருக்கும் அமைப்புகளின் வசமும் உள்ளது.[9]

நோபல் அறக்கட்டளை

A paper with stylish handwriting on it with the title "Testament"
Alfred Nobel's will stated that 94% of his total assets should be used to establish the Nobel Prizes.

நோபல் பரிசுகளின் நிதி மூலங்களையும் அதன் நிர்வாகத்தையும் கவனிக்க சூன் 29, 1900 அன்று "நோபல் அறக்கட்டளை" ஒரு தனியார் நிறுவனமாக ஆரம்பிக்கபபட்டது.[12] நோபெலின் உயிலின்படி, அறக்கட்டளையின் முதற்கடமை நோபெல் விட்டுச்சென்ற சொத்தினை பாதுகாப்பதாகும். சகோதரர்கள் ராபர்ட் மற்றும் லுட்விக் நோபெல் அசர்பெய்ஜானிலிருந்த எண்ணெய் நிறுவனங்களில் பெருமளவு முதலீடு செய்திருந்தனர். சுவீடன் நாட்டு வரலாற்றாசிரியரான இ. பார்கென்கிரன், நோபெல் குடும்ப வரலாற்றுத் தொகுப்புகளை நேரில் பார்வையிட்டவர், அவரின் கூற்றுப்படி பாகு-விலிருந்து நோபெலின் முதலீடுகளை திரும்பப் பெற்றதே பரிசுகளை வழங்க ஆரம்பத்தில் மிக்க உறுதுணையாயிருந்தது.[13] நோபெல் அறக்கட்டளையின் மற்றொரு பணி, பரிசுகளை உலக அளவில் கொண்டு சேர்ப்பதும் பரிசு வழங்கல் நிர்வாகத்தை மேற்பார்வையிடுவதுமாகும். அறக்கட்டளை பரிசுக்குரியவர்களைத் தேர்ந்தெடுப்பதில் எந்த பங்கும் எடுப்பதில்லை.[14][15] பல வகைகளில் இந்த அறக்கட்டளை ஒரு முதலீட்டுக் குழுமமாகவே செயல்படுகிறது, நோபெலின் சொத்தை முதலீடாகக் கொண்டு பரிசு வழங்கவும் அதன் நிர்வாகத்துக்குமான நிதியை அது உற்பத்தி செய்கிறது. 1946-லிருந்து சுவீடனில் அனைத்து வித வரிகளிலிருந்தும் நோபெல் அறக்கட்டளைக்கு விலக்கு அளிக்கப்பட்டது. 1953-லிருந்து ஐக்கிய அமெரிக்காவிலும் அனைத்து வித வரிகளிலிருந்தும் விலக்கு அளிக்கப்பட்டது.[16] 1980-களிலிருந்து இதன் முதலீடுகள் பெரும் லாபமீட்டிவருகின்றன. திசம்பர் 31, 2007-படி நோபெல் அறக்கட்டளையின் சொத்து மதிப்பு 3.628 பில்லியன் சுவீடன் குரோனார்கள் (560 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) ஆகும்.[17]

விதிகளின்படி, அறக்கட்டளையானது ஸ்டாக்ஹோமைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும். மேலும், சுவீடன் அல்லது நார்வே நாட்டின் குடிமக்கள் ஐவர் இந்த அறக்கட்டளையின் உறுப்பினர்களாக இருப்பர். அறக்கட்டளையின் தலைவர், மன்னருக்கான ஆலோசனைக்குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார். மற்ற நான்கு உறுப்பினர்களும் நோபல் பரிசுகளுக்குரியவர்களைத் தேர்ந்தெடுக்கும் அமைப்புகளின் அறங்காவலர்களால் தேர்ந்தெடுக்ககப்படுவர். அறக்கட்டளை உறுப்பினர்களிடையே அதன் செயற்குழு இயக்குனரும், ஒரு துணை இயக்குனர் மன்னருக்கான ஆலோசனைக் குழுவாலும், மேலும் இரு இணை இயக்குனர்கள் அமைப்புகளின் அறங்காவலர்களாலும் தேர்ந்தெடுக்கப்படுவர். எனினும், 1995-லிருந்து அனைத்து உறுப்பினர்களும் நோபல் பரிசு அமைப்புகளின் அறங்காவலர்களாலேயே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இயக்குனர் மற்றும் துணை இயக்குனரும் அறக்கட்டளை உறுப்பினர்களாலேயே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அறக்கட்டளை உறுப்பினர்கள் தவிர்த்து, நோபல் அறக்கட்டளையானது அனைத்து பரிசு வழங்கும் அமைப்புகள்(சுவீடன் ராஜாங்க அறிவியற் கழகம், கரோலின்சுகா நிறுவனம், சுவீடன் கழகம், நார்வே நோபெல் கழகம்), அவற்றின் அறங்காவலர்கள் மற்றும் தணிக்கையாளர்களை உள்ளடக்கியது.[17]

முதல்முறை வழங்கப்பட்ட பரிசுகள்

A black and white photo of a bearded man in his fifties sitting in a chair.
வில்கேல்ம் கான்ராட் ரோங்க்டேன்
x கதிர்களைக் கண்டுபிடித்ததற்காக பௌதீகத்துக்கான முதல் நோபல் பரிசை வென்றவர்

நோபல் அறக்கட்டளை நிறுவப்பட்டு அதன் விதிமுறைகளும் வகுக்கப்பட்ட பின்னர், நோபல் கழகங்கள் பரிசுகளுக்கான முதல் முறை வழங்கப்படப்போகும் முன்மொழிவுகளைத் தயார் செய்தன. அதன் பின்னர் தெரிவு செய்யப்பட்ட பட்டியல்கள் பரிசு வழங்கும் கழகங்களுக்கு அனுப்பப்பட்டன. பரிசுகளின் நம்பகத்தன்மையைக் கூட்டும் வகையில், நார்வே நோபல் கழகம் புகழ்பெற்ற யார்கன் லொவ்லான்ட், யார்ன்ஸ்ட்யெர்ன் யார்ன்சன் மற்றும் யொகானசு ஸ்டீன் ஆகியோரை பரிசு வழங்கும் குழுவில் நார்வே நோபல் கழகம் நியமித்தது.[18] 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் வளர்ந்துவந்த அமைதி இயக்கங்களிலிருந்த புகழ்பெற்ற இருவருக்கு பரிசு வழங்குவதற்கு நோபல் கழகம் முடிவு செய்தது: ஃபிரடெரிக் பாசி (உலக நாடுகளின் கூட்டமைப்பின் துணை நிறுவனர்) மற்றும் யென்றி டூனான்ட் (உலகளாவிய செஞ்சிலுவைக் கழக நிறுவனர்)..[19][20][21]

இயற்பியலில் நோபல் பரிசுக்கு தகுதியுடையவர்களாக நோபல் கழகம் இருவரைத் தேர்ந்தெடுத்தது: எக்ஸ்- கதிர்களைக் கண்டுபிடித்த வில்யெம் கொன்றாடு ரான்ட்ஜன் மற்றும் கேதோடு கதிர்களைக் கண்டறிந்தவரான பிலிப் லெனார்டு. சுவீடன் அறிவியற் கழகம் ரான்ட்ஜனை பரிசுக்குரியவராகத் தேர்ந்தெடுத்தது.[19][20][21] 19-ஆம் நூற்றாண்டின் இறுதிகளில் பல வேதியியலாளர்கள் முக்கியமான கண்டுபிடிப்புகளையும் முன்னேற்றங்களையும் செய்திருந்தனர். ஆகையால் பரிசு வழங்கப்பட வேண்டும் எனும்படியான வகையில் தகுதிப்பட்டியலை தயாரிக்கவே பரிசு வழங்கும் கழகம் தள்ளப்பட்டது.[22] இத்துறையில் 20 முன்மொழிவுகள் வைக்கப்பட்டன. அவற்றுள் 11 யாகோபசு வான் கா-வுக்கானவை.[23] முடிவில் யாகோபசு வான் கா-வுக்கு வேதியியல்-வெப்ப இயக்கவியலில் அவரின் பங்களிப்புக்கு நோபல் பரிசு தரப்பட்டது..[24][25]

முதல் நோபல் இலக்கியப்பரிசுக்கு சல்லி புருதோமை, சுவீடன் கழகம் தேர்ந்தெடுத்தது. சுவீடன் நாட்டைச் சேர்ந்த 42 எழுத்தாளர்கள், கவிஞர்கள் இதனை எதிர்த்துப் போராடி தமது அதிருப்தியைத் தெரிவித்தனர், அவர்கள் லியோ டால்ஸ்டாய்தான் வெல்லுவார், அவரே பரிசுக்கு மிகச் சரியானவர் என எண்ணினர்.[26] சிலர், பர்டன் பெல்டுமான் உட்பட, சல்லி புருதோம் ஒரு சாதாரண கவிதான் என்ற எண்ணங்கொண்டிருந்தனர். பர்டன் பெல்டுமான், பரிசு வழங்கும் கழகத்தினர் விக்டோரிய இலக்கிய ஆவலர்கள் போலும், ஆதலால் தான் விக்டோரிய கவிக்கு பரிசு கொடுத்திருக்கின்றனர், என்று குற்றஞ்சாட்டினார்.[27] மருத்துவத்துவத்துக்கான நோபல் பரிசு யெர்மானிய உடலியங்கியல் மற்றும் நுண்ணியிரியியலாளரான எரிக் வான் பெரிங்-குக்கு வழங்கப்பட்டது. 1890-களில் எரிக் வான் பெரிங் டிப்தீரியாவுக்கான நஞ்செதிரியைக் கண்டறிந்தார், அதுநாள் வரையிலும் டிப்தீரியாவால் ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கில் மக்கள் இறந்து கொண்டிருந்தனர்.[28][29]

இரண்டாம் உலகப்போர்

1938 மற்றும் 1939-ல் அடால்ஃப் ஹிட்லர்-இன் மூன்றாம் செல்வம், நோபல் பரிசு வென்ற மூவரை (ரிச்சர்டு குன், அடால்ஃப் பிரைட்ரிச் யொகான் பியூட்டெனான்ட் மற்றும் யெர்கார்டு டொமாக்) பரிசினைப் பெற்றுக்கொள்ள விடவில்லை..[30] ஆனால், ஒவ்வொருவரும் பின்னர் அவர்களது பட்டயத்தையும் பரிசினையும் பெற்றுக்கொண்டனர்.[31] சுவீடன் இரண்டாம் உலகப் போரின்போது நடுவுநிலைமையை வகித்தாலும் நோபல் பரிசுகள் இடைவெளிவிட்டு விட்டு கொடுக்கப்பட்டன. 1939-ல் அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கும் தரப்படவில்லை. 1940-42 காலகட்டத்தில், நார்வே யெர்மனியால் கைப்பற்றப்பட்டிருந்தது, எந்த துறையிலும் பரிசு வழங்கப்படவில்லை. அதற்கடுத்த ஆண்டு அமைதி மற்றும் இலக்கியத்துக்கான நோபல் பரிசுகளைத் தவிர ஏனையவை தரப்பட்டன.[32]

நார்வே கைப்பற்றப்பட்ட பின்னர் மூன்று நோபெல் அறக்கட்டளை உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பியோடினர். ஆசுலோவிலிருந்த நோபல் கழக மாளிகை சுவீடன் நாட்டு சொத்து என்று நோபல் கழகம் அறிக்கை விட்டதன் காரணத்தால் அங்கிருந்த மற்ற அறக்கட்டளை உறுப்பினர்கள் நாசிக்களின் நெருக்குதலுக்கு உள்ளாகியிருப்பர். ஆதலால் அக்கழக மாளிகை யெர்மானிய ராணுவத்திடமிருந்து தப்ப ஒரு புகலிடமாக இருந்தது, ஏனெனில் யெர்மனியுடன் சுவீடன் போரில் ஈடுபடவில்லை.[33] அங்கிருந்த அறக்கட்டளை உறுப்பினர்கள் நோபெல் கழகத்தின் வேலைகளை தொடர்ந்து கவனித்து வந்தாலும் பரிசுகள் எதுவும் வழங்கப்படவில்லை. 1944-ல் நோபல் அறக்கட்டளை, வெளிநாட்டுக்குத் தப்பிய மூன்று உறுப்பினர்களும் சேர்த்து, முன்மொழிவுகள் பெறப்பட்டுள்ளன, அமைதிக்கான நோபல் பரிசு எப்போதும் போல இனி வழங்கப்படுமென அறிவித்தனர்.[30]

பொருளாதார அறிவியலுக்கான பரிசு

1968-ஆம் ஆண்டு சுவீடன் நடுவண் வங்கியானது தனது 300-வது வருட கொண்டாட்டத்தின்போது, ஒரு பெரும் தொகையை நோபல் அறக்கட்டளைக்கு அளித்து நோபலின் பெயரில் ஒரு பரிசினை ஏற்படுத்த வைத்தது. அதற்கடுத்த வருடம் நோபல் நினைவு பொருளாதார அறிவியல் பரிசு வழங்கப்பட்டது. பரிசுக்குரியவர்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு சுவீடன் ராஜாங்க அறிவியற் கழகத்தின் பொறுப்பில் விடப்பட்டது. முதல் பொருளாதாரத்துக்கான பரிசினைப் பெற்றவர்கள் யான் டின்பெர்கன் மற்றும் ராக்னர் ஃபிரிச் ஆவர். அவர்கள் "பொருளாதார செயற்பாடுகளுக்கான இயங்கு படிமங்களை உருவாக்கி அதை வெற்றிகரமாக செயற்படுத்தியும் உள்ளனர்" என்பது நோபல் குழுவின் குறிப்பு.[34][35] ஒரு நோபெல் பரிசாக இல்லாவிட்டாலும் இது ஏனைய நோபெல் பரிசுகளோடே அடையாளப்படுத்தப்படுகிறது. பரிசுக்குரியவர்களும் மற்ற நோபெல் பரிசுக்குரியவர்கள் அறிவிக்கப்படும்போதே அறிவிக்கப்படுகிறார்கள். பொருளாதார அறிவியலின் பரிசு சுவீடனின் நோபல் பரிசு வழங்கும் விழாவிலேயே வழங்கப்படுகிறது.[36] இந்த பரிசினை சேர்த்த பின்னர், நோபல் அறக்கட்டளைக் குழு கூடி விவாதித்து இனி ஏதும் புதிய பரிசுகளை வழங்குவதில்லையென முடிவெடுத்தது.[37]

விருது வழங்கும் முறை

விருது வழங்கும் முறை அனைத்து நோபல் பரிசுகளுக்கும் ஒத்ததாக உள்ளது; முக்கிய வேறுபாடு என்னவென்றால் யார் அவர்களை ஒவ்வொருவராக பரிந்துரை செய்வது என்பதாகும்.[38]

2009 ஆம் ஆண்டில் வேதியியல் துறையில் நோபல் பரிசு பெற்றவர்கள் பற்றிய அறிவிப்பு
2009 இலக்கியத்திற்கான நோபல் பரிசு பற்றிய அறிவிப்பு.

பரிந்துரைகள்

3000 தனிநபர்களுக்கு பற்றிய பரிந்துரையை வடிவங்கள் நோபல் கமிட்டி மூலம் அனுப்பப்படுகின்றன, பொதுவாக செப்டம்பர் மாதம் பரிசுகள் வழங்கப்படுவதற்கு ஒரு ஆண்டின் முன்னதாகவே அனுப்பப்படும். அமைதிக்கான நோபல் பரிசுக்கான விசாரணை, அரசாங்கங்கள், சர்வதேச நீதிமன்ற உறுப்பினர்கள், பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி தலைவர்கள், முன்னாள் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்கள் மற்றும் நார்வே நோபல் கமிட்டியின் தற்போதைய அல்லது முன்னாள் உறுப்பினர்கள் ஆகியோருக்கு அனுப்பப்படுகின்றன. பரிந்துரையை வடிவங்கள் திரும்பி வருவதற்கான காலக்கெடு விருது ஆண்டின் ஜனவரி 31 ஆக உள்ளது. நோபல் பரிசு குழு, இந்த வடிவங்கள் மற்றும் கூடுதல் பெயர்களில் இருந்து சுமார் 300 திறன் பெற்றவர்களை பரிந்துரைக்கும்.

தேர்வு

நோபல் பரிசு குழு, பின்னர் தொடர்புடைய துறைகளில் நிபுணர்களின் ஆலோசனை பிரதிபலிக்கும் ஒரு அறிக்கை உருவாக்குகிறது. இது, ஆரம்ப வேட்பாளர்கள் பட்டியலை சேர்த்து, பரிசு வழங்கும் நிறுவனங்களில் சமர்ப்பிக்கப்படும். இது, ஒரு பெரும்பான்மை வாக்குகளை ஒவ்வொரு துறையில் பரிசு பெற்றவர்களின் தேர்வைச் சந்திக்கின்றது. அதிகபட்சமாக மூன்று பரிசு பெற்றவர்கள் மற்றும் இரண்டு வெவ்வேறு படைப்புகள் உடையவர்கள் ஒவ்வொரு விருதுக்கான தேர்வாக இருக்கலாம். நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கூடிய அமைதி பரிசு தவிர, விருதுகளை தனி நபர்களுக்கு மட்டுமே வழங்கப்பட முடியும். அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படவில்லையெனில், அதற்கான பணத்தை அறிவியல் சார்ந்த பரிசுகளுக்கு இடையே பிரித்து தரப்படும். இதுபோல இதுவரை 19 முறை நடந்துள்ளது.

விருது வழங்கும் விழா

வருடந்தோறும் நோபெல் அவர்களின் நினைவு தினமான டிசம்பர் மாதம் பத்தாம் நாள் அன்று, அமைதிக்கான நோபெல் பரிசு தவிர மற்ற அனைத்து நோபெல் பரிசுகளும், சுவீடனில் உள்ள ஸ்டோக்ஹோம் நகரத்தில் வழங்கப்படுகின்றன. பரிசு பெறுவோரின் சொற்பொழிவு, இந்நிகழ்ச்சியின் முன்தினம் நடை பெறுவது வழக்கம். அதே டிசம்பர் பத்தாம் நாள், நோர்வேயில் உள்ள ஒஸ்லோ நகரில், அமைதிக்கான நோபெல் பரிசு வழங்கும் விழா மற்றும் பரிசு பெறுவோரின் சொற்பொழிவும் நடைபெறும். ஆல்ஃபிரட் நோபெல் உயில் எழுதும் சமயத்தில் நோர்வேவும் சுவிடனும் ஒரே கூட்டுப்பிரதேசமாக இருந்ததால், நோர்வேயில் அமைதிக்கான பரிசும், சுவிடனில் மற்ற பரிசுகளும் வழங்கப்படுகின்றன. இந்நிகழ்ச்சியும், இதனையொட்டி நடைபெறும் விழாக்களும், சமீப காலமாக உலகளாவிய நிகழ்ச்சியாக விளங்குகின்றன.

நோபல் பரிசும் தமிழரும்

நோபல் பரிசினை இதுவரை மூன்று தமிழர் பெற்றுள்ளனர். இந்தப் பெருமைக்குரியோர் ச. வெ. இராமன் (1930), சுப்பிரமணியன் சந்திரசேகர் (1983), வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் (2009) ஆவர்.

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. Levinovitz, Agneta Wallin (2001). p. 5. {cite book}: Missing or empty |title= (help)
  2. Levinovitz, Agneta Wallin (2001). p. 11. {cite book}: Missing or empty |title= (help)
  3. Golden, Frederic (16 October 2000). "The Worst And The Brightest". டைம் magazine (Time Warner) இம் மூலத்தில் இருந்து 11 நவம்பர் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201111213919/https://www.time.com/time/magazine/article/0,9171,998209,00.html. பார்த்த நாள்: 9 April 2010. 
  4. Sohlman, Ragnar (1983). p. 13. {cite book}: Missing or empty |title= (help)
  5. 5.0 5.1 AFP (5 October 2009). "Alfred Nobel's last will and testament". The Local. பார்க்கப்பட்ட நாள் 11 June 2010.
  6. Sohlman, Ragnar (1983). p. 7. {cite book}: Missing or empty |title= (help)
  7. von Euler, U. S. (6 June 1981). "The Nobel Foundation and its Role for Modern Day Science" (PDF). Die Naturwissenschaften (இசுபிரிங்கர் பதிப்பகம்) இம் மூலத்தில் இருந்து 14 ஜூலை 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110714080803/http://resources.metapress.com/pdf-preview.axd?code=xu7j67w616m06488&size=largest. பார்த்த நாள்: 21 January 2010. 
  8. Abrams, Irwin (2001). p. 7. {cite book}: Missing or empty |title= (help)
  9. 9.0 9.1 Levinovitz, Agneta Wallin (2001). pp. 13–25. {cite book}: Missing or empty |title= (help)
  10. Abrams, Irwin (2001). pp. 7–8. {cite book}: Missing or empty |title= (help)
  11. Crawford, Elizabeth T. (1984). p. 1. {cite book}: Missing or empty |title= (help)
  12. Levinovitz, Agneta Wallin (2001). p. 14. {cite book}: Missing or empty |title= (help)
  13. "Nobel Prize Funded from Baku". Azerbaijan International. பார்க்கப்பட்ட நாள் 2010-12-25. {cite web}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  14. Levinovitz, Agneta Wallin (2001). p. 15. {cite book}: Missing or empty |title= (help)
  15. Feldman, Burton (2001). p. 16. {cite book}: Missing or empty |title= (help)
  16. Levinovitz, Agneta Wallin (2001). pp. 17–18. {cite book}: Missing or empty |title= (help)
  17. 17.0 17.1 Levinovitz, Agneta Wallin (2001). pp. 15–17. {cite book}: Missing or empty |title= (help)
  18. Abrams, Irwin (2001). pp. 39–41. {cite book}: Missing or empty |title= (help)
  19. 19.0 19.1 Levinovitz, Agneta Wallin (2001). pp. 166–168. {cite book}: Missing or empty |title= (help)
  20. 20.0 20.1 Crawford, Elizabeth T. (1984). p. 266. {cite book}: Missing or empty |title= (help)
  21. 21.0 21.1 Feldman, Burton (2001). p. 297. {cite book}: Missing or empty |title= (help)
  22. Levinovitz, Agneta Wallin (2001). p. 77. {cite book}: Missing or empty |title= (help)
  23. Crawford, Elizabeth T. (1984). p. 118. {cite book}: Missing or empty |title= (help)
  24. Levinovitz, Agneta Wallin (2001). p. 81. {cite book}: Missing or empty |title= (help)
  25. Feldman, Burton (2001). p. 205. {cite book}: Missing or empty |title= (help)
  26. Levinovitz, Agneta Wallin (2001). p. 144. {cite book}: Missing or empty |title= (help)
  27. Feldman, Burton (2001). p. 69. {cite book}: Missing or empty |title= (help)
  28. Feldman, Burton (2001). pp. 242–244. {cite book}: Missing or empty |title= (help)
  29. Leroy, Francis (2003). p. 233. {cite book}: Missing or empty |title= (help)
  30. 30.0 30.1 Levinovitz, Agneta Wallin (2001). p. 23. {cite book}: Missing or empty |title= (help)
  31. Wilhelm, Peter (1983). p. 85. {cite book}: Missing or empty |title= (help)
  32. "All Nobel Laureates". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 15 January 2010.
  33. Abrams, Irwin (2001). p. 23. {cite book}: Missing or empty |title= (help)
  34. Feldman, Burton (2001). p. 343. {cite book}: Missing or empty |title= (help)
  35. Levinovitz, Agneta Wallin (2001). p. 207. {cite book}: Missing or empty |title= (help)
  36. "Nobel Prize in Economic Science Awarded to Oliver E. Williamson". கார்னிகி மெல்லன் பல்கலைக்கழகம். 12 October 2009. Archived from the original on 27 அக்டோபர் 2009. பார்க்கப்பட்ட நாள் 15 January 2010.
  37. Levinovitz, Agneta Wallin (2001). p. 20. {cite book}: Missing or empty |title= (help)
  38. Feldman, Burton (2001). pp. 16–17. {cite book}: Missing or empty |title= (help)

வெளி இணைப்புகள்