பனங்கரன்
பனங்கரன் Panangkaran Dyah Pancapana Rakai Panangkaran | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
Śrī Mahārāja Dyaḥ Pañcapaṇa Kariyāna Paṇaṃkaraṇa Śrī Saṅgrāmadhanañjaya | |||||||||
மாதரம் இராச்சியத்தின் மகாராஜா | |||||||||
ஆட்சிக்காலம் | 7 அக்டோபர் 746 – 1 ஏப்ரல் 784 | ||||||||
முன்னையவர் | மாதரத்தின் சஞ்சயன் (Sanjaya of Mataram) | ||||||||
பின்னையவர் | ராக்காய் பனராபன் (Rakai Panaraban) | ||||||||
பிறப்பு | தியா பஞ்சபனன் (Dyah Pancapana) | ||||||||
| |||||||||
மரபு | சைலேந்திர வம்சம் | ||||||||
மதம் | பௌத்தம் |
|
பனங்கரன் அல்லது ராக்காய் பனங்கரன்; அல்லது தியா பஞ்சவனன் (ஆங்கிலம்: Dyah Pancapana அல்லது Śrī Mahārāja Dyaḥ Pañcapaṇa Kariyāna Paṇaṃkaraṇa Śrī Saṅgrāmadhanañjaya; இந்தோனேசியம்: Rakai Panangkaran அல்லது Srī Mahārāja Rakai Pānangkaran Dyaḥ Pañcapana Dyah Pancapana ஜாவானியம்: ꦯꦿꦷꦩꦲꦴꦫꦴ ꦗꦫꦏꦻꦥꦴꦤꦔ꧀ꦏꦫꦤ) என்பவர் மாதர இராச்சியத்தின், சைலேந்திர அரச மரபைச் (Shailendra dynasty) சேர்ந்த இரண்டாவது மன்னர் ஆவார்; இவரின் ஆட்சிக்கால்ம் 7 அக்டோபர் 746 – 1 ஏப்ரல் 784 என பதிவாகி உள்ளது.[1]
மாதரம் இராச்சியம் (Mataram Kingdom), என்பது இந்தோனேசியாவின் ஜாவா தீவை மையமாகக் கொண்டு இயங்கியது. கலாசான் கல்வெட்டின் பதிவுகளின்படி, பனங்கரன் என்பவர் சஞ்சய வம்சத்தின் நிறுவனர் சஞ்சயன் என்பவரின் உடனடி வாரிசு என அறியப்படுகிறது.[2]:88,108
வரலாறு
1950-ஆம் ஆண்டுகளில் கேது சமவெளியில் கண்டுபிடிக்கப்பட்ட கிபி. 907-ஆம் ஆண்டு மந்தயாசி கல்வெட்டு (Mantyasih inscription) எனும் பாலிதுங் சாசனத்தில், கிராத்தோன் (Kraton) எனும் அரண்மனைகளைக் கட்டிய மன்னர்களின் பட்டியலில் ராக்காய் பனங்கரனின் பெயரும் இடம்பெற்று உள்ளது.
8-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும்; 9-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும்; ஜாவாவில் இரண்டு அரச மரபுகளுக்கு இடையே போட்டிகள் இருந்தன. சைலேந்திர அரச மரபு; சஞ்சய அரச மரபு ஆகியவையே அந்த இரண்டு அரச மரபுகள் ஆகும்.
அம்ராதி மன்னர்கள்
சஞ்சய மன்னருக்குப் பிறகு நான்கு சஞ்சய வம்ச மன்னர்கள் இருந்தனர். அவர்கள் பனங்கரன் (Panangkaran), பனுங்கலன் (Panunggalan), வாரக் (Warak) மற்றும் கருங் (Garung) ஆவர். இந்த மன்னர்கள் அம்ராதி மன்னர்கள் (Amrati King) என்று அழைக்கப்பட்டனர். சஞ்சய வம்ச மன்னர்கள், மத்திய ஜாவாவின் தெற்கில் இருந்த சைலேந்திர இளவரசர்களுடன் அதிகாரம் மற்றும் மதச் செல்வாக்கிற்காகப் போட்டியிட்டனர்.
சைலேந்திர இளவரசர்கள் 779-ஆம் ஆண்டு முதல் சஞ்சயர்களுக்கு எதிராகப் போரிட்டு வந்தனர். சஞ்சயர்கள், இந்துக்களாகவும்; சைலேந்திரர்கள், பௌத்தர்களாகவும் இருந்தனர். அந்தக் கட்டத்தில் ஜாவாவின் கிழக்கில் கஜயனன் (Gajayana) என்ற மன்னர் ஒருவர் மட்டுமே தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருந்தார். அவர் 760-ஆம் ஆண்டுகளில் காவி மலைப் பகுதியை மட்டும் தன் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தார்.[3]
அரச மரபுகள்
9-ஆம் நூற்றாண்டு ஜாவாவில், சைலேந்திர அரச மரபினர் எனும் சைலேந்திர வம்சாவளியினர் பௌத்த மதத்தைப் பின்பற்றினர். சஞ்சய அரச மரபினர் எனும் சஞ்சய வம்சாவளியினர் இந்து மதத்தைப் பின்பற்றினர்.
- சைலேந்திர அரச மரபு (Sailendra Dynasty) - பௌத்தம்
- சஞ்சய அரச மரபு (Sanjaya Dynasty) - இந்து
கலாசான் கோயில்
அந்தக் காலக் கட்டத்தில் அம்ராதி மன்னர்களுக்கும்; சைலேந்திரர்களுக்கும் இடையிலான உறவு முக்கியமானதாக இருந்த போதிலும், இரு தரப்பினருக்கும் இடையில் எவ்வாறான போட்டிகள் இருந்தன என்பது மட்டும் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
இருப்பினும், கலாசான் கல்வெட்டு மற்றும் ரத்து போக்கோ கல்வெட்டு (Ratu Boko) ஆகிய இரு கல்வெட்டுகளிலிருந்து, மன்னர் பனங்கரன், பௌத்த ஆலயம் கட்டுவதற்கு அனுமதி அளித்தார் என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது. கலாசான் கல்வெட்டில், போதிசத்வதேவி தாராவுக்கு (Bodhisattvadevi Tara) ஒரு புனிதக் கட்டிடம் கட்டப்பட்டதைப் பற்றியும்; சைலேந்திர குடும்பத்தைச் சேர்ந்த புத்த பிக்குகளுக்கு ஒரு புத்த விகாரம் (மடம்) கட்டப்பட்டதைப் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கலாசான் கிராமம் நன்கொடை
அந்தக் கட்டுமானத்திற்கு மகாராஜா ராக்காய் பனங்கரன் அவர்களைத் தூண்டுதல் செய்வதில் வெற்றி பெற்ற குரு சங் ராஜா சைலேந்திர வம்ச திலகர் (Guru Sang Raja Sailendravamçatilaka) என்பவரைப் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன் பின்னர் ராக்காய் பனங்கரன், கலாசான் கிராமத்தை (Kalaça Village) பௌத்த சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கினார். போதிசத்வதேவி தாராவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில் கலாசான் கோயில் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.[4][5]
அபிசேகா தியா
மாதரம் மரபில் ஒவ்வொரு மன்னருக்கும் ஒரு பிறப்புப் பெயர் உண்டு. அந்தப் பெயர் அபிசேகா தியா (Abhisheka Dyah) என்ற முன் பெயரால் வகைப் படுத்தப்படுகிறது. இந்தப் பட்டம், பொதுவாக மன்னரின் குழந்தைகள், ஆண் அல்லது பெண் இருவரையுமே குறிக்கும்.
மாதரம் இராச்சியத்தின் மன்னர்கள்
மேற்கோள்கள்
- ↑ Kusen (1994). "Raja-raja Mataram Kuna dari Sanjaya Sampai Balitung Sebuah Rekonstruksi Berdasarkan Prasasti Wanua Tengah III". Berkala Arkeologi 14 (2): 82–94. doi:10.30883/jba.v14i2.721. https://berkalaarkeologi.kemdikbud.go.id/index.php/berkalaarkeologi/article/view/721.
- ↑ Coedès, George (1968). Walter F. Vella (ed.). The Indianized States of Southeast Asia. trans.Susan Brown Cowing. University of Hawaii Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8248-0368-1.
- ↑ "Kawi-Butak". Global Volcanism Program. சிமித்சோனிய நிறுவனம்.
- ↑ Drs. R. Soekmono (1988) [First published in 1973]. Pengantar Sejarah Kebudayaan Indonesia 2, 2nd ed. Yogyakarta: Penerbit Kanisius. pp. 42–43.
- ↑ Soetarno, Drs. R. second edition (2002). "Aneka Candi Kuno di Indonesia" (Ancient Temples in Indonesia), pp. 41. Dahara Prize. Semarang. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 979-501-098-0.
மேலும் காண்க
- ஜெயநேசன்
- சிறீவிஜயம்
- கெவு சமவெளி
- நாளந்தா கல்வெட்டு
- பாலப் பேரரசு
- மாதரம் இராச்சியம்
- சைலேந்திர வம்சம்