பரசுராமர்

பரசுராமர்
தசாவதாரம் மற்றும் சிரஞ்சீவி-இல் ஒருவர்
கோடாரி ஆயுமுடைய பரசுராமர். இராசா இரவி வர்மாவின் ஓவியம்
வேறு பெயர்கள்
  • பார்கவராமா
  • ஜமதக்ஞயாராமா
  • இராமபத்ரா
தேவநாகரிपरशुराम
சமசுகிருதம்Paraśurāma
தமிழ்பரசுராமர்
வகைவைணவம்
ஆயுதம்வித்யுதாபி என்ற (பரசு) கோடாரி
துணைதரணி (இலட்சுமி)[1]
சகோதரன்/சகோதரிப்ரிஹுத்யானு, புருத்வகன்வா, வாசு, மற்றும் விசுவாவாசு[2]
விழாக்கள்மார்கழி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் பரசுராமர் ஜெயந்தி
பத்து அவதாரம் தொடர்வரிசை
முன்னையவர்வாமனர்
பின்னையவர்இராமர்


பரசுராமர் அல்லது பரசுராம பார்கவர் என்பவர் இந்து புராணங்களில் விஷ்ணுவின் ஆறாவது அவதாரம் ஆவார். இவரது காலம் திரேத யுகம் ஆகும். இவர் ஜமதக்கினி - ரேணுகா இணையரின் மகன் ஆவார். பரசு என்றால் கோடாரி என்று பொருள். இவர் கடுந்தவம் செய்து சிவ பெருமானிடம் இருந்து ஒரு கோடாலியைப் பெற்றார். அதனால் இவர் பரசு-ராமர் என்று அழைக்கப்படுகிறார்.

தன் தந்தை ஜமதக்கினி முனிவர் வளர்த்த தேவலோகப் பசுவை கவர்ந்து சென்ற கார்த்தவீரிய அருச்சுனனை கொன்றவர். மேலும் சத்திரிய மன்னர்களின் 21 தலைமுறைகளைக் கருவறுக்க சபதம் பூண்டவர்.

கடல் கொந்தளித்த போது இவர் அதனை அடக்கி கொங்கணக் கடற்கரைப் பகுதிகளைக் காத்தார் என்பதும் தொன்ம நம்பிக்கை.

இவரது சீடர்களில் புகழ்பெற்றவர்கள் பீஷ்மர், துரோணர் மற்றும் கர்ணன் ஆவர்.

இவரது கதை இராமாயணம் [3] மற்றும் மகாபாரதம் ஆகியவற்றில் கூறப்பட்டுள்ளது.

கேரளம் பரசுராமரின் பூமி என கேரளத்தவர்களின் தொன்னம்பிக்கை.

பரசுராமர் ஜெயந்தி

பரசுராமர் ஜெயந்தி விழா டிசம்பர் 24 ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள அனைத்து வைணவ கோயில்களிலும் கொண்டாடப்படுகிறது.

பரசுராமர் பிறப்பதற்கு முன்னர் அவரது பெற்றோர்கள் இருவரும் சிவனை நோக்கி தவம் செய்தார்கள். அந்த தவத்தின் பயனாக அவர்களுக்கு ஐந்தாவது மகனாகவும், விஷ்ணுவின் ஆறாவது அவதாரமாகவும் பரசுராமர் அவதரித்தார்.

அவருக்கு ‘ராமபத்ரா’ என்கிற பெயரும் சூட்டப்பட்டது. பரசுராமரின் தந்தை ஜமதக்னி முனிவர் என்றும் அவரது தாய் ரேணுகா தேவி என்றும் புராணங்கள் தெரிவிக்கின்றன .  

புராணங்களில் விஷ்ணுவின் ஆறாவது அவதாரம் பரசுராமர் அவதாரம் ஆகும். இவரது காலம் திரேத யுகம் ஆகும். சனாதன தர்மத்தில் கூறப்பட்டுள்ள ஏழு சிரஞ்சீவிகளில் இவரும் ஒருவர்.

விஷ்ணுவின் பரசுராம அவதாரம் அவருடைய மற்றொரு அவதாரமான ராமரை சந்தித்தது. எனவே சிறப்பு மிக்க அவதாரமாக பரசுராம அவதாரம் கருதப்படுகின்றது.

சிவனையே குருவாக ஏற்றுகொண்ட பரசுராமர்

பரசுராமர் சிவனைக் குறித்து கடும் தவம் புரிந்தார். அந்த தவத்தின் பயனாக சிவன் அவர் முன் தோன்றி பரசுராமருக்கு ஒரு தெய்வீகமான கோடாரியை வரமாக அளித்தார். ஆனால் பரசுராமர் கோடாரியை வரமாகப் பெறும் முன் தன்னுடைய தகுதியை தன்னுடைய ஆன்மீக குருவான சிவனிடம் நிரூபித்தார்.

சிவன் பரசுராமரின் போர் திறமையை சோதிக்க பரசுராமரை போருக்கு அழைத்தார். குருவிற்கும் சீடனுக்கும் இடையே மிகப் பயங்கர யுத்தம் 21 நாட்கள் வரை நீடித்தது. இறைவன் சிவன் பரசுராமரின் போர் திறன்களைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார் .

குருவிற்கும் சீடனுக்கும் நடந்த போரின் போது இறைவன் சிவனின் திரிசூலத்தை தவிர்க்கும் பொருட்டு பரசுராமர் சிவனை அவருடைய நெற்றியில் தன்னுடைய கோடாரி கொண்டு தாக்கினார்.

சிவன் அவருடைய சீடரின் போர் கலையில் மிகவும் மகிழ்ந்து போனார். அவர் தன்னுடைய காயத்தை ஆரத் தழுவி அதை நிரந்தரமாக பாதுகாத்தார். அதன் பின்னர் அவரது சீடரின் புகழை உறுதி செய்தார். அதன் பின்னர் கந்தபரசு என அழைக்கப்பட்டு வந்தார் பரசுராமர்.

தாயின் சிரம் கொய்த பரசுராமர்

பரசுராமரின் தாய் ரேணுகாதேவி அதிகாலையில் எழுந்து கங்கையில் நீராடி நீரில் விரலால் வட்டம் வரைவாள். நீர்க் குடமொன்று மேலே வரும். அதைக் கொண்டு வந்து கணவரின் பூஜைக்கு வழங்குவாள். இப்படி ஒவ்வொரு தினமும் செய்து வந்தாள்.

ஒருநாள் நீரில் வட்டம் வரைய அப்போது பறந்து சென்ற கந்தர்வன் ஒருவனின் அழகிய முகமும் உடலும் நீரில் தெரிந்தது. அதைக் கண்டவள் லேசாக மதி மயங்கினாள். இதனால் நீர்க்குடம் வரவே இல்லை. மனதில் சின்ன சலனம் வந்துவிட்டாலும் அவ்வளவுதான் புத்தியில் உள்ள தெளிவும் ஞானமும் கூட மங்கிப் போய்விடும்.

தன்னுடைய தவ வலிமையால் நடந்தவற்றை அறிந்தார் ஜமதக்னி முனிவர் இதனால் கடும் கோபம் கொண்டார் அதன் பின்னர் ஜமதக்னி மகன்களை அழைத்து விவரம் சொன்னார். அவள் தலையை வெட்டித் தள்ளுங்கள் என்று கத்தினார்  ஜமதக்னி.

தந்தை சொன்னதைக் கேட்டு முதல் நான்கு மகன்களும் பின்வாங்கினார்கள் ஆனால் பரசுராமனோ தந்தை சொல்லைத் தட்டாத தனயனாக தன் கையில் இருந்த கோடரியால் அன்னை ரேணுகாதேவியை வெட்டினார்.

என்னதான் தந்தை ஜமதக்னி முனிவர் சொன்னதைச் செய்தாலும் அம்மாவையே இப்படி கொன்றுவிட்டோமே என செயலுக்குப் பிறகு கலங்கினார் பரசுராமர் தந்தையிடம் முறையிட்டு மன்றாடினார்

வெட்டிய தலையையும் உடலையும் பொருத்தினால் உயிர் பெற்று வருவாள் என வரம் அருளினார் ஜமதக்னி. உடனே தாயின் தலையைக் கண்டெடுத்தார் பரசுராமர் .

ஆனால் உடலை மட்டும் கண்டுபிடிக்க முடிய வில்லை  இங்கும் அங்குமாகத் தேடினார் கிடைக்கவே இல்லை வேறு வழியின்றி அங்கே இருந்த வேறொரு உடலில் அம்மாவின் தலையைப் பொருத்தினார் . அதன் பின்னர் அன்னை ரேணுகா உயிர் பெற்றாள்

ரேணுகாதேவியானவள் இனி காளி மாரி எனும் திருநாமத்துடன் வாழ்வாள் எல்லோருக்கும் அருள்பாலிப்பாள் என வாழ்த்தினார் ஜமதக்னி முனிவர்.

படவேடு முதலான தலங்களில் ரேணுகாதேவி எனும் திருநாமத்துடன் கோயில் கொண்டு அருள்பாலிக்கிறாள் அன்னை. இதையடுத்து பரசுராமரும் சாப விமோசனம் பெற்றார்.

காமதேனுவை கவர்ந்து சென்ற கார்த்தவீரியன்

ஒரு முறை கார்த்தவீரியன் எனும் அரசன், தன் படையினருடன் காட்டில் வேட்டையாடிக் களைத்துப் போயிருந்தான். அப்போது ஜமதக்னி முனிவரிடம் தம் பசியைப் போக்க வேண்டினான் கேட்டது தரும் பசு காமதேனு அவரிடம் இருந்தது ஆகவே அவர் வந்தோர் அனைவர் பசியைப் போக்கினார்.

காமதேனு குறித்து அறிந்த கார்த்தவீரியன் முனிவருக்குத் தெரியாமல் காமதேனுவை கவர்ந்து சென்றான். இதையறிந்த முனிவர் மைந்தன் பரசுராமரிடம் சொல்ல விரைந்து சென்ற பரசுராமர் மன்னனைக் கொன்று பசுவை மீட்டார்.

ஆனால் கார்த்தவீரியன் தெய்வாம்சம் கொண்டவன். அவனை அழித்த பாவம் நீங்க புனித நீராடி வா என்றார் ஜமதக்னி முனிவர். அதன்படி புண்ணிய தலம் நோக்கிச் சென்றான் பரசுராமன். அதேநேரத்தில் கார்த்தவீரியனின் மகன் முனிவரின் ஆஸ்ரமத்துக்கு வந்தான். தனியே இருந்த ஜமதக்னி முனிவரைக் கொன்றான்!

கணவர் இறந்ததைக் கண்டு அதிர்ந்த காளிமாரி தன் மார்பில் அடித்துக் கொண்டு அழுதாள். இதை அறிந்த பரசுராமர் மூவேழு முறை அன்னைக் காளி மாரி அறைந்த அன்னையின் சோகத்தை ஈடுகட்டி சாந்தப்படுத்தும் விதமாக இருபத்தொரு தலைமுறை மன்னர் குலத்தை அழிப்பேன் என சூளுரைத்தார். அன்று முதல் நீதி நெறி தவறிய மன்னர்களை கொன்று சபதம் முடித்தார் என்கிறது புராணம்!

பரசுராமர் திருத்தலம்

பரசுராமருக்கு என்று தனி கோயில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் திருவள்ளம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. பரசுராமர் தன் தாய் ரேணுகா தேவியைக் கொன்ற தோஷம் நீங்க பல தலங்கள் சென்று வழிபாடு செய்தார். ஒரு முறை அவர் சிவனின் கட்டளைப்படி இத்தலம் வந்து இங்குள்ள கரமனை ஆற்றில் நீராடினார் என்ற நம்பிக்கை உள்ளது.

அப்போது அவருக்கு கிடைத்த லிங்கத்தை அங்கேயே பிரதிட்டை செய்து தவம் செய்து தோசம் நீங்க பெற்றார். பின் தன் தாய்க்கு இத்தலத்தில் தர்ப்பணம் கொடுத்தார். பரசுராமருக்கு பிறகு மதங்க மகரிஷி, கவுதம முனிவர் ஆகியோர் பரசுராமர் பிரதிஷ்டை செய்த இலிங்கத்தை பூஜை செய்துள்ளனர்

பீடத்தை பரசுராமரின் சீடரும், சிரஞ்சீவிகளில் ஒருவருமான அஸ்வத்தாமன் வழிபட்டிருக்கிறார். பீடத்தின் அருகே பரசுராமர் கோடரியுடன் நிற்கும் சிலை உள்ளது. பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் தனித்தனி சன்னதிகளில் அருளுகின்றனர்.

இங்குள்ள சிவபெருமானை பரசுராமரும், மகாவிஷ்ணுவின் அம்சமாக வேதவியாசரை விபாகரண முனிவரும், பிரம்மாவை ஆதிசங்கரரும் பிரதிஷ்டை செய்துள்ளனர்.

வல்லம் என்றால் தலை என்று பொருள். முற்காலத்தில் திருவனந்தபுரம் அனந்த பத்மனாப சுவாமியின் தலைப்பகுதி இத்தலம் வரை நீண்டிருந்ததால் இத்தலம் திருவல்லம் எனப்பட்டது.

திருவனந்தபுரம் பத்மநாபரை பிரதிஷ்டை செய்த வில்வமங்களம் சாமியாரின் வழிபாட்டால் பெருமாளின் உருவம் திருவனந்தபுரம் கோயில் மூலஸ்தானம் அளவிற்கு சுருங்கிவிட் டதாகவும் புராணங்கள் கூறுகின்றன.

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் பெருமாளின் உடல் பகுதியாகவும், திருவல்லம் பரசுராமர் கோயில் தலைப்பகுதியாகவும், திருவனந் தபுரம் அருகே உள்ள திருப்பாதபுரம் கோயில் பெருமாளின் கால் பகுதியாகவும் விளங்குவதால் ஒரே நாளில் இம் மூன்று தலங்களையும் தரிப்பது மிகவும் நன்மை பயக்கும் என்று நம் முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்.

பரசுராமரை போற்றும் விதமாக ஆண்டுதோறும் பரசுராமர் பிறந்த தினமான மார்கழி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் பரசுராமர் ஜெயந்தி தினம் கொண்டாடப்படுகிறது.[4][5]

மேற்கோள்

  1. Debroy, Bibek (2022-06-30). Vishnu Purana - Bibek Debroy - Google Books. Penguin Random House India Private Limited. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789354926617. பார்க்கப்பட்ட நாள் 2022-09-25.
  2. "Story of Jamadagni". 28 January 2019.
  3. இராமாயணத்தில் பரசுராமன் கதை
  4. Jeyalakshmi, C. (2019-12-13). "பரசுராமர் ஜெயந்தி - நீதியை நிலைநாட்ட அவதாரம் எடுத்த சிரஞ்சீவி". tamil.oneindia.com. பார்க்கப்பட்ட நாள் 2022-01-14.
  5. "அநீதி அரசை பூண்டோடு தண்டித்த தர்மம்: பரசுராம ஜெயந்தி! - Dhinasari" (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-05-14. பார்க்கப்பட்ட நாள் 2022-01-14.

வெளி இணைப்புகள்