லெ கொபூசியே
லெ கொபூசியே Le Corbusier | |
---|---|
லெ கொபூசியே 1933 இல் | |
தனிப்பட்ட விவரங்கள் | |
நாட்டினம் | சுவிட்சர்லாந்து, பிரெஞ்சு |
பிறப்பு | சுவிட்சர்லாந்து | அக்டோபர் 6, 1887
இறப்பு | ஆகத்து 27, 1965 பிரான்சு | (அகவை 77)
பணி | |
கட்டிடங்கள் | ரொஞ்ச்சாம்ப் சிற்றாலயம், சண்டிகரில் உள்ள கட்டிடங்கள் |
விருதுகள் | ஏஐஏ தங்க விருது (1961) |
சார்லஸ்-எடுவார்ட் ஜீன்னெரெட் என்னும் முழுப் பெயர் கொண்டவர் லெ கொபூசியே (அக்டோபர் 6, 1887 – ஆகஸ்ட் 27, 1965) என்னும் பெயராலேயே பரவலாக அறியப்பட்டார். பிரான்ஸ் சுவிசில் பிறந்த இவர் ஒரு கட்டிடக்கலைஞரும், எழுத்தாளரும் ஆவார். இன்று, நவீனத்துவம், அல்லது அனைத்துலகப் பாணி என்று அறியப்படும் கட்டிடக்கலைப் பாணி தொடர்பிலான பங்களிப்புகளுக்காக இவர் புகழ் பெற்றார்.[1]
நவீன வடிவமைப்புத் தொடர்பான கோட்பாட்டு ஆய்வுகளுக்கான முன்னோடியாகக் கருதப்படுகின்ற இவர், நெருக்கடியான நகரங்களில் வாழ்பவர்களுக்கு, நல்ல வாழ்க்கை நிலையை வழங்கும் முயற்சியில் உழைத்தார். 50 ஆண்டுகள் கட்டிடக்கலையில் தொழில் புரிந்த இவர் வடிவமைத்த கட்டிடங்கள் உலகின் பல பகுதிகளிலும் உள்ளன. மத்திய ஐரோப்பா, இந்தியா, ரஷ்யா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா போன்ற பகுதிகளில் இவர் வடிவமைத்த கட்டிடங்கள் உள்ளன. இவர் ஒரு கட்டிடக்கலைஞர் மட்டுமன்றி, ஒரு நகரத் திட்டமிடலாளர், ஓவியர், சிற்பி, எழுத்தாளர் மற்றும் நவீன தளபாட வடிவமைப்பாளரும் ஆவார்.
வாழ்க்கை
தொடக்க காலமும் கல்வியும், 1887 - 1913
இவர் வட மேற்குச் சுவிட்சர்லாந்தில் உள்ள ஜூரா மலைப் பகுதியில் அமைந்த நியூச்சாட்டல் கன்டனில் இருக்கும் லா-சோக்ஸ்-டி-பொண்ட்ஸ் என்னும் சிறிய நகரம் ஒன்றில் பிறந்தார். இந் நகரம் பிரான்சுடனான எல்லையிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. காட்சிக் கலைகளின் மீது கொண்ட ஆர்வத்தால் இவர் லா-சோக்ஸ்-டி-பொண்ட்ஸ் கலைப் பள்ளியில் பயின்றார். இங்கே இவரது கட்டிடக்கலை ஆசிரியர் ரேனே சப்பலாஸ் என்பவராவார். லெ கொபூசியேயின் தொடக்ககால வீட்டு வடிவமைப்புக்களில் இவரது செல்வாக்கு அதிகம் காணப்பட்டது.
இளமைக் காலத்தில் பல ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் செய்தார். 11907 ஆஅம் ஆண்டளவில் பாரிசுக்குச் சென்ற இவர் வலிதாக்கப்பட்ட காங்கிறீற்றைப் பயன்படுத்துவதில் பிரான்சில் முன்னோடியாக விளங்கிய அகஸ்ட்டே பெரெட் என்னும் கட்டிடக்கலைஞரின் அலுவலகத்தில் பணிக்கு அமர்ந்தார். அக்டோபர் 1910 க்கும் மார்ச் 1911 க்கும் இடையில் பீட்டர் பெஹ்ரென்ஸ் என்னும் புகழ் பெற்ற கட்டிடக்கலைஞர் ஒருவருக்காக பெர்லின் நகருக்கு அண்மையில் ஓரிடத்தில் பணி புரிந்தார். இங்கே அவர் 20 ஆம் நூற்றாண்டின் மிகவும் புகழ் பெற்ற கட்டிடக்கலைஞர்களில் இருவரான லுட்விக் மீஸ் வான் டெர் ரோ, வால்ட்டர் குரொப்பியஸ் ஆகியோரைச் சந்தித்து இருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது. இக் காலத்தில் இவர் ஜெர்மன் மொழியையும் கற்றுக்கொண்டார். இளமையில் இவ்விரு பணியிடங்களிலும் கிடைத்த பட்டறிவு இவரது பிற்கால வடிவமைப்புக்களில் செல்வாக்குச் செலுத்தியது.
1915 ஆம் ஆண்டில் இவர் பால்கன் நாடுகளில் பயணம் மேற்கொண்டார். கிரீஸ், துருக்கி ஆகிய நாடுகளுக்கும் சென்ற அவர் அங்கே அவர் கண்டவற்றை வரைபடங்களாக வரைந்து கொண்டார். இவற்றுள் வரலாற்றுப் புகழ் வாய்ந்த கட்டிடமான பார்த்தினனைப் பார்த்து வரைந்த வரைபடங்களும் அடங்கும்.
தொடக்ககாலப் பணிகள்: வீடுகள்
முதலாவது உலகப் போர்க் காலத்தில் இவர் தான் தொடக்கத்தில் கல்வி பயின்ற லா-சோக்ஸ்-டி-பொண்ட்ஸ் கலைப் பள்ளியில் கற்பித்தல் பணியில் ஈடுபட்டிருந்தார். போர் முடியும் வரை இவர் பாரிசுக்குச் செல்லவில்லை. இவ்வாறு சுவிட்சர்லாந்தில் இருந்த நான்கு ஆண்டுக் காலத்தில் நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கான கட்டிடக்கலைக் கோட்பாட்டு ஆய்வுகளிலும் ஈடுபட்டிருந்தார். "டொம்-இனோ" வீடு எனப்படும் திட்டமும் இவற்றுள் ஒன்றாகும். இக் கட்டிடத்துக்காக இவர் வடிவமைத்த மாதிரி; காங்கிறீட்டுத் தளங்களையும், விளிம்புப் பகுதிகளில் அவற்றைத் தாங்கும்படி அமைக்கப்பட்ட குறைந்த அளாவிலான மெல்லிய வலிதாக்கப்பட்ட காங்கிறீட்டுத் தூண்களையும், ஒரு தளத்திலிருந்து இன்னொரு தளத்துக்குச் செல்வதற்கான காங்கிறீட்டாலான படிக்கட்டு அமைப்பையும் கொண்ட திறந்த தள அமைப்பையும் கொண்டு அமைந்திருந்தது. இந்த மாதிரி அமைப்பே பின் வந்த பத்து ஆண்டுகளில் இவர் வடிவமைத்த கட்டிடங்களுக்கு அடிப்படையாக அமைந்தது. விரைவிலேயே தனது ஒன்று விட்ட சகோதரரான பியரே ஜெனெரெட் என்பவருடன் சேர்ந்து சொந்தத் தொழில் தொடங்கினார். இக் கூட்டுத் தொழில் 1940 ஆம் ஆண்டு வரை நீடித்தது.
1918 ஆம் ஆண்டில், முன்னர் கியூபிச ஓவியராக இருந்து பின்னர் அதன்மேல் வெறுப்புக் கொண்ட அமெடீ ஒசன்பன்ட் (Amédée Ozenfant) என்பவரைச் சந்தித்தார். லெ கொபூசியேயை ஓவியம் வரையுமாறு ஒசன்பன்ட் ஊக்குவித்தார். இருவரும் இத் துறையில் கூட்டாக இயங்க முடிவு செய்தனர். கியூபிசம், பகுத்தறிவுக்கு ஒவ்வாதது எனவும், மிகைப்படுத்தப்பட்டது எனவும் கூறிய இவர்கள் கூட்டாக ஒரு அறிக்கையை வெளியிட்டனர். கியூபிசத்துக்கு மாற்றாக தூய்மையியக் (Purism) கலை இயக்கம் ஒன்றைத் தொடங்கினர். இந்த இயக்கத்துக்கான இதழ் ஒன்றும் வெளியிடப்பட்டது. ஆயினும் இவர் கியூபிச ஓவியரான பெர்னண்ட் லெகர் (Fernand Léger) என்பவருக்கு நல்ல நண்பராகவும் விளங்கினார்.
புனைபெயர்
இவர்கள் வெளியிட்ட இதழின் முதல் வெளியீட்டில் கொபூசியே தனது தாய்வழிப் பாட்டனின் பெயரைச் சிறிது மாற்றி லெ கொபூசியே என்னும் புனைபெயரில் எழுதினார். அக் காலத்தில், சிறப்பாக பாரிசில், பல துறைக் கலைஞர்கள் தங்களை ஒற்றைப் பெயரினால் அடையாளப் படுத்திக் கொள்ளும் போக்குக் காணப்பட்டது.
1918 க்கும் 1922 க்கும் இடைப்பட்ட காலத்தில் இவர் ஒரு கட்டிடம்கூடக் கட்டவில்லை. தனது தூய்மையியக் கோட்பாட்டை வளர்ப்பதிலும், ஓவியம் வரைவதிலும் ஈடுபட்டிருந்தார். 1922 ஆம் ஆண்டில் லே கொபூசியேயும், ஜீனரெட்டும் பாரிசில் கலைக்கூடம் ஒன்றைத் தொடங்கினர்.
இவருடைய கோட்பாட்டு ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு பல தனியார் வீடுகளை இவர் வடிவமைத்தார். இவற்றுள் பிரெஞ்சுத் தானுந்துத் தயாரிப்பாளர் ஒருவருக்காக வடிவமைத்த "சிட்ரோகான்" மாளிகையும் ஒன்று. இவ்வீட்டின் அமைப்பில் பல நவீன தொழில்நுட்ப முறைகளையும், கட்டிடப்பொருட்களையும் லே கொபூசியே பயன்படுத்தினார். இம் மாளிகை மூன்று மாடிகளைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருந்தது. இதில் வசிக்கும் அறை இரட்டை உயரம் கொண்டதாக இருந்தது. படுக்கையறைகள் இரண்டாம் மாடியிலும், அடுக்களை மூன்றாம் மாடியிலும் அமைக்கப்பட்டன. கூரை வெய்யில் காய்வதற்கான தளமாகப் பயன்படுத்தப்பட்டது. கட்டிடத்துக்கு வெளிப்புறத்தில் நிலத் தளத்திலிருந்து இரண்டாம் மாடிக்குச் செல்வதற்குப் படிகள் அமைக்கப்பட்டு இருந்தன. இக்காலத்தைச் சேர்ந்த பிற கட்டிடங்களில் இருந்ததைப் போலவே இக் கட்டிடத்திலும், இடையீடற்ற தொடர்ச்சியான பெரிய பல சாளரங்களை லே கொபூசியே வடிவமைத்திருந்தார். இதன் தளம் செவ்வக வடிவானது. வெளிப்புறச் சுவரின் சாளரங்கள் இல்லாத பகுதி வெறுமனே சாந்து பூசி வெண்ணிறம் தீட்டப்பட்டது. லெ கொபூசியேயும் ஜீனரெட்டும் இக் கட்டிடத்தின் உட் புறத்தை அதிகம் அலங்காரம் செய்யாமல் வெறுமையாகவே விட்டிருந்தனர். தளவாடங்கள் பெரும்பாலும் எளிமையானவையாக உலோகக் குழாய்களினால் ஆனவையாகவும், மின்விளக்குகள் அலங்காரம் இன்றி வெறும் குமிழ்களாகவுமே இருந்தன. உட்புறச் சுவர்களும் வெண்ணிறமாகவே விடப்பட்டன. 1922 ஆம் ஆண்டுக்கும் 1927 ஆம் ஆண்டுக்கும் இடையில் லெ கொபூசியேயும் ஜீன்னரெட்டும் பாரிசுப் பகுதியில் இருந்த பலருக்கு வீடுகளை வடிவமைத்துக் கொடுத்தனர்.
நகரிய ஈடுபாடு
பல ஆண்டுகளாகவே பாரிசின் அதிகாரிகள் நகரின் பெருகி வந்த அழுக்கடைந்த சேரிகளின் பிரச்சினைகளைத் தீர்க்க முயன்றும் முடியாதவர்களாக இருந்தனர். இவ்வாறான நகர்ப்புற வீடமைப்புத் தொடர்பான நெருக்கடி நிலையில் பெருமளவு மக்களைக் குடியமர்த்துவதற்கான வழிமுறைகளைக் கண்டறிவதில் லெ கொபூசியே ஆர்வம் கொண்டார். நவீன கட்டிடக்கலை வடிவங்கள் வருமானம் குறைந்த பகுதியினரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான அமைப்பு அடிப்படையிலான தீர்வுகளைக் கொடுக்கும் என அவர் நம்பினார். அவருடைய "இம்மெயுபிள்சு வில்லாக்கள்" எனப்படும் திட்டம் இந் நோக்கத்தைக் கொண்ட ஒரு திட்டமாகும். இத்திட்டம் வசிக்கும் அறைகள், படுக்கையறைகள், அடுக்களைகள் ஆகியவற்றைக் கொண்ட வீட்டு அலகுகள் ஒன்றொன்மீது ஒன்று அடுக்கிய வடிவில் அமைந்த பல பெரிய கட்டிடங்களை உள்ளடக்கியிருந்தது.
இவ்வாறான அடுக்கு மாடி வீடுகளை வடிவமைப்பதுடன் மட்டும் திருப்தியடையாமல் முழு நகர்களின் வடிவமைப்புக் குறித்தும் லெ கொபூசியே ஆய்வுகளில் ஈடுபட்டார். 1922 ஆம் ஆண்டில் "சமகால நகரம்" (Contemporary City) என அழைக்கப்பட்ட, ஒரு மில்லியன் மக்கள் வசிக்கத்தக்க நகரத்துக்கான திட்டம் ஒன்றை இவர் வெளியிட்டார். இதன் முக்கிய பகுதி சிலுவை வடிவில் அமைந்த 60 மாடிகளைக் கொண்ட கட்டிடங்கள், உருக்கினாலான சட்டக அமைப்பைக் கொண்டு கண்ணாடி போர்த்தப்பட்ட அலுவலகக் கட்டிடங்கள் ஆகியவற்றின் தொகுதியாகும். இவ் வானளாவிகள் செவ்வக வடிவான பெரிய பூங்கா போன்ற அமைப்பைக் கொண்ட பசுமையான பகுதியில் அமைந்திருந்தன. இவற்றின் நடுவே மிகப் பெரிய போக்குவரத்து மையம் வடிவமைக்கப்பட்டிருந்தது. பல தளங்களைக் கொண்டதாக அமைந்திருந்த இந்த மையத்தில் பேருந்து நிலையங்கள், தொடர்வண்டி நிலையங்கள், நெடுஞ்சாலைச் சந்திப்புகள், மேல் தளத்தில் ஒரு வானூர்தி நிலையம் என்பவற்றுக்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. வணிக அடிப்படையில் இயங்கக்கூடிய வானூர்திகள் மிகப்பெரிய வானளாவிகளுக்கு இடையில் இருக்கும் இடங்களில் வந்து இறங்க முடியும் என்று அவர் நம்பினார். லெ கொபூசியே நடைபாதைகளை, வண்டிகளுக்கான சாலைகளில் இருந்து வேறுபடுத்தித் தனித்தனியாக அமைத்ததுடன், தானுந்துகளே முக்கிய போக்குவரத்துச் சாதனங்களாக இருக்கும் எனவும் கருதினார். மையப் பகுதியில் உள்ள வானளாவிகளில் இருந்து வெளிப்புறமாகச் செல்லும்போது, சிறிய குறைவான உயரம் கொண்ட வதிவிடக் கட்டிடங்கள் திட்டமிடப்பட்டிருந்தன. பிரான்சியத் தொழில் முனைவோர், அமெரிக்கத் தொழில் துறை மாதிரிகளைப் பின்பற்றி சமூகத்தை மீளமைப்பதில் முன்னணியில் இருப்பார்கள் என லெ கொபூசியே நம்பினார். நோர்மா எவென்சன் என்பவர் கூறியதைப் போல முன்வைக்கப்பட்ட இந்த நகரத் திட்டம் சிலரைப் பொறுத்தவரை புதிய உலகத்தை உருவாக்குவதற்கான துணிச்சலான நோக்கு ஆனால், வேறுசிலர் இதனைப் பழக்கமான நகரச் சூழலை மறுக்கின்ற, தன்னைத்தானே பெருமை பீற்றிக்கொள்ளும் அளவு கொண்ட ஒரு திட்டமாகப் பார்த்தனர்.
எல்லா சமூக பொருளாதார மட்டங்களிலும் உயர்வான வாழ்க்கைத் தரத்தோடு கூடிய மிகுந்த செயற்றிறன் மிக்க சூழலாக சமூகத்தை மாற்றுவதற்காக நவீன தொழில் துறை நுட்பங்களையும், வழிமுறைகளையும் கைக்கொள்ள வேண்டும் என வாதிடும் ஆய்வுச் சஞ்சிகை ஒன்றிலும் லெ கொபூசியே எழுதிவந்தார். சமூகத்தை வேறு வகைகளில் உலுக்கக்கூடிய புரட்சிகள் உருவாகமல் தவிர்ப்பதற்கு இத்தகைய மாற்றங்கள் அவசியம் என அவர் உறுதியாக வாதிட்டார். "கட்டிடக்கலை அல்லது புரட்சி" என்னும் அவரது கருத்து இவ்வாய்வு இதழ்களில் அவர் எழுதிய கட்டுரைகள் மூலமே உருவானது. அத்துடன், 1920க்கும் 1923க்கும் இடையில் இச் சஞ்சிகையில் கொபூசியே எழுதிய கட்டுரைகளின் தொகுப்பான " ஒரு கட்டிடக்கலையை நோக்கி" என்னும் நூலின் மையக் கருத்தும் இதுவே.
கோட்பாட்டு அடிப்படையிலான நகர்ப்புறத் திட்டங்களில் லெ கொபூசியே தொரர்ந்து ஈடுபட்டார். இன்னொரு தானுந்துத் தயாரிப்பாளர் ஒருவருடைய ஆதரவுடன் உருவாக்கப்பட்ட "பிளான் வொயிசின்" என்னும் திட்டத்தை 1935 ஆம் ஆண்டில் அவர் காட்சிக்கு வைத்தார். இத்திட்டத்தில், செயினுக்கு வடக்குப் புறம் இருந்த பாரிசின் மையப்பகுதியின் பெரும்பகுதியை இடித்துவிட்டு அதற்குப் பதிலாக "சமகால நகர"த் திட்டத்தில் அவர் முன்மொழிந்த சிலுவை வடிவிலான 60 மாடிக் கட்டிடங்களைக் கட்டுவதற்கு முன்மொழிந்தார். இக் கட்டிடங்கள் ஒன்றையொன்று செங்குத்தாக வெட்டும் சாலை வலையமைப்பையும், பூங்காக்களையொத்த பசுமைப் பகுதிகளுக்கும் நடுவில் வடிவமைக்கப்பட்டிருந்தன. லெ கொபூசியேயின் திட்டத்துக்கு அடிப்படையாக அமைந்த டெயிலரியம், ஃபோர்டியம் ஆகியவை தொடர்பான எண்ணத்துக்கு, ஆதரவானவர்களாக இருந்தபோதும், பிரான்சியத் தொழில்துறையினரும், அரசியலாளர்களும் அத் திட்டத்தைக் கடுமையாக விமர்சித்தனர். எப்படியாயினும், பாரிசு நகரின் பெரும்பாலான பகுதிகளில் இருந்த நெருக்கடி, அழுக்குப் போன்றவற்றைக் கையாள்வது தொடர்பிலான கலந்துரையாடல்களை இத்திட்டம் தோற்றுவித்தது.
இறப்பு
1965 ஆம் ஆண்டு ஆகத்து 27 ஆம் தேதி, 77 வயதான லெ கொபூசியே அவரது மருத்துவர்களின் ஆலோசனைகளைப் புறந்தள்ளிவிட்டு பிரான்சிலுள்ள ரோக்கேபுரூன்-கப்-மார்ட்டின் என்னும் இடத்துக்கு அருகில் நடுநிலக்கடல் பகுதியில் நீந்தச் சென்றார். அதுவே அவரது வாழ்வின் இறுதியாக முடிந்தது. இவரது உடல் கடலில் குளித்தவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. காலை 11 மணிக்கு அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்டது. இவர் மாரடைப்பினால் இறந்ததாகக் கருதப்படுகிறது. இவரது இறுதிக் கிரியைகள் லூவர் மாளிகை முற்றத்தில் 1965 செப்டெம்பர் முதலாம் தேதியன்று இடம்பெற்றன. அப்போது பிரான்சின் கலாச்சார அமைச்சராக இருந்த, எழுத்தாளரும் சிந்தனையாளருமான அண்ட்ரே மல்ருக்சின் இந் நிகழ்வுகளை வழிநடத்தினார்.
இவரது இறப்பு பண்பாட்டு மற்றும் அரசியல் உலகில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியது. இவரது மிகப்பெரிய கலை எதிரிகளுள் ஒருவரான சல்வடோர் டாலி உட்பட உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமானோர் இவரது இறப்பையிட்டு வருத்தம் தெரிவித்தனர். அமெரிக்க சனாதிபதி லின்டன் பி. ஜான்சன், லெ கொபூசியேயினது செல்வாக்கு உலகம் தழுவியது என்றும், இவரது வேலைகள் உலக வரலாற்றில் ஒரு சில கலைஞர்களால் மட்டுமே அடைய முடிந்த தரம் கொண்டவையாக இருந்தன என்றும் புகழ்ந்தார். நவீன கட்டிடக்கலையின் மிகப் பெரிய சாதனையாளரை உலகம் இழந்துவிட்டதாக சோவியத் ஒன்றியம் அறிவித்தது.
லெ கொபூசியேயின் கட்டிடங்கள்
லெ கொபூசியே, உலகின் மூன்று கண்டங்களில் 7 நாடுகளில், 17 இடங்களில் தனது புகழ்பெற்ற கட்டிடங்களை நிர்மானித்துள்ளார். அவைககளில் சில கட்டிடங்கள், ஐக்கிய நாடுகள் அவையின் ஒரு உறுப்பான யுனெஸ்கே நிறுவனம், உலகப் பாரம்பரியக் களமாக அறிவித்துள்ளது. [2]
- யுனைட் டி'ஹபிட்டேஷன், பிரான்சு
- வில்லா சவோய், பிரான்சு
- ரொஞ்சாம்ப் சிற்றாலயம், பிரான்சு
- தலைநகர கட்டிட வளாகங்கள், சண்டிகர், இந்தியா
- சதாம் உசேன் உடற்பயிற்சிக் கூடம், பாக்தாத், ஈராக்
- தேசிய மேற்கத்திய கலை அருங்காட்சியகம், டோக்கியோ, சப்பான்